சர்ச்சைக்குரிய விடயங்களைக் கொண்ட தரம் 6 ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் உள்ள குறிப்பிட்ட பாடத்தை நீக்குவதற்கு தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கான அனுமதி நேற்று (06) வழங்கப்பட்டதாகக் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இன்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
முல்லைத்தீவில் வெளிச்சவீடு இன்மையால் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் கரைதிரும்புவதில் பாரிய இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருவதாகத் தெரிவித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வெளிச்ச வீடொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் முல்லைத்தீவில் வெளிச்ச வீடு அமைப்பதுதொடர்பில் துறைமுகங்கள் மற்றும் விமானசேவைகள் அமைச்சருடன் தாம் பேசியுள்ளதாகவும், இவ்வருடத்திற்குள் முல்லைத்தீவில் வெளிச்ச வீட்டினை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் படுமெனவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரால் பதில் வழங்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் 05.01.2025நேற்று இடம்பெற்ற கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மணற்குடியிருப்பு கடற்கரைப் பகுதியில் கடந்த 1950ஆம் ஆண்டு காலப் பகுதியில் கட்டப்பட்ட வெளிச்சவீடொன்று காணப்பட்டது.
இந்த வெளிச்சவீட்டினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் 74கிலோமீற்றர் தூரமான கரையோரத்தில் கொக்கிளாய் தொடக்கம் பேப்பாரப்பிட்டி வரையிலுள்ள மீனவர்கள் பயனடைந்தவந்தனர்.
குறித்த வெளிச்சவீட்டின் உதவியுடனேயே மீனவர்கள் தொழிலுக்குச் சென்று தமது மீன்பிடித் துறைகளுக்கு கரைதிருப்பிவந்தனர்.
இவ்வாறாக மீனவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாகவிருந்த இந்த வெளிச்சவீடு கடந்த 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்துடன் முற்றாக அழிவடைந்துள்ளது.
எனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது மீனவர்கள் வெளிச்சவீடின்றி பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
எனவே மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு கடற்றொழில் அமைச்சு முல்லைத்தீவில் வெளிச்ச வீடொன்றை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கடந்த 09.09.2025அன்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற கடற்றொழில் அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்திருந்தேன்.
இந்நிலையில் வெளிச்ச வீடுகளை அமைப்பதற்கு துறைமுக அதிகார சபையே பொறுப்பெனவும், எனவே துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சருடன் கலந்துரையாடி முல்லைத்தீவில் வெளிச்ச வீடு அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென கடற்றொழில் அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோரால் இதன்போது பதில் வழங்கப்பட்டிருந்தது.
அதற்கமைய 05.01.2025அன்று இடம்பெற்ற கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சரிடம் குறித்த வெளிச்சவீட்டினை அமைப்பது தொடர்பான முன்னேற்றம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தேன்.
அந்த வகையில் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சருடன் இது தொடர்பில் தாம் பேசியுள்ளதாகவும், நிச்சயமாக இவ்வருடத்திற்குள் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெளிச்சவீட்டினை அமைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுமென கடற்றொழில் அமைச்சர் இதன்போது பதில் வழங்கியிருந்தார் – என்றார்.
கடற்றொழிலாளர் ஓய்வூதிய, சமூகப் பாதுகாப்பு நலன்புரித்திட்டம் சார்பாக கடற்றொழில் அமைச்சரால் முன்வைக்கப்பட்ட ஒழுங்குவிதிகளில் சில திருத்தங்களை ஏற்படுத்துவதன் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் ஓய்வுகாலத்தையும் மேலும் வளப்படுத்த முடியுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அந்தவகையில் இறுக்கமான தவணைக் கட்டண முறைக்கு மாற்றாக பருவ காலத்துடன் இசைந்த வகையில் தவணைக் கட்டண முறையை நடைமுறைப்படுத்தல், அரசின் கூட்டுப்பொறுப்பை உறுதிப்படுத்தல், பண வீக்கத்துடன் இணைந்த வகையில் ஓய்வூதியத் தொகையை தீர்மானித்தல், இழப்பீட்டுத் தொகை காலப் பொருத்தமற்று இருத்தல், மதுபாவனையால் குடும்பத்தினர் தண்டிக்கப்படுவதை தவிர்த்தல், ஒழுங்குவிதிகளில் உள்ள இடைவெளிகளை ஆராய்தல் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் மேலும் கரிசனை கொள்ள வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் 06.01.2026இன்று இடம்பெற்ற கடற்றொழிலாளர் ஓய்வூதிய சமூகப் பாதுகாப்பு நலன்புரித்திட்ட சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
30 ஆண்டுகளின் பின்னர் கடற்றொழிலாளர் ஓய்வூதிய, சமூகப் பாதுகாப்பு நலன்புரித்திட்டம் சார்பாக தற்போதைய கடற்றொழில் அமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை வரவேற்கிறோம். வயதுக்குரிய பங்களிப்பு, ஓய்வூதிய கட்டங்கள், இயலாமை மற்றும் இறப்பின் போதான பணிக்கொடை விபரம் என்பன தெளிவாக வரையறுக்கப்பட்டிருத்தல் வரவேற்புக்குரியன.
ஆனாலும் மேற்படி ஒழுங்குவிதிகளில் மேலும் சில மாற்றங்களை ஏற்படுத்தினால் அவை மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் ஓய்வு காலத்தையும் மேலும் வளப்படுத்தும்.
இறுக்கமான தவணைக் கட்டண முறைக்கு மாற்றாக பருவ காலத்துடன் இசைந்த வகையில் தவணைக் கட்டண முறையை நடைமுறைப்படுத்தல், அரசின் கூட்டுப்பொறுப்பை உறுதிப்படுத்தல், பணவீக்கத்துடன் இணைந்த வகையில் ஓய்வூதியத்தொகையை தீர்மானித்தல், இழப்பீட்டுத் தொகை காலப்பொருத்தமற்று இருத்தல், மதுபாவனையால் குடும்பத்தினர் தண்டிக்கப்படுவதை தவிர்த்தல், ஒழுங்குவிதிகளில் உள்ள இடைவெளிகளை ஆராய்தல் தொடர்பில் கௌரவ கடற்றொழில் அமைச்சர் மேலும் கரிசனை கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
மீனவ சமூகத்தின் முதுமைக்காலம் மதிப்போடு கணிக்கப்பட வேண்டியது. எனினும் பொதுவான இயற்கை அனர்த்தங்களுக்கு மேலாக தடை செய்யப்பட்ட தொழில் முறைகள் இன்னமும் கட்டுப்படுத்தப்படாதிருத்தல், இழுவைமடிப்படகுகளின் அத்துமீறல் என்பவற்றால் எரிபொருள் செலவுக்கேனும் மீன்பிடிக்க இயலாது கரைதிரும்பும் வள்ளங்களும் உள்ளன.
இலட்சக்கணக்கான பெறுமதி கொண்ட வலைகளை இழந்து விட்டு கரை திரும்பும் மீனவர்கள் உள்ளனர். ஒவ்வொரு மாதமும் சீரான வருவாயை கடற்றொழில் ஈட்டித் தருவதில்லை.
இந்நிலையில் தவணைக் கட்டணங்களில் மட்டும் மீனவர்களுக்கு இறுக்கமான நடைமுறை எவ்வாறு பொருந்தும்? இந்தியா, பிறேசில் உள்ளிட்ட நாடுகளில் பேணப்படும் பருவகாலத்துடன் இசைந்ததான நெகிழ்வுப் போக்குடனான தவணைக் கட்டண முறைமை இலங்கை மீனவர்களுக்கும் மிகவும் பொருந்தும்.
செய்ச்செல்ஸ் (Seychelles) மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் மீனவர்களின் ஓய்வூதியத் திட்டங்கள் அரசுடன் இணைந்த, பகிரப்பட்ட பொறுப்பை அடிப்படையாகக் கொண்டவையாக உள்ளன. மீனவர்களின் ஓய்வூதியத்திட்டத்தில் பகுதியளவில் அரசின் பொறுப்பேற்றல் மீனவர் வாழ்வை மேலும் வலுவூட்டும்.
தற்போது 45 வயதில் உள்ள ஒருவர் 15 ஆண்டுகளின் பின்னர் ஒரு மாத ஓய்வூதியமாகப் பெறும் 1000 ரூபாய் தொகை ஒரு வேளை உணவுக்கு கூட போதாமல் இருக்கும். இப்போது 18 வயதில் உள்ள ஒருவர் 42 ஆண்டுகளின் பின்னர் ஒரு மாத ஓய்வூதியமாக பெறும் 1000 உரூபாய் தொகை பணவீக்கத்தின் அடிப்படையில் கிட்டத்தட்ட இப்போதைய 130 ரூபாய்க்குச் சமனாக காணப்படும்.
மேற்படி நலன்புரித்திட்டத்தின் ஊடாக 42 ஆண்டுகளின் பின்னர் கிடைக்கும் ஒரு மாத ஓய்வூதியத்தில் ஒரு பால் தேநீரைத்தான் குடிக்க முடியும் என்பது எத்தகைய அபத்தம்!
பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவுகளுடன் இணைந்ததான வகையில் கடற்றொழிலாளர் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடைத் தொகைகள் அவ்வப்போது இற்றைப் படுத்தப்படுவது மிகவும் பொருத்தமானதாக அமையும்.
46 வயதுடைய மீனவர் ஒருவர் கடலில் விபத்துக்குள்ளாகி மரணமடைந்தால் அவர் சார்பாக வழங்கப்படும் 6 ஆயிரம் உரூபாய் அம்மீனவரின் குடும்பத்தின் எதிர்காலத்தை எந்த அளவில் ஆற்றுப்படுத்தும்? மேற்படி இழப்பீட்டுத் தொகை காலத்திற்கு பொருத்தமான தொகை தானா?
மது அருந்திய நிலையில் விபத்து நடந்தால் இழப்பீடு இல்லை என்ற விதி, பல நேரங்களில் அதிகாரிகளால் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்கள் மருத்துவ வசதிகளிலும் தீவளாவிய வகையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளமை இதற்கு மேலும் வலுச் சேர்ப்பதாக அமைந்து விடும்.
மேலும் ஒருவரின் தனிப்பட்ட பழக்கம், குடும்பத்துக்கான அரசின் ஆற்றுப்படுத்தலை ஏன் தடை செய்யவேண்டும்.
ஒழுங்குவிதிகளில் உள்ள இடைவெளிகள் கடலில் ஒருவர் காணாமல் போனால் 2025 இன் ஒழுங்குவிதி என்ன தீர்வைத்தரும்? மீனவர்களுக்கு அவர்களின் கைகளே முதன்மையான வாழ்வாதார மூலங்கள். விபத்து ஒன்றில் மீனவர்கள் விரல்களை இழந்தால்? உள்ளங்கை சிதைந்தால்? கைகளுக்குச் செல்லும் நரம்புகள் சேதமுற்றால்?
கௌரவ அமைச்சர் அவர்களே,
ஒரு மீனவர் விரல்களை இழந்து, அவரின் கேட்டல் திறனை இழந்தது, கடற்பரப்பிலே பாதுகாப்பாக நிலைகொள்ளும் திறனை இழந்து அதனால் அம்மீனவரின் வாழ்வாதார வலு முற்றாக நிலைகுலைந்தாலும் கூட, 2025 இன் ஒழுங்குவிதி அம்மீனவரை இயலாமை உடையவர் என வரையறுக்க மறுக்கிறது! இது நியாயமா? மேற்படியான பாதிப்புகள் மீனவர்களின் மீன்பிடி வாழ்வை பாதிக்காதா?
இந்தியா, வாழ்வாதார இழப்புக்கான இழப்பீட்டைத் தான் கொடுக்கிறது. உடல் கூறுகளின் இழப்பை அளவிட்டு அல்ல. பல நாடுகள், சர்வதேச தொழிலாளர் அமைப்பால் உருவாக்கப்பட்ட,
மீன்பிடித் தொழிலில் வேலைவாய்ப்பு தொடர்பான C188 உடன்படிக்கைக்கு அமைய, உடல் உறுப்புகளின் இழப்பில் கவனம் செலுத்தாது பணிபுரிவதற்கான உடற் தகுதியில் கவனம் செலுத்துகின்றன.
முதுகெலும்பு வட்டுகள் சேதமடைதல், நாள்பட்ட முதுகு வலியால் அவதியுறல், பகுதிளவான பாரிசவாதம், நுரையீரல் நோய், காசநோய், எரிபொருள் புகையால் ஏற்படும் நோய், கை-கால் வலிப்பு, பகுதி குறைபாட்டுடனான பக்கவாதம், சமநிலை கோளாறு, உளநிலை பாதிப்புகள், பணிசார் நோய்கள் என்பவற்றுக்கு 2025 இன் ஒழுங்குவிதிகள் கூறும் தீர்வென்ன?
மேற்படி ஒழுங்குவிதிக்கான இயலாமை வரையறையும் மேலும் விரிவாக்கப்பட வேண்டும் என்பதையும் இந்தப் பேரவையில் கேட்டுக் கொள்கிறேன் – என்றார்.
வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றாகச் சிதைக்கின்ற இந்திய இழுவைப்படகுகளின் வருகையை உடனடியாக கட்டுப்படுத்துமாறு வன்னிமாவட்டாநாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றில் 05.01.2026இன்று இடம்பெற்ற கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள்பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் பங்கேற்றுக் கருத்துத் தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
வடக்கில் யாழ்ப்பாணம், தீவகம், கிளிநொச்சி, முல்லைத் தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களின் கடற்பரப்புக்களில் இந்திய இழுவைப் படகுகளின் அடாவடித்தனமான செயற்பாடுகள் அதிகரித்துள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இதன் போது கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
குறிப்பாக வடபகுதி கடற்பரப்பில் கடற்கரைகளை அண்மித்து இந்திய இழுவைப் படகுகள் இழுவைமடித் தொழிலில் ஈடுபட்டு கடல் வளங்களை சூறையாடுவதுடன், வடபகுதி மீனவர்களின் கடற்றொழில் உபகரணங்களையும் சேதப்படுத்திச் செல்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
வடபகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த யுத்த காலப் பகுதியில் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, தற்போது அவர்கள் தமது அன்றாட வாழ்வாதாரத்தினை கொண்டு செல்வதற்கே பாரிய இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருவதாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், இந்திய இழுவைப் படகுகளின் இவ்வாறான அடாவடித்தனமான செயற்பாடுகள் வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் சிக்கலுக்குள் தள்ளுவதாக அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை இந்திய இழுவைப் படகுகளின் அடாவடித்தனமான செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறு கடற்றொழில் அமைச்சரிடம் தொடர்ச்சியாக முறையீடுகளைச் செய்து வருவதாகவும், கடற்றொழில் பிரதியமைச்சர் முல்லைத்தீவிற்கு வரும் போதும் இவ்விடயம் தொடர்பில் தெரியப்படுத்தியிருந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன் போது நினைவுபடுத்தினார். இருப்பினும் தற்போதும் இந்திய இழுவைப் படகுகளின் அத்து மீறல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய வருகையை கட்டுப்படுத்துவதில் இலங்கை அரசிற்கு இராஜதந்திர ரீதியான சிக்கல் நிலை இருந்தாலும், வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரப் பாதிப்பு நிலையை கருத்திற்கொண்டு இந்திய இழுவைப் படகுகளைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இதன் போது வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் இந்திய இழுவைப் படகுகளின் வருகையைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென இதன் போது கடற்றொழில் அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் ஆகியோரால் பதிலளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2026 ஆம் ஆண்டின் முதலாம் தவணைக்கான கல்விச் செயற்பாடு இன்று (05) தொடங்கிய போதிலும், 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முறையான கல்வித் திட்டம் எதுவும் வெளியிடப்படவில்லை என்று தரப்படுத்தப்பட்ட அதிபர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் ஜனவரி 21 ஆம் திகதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் கல்வி நடவடிக்கைகளில் இடைவெளி உள்ளது என்று அதன் பொதுச் செயலாளர் நிமல் முதுங்கொடுவா குறிப்பிட்டார்.
பாடசாலை ஆரம்பமாகும் முதல் நாளில் பாடசாலைகளுக்கு மாணவர் பதிவு புத்தகங்கள் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
புதிய 6 ஆம் வகுப்பு தொகுதிகளில் உள்ள பிழைகள் மற்றும் அதிகாரிகள் அவற்றை எவ்வாறு நிவர்த்தி செய்கிறார்கள் என்பது குறித்தும் கவலைகள் எழுப்பப்பட்டன.
இதேவேளை, இந்தப் பாடத் திட்டத்தை செயல்படுத்தும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 7,181 பயிற்சித் திட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், 132,580 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழைச் சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர், மனைவிக்கு தெரியாது எடுத்துச் சென்ற 9 பவுண் தாலிக் கொடியை கொழும்பு யுவதி எடுத்துக் கொண்டு தலைமறைவான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிய வருகின்றது.
கடந்த சில மாதங்களின் முன்னர் இடம்பெற்ற இச்சம்பவம், மனைவி மறைவிடத்தில் இருந்த தாலிகொடியை விசேடம் ஒன்றுக்காக எடுக்க சென்ற போதே கணவனின் குட்டு வெளிப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
யாழைச் சேர்ந்த திருமணமான வங்கி ஊழியர் ஒருவருக்கு , அவரது நண்பனின் ஊடாக கொழும்பு யுவதி ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.
அந்த யுவதியுடன் தனித்திருக்க விரும்பி குறித்த வங்கி ஊழியர் மனைவிக்கு தெரியாது அவர்து தாலிகொடியை எடுத்து கொண்டு கொழும்பு யுவதியுடன் வவுனியா சென்று ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் வங்கி ஊழியர் கண் அயர்ந்த நேரத்தில் கொழும்பு யுவதி, வங்கி ஊழியரிடம் இருந்த தாலிக் கொடியை எடுத்து கொண்டு கம்பி நீட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண் விழி்த்த பின்னரே வங்கி ஊழியருக்கு , கொழும்பு யுவதி தாலிக் கொடியுடன் மாயமாகியமை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனையடுத்து நண்பனுடன் யுவதியை தேடியபோதும் அவர்களால் கொழும்பு யுவதியை கண்டுபிடிக்க முடியவில்லையாம்.
இந்த நிலையிலேயே மனைவி தாலிக் கொடியை எடுக்க சென்ற போது மறைவிடத்தில் இருந்த தாலிக்கொடியை கணவன் எடுத்து சென்ற சம்பவம் அம்பலமாகியுள்ளது.
நண்பருக்கு இரவல் கொடுத்ததாக கணவன் சமாளித்த போதும், தொடர்ந்து இழுத்தடிப்பு செய்ததால், நண்பனின் வீடு சென்று மனைவி அது தொடர்பில் வினவிய போதே நடந்த சம்பவத்தால், மனைவியும், நண்பனின் மனைவி்யும் அதிர்ந்து போயுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் சம்பவம் தொடர்பில் மனைவி பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளதுடன், விவாகரத்துவரை சென்றுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
அரசியலமைப்பு பேரவையிலிருந்து விலகுவது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து தனக்கு தனிப்பட்ட ரீதியில் உத்தியோகபூர்வ கடிதத்தின் மூலம் அறிவிக்க வில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் சிறீதரனின் நிலைப்பாடு தமிழ் ஊடகமொன்று அவரை தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பு பேரவையிலிருந்து சிறீதரன் பதவி விலக வேண்டும் என்று பணிப்புரை வழங்குவதென தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளதாக அண்மையில் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார்.
தமிழரசுக்கட்சியின் கொள்கைகளுக்கு மாறாகவும் அரசாங்கத்திற்கு சார்பாகவும் சிறீதரன் செயற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் குறித்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து குறித்த விடயம் தமிழரசுக் கட்சியின் கொள்கைகளில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் பல்வேறு தரப்பினரும் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில் அரசியலமைப்பு பேரவையிலிருந்து பதவி விலக வேண்டும் என்று தனக்கு உத்தியோக பூர்வ கடிதம் எதுவும் அனுப்பவில்லை என்றும் தமிழரசுக் கட்சி ஊடக அறிவிப்பினை மட்டுமே விடுத்துள்ளதாகவும் கடிதம் கிடைத்தால் மட்டுமே மேலதிக விடயம் தொடர்பில் தான் தெரிவிக்க முடியும் எனவும் சிறீதரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்வி சீர்திருத்தம் அரசாங்கத்தின் கொள்கைத் தீர்மானம் – பிரதமரை இலக்காக வைத்து வெளியிடப்படும் கருத்துக்களை நிராகரிப்பதாகவும், மிகவும் பலமான மற்றும் நூதனமான உலகத்திற்கு பொருத்தமான கல்வி சீர்திருத்தத்தை உருவாக்குதல் அரசாங்கத்தின் அடிப்படை நோக்கம் என வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
பிரச்சினைக்குரிய தரம் 6 தொகுதியின் உள்ளடக்கத்தை பரீட்சிப்பதற்காக நியமிக்கப்பட்ட உள்ளகக் குழு அதன் அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாகவும், அதற்கேற்ப தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
கல்வி சீர்திருத்த செயற்பாடுகளை குறுகிய நோக்கத்துடன் அடைந்து கொள்வதற்காக சிலர் பிரதமரை இலக்காக வைத்து மேற்கொள்ளும் இந்த பிரச்சாரத்தை அரசாங்கம் முழுமையாக நிராகரிப்பதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (04) நடைபெற்ற புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக தெளிவுபடுத்தும் விசேட ஊடக கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
புதிய கல்வி சீர்திருத்தங்கள் நாட்டின் குழந்தைகளின் எதிர் காலத்திற்காக அரசாங்கம் எடுத்த கொள்கைத் தீர்மானம் என்றும், இது போன்ற கட்டமைப்பு கல்வி சீர்திருத்தம் சமீபத்திய வரலாற்றில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கல்வியியலாளர்கள் இதுபோன்ற சீர்திருத்தங்களை குறைந்தது 8 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தாலும், கடந்த காலங்களில் நாட்டின் கல்வி முறையில் இது போன்ற செயல்முறை நடைபெறவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
இந்த சீர்திருத்தங்கள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே அனைத்து தரப்பினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், பெரும்பாலான கட்சி மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் இந்த சீர்திருத்தங்கள் விரைவில் செயல்படுத்தப்பட வேண்டும் என்று கருதுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேசிய கல்வி நிறுவகத்தினால் தயாரிக்கப்பட்டு அச்சிடப்பட்ட தரம் 6 ஆங்கில மொழி மொடியூல் குறித்து தற்போது விசாரணைகள் நடாத்தப்பட்டு வருவதாகவும், தரம் 6 இல் சேர்க்கக் கூடாத உள்ளடக்கத்தை அரசாங்கம் கண்டறிந்து அந்தப் பிரிவை நீக்க நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தவறான கல்வி முறையை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என்றும், ஒரு அரசாங்கமாக அதற்கு முழுப் பொறுப்பையும் ஏற்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
இது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
6 ஆம் வகுப்பு தொகுதி தொடர்பாக கல்வி அமைச்சு உள்ளக விசாரணைகளை மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது,
மேலும் அடையாளம் காணப்பட்ட பிழைகளை சரிசெய்வதன் மூலம் கல்வி சீர்திருத்தங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இந்த கல்வி சீர்திருத்தங்களின் முதன்மை நோக்கம் தர்க்கரீதியான, புத்திசாலித்தனமான மற்றும் நவீன சமூகத்திற்கு ஏற்ற தலைமுறையை உருவாக்குவதாகும், மேலும் அரசாங்கம் அதற்கு முழுமையாக உறுதி பூண்டுள்ளது, பெற்றோர்கள் இது தொடர்பாக எவ்வித அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கான நிலம் மற்றும் பாதையை விடுவித்துதருமாறு வடக்கு மாகாண ஆளுனர் நா.வேதநாயகன் அவர்களுக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (05.01.2026) திகதியிட்டு குறித்த கடிதம் ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வரலாற்று தொண்மைமிக்க வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் வழிபாட்டு செயற்பாடுகளுக்காக ஆலயம் அமைந்துள்ள பகுதியின் ஒரு ஏக்கர் காணியினை ஆலயத்திற்கு விடுவித்துதர ஆவன செய்யுமாறு ஆலய அறங்காவலர் சபையினர் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பிலான கோரிக்கையினை ஏற்கனவே தங்களுக்கு தாம் விடுத்துள்ளதாகவும் எனினும் எதுவித திருப்திகரமான பதிலும் தமக்கு இதுவரை கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த ஆலயத்திற்கு செல்லும் பாதையினை வவுனியா வடக்கு பிரதேசசபைக்கு விடுவித்துதரும் பட்சத்தில் குறித்த பாதையினை தம்மால் புனரமைக்க முடியுமென வவுனியா வடக்கு பிரதேச சபையினரும் தெரிவித்துள்ளனர்.
எனவே தாங்கள் இவ்விடயத்தில் நேரடியாக தலையீடு செய்து குறித்த வரலாற்று தொண்மைமிக்க ஆலயத்திற்கான காணி மற்றும் பாதையினை மிகவிரைவாக விடுவித்துத்தர ஆவன செய்யுமறு கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த கடிதத்தின் பிரதிகள் வவுனியா வடக்கு பிரதேசசபை தவிசாளர், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர், வெடுக்குநாறிமலை ஆலய அறங்காவலர் சபையினருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.