இன்றைய தினம் வவுனியா வடக்கு பிரதேசத்திற்கான பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் பிரதேச செயலக மண்டபத்தில் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் நடைபெற்றது.
இன்றைய கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஆசிரியர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், வைத்தியர் திலகநாதன், வைத்தியர் சத்தியலிங்கம், துரைராசா ரவிகரன் ஆகியோர் உட்பட திணைக்களத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
கலந்துரையாடலின் போது வவுனியா வடக்கு பிரதேசத்தின் கல்வி நிலை தொடர்பான கேள்வியை எழுப்பிய வைத்தியர் திலகநாதன் அவர்கள், கடந்த வருடம் வெளியாகிய சாதாரண தரப் பரீட்சையின் அடிப்படையில் வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் நிலை தொடர்பிலும், வவுனியா வடக்கின் கல்வி அபிவிருத்தி தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் குறித்த துறையுடன் தொடர்புடைய அதிகாரியிடம் கேள்வியெழுப்பியிருந்தார்.

எனினும் உரிய முன் ஆயத்தம் ஏதுமின்றி வருகை தந்திருந்த அதிகாரி வழமையாக சமாளிக்கும் வழியில் கருத்துக்களை பொதுவாக தெரிவித்திருந்த நிலையில், வெகுண்டெழுந்த பாராளுமன்ற உறுப்பினர் வவுனியா வடக்கு வலயம் 100 வலயங்களில் 96வது இடத்தில் இறுதி நிலையில் இருப்பதாகவும் பரீட்சை எழுதிய 561 மாணவர்களில் கணிதம், தமிழுடன் 263 மாணவர்களே சித்தியடைந்துள்ளதாகவும் கூறிய போது குறுக்கிட்ட கல்வி அதிகாரி தாங்கள் கூறுவது பிழையென வாதிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பகுப்பாய்வு அறிக்கையை அனைவருக்கும் காட்டி வவுனியா வடக்கில் மொழி, கணிதம் இல்லாது 561 மாணவர்களில் 298 (53%) மாணவர்களின் கல்வி உரிமை மட்டுமன்றி அவர்களின் எதிர்காலம் முழுமையாக அழிக்கப்பட்டு கூலித் தொழிலாளர்களாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். உண்மை ஆதாரங்களுடன் வெளிப்பட்டதால் மேலும் கதைக்காது குறித்த அதிகாரி அமைதியாகி விட்டார்.
அதுமட்டுமன்றி மேலும் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் திலகநாதன் அவர்கள், ஆசிரியர்களை பதிலால் இன்றி விட்டமை தவறு, அதன் முழுப் பொறுப்பும் வலயக் கல்விப் பணிப்பாளரையே சாரும், இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் வலயக் கல்விப் பணிப்பாளருக்கே உண்டு என்பதை மீள ஞாபகமூட்டினார். இதனால் குறித்த அதிகாரியால் மேலும் எதுவும் கூற முடியாத நிலை ஏற்பட்டது.
எனினும் நிலையையும், நேரமுகாமைத்துவத்தையும் கருத்தில் கொண்டு மேலதிக விடயங்களை மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் கதைப்போம் என சக பாராளுமன்ற உறுப்பினரான மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் அவர்கள் கூறியதற்கு இணங்க குறித்த விடயம் நிறைவுக்கு வந்தது.
அதன் பின்னர் வெடுக்குநாறி சிவராத்திரி விழா ஏற்பாடுகள் உட்பட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு நிகழ்வு நிறைவுக்கு வந்தது.
















