யாழில் அதிக ஹெரோயின் பாவனையால் இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். யாழ் – நல்லூர் பகுதியை சேர்ந்த 30 வயதடைய ஜெ.சுகன்யன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
இவர் கடந்த 23ஆம் திகதி நண்பனின் வீட்டுக்கு சென்று உறங்கியுள்ளார். 24ஆம் திகதி அவரை பார்வையிட்ட வேளை மயக்க நிலையில் காணப்பட்டார்.
பின்னர் அவரை யாழ் போதனா வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற வேளை அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
ஊசி மூலம் அதிகளவான ஹெரோயினை உட்செலுத்தியதன் காரணமாக இந்த மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா, போகஸ்வேவ பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் பெண் ஒருவர் வீழ்ந்து இருந்ததை அவதானித்த ஊர் மக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் பெண் ஒருவரின் சடலத்தை மீட்டதுடன், திடீர் மரண விசாரணை அதிகாரி க.கரிபிரசாத் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.
வவுனியா, போகஸ்வேவ பகுதியைச் சேர்ந்த 30 வயது இளம் யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் வவுனியா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ் முஸ்லிம் சிவில் சமூக அமைப்பின் செயலாளர் தாஹா.ஐன்ஸ்டின் தெரிவித்தார்.
தான் ஏற்கனவே சபாநாயகரிடம் இந்த விடயம் தொடர்பில் முறைப்பாடு அளித்துள்ளதாகவும் இதனால் அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் இன்றைய தினம் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸ் மா அதிபர் அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
திருமணம் முடிந்த சில நாட்களில் திருமணப் பெண் வேறு ஆண் ஒருவருடன் ஓடிய சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
பிரான்ஸ் நாட்டிலிருந்து வருகை தந்த மணமகனுக்கு யாழ் நீர்வேலிப் பகுதியில் வசிக்கும் மருதனார்மடம் புடவைக்கடையில் வேலை செய்யும் யுவதி ஒருவருக்கும் திருமணம் கடந்த வாரம் இடம் பெற்றது.
திருமணம் முடிந்த சில நாளில் பதிவுத் திருமணம் இடம்பெற இருந்த நிலையில் ஏற்கனவே திருமணம் செய்த ஆண் ஒருவருடன் புது மணப்பெண் தலை மறைவாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் மணமகன் வீட்டார் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதிகும்புர கஹம்பான பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்திச் சென்ற 33 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நேற்று திங்கட்கிழமை (24) அன்று மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக சிறுமியின் தாயார் பொலிஸில் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, இருவரும் எம்பிலிபிட்டியவிலிருந்து மொனராகலைக்கு வரும் பேருந்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபரை மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வைத்திய பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்திய சாலையில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு இணங்க, அரசு ஊழியர்களுக்கான சம்பள திருத்தங்கள் அடங்கிய சுற்றறிக்கை வெளியாகியுள்ளது
குறித்த சுற்றறிக்கை இன்றைய தினம் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டாரவினால் கையொப்பமிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த சுற்றறிக்கை அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், புதிய சம்பள அளவுத் திட்டத்திற்குள் கீழே குறிப்பிடப்படும் கொடுப்பனவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
01.2019.04.22 ஆம் திகதி அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 09/2019 இற்கமையச் செலுத்தப்படும் ரூபா 2,500/- மாதாந்த இடைக்காலக் கொடுப்பனவு.
02. 2022.01.13 ஆம் திகதி அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 03/2022 இற்கமையச் செலுத்தப்படும் ரூபா 5,000/- மாதாந்தக் கொடுப்பனவு.
மேலும், சம்பளத்தின் நிகர அதிகரிப்பின் மாதாந்தம் உரித்தாகும் தொகை மற்றும் மாதாந்தம் செலுத்தப்படாத தொகை கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள நிரலில் காட்டப்பட்டுள்ளது.
உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இலங்கையில் வாகன இறக்குமதிக்கான வரி விகிதம் மிக அதிகமாக இருப்பதாக ஜப்பான் – இலங்கை வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜகத் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இலங்கையில் வாகன விலைகள் வியத்தகு முறையில் அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாகன இறக்குமதி பிரச்சினைகள் தொடர்பாக நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
CHR அல்லது Vezel போன்ற வாகனங்கள் இலங்கையில் விற்கப்படும் விலையில் உலகின் எந்த நாட்டிலும் விற்கப்படுவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வளவு வரிகள் விதிக்கப்படுவதால், உலகில் வேறு எந்த நாடும் CHR அல்லது Vezel போன்ற வாகனத்தை இந்த விலையில் வழங்க முடியாது. அதை விற்கவும் முடியாது. இவ்வளவு வரி வசூலிக்கும் நாடு வேறு எதுவும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பானில் ஒரு மில்லியன் மதிப்புள்ள வாகனத்தை, நியூசிலாந்திற்கு 20 வீத வரியில் இறக்குமதி செய்கிறோம். அதன் மதிப்பு 12 லட்சம். அதே வாகனத்தை பங்களாதேஷில் 50 வீத வரியுடன் இறக்குமதி செய்யும் போது அதன் மதிப்பு 1.5 மில்லியன் ஆகின்றது.
ஆனால் இலங்கையில் 200 வீதம் வரி விதிக்கப்படுவதால் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான வாகனம் இலங்கை மூன்று மில்லியன் ரூபா பெறுமதியுடையதாக மாறுகின்றது.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதம் இப்போது தீர்க்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர், கூடுதல் சுங்க இயக்குநர் ஜெனரல் சீவலி அருகொட தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சிக்கியுள்ள வாகனங்களை விடுவிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இலங்கை விமானப் படையின் சீன K-8 பயிற்சி விமானம் சற்று முன்னர் வாரியப்போலாவில் விபத்துக்குள்ளானதாக விமானப் படை தெரிவித்துள்ளது.
திருகோணமலையில் உள்ள சீன விரிகுடா விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட விமானம், விபத்துக்கு முன்னர் ரேடார் தொடர்பை இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் விமானப்படை கருத்து தெரிவிக்கையில், குறித்த விபத்தின் போது விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேறி பாராசூட்களைப் பயன்படுத்தி தரையிறங்கியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை, என்பதுடன் இந்த விபத்தில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. அதேவேளை குறித்த விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழில் வெளிநாட்டு பெண்ணுடன் தகாத முறையில் நடந்து கொண்ட அரச பேருந்து நடத்துனர் ஒருவருக்கு நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
லண்டனில் இருந்து யாழ். வந்த 27 வயதுடைய சுற்றுலாப் பயணி ஒருவர் நேற்றைய தினம் நயினாதீவு செல்வதற்காக அரச பேருந்து ஒன்றில் குறிகட்டுவான் நோக்கி பயணித்துள்ளார்.
இதன் போது பேருந்து நடத்துனர் குறித்த பெண்ணுடன் அங்க சேஷ்டையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விதான பத்திரன தலைமையிலான பொலிஸ் குழுவினர் விரைந்து செயற்பட்டு குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் அவரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில், நீதிமன்ற குற்றப் பணமாக 1500 ரூபா அறவிடப்பட்டதுடன், குறித்த பெண்ணுக்கு 10 ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் என்பதுடன் ஒத்திவைக்கப்பட்ட 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
வவுனியா விபுலானந்தா கல்லூரியில் ஆய்வு கூடம் இம்முறை பரீட்சை எழுதும் சில மாணவர்களால் உடைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வவுனியா, பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெற்று வருகின்றது.
பரீட்சையில் தோற்றும் சில மாணவர்கள் பாடசாலை விஞ்ஞான ஆய்வுகூடம் மற்றும் கணித கூடம் என்பவற்றின் கதவை உடைத்துள்ளதுடன் அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து, குறித்த நிலையத்திற்கு பொறுப்பான பரீட்சைப் பொறுப்பதிகாரி மற்றும் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு தெரியப்படுத்திய போதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.