ஹமாஸ் அமைப்பு பிரித்தானியா, ஜெர்மனி, நெதர்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி, பெல்ஜியம் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் தமது செல்வாக்கை பரப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விரிவாக்க நடவடிக்கைகளுக்கு ஐஆர்ஜிசி எனப்படும் ஈரானின் நிழல் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை மற்றும் லெபனான் பினாமி படைகளான ஹெஸ்பொல்லா ஆகியவை ஹமாஸூக்கு உதவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உளவுத்துறை அறிக்கை ஒன்றை கோடிட்டு பிரித்தானியா ஊடகம் ஒன்று இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலிய இராஜதந்திர பணிகள், இஸ்ரேலிய தொடர்புகளைக் கொண்ட வணிகங்கள் அல்லது போரால் பாதிக்கப்பட்ட யூத அரசுடன் தொடர்புடைய மத தளங்களை குறிவைத்து இந்த விரிவாக்க பணிகள் முன்னெடுக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்ட ஆயுதங்களை மறைத்து வைப்பதுடன், இந்தக் குழு ட்ரோன் போர் முறையிலும் தீவிரமாக விரிவடையத் தொடங்கியுள்ளது.
இந்தக் குழு லெபனான் மற்றும் ஈரானில் இருந்து ஆதரவைப் பெறுவதாகவும், கிழக்கு ஐரோப்பிய குற்ற வலையமைப்புகளுடன் நெருங்கிய தொடர்புகளை வளர்த்துக் கொண்டு, கொடிய ஆயுதங்களை வாங்க உதவுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் அதன் சொந்த தளமான காசாவில் அழிக்கப்பட்டிருந்தாலும், 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் ஏழாம் திகதி முன்னெடுக்கப்பட்ட தெற்கு இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே ஐரோப்பிய விரிவாக்கத்தைத் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
ஹமாஸ் பல “ஆண்டுகளாக” ஐரோப்பா முழுவதும் முக்கியமாக இஸ்ரேலிய இலக்குகளுக்கு எதிராக தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், ஐரோப்பிய மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள், ஹமாஸ் இயக்கும் சர்வதேச பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் எதிர்வரும் காலங்களில் அதிகமாகவே இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி ஜனவரி மாதத்திற்குள் கட்டாயம் நடத்தப்படும் என்றும் மாணவர்கள் திகதி அறிவிப்புக்காகக் காத்திருக்காமல், ஜனவரியை இலக்காகக் கொண்டு பரீட்சைக்குத் தயாராகுமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வடக்கு, கிழக்கு, மத்திய, வடமத்திய, ஊவா ஆகிய 5 மாகாணங்களைச் சேர்ந்த 101,000க்கும் மேற்பட்ட மாணவர்களில் பலர் அனர்த்தத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் உயிரிழப்பு, காயம் மற்றும் காணாமல் போன சம்பவங்களும் பதிவாகியுள்ளன. ஏனைய மாணவர்கள் பலர் பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் துல்லியமான தரவுகள் கிடைத்த பின்னரே பரீட்சையை நடத்த முடியும் என அவர் கூறினார்.
எனவே, ஜனவரிக்குள் அனைத்துத் தரவுகளையும் துரிதமாகச் சேகரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தற்போது பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ள உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்குத் தேவையான அதிகபட்ச வசதிகளை வழங்க உதவுமாறும் அனைத்து தரப்பினரிடமும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
யாழ் பல்கலைக் கழகத்தின் அடுத்த துணைவேந்தர் தெரிவு இன்று (09.12.2025) நடைபெறவுள்ளது. இந்நிலையில் இதுவரை காலமும் அரசியல்வாதிகளின் ஒத்தாசையுடன் தலைமைத்தும் தேர்வு செய்யப்பட்டு வந்த அதே நிலை இந்த அரசிலும் தொடருமா? அல்லது முடிவிற்கு வருமா என்ற எதிர்பார்க்கை யாழ் கல்விச் சமூகத்தின் மட்டத்தில் எழுந்துள்ளது.
கடந்த காலங்களைப் போலவே இம்முறையும் அரசியற் கட்சிகளுடன் இரகசிய தொடர்பாடல்களில் ஈடுபட்டு தமது பதவிக் கதிரைகளை பாதுகாத்துக் கொள்ளும் நபர்களின் கைகளில் இன்று யாழ் பல்கலைக் கழக துணைவேந்தர் தெரிவு சிக்குமா என்பது இன்றைய தேர்தல் வெளிப்படுத்தும்.
துணைவேந்தரை வாக்களித்து தேர்வு செய்யும் அதிகாரம் பெற்ற பல்கலைக் கழகப் பேரவையில் உள்வாரி மற்றும் வெளிவாரி உறுப்பினர்கள் காணப்படுகின்றனர்.
அவர்களில் உள்வாரி உறுப்பினர்களை விடவும் ஒருவர் அதிகமாக நியமிக்கப்படும் வெளிவாரி உறுப்பினர்கள், பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படுவார்கள்.
கடந்த காலங்களில் பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக யாழில் பாரம்பரிய முன்னாள் அமைச்சருடன் இணைந்து செயற்பட்ட குறித்த சில தரப்புக்கள் அதன் பின்னர் நல்லாட்சிக் காலம் மற்றும் அதனையடுத்த வந்த காலங்களில் அரசுடன் நெருங்கிப் பழகிய தமிழ்க் கட்சியொன்றின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் தங்கள் உறவுகளைப் பேணி வந்தனர்.
எனினும் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அனுர அலை வீச தற்போது ஆட்சியில் இருக்கும் அரசின் ஐந்தாண்டு காலத்திற்கான விசுவாமுடையவர்களாக மாறியுள்ளனர்.
இவர்கள் ஆட்சியில் உள்ள தரப்புக்களுடன் தங்கள் உறவுளைப் புதுப்பித்து யாழ் பல்கலைக் கழகத்தில் தாங்கள் எண்ணுபவற்றை நிகழ்த்துவதற்குத் துடித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் பலியாகிப் போகுவதென்னமோ தமிழ்க் கல்விப் புலம் தான் என்பதில் சந்தேகமில்லை.
இவ்வாறான நிலையில் தற்போது பேரவையின் வெளிவாரி உறுப்பினர்கள் இன்றைய தினம் நடைபெறவுள்ள பல்கலைக் கழக துணைவேந்தர் தேர்வில் அரசியல் கடந்து எவ்வாறு செயற்படப் போகின்றார்கள் என்பதே எமக்கு முன்னுள்ள வினா.
மலையகத் தமிழர்களுக்கு அவர்கள் பிறந்த மண்ணிலேயே வாழ நிலம் கேட்டுப் பெறுவது நியாயமான உரிமை என்றும், அரசு நிலம் வழங்க மறுத்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குடியேறுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டத்துக்கு அண்மையில் மேற்கொண்ட விஜயமொன்றின் போது, அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களை குழுவொன்றை சந்தித்து உரையாடிய போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மலையகத் தமிழர்கள் கடின உழைப்பாளிகள் என்றும், அவர்களுக்கு விவசாயம் செய்யவும், பாதுகாப்பாக வாழவும் சொந்த காணிகள் தேவை என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், காணி வழங்குவது குறித்து தான் ஜனாதிபதியிடம் பேசியதாகவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், மலையகத்தில் காணி கிடைக்காத பட்சத்தில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குடியேறுவது ஒரு சாத்தியமான மாற்றாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மோசமான வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் உதவி மற்றும் நிவாரண நிதிகளைக் நிர்வகிப்பதற்காக, பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர தலைமையில் உயர்மட்ட தேசியக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு கிடைக்கும் அனைத்து வெளிநாட்டு நிதிகளையும் வெளிப்படைத் தன்மையுடனும் செயற்திறனுடனும் நிர்வகிப்பதற்கான பொறுப்பு இந்த குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அனர்த்த நிவாரணப் பணிகளில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக் கூறலை உறுதி செய்வதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாக இந்த உயர்மட்ட தேசியக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (08) பிறப்பித்துள்ளார்.
இதனடிப்படையில், எதிர்வரும் 15 திகதிக்கு முன்னர் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாரும் இது வரை ஏன் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தவில்லை என்பதை சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் விளக்கி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2023-10-23 திகதி ஊடகங்களுக்கு சுமணரட்ன தேரர் வழங்கிய செவியின் போது வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இந்த தேரர் தெரிவித்த இந்த வன்முறையான கருத்துக்கு எதிராக 2023-10-27 ஆம் திகதி கொழும்பு புறக்கோட்டை காவல் நிலையத்தில் சட்டத்தரணி தனுக்க றனஞ்சக என்பவர் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்பின்பு, சிவில் மற்றும் அரசியல் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் உள்ள சட்டத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபருக்கு கோப்புக்கள் அனுப்பப்பட்ட நிலையில் கடந்த மாதம் சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த தேரரை கைது செய்யுமாறு அறிவுறத்தல் வழங்கியது.
இதன் தொடர்ச்சியாக குறித்த வழக்கு நேற்று (08) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த தேரர் நீதிமன்றில் சமூகமளிக்காத நிலையில் வழக்கு தொடுநர் சார்பாக முன்னலையான சட்டத்தரணி சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுரையின் படி குறித்த தேரரை இதுவரை கைது செய்யப்படவில்லை என நீதவான் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
இதையடுத்து நீதவான் அடுத்த வழக்கு தவணை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த தேரரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டதுடன் குறித்த தேரரை இதுவரை நீதிமன்றில் ஏன் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் கட்டளை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
குழந்தையின் தந்தை என நிரூபிக்க , இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன, DNA பரிசோதனையை மேற்கொள்ளுவதற்கு, மறுப்பு தெரிவித்துள்ளதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
எனது குழந்தையின் தந்தை இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன தான் என கூறி செவ்வந்தி சேனாதிவீர எனும் பெண் விமானி ஒருவர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு இன்று (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றில் ஆஜரான பெண், “எனது குழந்தையின் தந்தை இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன தான். தந்தை உரிமையை நிலைநாட்டுவதற்கு DNA பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஜெருசா தம்பையா, குழந்தையின் தந்தை யார் என்பதைக் கண்டறிய DNA பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடுமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.
சாமிக்க கருணாரத்ன சார்பில் ஆஜரான சட்டத்தரணி அசேல ரேகவ, DNA பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் கட்டாயப்படுத்த முடியாது என்றும் நிரூபிக்க வேண்டிய சுமை முறைப்பாட்டாளரிடம் தான் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
சாமிக்க கருணாரத்ன DNA பரிசோதனை கோரிக்கையை நிராகரிப்பதாகவும், குழந்தையின் தந்தை உரிமையை மறுப்பதாகவும் சட்டத்தரணி அசேல ரேகவ நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
இதனை கருத்தில் கொண்ட நீதவான், வழக்கு விசாரணையை ஜனவரி 30 ஆம் திகதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் வழக்கின் பிரதிவாதியான இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன 100,000 ரூபா பெறுமததியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் நாமே கடலில் இறங்கி போராடுவோம் என யாழ் கடற் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ், வடமராட்சி கிழக்கு தொடக்கம் நெடுந்தீவு வரையான மீனவ சங்க பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட நீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் கிறிஸ்ணன் அகிலனை இன்றைய தினம் திங்கட்கிழமை நேரில் சந்தித்து , இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினர்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் எமது கடல் வளங்கள் அழிக்கப்படுவதும், எமது வலைகள் சேதமாக்கப்பட்டு , எமது வாழ்வாதாரத்தை அழிப்பதுடன் , பொருளாதார ரீதியாகவும் எமக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றனர்.
எனவே இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த உடனடியாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் நாமே கடலில் இறங்கி அவர்களுக்கு எதிராக போராடுவோம்.
இதன் முதல் கட்டமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழில், நீரியல் வளத் திணைக்களத்தின் முன்னிருந்து போராட்டம் ஒன்றை ஆரம்பித்து மாவட்டச் செயலகம் வரை செல்லவுள்ளோம்.
அங்கு மாவட்டச் செயலக வாயிலை மூடி எமது போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம் என தெரிவித்தனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சேகரிக்க வரும் நபர்கள் தொடர்பில் நன்கு ஆராய்ந்து அவர்களுக்கு ஆதரவளிக்குமாறு பொலிஸ் தலைமையகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சிலர் மோசடி செய்வதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து பொலிஸார் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
இது போன்ற உதவிகளை சேகரிக்கும் மக்களின் உண்மை நிலையை ஆராய்வது மிகவும் முக்கியம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உதவி வழங்கும் போது அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார் அல்லது கிராம சேவை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களின் உதவியுடன் நிவாரணம் வழங்கப்பட்டால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உட்லர் தெரிவித்துள்ளார்.
வெளியாட்கள் சம்பந்தப்பட்ட நன்கொடையாளர்களிடம் கேட்டால் உடனடியாக பொலிஸாருக்கு தெரிவிக்க வேண்டும் என பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இலங்கையின் வட மாகாணத்தில், யாழ் குடாநாட்டுக்குத் தெற்கே அமைந்துள்ள பரந்த நிலப்பரப்பே ‘வன்னி’ என அழைக்கப்படுகிறது. காடுகளும், குளங்களும், வயல்வெளிகளும் நிறைந்த வன்னிப் பெருநிலம், வெறும் புவியியல் பிரதேசம் மட்டுமல்ல; அது தனக்கென ஒரு தனித்துவமான, வீரச் செறிந்த, அதே நேரம் துயரம் தோய்ந்த வரலாற்றைக் கொண்ட ஒரு சரித்திரப் பூமி.
தன்னாட்சி புரிந்த வன்னியர் தலைமைகளின் எழுச்சி, ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான தீரமிக்க போராட்டங்கள், நவீன கால உள்நாட்டுப் போரின் மையமாகி சந்தித்த பேரழிவுகள் என வன்னியின் வரலாறு பல முக்கிய கட்டங்களைக் கொண்டது.
தொன்மையும் பெயர்க் காரணமும்’வன்னி’ என்ற பெயர் ‘வனம்’ (காடு) என்ற சொல்லிலிருந்து மருவியதாகக் கருதப்படுகிறது. இப்பிரதேசத்தின் அடர்ந்த காட்டு வளம் காரணமாக இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். மேலும், இப்பகுதியை ஆண்ட குறுநில மன்னர்கள் ‘வன்னியர்கள்’ என அழைக்கப்பட்டதாலும் இப்பெயர் நிலைபெற்றது. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே வன்னியில் மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. பெருங் கற்காலப் பண்பாட்டு மையங்கள் இங்கு கண்டறியப்பட்டுள்ளன.
அனுராதபுர மற்றும் பொலன்னறுவை இராச்சியங்களின் காலத்தில், வன்னிப் பிரதேசம் ஒரு பாதுகாப்பு அரணாகவும், விளைபொருள் வழங்கும் ஒரு பின்தளப் பிரதேசமாகவும் விளங்கியது. வன்னியர்களின் எழுச்சியும் பொற்காலமும் வன்னியின் வரலாற்றில் முக்கியமான அத்தியாயம், வன்னியர்களின் எழுச்சியாகும்.
சோழர்களின் ஆட்சி இலங்கையில் முடிவுக்கு வந்த பின்னர், மத்திய அரசின் பிடி தளர்ந்த போது, 13 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு வன்னிப் பிரதேசம் முழுவதும் பல சிற்றரசுகள் தோன்றின. இவற்றை ஆண்ட தலைவர்களே வன்னியர்கள் எனப்பட்டனர்.
நிர்வாகம்
ஒவ்வொரு வன்னியரும் தத்தமது பிரிவுகளைத் தன்னாட்சியுடன் நிர்வகித்தனர். அவர்கள் தமக்கெனத் தனியான படையணிகளையும், நிர்வாகக் கட்டமைப்பையும் கொண்டிருந்தனர். வரி வசூலித்தல், நீதி வழங்குதல் போன்றவை அவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன.
யாழ்ப்பாண இராச்சியத்துடனான உறவு
வன்னியர்கள் பெரும்பாலும் யாழ்ப்பாண இராச்சியத்திற்குத் திறை செலுத்தும் குறுநில மன்னர்களாகவே விளங்கினர். யாழ்ப்பாண மன்னர்களுக்குத் தேவைப்படும் போது தமது படைகளை அனுப்பியும் உதவினர்.
இருப்பினும், சில சமயங்களில் யாழ்ப்பாண அரசுக்கு எதிராகவும் இவர்கள் கிளர்ச்சி செய்ததற்கான சான்றுகளும் உள்ளன. இவர்களின் தன்னாட்சி மனப்பான்மையும், வீரமும் அவர்களை யாருக்கும் முழுமையாக அடி பணியாதவர்களாக வைத்திருந்தது. பனங்காமம், கரிக்கட்டுமூலை, முள்ளியவளை, தென்னமரவாடி போன்ற பல வன்னிமைகள் சிறப்புற்று விளங்கின.
அந்நியர் எதிர்ப்பும் பண்டார வன்னியனும்
ஐரோப்பியர்களின் வருகை, வன்னியர்களின் தன்னாட்சிக்கு பெரும் சவாலாக அமைந்தது. போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர் ஆகியோரால் வன்னியை முழுமையாக கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவர முடியவில்லை. வன்னியின் அடர்ந்த காடுகளும், வன்னியர்களின் கெரில்லாப் போர் முறையும் அந்நியப் படைகளுக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தின.
இந்த எதிர்ப்பு வரலாற்றின் உச்சபட்ச நாயகனாகத் திகழ்பவன் மாவீரன் பண்டார வன்னியன். கற்சிலைமடுவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பண்டார வன்னியன், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மிகக் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்தான்.
1803 ஆம் ஆண்டு, ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்த முல்லைத்தீவுக் கோட்டையைத் தாக்கி அழித்து, அங்கிருந்த பீரங்கிகளைக் கைப்பற்றி, ஆங்கிலேயர்களுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தான். அவனது வீரம் வன்னி மக்களின் விடுதலை உணர்வின் அடையாளமாக இன்றும் போற்றப்படுகிறது.
இறுதியில், ஆங்கிலேயரின் சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டாலும், பண்டார வன்னியனின் தியாகம் வன்னி வரலாற்றில் அழியாத இடத்தைப் பிடித்துவிட்டது. அவனது வீழ்ச்சியுடன், வன்னியர்களின் தன்னாட்சி யுகம் முடிவுக்கு வந்தது.
உள்நாட்டுப் போரும் வன்னியின் அழிவும்
20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இலங்கை இனப் பிரச்சினை ஆயுதப் போராட்டமாக மாறிய போது, வன்னிப் பிரதேசம் அதன் மையக்களமாக மாறியது. அடர்ந்த காடுகள் நிறைந்த அதன் புவியியல் அமைப்பு, விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பின் வளர்ச்சிக்கு ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது.பல தசாப்தங்களாக, வன்னிப் பிரதேசம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் ஒரு நிழல் அரசாங்கத்தின் (de facto state) கீழ் இயங்கியது. கிளிநொச்சி அதன் நிர்வாகத் தலைநகராக விளங்கியது.
இக்காலத்தில், வன்னி எண்ணற்ற இராணுவ நடவடிக்கைகள், தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரத் தடைகளைச் சந்தித்தது. மக்கள் சொல்லணாத் துயரங்களுக்கு ஆளாகினர்.2008-2009 காலப்பகுதியில் நடைபெற்ற இறுதிக் கட்டப் போர், வன்னியின் வரலாற்றில் ஒரு பெரும் ரத்தக்களரியைப் பதிவு செய்தது.
மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து, முள்ளிவாய்க்கால் என்ற குறுகிய நிலப்பரப்பிற்குள் முடக்கப்பட்டனர். போர் முடிவுக்கு வந்த போது, வன்னிப் பிரதேசம் சொல்லொணா அழிவைச் சந்தித்திருந்தது. மனித உயிர்களும், சொத்துக்களும், உள்கட்டமைப்புகளும் முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டன.
தற்கால நிலை
போருக்குப் பின்னரான காலத்தில், வன்னி மெல்ல மெல்ல மீண்டெழுந்து வருகிறது. மீள்குடியேற்றம், கண்ணிவெடி அகற்றம், வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் எனப் பல சவால்களுக்கு மத்தியில் வன்னி மக்கள் தமது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பி வருகின்றனர்.
இருப்பினும், போரின் வடுக்களும், தீர்க்கப்படாத அரசியல் பிரச்சினைகளும், இராணுவ மயமாக்கலும் இப்பிரதேசத்தின் இயல்பு வாழ்க்கைக்குத் தொடர்ந்தும் சவாலாகவே உள்ளன.
வன்னியின் வரலாறு, தன்னாட்சியின் பெருமிதத்தையும், அந்நிய எதிர்ப்பு வீரத்தையும், போரின் கோரமான அழிவையும் ஒருங்கே கொண்டது. பண்டார வன்னியன் போன்ற மாவீரர்களைத் தந்த இந்த மண், நவீன வரலாற்றின் மிக மோசமான மனித அவலங்களில் ஒன்றையும் சந்தித்துள்ளது.
பேரழிவுகளில் இருந்து மீண்டு வரும் வன்னி மக்களின் அசைக்க முடியாத மன உறுதி, அவர்களின் எதிர் காலத்திற்கான நம்பிக்கையாகத் திகழ்கிறது. வன்னியின் சரித்திரம், இலங்கைத் தீவின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத, மறக்க முடியாத ஒரு முக்கிய பகுதியென்பதில் ஐயமில்லை