Friday, March 6, 2026
Huis Blog Bladsy 23

சிங்களவர்கள் தொடர்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் கூறிய வசனம்..!

0

30 வருடங்களாக போரை நடத்திக் கொண்டு, தன்னுடைய தலைமைத்துவத்திலும் எவ்வித குறையும் வைக்காமல் செயற்பட்டவர் தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என தெரிபே சிறிதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.

தர்ம போதனையொன்றின் போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

விரும்பியோ விரும்பாவிட்டாலும் சிலரின் வார்த்தைகளில் வெளிவரும் ஒரு வசனம் தான் ‘சிங்கள மக்களின் ஞாபகம் ஒரு வாரம்தான்’ என்பது. இதை நானும் கேட்டிருக்கிறேன். இது பிரபாகரன் சொல்லிப் பிரபலமான வார்த்தைகளாகும்.

முப்பது வருடங்களாக அவரின் தலைமைத்துவ செயற்பாட்டில் எவ்வித குறைவும் ஏற்படவில்லை. அது அவர்களின் தேசிய பற்றாகும். நான் கூறும் இவை சரியாகவோ பிழையாகவோ இருக்கலாம். அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பிரபாகரனை தமிழர்கள் தெய்வமாக போற்றுகின்றனர். ஏனென்றால் அவர் தமிழர்களின் மனதில் ஆழமாக பதிவாகியுள்ளார்.

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். எங்கே ஒரு இடத்தில் இருந்த புத்தர் சிலையை கொண்டு வந்து வைத்து விட்டு பிரச்சினையை ஏற்படுத்துகின்றனர்.

அத்தோடு பெயர் பலகையை கழற்றிவிட்டு மீண்டும் நாட்டுகின்றனர். இதெல்லாம் காட்டு மிராண்டித்தன செயற்பாடுகளாகும். தமிழ் மக்களுக்கு பிரபாகரன் மாவீரன், தெய்வமாகும். அதே போன்று சிங்கள பௌத்த மக்கள் ஒன்றிணைந்த ஒரு சந்தர்ப்பம் இல்லை.

விகாரையில் விகாராதிபதி ஏதும் சொன்னால் ஆயிரம் காரணம் சொல்ல ஆட்கள் இருக்கின்றனர். அதனால் இதை பௌத்த மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் தலைமறைவு; நீதிமன்றின் அதிரடி உத்தரவு…!

0

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு பிடிவிறாந்து பிறப்பித்து வெளிநாட்டுக்கு செல்வதற்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (15) பிறப்பித்துள்ளார்.

இந்தநிலையில், வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

கடந்த 2023-10-23 திகதி ஊடகங்களுக்கு சுமணரட்ன தேரர் வழங்கிய செவ்வியின் போது வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும் என தெரிவித்தார்.

இதையடுத்து தேரர் தெரிவித்த இந்த வன்முறையான கருத்துக்கு எதிராக 2023-10-27 ஆம் திகதி கொழும்பு புறக்கோட்டை காவல் நிலையத்தில் சட்டத்தரணி தனுக்க றனஞ்சக என்பவர் முறைப்பாடு செய்ததுடன் சிவில் மற்றும் அரசியல் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் உள்ள சட்டத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் குறித்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபருக்கு கோப்புக்கள் அனுப்பப்பட்ட நிலையில் கடந்த மாதம் சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த தேரரை கைது செய்யுமாறு அறிவுறித்தல் வழங்கியது.

இந்த நிலையில் குறித்த வழக்கு கடந்த 8-12-205 திங்கட்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது குறித்த தேரர் நீதிமன்றில் சமூகமளிக்காத நிலையில் வழக்கு தொடுநர் சார்பாக முன்னிலையாகிய சட்டத்தரணி சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுரையின் படி குறித்த தேரரை இதுவரை கைது செய்யப்படவில்லை என நீதவான் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

இதையடுத்து நீதவான் அடுத்த வழக்கு தவணை எதிர்வரும் 15 ஆம் திகதி முன்னர் குறித்த தேரரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டதுடன் குறித்த தேரரை இதுவரை நீதிமன்றில் ஏன் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் கட்டளையிட்டார்.

இந்தநிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொண்டபோது தேரர் முன்னிலையாகாத நிலையில் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சார்பாக முதலாம் தரம் கொண்ட உதவி காவல்துறை அத்தியட்சகர் முன்னிலையாகி, மட்டு தலைமையக காவல் நிலைய பொறுப்பதிகாரி முன்னலையாகி சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் உயர் நீதிமன்ற வழக்கு ஒன்றுக்கு சென்றுள்ளதாகவும் அதனால் நீதிமன்றில் இன்று முன்னிலையாக முடியவில்லை எனவும் குறித்த தேரர் தங்கியிருக்கும் மற்றும் மறைந்திருக்கும் இடம் என சந்தேகிக்கப்படும் மங்களகம கௌவ்லியாமடு மற்றும் சின்னவத்தை விகாரை பகுதிக்கு தேடிச் சென்றுள்ளதாகவும் அவர் அங்கு இல்லை எனவும் அவர் மறைந்திருக்கும் இடத்தை தேடி வருவதாகவும் நீதவானிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நீதவான் தேரரை கைது செய்வதற்காக நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பித்து அவர் வெளிநாடு செல்வதற்கு பயணத் தடை விதித்து கட்டளை பிறப்பித்து உத்தரவிட்டு எதிர்வரும் ஜனவரி 26 திகதி வழக்கை ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறையிலுள்ள தக்சியுடன் பிஸ்கட் உண்ட பொலிஸ் அலுவலர் பணி நீக்கம்..!

0

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களில் ஒருவரான நந்தகுமார் தக்சியுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய பொலிஸ் அலுவலர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் அலுவலர் சந்தேகநபர் நந்தகுமார் தக்சியுடன் ஒரு பிஸ்கட்டை இரண்டாகப் பிரித்துப் பகிர்ந்து உண்டதாகவும், சைகைகள் மூலம் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகவும் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது குறித்து மேலும் தெரிய வருகையில்,

கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி தலைமறைவாக இருந்த நிலையில், பின்னர் அவரும் அவரைப் போலவே தோற்றமளிக்கும் இந்தச் சந்தேகநபரான நந்தகுமார் தக்சி உட்பட ஆறு சந்தேக நபர்கள் நேபாளத்தின் காத்மண்டு நகரிலுள்ள ஒரு வீட்டில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இஷாரா செவ்வந்தி மற்றும் நந்தகுமார் தக்சி ஆகிய இரண்டு சந்தேக நபர்களும் தற்போது 90 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர்.

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் அலுவலர் கடந்த மாதம் 30 ஆம் திகதி இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை உப சேவைக் கடமையில் இருந்த போது, இலக்கம் 03 சிறைக் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நந்தகுமார் தக்சி என்ற சந்தேக நபரிற்கு பிஸ்கட் கொடுத்ததாகவும், அதனை சந்தேகநபர் பாதி உட்கொண்டதன் பின்னர் மீண்டும் குறித்த பொலிஸ் அலுவலருக்கு வழங்கியதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன், அவர் பல சந்தர்ப்பங்களில் சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூடத்திற்கு அருகில் சென்றதாகவும், அவருடன் சைகைகள் மூலம் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகவும் சிசிரிவி (CCTV) காட்சிகளைச் சோதனைக்கு உட்படுத்திய போது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சுகாதார பரிசோதகர்களின் நடவடிக்கைக்கு இடையூறு; இருவர் கைது..!

0

வவுனியாவில் சுகாதார பரிசோதகர்களின் நடவடிக்கைக்கு இடையூறை ஏற்படுத்திய இருவர் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் பெய்து வந்த மழை காரணமாக வெள்ளநீர் தேங்கி நிற்பதால் டெங்கு நுளம்பு பரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் டெங்கு நுளம்பினை கட்டுப்படுத்தும் விஷேட வேலைத்திட்டத்தை சுகாதார பரிசோதகர்கள் முன்னெடுத்துள்ளனர்.

இதன் ஒரு கட்டமாக வவுனியா, பட்டாணிச்சூர் முதலாம் ஒழுங்கையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் சுகாதார பரிசோதகர்கள் ஈடுபட்டனர். இதன்போது குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றை பரிசோதனை செய்யும் போது குறித்த வீட்டில் டெங்கு நுளம்பு இனங் காணப்பட்டுள்ளன.

இதனை அடுத்து நுளம்புகளை கட்டுப்படுத்தி அப்பகுதியை சுத்தம் செய்து தமக்கு தெரியப்படுத்துமாறு சுகாதார பரிசோதர்களால் அறிவுறுத்தப்பட்டபோது சுகாதார பரிசோதர்களுடன் வீட்டு உரிமையாளர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டதுடன், சுகாதார பரிசோதர்களின் கடமைக்கும் இடையூறை ஏற்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து சுகாதார பரிசோதகர்கள் நெளுக்குளம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற நெளுக்குளம் பொலிஸார் வீட்டு உரிமையாளரை பொலிஸ் நிலையம் வருமாறு தெரிவித்தனர்.

இருப்பினும் பொலிஸாருடனும் குறித்த வீட்டு உரிமையாளர்கள் முரண்பட்ட நிலையில் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூன்றாம் தவணைப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு..!

0

2025ஆம் கல்வி ஆண்டின் மூன்றாம் பாடசாலைத் தவணைக்காக தவணைப் பரீட்சைகளை நடத்த வேண்டாம் என வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சு (MOE) தெரிவித்துள்ளது.

அதன்படி, 6 ஆம் தரம் முதல் 10 ஆம் தரம் வரையான மாணவர்களுக்கான மூன்றாம் தவணை பரீட்சைகளை நடத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குறிப்பாக அனைத்துப் பாடசாலை அதிபர்களும் இந்த அறிவுறுத்தலை கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தநிலையில் மாணவர்களை அடுத்த தரங்களுக்கு உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 11ஆம் தர மாணவர்களுக்கான மூன்றாம் தவணை பரீட்சையை நடத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனர்த்த முகாமைத்துவ சபைக் கூட்டத்தில் வைத்தியர் சத்தியலிங்கம் பங்கேற்பு..!

0

தேசிய அனர்த்த முகாமைத்துவ சபைக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று (15.12.2025) கொழும்பில் இடம்பெற்றது. இதில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களும் கலந்து கொண்டார்.

டித்வா புயலுக்கு பின்னர் மக்களின் இயல்பு வாழ்க்கையினை மீட்டெடுக்கத் தேவையான கொள்கை முடிவுகள் மற்றும் நிறுவன வழிகாட்டுதல்கள் இதன் போது எடுக்கப்பட்டது.

தேசிய அனர்த்த முகாமைத்துவ கூட்டு பொறிமுறையை உருவாக்குதல் மற்றும் 2005 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க இலங்கை அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தைத் திருத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட சபை அறிக்கைக்கு இங்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்கான நிரந்தரத் தீர்வைக் காணும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தின் கீழ், அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப் பட்டதுடன், தரவுகளைச் சேகரித்தல், காலத்திற்கு ஏற்றவாறு சட்டங்களை மறுசீரமைத்தல் மற்றும் நடைமுறை சாத்தியமான திட்டத்தை செயல்படுத்துதல் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

பாடசாலை மாணவர் இடைவிலகல் அதிகரிப்பு – கல்வி அமைச்சு

0

இலங்கையில்,13 வருடக் கல்வியை நிறைவு செய்வதற்கு முன்னரே பாடசாலைகளில் இருந்து இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கல்வி அமைச்சின் 2025 ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித மற்றும் பௌதிக வளங்களின் விநியோகத்தில் காணப்படும் பாரிய ஏற்றத்தாழ்வுகள் காரணமாக, கல்வி முறைமை மீதான பெற்றோரின் நம்பிக்கை குறைந்துள்ளமையே இடைவிலகல்கள் அதிகரிக்க முக்கிய காரணம் என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

அத்துடன் இலவசப் பாடநூல்கள், சீருடைகள், பாடசாலை உணவு மற்றும் காப்புறுதி போன்ற பொருளாதாரத் தடைகளைக் குறைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகள் இருந்தபோதிலும், பல குடும்பங்கள் தொடர்ந்தும் குறிப்பிடத்தக்க நிதியியல் சுமைகளை எதிர்கொள்வதாக அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த காலங்களில் தேசிய அளவில் நிலவிய இடையூறுகளால் ஏற்பட்ட ஒழுங்கற்ற பாடசாலை நாட்காட்டியையும் சுட்டிக் காட்டிய குறித்த அறிக்கை இது பரீட்சைகளை உரிய நேரத்தில் நடத்துவதையும் ஒட்டுமொத்த கற்றல் செயற்பாட்டையும் பாதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

கல்விச் செயற்பாடுகளைச் சாதாரணமாக மாற்றுவதற்கும், பொது நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கும், கல்விச் சலுகைகளைத் தேசிய அபிவிருத்தி இலக்குகளுடன் சீரமைப்பதற்கும் தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தமிழர் தலைநகரை உலுக்கிய சம்பவம்; காதலனின் நண்பர்களால் கூட்டாக சீரழிக்கப்பட்ட பெண்..!

0

சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள வீரமாநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 4 இளைஞர்கள் ஈச்சிலம்பற்று பொலிஸாரால் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் அனைவரும் ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளின் படி, டிக்டொக் சமூக வலைத்தளத்தின் மூலம் இளைஞர் ஒருவர் குறித்த பெண்ணுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு நேரில் சந்தித்துள்ளார்.

இதன் பின்னர், குறித்த இடத்திற்கு அவரது நண்பர்கள் வருகை தந்ததுடன், குழுவாக பாலியல் பலாத்காரம் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சமூக விழிப்புணர்வுக்கான பதிவு

அவுஸ்திரேலியா சிட்னி துப்பாக்கிச் சூடு; பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு..!

0

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு குழந்தை உட்பட 16 ஆக உயர்ந்துள்ளது.

நேற்றைய தினம் குறித்த பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், தாக்குதல் நடத்திய 2 பேர் மக்கள் மீது 50 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

அவர்களில் துப்பாக்கிதாரி ஒருவரும் கொல்லப்பட்டதாகவும் மற்றொருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உயிரிழந்தவர்களில் துப்பாக்கிதாரியும் இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

அதேவேளை, குறித்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து மிக மோசமாக காயமநை்த நிலையில் நான்கு குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல், சிட்னியில் உள்ள இஸ்ரேலின் யூத சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தகைய விரும்பத்தகாத பயங்கரவாத சம்பவங்கள் இடம் பெறலாம் என பல நாடுகளுக்கு இஸ்ரேல் பிரதமர் ஏலவே எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முத்து ஐயன்கட்டு குளத்திற்கு நேரடி விஜயம் மேற்கொண்ட ரவிகரன் எம்.பி..!

0

முத்து ஐயன் கட்டுக் குளம் தொடர்பில் வெளியான சர்ச்சைக்குரிய தகவலையடுத்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 14.12.2025இன்று குறித்த இடத்திற்கு நேரடியாகக் கள விஜயமொன்றினை மேற்கொண்டு நிலமைகள் குறித்து பார்வையிட்டார்.

அத்தோடு வடமாகாண பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் சிவபாதசுந்தரம் விகிர்தன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன், நீர்பாசனப் பொறியியலாளர்கள், அனர்த்த முகாமைத்துவத் திணைக்களத்தினர் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடி நிலமைகள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.

இதன் போது முத்துஐயன்கட்டு குளம் உடைப்பெடுக்கும் அபாயத்திலிருப்பது தொடர்பாக வெளியான செய்திகளில் உண்மைத் தன்மைகள் இல்லை எனத் தெரிவித்த பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் சிவபாதசுந்தரம் விகிர்தன், முத்து ஐயன்கட்டு குளத்தின் நீரை குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற்உறுப்பினர் ரவிகரன் உரிய தரப்பினரிடம் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!