கட்டிட அனுமதி பெறப்படாத வணிக நிலையங்களுக்கு ஒருவருட கால அவகாசம் கொடுக்கப்படும் என பருத்தி துறை பிரதேச சபை தீர்மானித்துள்ளது பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் நேற்று இடம்பெற்றது.
இதில் சபையின் நிதி நடவடிக்கைக்கான அனுமதிகள் சபையிடம் பெறப்பட்டது.
வடடார அலுவலர்களுக்கான 20 வீத கொடுப்பனவுகள் வழங்குவதற்கான அனுமதி தொடர்பில் வாத பிரதிவாதங்கள் இடம் பெற்று இறுதியில் சபையிடம் நிதி இல்லை என்றும் அதனை உரிய தரப்புக்கு அறிவிப்பது என்றும், கட்டிட அனுமதி பெறப்படாமல் கட்டிடங்கள் கட்டியோருக்கு அதற்கான வியாபார அனுமதி வழங்க வேண்டாம்.
என்று ஆளுநரிடமிருந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டமையால் ஒருவருடத்திற்குள் கட்டிட அனுமதி பெறப்பட வேண்டும் என்றும், மருதங்கேணி பகுதியில் சபை அனுமதி இன்றி தனியார் நிதி நிறுவனம் ஓன்று இயங்குவதாகவும் அதனை ஆய்வு செய்து சபையால் நடவடிக்கை எடுப்பது என்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன
நல்லூர் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டங்களில் அனைத்து கௌரவ உறுப்பினர்களையும் பங்கெடுப்பதற்காக அழைப்பினை விடுக்காது இருப்பின் அக் கூட்டங்களினை முற்றாக புறக்கணிப்பது என இன்று நடைபற்ற பிரதேச சபைக் கூட்டத்தில் தவிசாளர் ம. மயூரன் அவர்கள் கொண்டு வந்த தீர்மானத்தினை சபை ஏகமனதாக ஏற்றுக் கொண்டது
குறித்த தீர்மானம் தொடர்பாக தவிசாளர் தன்னுடைய உரையில்,
நல்லூர் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தவிசாளர், உப தவிசாளர் ஆகியோருடன் வேறு கட்சிகளின் இரு உறுப்பினர் மட்டுமே பங்குபற்ற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி சார்பில் பிரதிநிதிகளை அழைத்து பிரச்சனைகளைக் கேட்பதற்கு பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம் ஒன்றும் கட்சிகளின் செயற்பாடுகள் தொடர்பான கூட்டம் அல்ல. அது மக்களின் குறை நிறைகளைத் தீர்க்கின்ற, பிரதேசங்களினை அபிவிருத்தி செய்கின்ற பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம்.
எனவே அதில் மக்களைப் பிரநிதித்துவப் படுத்துகின்ற அத்தனை மக்கள் பிரதிநிதிகளும் பங்குபற்றுதல் அவசியமானது. அப்போது தான் ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்கள் மக்கள் சார், பிரதேசம் சார் பிரச்சனைகளையும் தேவைகளையும் தெவித்து பிரதேச அபிவிருத்தி தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகளுக்கு வலுச்சேர்க்க முடியும்.
எனவே நல்லூர் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்திற்கு கட்சி சார்பில் பிரதிநிதிகளை அழைப்பதை விடுத்து நல்லூர் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள் அனைவரையும் பங்குபற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும்.
அவ்வாறு அனுமதி வழங்காது ஒரு முழுமையற்ற வெறும் கண்துடைப்பிற்கு பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்திற்கு அழைப்பு விடப்படுமாயின் அதனை நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர், உப தவிசாளர் உட்பட்ட அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்காமல் முற்றாகப் புறக்கணிக்கின்றோம். என்றார்.
சபையில் இருந்த அத்தனை உறுப்பினர்களும் குறித்த தீர்மானத்திற்கு தங்களுடைய ஆதரவினை வழங்கினர்.
முல்லைத்தீவு வலயப் பாடசாலை ஒன்றின் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ள அதிபர் ஒருவரின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்குமாறு அவரின் முறைகேடான மற்றும் ஊழல் மிக்க செயற்பாடுகளை முன்னிலைப்படுத்தி பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்த முறைப்பாட்டை கல்வி அமைச்சிற்கு கையளித்து நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் செயலகம் பணிப்புரை வழங்கியுள்ளது.
பிரதமர் செயலகத்தின் சிரேஷ்ர உதவிச் செயலாளர் T. ஸ்ரீமன்ன மேற்கண்ட முறைப்பாட்டை 12.12.2025 ஆம் இலக்க கடிதம் மூலம் கல்வி அமைச்சுக்கு பாரப்படுத்தி உள்ளார்.
மேற்குறித்த அதிபர் அரச சட்டதிட்டங்களை மீறி சமூக ஊடகங்கள் வாயிலாக நிதி திரட்டியமை மற்றும் பாடசாலையுடன் தொடர்பு அற்ற பாடசாலையின் பெயரில் இயங்கும் நிதியம் ஒன்றிற்கு நிதி அனுசரணை வழங்குமாறு கோரிய கடிதம் போன்றன பிரதமர் அலுவலகத்தின் குற்றச்சாட்டுகளாக முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தமிழரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் 4 கிலோ 800 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றத்தடுப்பு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சங்கிலியன் பூங்கா அருகில் இன்றையதினம் (30.12.2025) அதிகாலை குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரியாலை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய குறித்த உறுப்பினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மாஞ்சோலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்ற இளைஞன் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது சகோதரி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
உணவு ஒவ்வாமை காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம் ஒன்று நேற்றைய தினம் (29.12.2025) முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இளைஞனின் சகோதரி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
27 வயதுடைய எனது சகோதரர் வீதி விபத்தில் சிக்கியிருந்த நிலையில், மாஞ்சோலை வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். மூன்று மாதமாக கை முறிந்ததாக கூறி பீ.ஓ.பி போட்டிருந்தார்கள்.
ஆனால் கை முறியவில்லை கையிலிருந்து வரும் நரம்பு அறுந்திருந்தது. ஆனால் அதனை கண்டுபிடிக்க முடியாமல் முறிவென கூறி பீ.ஓ.பி போட்டிருந்தார்கள். அதனால் சகோதரரின் கை பாரிசவாதமாக வந்து விட்டது.
வவுனியாவில் உள்ள தனியார் வைத்திய சாலைக்கு கொண்டு சென்று எலும்பு முறிவு வைத்தியரிடம் காட்டிய போது வைத்தியர் இது எலும்பு பிரச்சினை இல்லை. நரம்பு பிரச்சினை என.
அப்போது இங்குள்ள வைத்தியருக்கு அது தெரியாது.தற்போது தம்பி வலது கையினால் சாப்பிட முடியாமல் ஒரு வாழ்க்கை இல்லாமல் இருக்கின்றார்.
திரும்ப நரம்பு வைத்தியரிடம் கொண்டு சென்று காட்டிய போது நாங்கள் கொண்டுவர தாமதமாகி விட்டது எனவும் கழுத்திலிருந்து முழங்கை வரை வரும் நரம்பு அழுகி விட்டது எனவும் கூறினார்.அதனால் நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற போது வைத்திய சாலை நிர்வாகம் கூப்பிட்டு கதைத்தது. ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம் என்று.
இந்த பிள்ளைக்கு நீதி கிடைக்க வேண்டும் என கேட்பது போல் எனது தம்பிக்கும் நீதி கேட்டே வந்திருக்கின்றேன். எனக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள். இங்கே மாஞ்சோலை வைத்திய சாலைக்கு பிள்ளைகளை கொண்டுவர பயமாக இருக்கிறது என தெரிவித்தார்.
சிறுமி டினோஜாவின் சந்தேகத்திற்கிடமான மரணத்திற்கு நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமெனத் தெரிவித்த வன்னிமா வட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், மருத்துவர் உள்ளிட்ட மருத்துவமனை ஊழியர் சிலரின் அசமந்த போக்கு மற்றும் முறையற்ற மருந்து வழங்கல் என்பன சிறுமியின் மரணத்திற்கு காரணமாக இருப்பின் உரியவர்கள் முறைப்படி தண்டிக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
சிறுமி டினோஜாவின் மரணத்திற்கு நீதி கோரி 29.12.2025 இன்று முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்ககண்டாறு தெரிவித்துள்ளார்.
இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கையில் உள்ள மாவட்ட பொது மருத்துவமனைகளிலேயே முல்லைத்தீவும் மன்னாரும் தான் மிகவும் பின்தங்கி இருக்கிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது மாவட்ட பொது மருத்துவமனையிலாவது சிறந்த மருத்துவ வசதி காணப்பட வேண்டும். ஆனால் முல்லைத்தீவும் மன்னாரும் இன்றுவரை ஏனைய மாவட்ட மருத்துவமனைகளுக்கு நிகராக இல்லை. வளங்களில் இன்னமும் சமத்துவமற்ற நிலையில் உள்ளன.
எங்களின் பிள்ளை டினோஜாவின் மரணம் ஏற்றுக்கொள்ள இயலாதது. மருத்துவமனைக்கு உள்ளும் புறமும் பலராலும் மருத்துவமனை மீதான முறைப்பாடுகள் முன்வைக்கப்படுகின்றன. அதிக அளவாக மருந்து பிள்ளைக்கு வழங்கப்பட்டமையே மரணத்துக்கு காரணம் என பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பிள்ளையின் மரணத்துக்கான நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். மருத்துவர் உள்ளிட்ட மருத்துவமனை ஊழியர் சிலரின் அசமந்த போக்கு, முறையற்ற மருந்து வழங்கல் காரணமாக இருந்தால் அவர்கள் முறைப்படி தண்டிக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு பிரச்சினை நிகழும் போது அது தொடர்பில் பணிப்பாளரோடு கதைக்க முனைந்தால் அவர் கொழும்பில் இருக்கிறார் என்ற தகவல் வருகிறது. மருத்துவர்கள் தொலைபேசி வழியில் மருந்துகளை பரிந்துரைக்கிறார்கள் என்ற முறைப்பாடு பல சந்தர்ப்பங்களில் கிடைக்கப் பெறுகின்றது.
இறுக்கமற்ற நிருவாக நடைமுறை மேற்படி மருத்துவமனையில் நிலவுவதாக உள்ளிருந்தும் சில முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுகின்றன. முன்னைய காலங்களில் இருந்த பணிப்பாளர்கள் மிகவும் பற்றுறுதியோடு பணிபுரிந்தனர்.
ஒரு மரணமேனும் நிகழ்ந்து விடக் கூடாது என இரவுபகலாக உழைத்தனர். இப்போதுள்ள நிருவாகம் அந்த இறுக்கமான நடைமுறைகளில் இருந்து விலகி விடுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது.
இங்கு கூடியிருக்கிற அவ்வளவு மக்களும் ஓரிருவர் தூண்டுதலால் வந்து சேர்ந்தவர்கள் அல்ல. ஒவ்வொரு சந்தர்ப்பத்தின் போதும் அசமந்தப் போக்கோடு மருத்துவ சேவை வழங்கப்படுவதில் அனுபவப்பட்டு இந்தப் பிள்ளையின் மரணத்திலும் அத்தகைய பிழை ஏற்பட்டிருக்கும் என ஆழமாக நம்புகிறார்கள்.
அரசு இதில் உடனடியாகத் தலையிட்டு நீதியான விசாரணை நடைபெற வழிவிட வேண்டும். தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். உணவு ஒவ்வாமையால் ஒரு மரணம் சம்பவிக்கிறது என்பதை எங்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
வீட்டில் இருந்தும், விடுதியில் இருந்தும் தொலைபேசி வழியில் மருத்துவம் பார்ப்பது இங்கு அதிகரித்திருப்பதாக மக்கள் முறையிடுகின்றனர்.
தமது நோய் நிலைமைகளைக் குணப்படுத்த வேண்டுமென்ற நோக்குடனேயே வைத்தியசாலைக்கு மக்கள் வருகை தருகின்றார்களே தவிர, உயிரிழப்பதற்கு மக்கள் இங்கு வருகை தருவதில்லை.
ஆனால் இந்த மருத்துவமனையில் தொடர்சியாக இடம்பெற்றுவரும் இவ்வாறான சந்தேகத்திற்கிடமான மரணங்களால் மாஞ்சோலை வைத்தியசாலையை மரணச் சோலையை என மக்கள் கூறுகின்றனர்.
இந்த சந்தேகத்திற்கிடமான மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டுமென உரிய தரப்பினரை வலியுறுத்துவேன். இந்த மரணத்திற்கு நீதிகோரி பாராளுமன்றிலும் எனது குரல் ஒலிக்கும்.
இந்த சந்தேகத்திற்கிடமான மரணத்துடன் தொடர்புடைய மருத்துவரைப் பாதுகாப்பதற்கான செயற்பாடுகளும் இடம்பெற்று வருவதாகவும் பலரும் எம்மிடம் தெரிவிக்கின்றனர்.
வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியசாலையில் இருப்பதில்லை என்ற முறைப்பாடுகளும் கிடைக்கின்றன. தமது வீடுகளில் இருந்து கொண்டு தமது செயற்பாடுகளை மேற்கொள்கின்ற வைத்தியசாலைப் பணிப்பாளர்கள் இங்கு இருக்கத் தேவையில்லை.
அசமந்தப்போக்கான வைத்தியசாலைச் செயற்பாடுகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். இந்த சந்தேகத்திற்கிடமான மரணத்திற்கும் நீதி கிடைக்க வேண்டும் – என்றார்.
பாராளுமன்றத்தில் கீரியும் பாம்பும் போல் இருக்கும் அர்சுணாவும் சந்திரசேகரும் யாழில் “கிசு கிசு” நண்பர்களாக உள்ளதுடன் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக உள்ள போதும் அர்ச்சுணாவின் சர்ச்சைப் பேச்சுக்களை கட்டுப்படுத்தாது மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் அமைச்சர் மேலும் குழப்புமாறு அர்ச்சுணாவை ஊக்கப் படுத்துகிறார் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் காணி அபகரிப்பு, காணி விடுவிப்பு, உட் கட்டுமானம், வேலை வாய்ப்பு, வடக்கின் கல்வி வீழ்ச்சி, வடக்கின் அரச நிர்வாகத்தில் காணப்படும் ஊழல், மோசடி, அதிகார துஸ்பிரயோகங்கள் என பல்வேறு பிரச்சினைகள் இன்று வரை தீர்க்கப்படாமல் உள்ளது.
இந்த நிலையில் அபிவிருத்திக் கூட்டங்களில் எதிர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் வாயை மூட வைத்து, திசை திருப்பல்களை மேற்கொண்டு தமது அரசியல் நகர்வுகளை மேற்கொள்வதற்கான கருவியாக பாராளுமன்ற உறுப்பினரை தேசிய மக்கள் சக்தியினர் பயன்படுத்துகின்றனரோ என்ற சந்தேகம் வலுப்பெற்று வருகின்றது.
இன்றைய தினம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் தலைவர் பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், வைத்தியர் திலகநாதன் ஆகியோரின் பங்கேற்புடன் மன்னார் மாவட்ட செயலகத்தில் “Clean Sri Lanka” திட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றது.
இத் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், பல்வேறு துறைகளை உள்ளடக்கிய நடமாடும் சேவை திட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றது.
வவுனியா மாவட்டத்தின் பறங்கியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் வெளியேறுவதால் பாதிக்கப்படும் விவசாயிகள் தொடர்பிலான விசேட கூட்டமொன்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் இன்று (29.12) ஈச்சங்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.
கமக்காரர் அமைப்புக்கள் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் நா.கமலதாசன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் பா.பாலேந்திரன், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மாவட்ட பொறியியலாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு வருடமும் மழை நேரங்களில் பறங்கியாறு நீர்த் தேக்கத்தில் இருந்து வெளியேறும் மேலதிக நீர் அதன் கீழ் வரும் குளங்கள் மற்றும் வயல் நிலங்களில் பாரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இது தொடர்பில் விவசாயிகள் தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினருக்கு முறைப்பாடு தெரிவித்து வந்தனர்.
இதனையடுத்து குறித்த பிரச்சினைக்கான தீர்வை காணும் வகையில் மேற்படி கலந்துரையாடல் உரிய தரப்பினரின் பங்கேற்புடன் பாராளுமன்ற உறுப்பினரால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
அதன்படி வெளியேறும் மேலதிக நீரை வயல்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் உதவியுடன் கால்வாய் ஒன்றினை அமைத்து வெளியேற்றுவதற்கான சாத்தியக்கூறினை ஆராய்வதாகவும் திட்டமொன்றினை தயாரித்து அதனை செயற்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டது.
அத்துடன் ஆற்றுநீர் திறந்துவிடப்படும் போதும் வெள்ள நீர் வெளியேறும் போதும் விவசாயிகள் போக்குவரத்து செய்ய முடியாத நிலைக்கு தீர்வாக தற்போதுள்ள பாதையில் மேம்பாலம் ஒன்றினை எதிர்வரும் வருட நிதியில் அமைக்கவும் தீர்மாணிக்கப்பட்டது.
அத்துடன் குறித்த நீர்த்தேக்கம் அமைக்கும் போது மக்களிடம் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு பதிலாக மாற்றுக்காணிகள் வழங்கப்பட்ட போதும் 15 வருடங்கள் கடந்தும் அவற்றிற்கான காணி ஆவனங்கள் இன்னும் வழங்கப்படவில்லை.
குறித்த விடயத்தினையும் உடனடியாக செய்து தருவாக அரசாங்க அதிபர் இதன் போது தெரிவித்தார்.
அத்துடன் குறித்த நீர்த்தேக்கத்திற்கு கீழான சுமார் 5கிலோ மீற்றர் நீளமான விவசாய வீதிகளையும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உதவியுடன் உடனடியாக புனரமைத்து தருவதாகவும் அரச அதிபர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
இவற்றிற்கு மேலதிகமாக குறித்த பகுதிகளின் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் பொதுமக்கள் இதன் போது பாராளுமன்ற உறுப்பினர், அரசாங்க அதிபர், பிரதேசசபை தவிசாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்ததுடன் அவற்றிற்கான தீர்வுகள் வழங்க நடவடிக்கை எடுக்கவும் முடிவெடுக்கப்பட்டது.
பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இருந்து ஆசிரியர் பணிகளை மேற்கொண்டு வரும் பட்டதாரிகளுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்க மறுப்பதும், அவர்களை ஏனைய திணைக்களங்களுக்கு மாற்ற முயற்சிப்பதும் அடிப்படை மனித உரிமைகள் மீறலாகும் என குற்றஞ்சாட்டி, திருகோணமலை மாவட்ட பாடசாலைகளில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
பல ஆண்டுகளாக பாடசாலைகளில் ஆசிரியர் பணிகளைச் செய்து வரும் தங்களது சேவையை கணக்கில் எடுக்காமல், நிரந்தர நியமனம் வழங்காமல் இருப்பது அநியாயம் என்றும், இது தொழில் பாதுகாப்பு மற்றும் சமத்துவ உரிமைகளுக்கு முரணானது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கல்வித் துறையில் தொடர்ந்தும் சேவையாற்ற விருப்பம் தெரிவித்துள்ள போதிலும், தங்களை ஏனைய திணைக்களங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது பெரும் அநீதியாகும் எனவும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் உரிய தீர்வு வழங்கப்படாது விட்டால், எதிர்காலத்தில் சட்டபூர்வமான மற்றும் ஜனநாயகப் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் முறைப்பாட்டாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.