Thursday, July 23, 2026
Huis Blog Bladsy 138

நான் என்ன அப்பக் கோப்பையோ? ஊடகவியலாளர்களிடம் பாய்ந்த இளங்குமரன் எம்.பி..!

0

இலங்கையின் வலுசக்தி அமைச்சர் கலந்து கொண்ட கூட்டத்தில் மின்சாரம் தடைப்பட்டமை தொடர்பில் தகவலை வெளிபடுத்திய ஊடகவியலாளர் மீது நான் அப்ப கோப்பை அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் சூடாகிய சம்பவம் இன்று மாலை பதிவானது .

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,

யாழ். தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இலங்கை புத்திஜீவிகள் அமைப்பின் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.

இதன் பொழுது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம், வலு சக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித் கொடிதுவக்கு, பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், யாழ். மாவட்ட பொறியியலாளர்கள் , பொறியியல் துறைசார் வல்லுனர்கள், பேராசிரியர்கள் , கல்வியலாளார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த கூட்டத்தில் உரையாற்றிய வலு சக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தங்கு தடையின்றி 24 மணிநேர மின்சாரத்தை வழங்குவது எமது நோக்கமாக உள்ளது என தெரிவித்தார்.

இந்நிலையில் அவர் உரையாற்றி சில நிமிடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பில் தகவலை சமூக ஊடகத்தில் ஊடகவியலாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஊடகவியலாளர்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு விரைந்து வந்த இளங்குமரன் எம்.பி நான் அம்பை கோப்பை அல்ல அனைவரும் இணைந்து மின் ஆழியை நிறுத்தினால் மின்சாரம் இல்லாது போகும் என தெரிவித்து சென்றார்.

இதனிடையே ஊடகவியலாளர்கள் மின்சார துண்டிப்பு தொடர்பில் மின்சா சபையுடன் தொடர்பு கொண்டே செய்தியினை உறுதிப் படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் மீண்டும் திடீரென ஊடகவியலாளர்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு விரைந்த இளங்குமரன் எம்.பி மின்சார சபை உறுதிப்படுத்தியுள்ளது. எனவும் தெரியாது பேசிவிட்டேன் எனவும் கூறினார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த ஊடகவியலாளர்கள் நாம் செய்தியினை வெறுமனே உறுதிபடுத்தாது வெளிப்படுத்தவில்லை. நீங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு முதலில் மின்சார சபையை கேட்டுவிட்டு ஊடகவியலாளர்களுடன் இவ்வாறு பேசியிருக்க வேண்டும் என தெரிவித்தனர்.

உலகத் தமிழ் மக்களுக்கான வெற்றி; கனேடிய உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!

0

தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரம் என்று அழைக்கப்படும் சட்டமூலம் 104 ஐ எதிர்த்து இலங்கை குழுக்கள் தாக்கல் செய்த வழக்கை கனேடிய உச்ச நீதிமன்றம் நிராகரித்து தள்ளுபடி செய்துள்ளதாக ஒன்ராறியோ மாவட்ட சட்டமற்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

இந்தச் சட்டம் ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் திகதியையும் ஒன்ராறியோவில் தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் கிழமையாக குறிப்பிடப்படுகிறது.

மே 2009 இல் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் இறுதிக் கட்டங்களில் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்களை நினைவு கூரும் நேரமாக இது அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 2021 ஆம் ஆண்டு ஒன்ராறியோ சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இந்த 104 சட்டத்தை ரத்து செய்யும் முயற்சியில் பல சிங்கள அமைப்புகளால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த முயற்சிகள் தமிழர் துன்பங்களை அழிக்கவும் அங்கீகாரத்தைத் தடுக்கவும் நோக்கமாகக் கொண்ட மறுப்பு பிரச்சாரம் என்று தமிழ் கனேடிய அமைப்புகளும் சட்ட வல்லுநர்களும் பரவலாகக் கண்டனங்களை வெளியிட்டு வந்தனர்.

இவ்வாறானதொரு பின்னணியில், ஒன்ராறியோ நீதிமன்றங்களில் இந்தச் சட்டத்தை ரத்து செய்வதற்காக, தொடர் தோல்வியடைந்த சட்ட முயற்சிகளைத் கருத்தில் கொண்டு, கனேடிய உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சட்டமற்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம், இது கனடாவிலும் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியென தெரிவித்துள்ளார்.

வட இந்து ஆரம்ப பாடசாலையின் ஆசிரியர் பொலிசாரால் கைது செய்யப்பட்டது ஏன்?

0

5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு ஆண்டு தோற்றும் மாணவர்களுக்காக பாடசாலை விடுமுறை நாட்களில் மேலதிக கற்றல் செயற்பாட்டுக்காக கற்பித்த ஆசிரியர் ஒருவர் யாழ் வடமராட்சியில் பொலிசாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமராட்சி வடஇந்து ஆரம்ப பாடசாலையில் கற்பிக்கும் தில்லைவாசன் என்ற ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார், மேலதிக வகுப்பிற்காக வந்த மாணவர்களுக்கு குறித்த ஆசிரியர் விடைத்தாள்களை சக மாணவர்களை கொண்டு ஒருவர் மாறி ஒருவர் மூலம் திருத்தப்பட்டுள்ளது.

இதன் போது பாதிக்கப்பட்ட மாணவியின் விடைத்தாளை திருத்திய மாணவி பிழையான விடைகள் எழுதப்பட்ட போதும் அதை திருத்தி சரியானதாக குறிப்பிட்டு அதிக புள்ளியை போட்டுள்ளார்.

இவற்றை அவதானித்துக் கொண்டிருந்த ஆசிரியர் விடைத்தாளினை பார்வையிட்ட போது மேற்குறித்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டு திருத்திய மாணவியை விசாரித்த பின் அந்த மாணவியை அடிக்காது விடையை எழுதிய மாணவியை அடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து குறித்த மாணவியை, ஆசிரியரால் தாக்கப்பட்டதாக கூறி அவரது பெற்றோரால் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் நேற்று முன்தினம் (26) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிகிச்சை பெறும் அளவுக்கு பாதிப்புகள் எவையும் இல்லாத நிலையில் மாணவியை வைத்திய சாலையில் இருந்து விடுவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஆசிரியருக்கு எதிராக மாணவியின் தாயாரினால் பருத்தித்துறை பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியரை நேற்றைய தினம் கைது செய்த பருத்தித்துறை பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து குறித்த வகுப்பில் கல்விகற்கும் ஏனைய மாணவர்களது பெற்றோர் ஆசிரியருக்கு ஆதரவாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று (27) மாலை ஒன்று கூடியிருந்தனர்.

பாடசாலை அதிபர் ஊடாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி விடுத்த அறிவுறுத்தலை அடுத்து நேற்று இரவு 8 மணி அளவில் ஆசிரியருக்கு ஆதரவாக திரண்ட பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றிருந்தனர்.

இதன் பின்னர் குறித்த ஆசிரியர் பொலிஸ் காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் (28) வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பருத்தித்துறை பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தங்களது பணிக்கடமைகளை விட மேலதிகமாக கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொண்டு பிள்ளைகளுக்காக பாடுபட்ட ஆசிரியர் குறித்த மாணவியை கடுமையாகத் தாக்கினாரா? அல்லது மெதுவாகத் தாக்கினாரா என்பது தொடர்பாகவும் குறித்த மாணவிக்கு காயங்கள் எப்படி உள்ளன என்பது தொடர்பாகவும் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கைகளின் படியே ஆசிரியருக்கான நீதிமன்ற நடவடிக்கைகள் அமையும் எனத் தெரிய வருகின்றது.

ஏற்கனவே குறித்த பாடசாலையில் பெற்றோர் ஒருவருக்கும் பாடசாலை நிர்வாகத்திற்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து ஊடகங்களில் குறித்த பாடசாலையின் செயற்பாடுகள் வெளியாகியிருந்தன.

கல்வி நிர்வாக பரீட்சை எழுதாது பதவிக்கு வந்த முன்னாள் பணிப்பாளர் யோன்குயின்ரஸ் அவர்களால் கடந்த காலத்தில் கல்வித் துறையில் விசுவாசமாக கடமையாற்றிய அதிபர், ஆசிரியர்களுக்கு எதிராக சில தோல்வியடைந்த அரசியல்வாதிகளுடன் இணைந்து தான்தோன்றித்தனமாக மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளின் அறுவடைகளையே வடக்கின் கல்வி தற்போது பெற்று வருகின்றது.

பிரதிபலன் பார்க்காத உதவி; வாழ்க்கைக்கான கல்வி – சிறுகதை..!

0

படகு ஒன்றுக்கு பெயின்ட் அடிப்பதற்கான பொறுப்பு ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர் ப்ரஷ், பெயின்ட் என்பவற்றைக் கொண்டு வந்து படகு உரிமையாளர் வேண்டிக் கொண்டதைப் போலவே பிரகாசமான சிவப்பு நிறத்தில் பெயின்ட் அடித்துக் கொடுத்தார்.

பெயின்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது அந்தப் படகில் ஒரு சிறிய ஓட்டை இருப்பதை கவனித்து, உடனடியாகவே அந்த ஓட்டையை சரிவர அடைத்தும் விட்டார்.

வேலை முடிந்ததும் அவர் தனக்குரிய கூலியை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.

அடுத்த நாள் படகின் உரிமையாளர் அந்த பெயின்டரின் வீடு தேடி வந்து ஒரு மதிப்பு மிக்க காசோலையை கொடுத்தார். அது அவர் ஏற்கனவே கூலியாக வழங்கிய தொகையைப் பார்க்கிலும் பன் மடங்கு அதிகமானது.

பெயின்டருக்கோ அதிர்ச்சி. ” நீங்கள் தான் ஏற்கனவே பேசிய கூலியைத் தந்துவிட்டீர்களே? எதற்காக மீண்டும் இவ்வளவு பணம் தருகிறீர்கள்? என்று கேட்டார் பெயின்டர்.

” இல்லை. இது பெயின்ட் அடித்ததற்கான கூலி அல்ல. படகில் இருந்த ஓட்டையை அடைத்ததற்கான பரிசு” என்றார் படகின் உரிமையாளர்.

” இல்லை, சார்… அது ஒரு சிறிய வேலை. அதற்காக இவ்வளவு பெரிய தொகைப் பணத்தை தருவதெல்லாம் நியாயமாகாது. தயவு செய்து காசோலையை கொண்டு செல்லுங்கள்” என்றார் பெயின்டர்.

” நண்பரே… உங்களுக்கு விஷயம் புரியவில்லை. நடந்த விஷயத்தைச் சொல்கிறேன் கேளுங்கள்” என்று சொல்லி விட்டு படகு உரிமையாளர் தொடர்ந்தார்.

” நான் உங்களை படகுக்கு பெயின்ட் அடிக்கச் சொல்லும் போது அதில் இருந்த ஓட்டையைப் பற்றிச் சொல்ல மறத்துவிட்டேன். பெயின்ட் அடித்து விட்டு நீங்களும் போய் விட்டீர்கள். அது காய்ந்த பிறகு எனது பிள்ளைகள் படகை எடுத்துக் கொண்டு மீன் பிடிக்கக் கிளம்பி விட்டார்கள்.

படகில் ஓட்டை இருந்த விஷயம் அவர்களுக்குத் தெரியாது. நான் அந்த நேரத்தில் அங்கு இருக்கவுமில்லை.

நான் வந்து பார்த்த போது படகைக் காணவில்லை. படகில் ஓட்டை இருந்த விஷயம் அப்போதுதான் நினைவுக்கு வர நான் பதறிப் போய் விட்டேன்.

கரையை நோக்கி ஓடினேன். ஆனால் எனது பிள்ளைகளோ மீன் பிடித்து விட்டு மகிழ்ச்சியாக திரும்பிவந்து கொண்டிருந்தார்கள். அந்தக் கணம் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும் அளவேயில்லை.

உடனே படகில் ஏறி ஓட்டையைப் பார்த்தேன். அது நேர்த்தியாக அடைக்கப்பட்டிருந்தது. இப்போது சொல்லுங்கள். நீங்கள் செய்தது பெறுமதியற்ற சிறியதொரு வேலையா? நீங்கள் என்னுடைய பிள்ளைகளின் விலைமதிக்க முடியாத உயிர்களையல்லவா காப்பாற்றியிருக்கிறீர்கள்? உங்களது இந்தச் ‘சிறிய’ நற்செயலுக்காக நான் எவ்வளவுதான் பணம் தந்தாலும் ஈடாகாது.” என்றார்.

நண்பர்களே… இதிலிருந்து என்ன புரிகிறது. யாருக்கு எங்கே எப்போது எப்படி என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பிரதிபலன் பாராது உதவுவோம்.

பிறரின் கண்ணீரைத் துடைப்போம். நம் கண் முன்னே தெரியும் ஓட்டைகளை கவனமாக அடைப்போம். அப்போதுதான் நமது ஓட்டைகளை அடைப்பதற்கான மனிதர்களை இறைவன் அறியாப் புறத்திலிருந்து நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பார்.

தொழிநுட்ப சாதனங்களின் பாவனை அதிகரிப்பால் மன உளைச்சலில் பிள்ளைகள்..!

0

தொழிநுட்ப சாதனங்களின் பாவனை அதிகரிப்பால் பிள்ளைகள் – பெற்றோருக்கு இடையிலான தொடர்பு குறைவடைந்துள்ளது. இளம் பிள்ளைகள் இதனால் மனம் மற்றும் உடல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர்.

அந்த வகையில் சமூகத்தில் உள்ள 18 சதவீதமானோர் கடுமையான மன உளைச்சலால் அவதிப்படுவதாக குடும்ப நல சுகாதார பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர் சிரந்திகா விதான தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் அண்மையில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

15 தொடக்கம் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் யௌவன பருவத்தினர் அல்லது இளம் பருவத்தினராவர். இந்நாட்டில் உள்ள மொத்த சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் 3.5 சதவீதமானோர் இளம் பருவத்தினராக உள்ளதுடன் அவர்களில் அதிகமானோர் பாடசாலை கல்வியை தொடர்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிள்ளைகளின் மூளை வளர்ச்சி, மூளையின் பின் பகுதியில் இருந்து முன்னோக்கி நகர்கிறது. இளம் பருவத்தினரின் மூளையின் முன்மடல்கள் வளர்ச்சியடைந்திருப்பதில்லை. இதனால் தீர்மானங்களை எடுப்பதில் தடுமாற்றம் ஏற்படுவதால் தவறான பழக்கங்களில் பிள்ளைகள் ஈடுபடுவதாக தெரியவருகிறது.

இவற்றால் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிப்படைய வாய்ப்புள்ளதுடன் தொற்றா நோய்களுக்கும் ஆளாகலாம். கடந்த வருடம் 13 தொடக்கம் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களை மையமாக கொண்டு சர்வதேச பாடசாலை சுகாதார மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது. நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 10 பகுதிகளை சேர்ந்த சுமார் 2,585 மாணவர்கள் மேற்படி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

அதற்கமைய சமூகத்தில் நிறை குறைந்த பிள்ளைகளின் சதவீதம் 21.4ஆக அதிகரித்துள்ளதுடன், நிறை கூடிய பிள்ளைகள் 12.1 சதவீதமாகவும், உடற் பருமனான பிள்ளைகள் 3 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. நாளாந்தம் மரக்கறி மற்றும் பழங்கள் உட்கொள்வோரின் வீதம் வெகுவாக குறைவடைந்துள்ளதுடன், உலர் உணவு வகைகள், துரித உணவுகள் ஆகியவற்றுக்கு பிள்ளைகள் பழக்கப்பட்டுள்ளமை ஆய்வுகளின் போது தெரியவந்துள்ளது.

17.4 சதவீதமான பிள்ளைகள் காபன் டை ஒக்சைட் அடங்கிய குளிர்பானம் அருந்துவதுடன் 28 சதவீதமானோர் நாளாந்தம் அன்றாடம் அதிக இனிப்பான பானங்களை அருந்துகின்றனர்.

மேலும் 70.4 சதவீதமான பிள்ளைகள் கடைகள் உள்ளிட்ட வெளியிடங்களில் இருந்து உணவுகளை கொள்வனவு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளதுடன் 4.3 சதவீதமான மாணவர்கள் வறுமை காரணமாக உணவின்றி தவிப்பதாகவும் தெரியவந்துள்ளது. 7.5 சதவீதமானோர் தமக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை என தெரிவித்துள்ளதுடன், 22.4 சதவீதமான மாணவர்கள் கடந்த வருடம் தனிமையில் இறந்துள்ளதாகவும் அறியக் கிடைத்துள்ளது.

அத்தோடு 11.9 சதவீதமானோர் மன உளைச்சல் காரணமாக தூக்கமின்மையால் அவதிக்குள்ளாகியுள்ளனர்.ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் 18 சதவீதமானோர் கடுமையான மன உளைச்சலால் அவதிப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை 15.4 சதவீதமான மாணவர்களிடையே உயிர்மாய்ப்பு தொடர்பான எண்ணக்கருக்கள் இருந்துள்ளதுடன், 9.6 சதவீதமானோர் உயிர்மாய்ப்புக்கும் முயற்சித்துள்ளனர். இரவு நேரங்களில் 62.6 சதவீதமான சிறுவர்கள் 8 மணித்தியாலங்களுக்கும் குறைவாகவே உறங்குவதாகவும் ஆய்வின் போது தெரிய வந்துள்ளது.

18.9 சதவீதமான மாணவர்கள் பாடசாலையினுள்ளும், 8.8 சதவீதமானோர் வெளியிடங்களிலும் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகியுள்ளனர்.அத்தோடு ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மாணவர்களில் 5.4 சதவீதமானோர் இணையவழி பாலியல் சீண்டல்களுக்கு முகங் கொடுத்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களின் பாவனை, தொழில்நுட்ப சாதனங்களின் பாவனை அதிகரிப்பால் பிள்ளைகள் மற்றும் பெற்றோருக்கு இடையிலான தொடர்பு குறைவடைந்துள்ளது. இதனால் பிள்ளைகள் மனம் மற்றும் உடல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். ஆகையால் பெற்றோர் இவைத் தொடர்பில் கண்காணிப்பது அவசியம் என்றார்.

மனைவியைக் காதலனுக்கே திருமணம் செய்து வைத்த கணவன்; முன்வைத்த இறுதி கோரிக்கை..!

0

தனது மனைவியை அவருடைய காதலனுக்கு கணவனே திருமணம் செய்து வைத்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், சாண்ட் கபிர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பப்லு. இவருக்கும், ஜோதி என்ற பெண்ணுக்கும் கடந்த 2017இல் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த தம்பதிக்கு, 7 மற்றும் 9 வயதில் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். பப்லு தனது தனது குடும்பத்தைக் காப்பாற்ற அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று சம்பாதித்து வந்துள்ளார்.

இதற்கிடையில், ஜோதிக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த விவகாரம் பப்லுவின் குடும்பத்தினருக்கு தெரியவர, இது குறித்து உடனடியாக பப்லுவிடம் தெரிவித்துள்ளனர்.

இதனை அறிந்த பப்லு, இந்த பிரச்சனையை சரிசெய்ய பலமுறை முயன்றுள்ளார். ஆனால், அனைத்து தோல்வியில் முடிந்துள்ளது. இந்த சூழ்நிலையில், தனது மனைவியை அவருடைய காதலனுக்கே திருமணம் செய்து வைக்க பப்லு முடிவு செய்துள்ளார்.

நீதிமன்றத்திற்குச் சென்று தனது மனைவிக்கு அவரது காதலனோடு திருமணம் செய்து வைத்ததுடன் பின்னர், அவர்களை ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்று இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ளார்.

இறுதியாக, தனது இரண்டு குழந்தைகளை தானே வைத்துக் கொள்ள விரும்புவதாக பப்லு ஜோதியிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது. காதலனை மணந்த பிறகு ஜோதியும், பப்லுவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார்.

வவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு..!

0

வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இன்று இடம்பெற்றது. வவுனியா நகரில் அமைந்துள்ள வாடி வீட்டில் கட்சியின் வவுனியா மாவட்ட தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ப.சத்தியலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, செட்டிகுளம் பிரதேச சபை என்பவற்றுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதில், கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், வேட்பாளர்கள், கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

அநுர அரசாங்கத்திற்கு பேரிடி; மற்றுமொரு பதவி விலகல் பதிவானது..!

0

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தவிசாளர் பந்துர திலீப விதாரண தனது பதவியில் இருந்து விலகுவதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளரிடம் கடிதமொன்றை சமர்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

தேசிய மக்கள் சக்தியின் போக்குவரத்து குழுவின் தலைவராகவும் பணியாற்றும் பந்துர திலீப விதாரண, நாவல திறந்த பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர பிமல் ரத்நாயக்க தலைமையிலான போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் கீழ் வரும் நிறுவனங்களின் தவிசாளர் பதவியிலிருந்து விலகிய செய்த மூன்றாவது அதிகாரி பந்துர திலீப விதாரண ஆவார்.

ஏற்கனவே, தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தவிசாளராக பணியாற்றிய ருவன் விஜயமுனி மற்றும் தேசிய போக்குவரத்து சபையின் தவிசாளராக பணியாற்றிய ரமல் சிறிவர்தன ஆகியோர் முன்னர் பதவி விலகியிருந்தனர்.

இந்த நிலையில், பதவி விலகல் குறித்த காரணத்தை விசாரிக்க பந்துர திலீப விதாரணவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, அவர் வேறு வேலையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அழைப்பைத் துண்டித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

கூரை சூரிய மின்சாரக் கட்டணக் குறைப்புக்கு ஆட்சேபனை தெரிவிப்பு..!

0

கூரை சூரிய மின்சக்தி கட்டணக் குறைப்புக்கு சூரிய மின்சக்தி தொழிற் சாலைகள் சங்கம் கடும் ஆட்சேபனை எழுப்பியுள்ளது. இது இலங்கையின் சூரிய மின்சக்தித் துறையை கடுமையாகப் பாதிக்கும் என்று, அந்த சங்கம் எச்சரித்துள்ளது.

திறைசேரியின் செயலாளர் கே.எம். மகிந்த சிறிவர்தனவுக்கு எழுதிய கடிதத்தில், முன்மொழியப்பட்ட கட்டணக் குறைப்பு, 27 இல் இருந்து 23 ஆகவும், 19 இல் இருந்து 14 ஆகவும் மாற்றப்பட்டுள்ளது.

இது, 1,000க்கும் மேற்பட்ட வணிகங்களையும் 40,000க்கும் மேற்பட்ட ஊழியர்களின் வாழ்வாதாரத்தையும் அச்சுறுத்துகிறது என்று சங்கம் தெரிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டில் கூரை சூரிய மின்சக்தி 500 மெகாவோட்டிற்கு மேல் பங்களித்ததாகவும், இது புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் வேகமாக வளர்ந்து வரும் பிரிவாக அமைந்ததாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

வேட்பு மனு நிராகரிப்பு; நீதிமன்ற படியேறும் தமிழ் மக்கள் கூட்டணி..!

0

யாழ் மாநகர சபை உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப் பட்டமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் தமிழ் மக்கள் கூட்டணி வழக்கு தொடர்ந்துள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணியினால் வழங்கப்பட்ட வேட்பு மனுவில் பெண் வேட்பாளர் ஒருவரின் சத்திய கூற்றில் தவறு உள்ளதாக கூறி அந்த பெண் வேட்பாளரை பட்டியலில் இருந்து நீக்கியமையால் , தேவையான பெண் பிரதிநிதித்துவம் இல்லை என மாநகர சபைக்கான வேட்பு மனுவை தேர்தல்கள் திணைக்களம் முற்றாக நிராகரித்துள்ளது.

வேட்பு மனுவில் தேவையான பெண் வேட்பாளர்களை உள்ளடக்கி இருந்தோம். ஆனால் ஒரு பெண் வேட்பாளரின் சத்திய கூற்றில் தவறு எனில் அவரை மாத்திரம் நீக்கி ஏனையோரை போட்டியிட அனுமதித்து இருக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் முழு வேட்பு மனுவையும் நிராகரித்து 48 வேட்பாளர்களின் ஜனநாயக உரிமையை மறுத்துள்ளார்கள் என தமிழ் மக்கள் கூட்டணியினர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந் நிலையிலேயே இன்றைய தினம்(25) செவ்வாய்க் கிழமை ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் ஊடாக உச்ச நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

யாழ் மாநகர சபையில் , முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் முதல்வர் வேட்பாளராக கொண்டு களமிறங்கிய தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பு மனுவே நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!