Friday, July 17, 2026
Huis Blog Bladsy 67

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய ஒருவர் யாழில் கைது..!

0

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு உதவி புரிந்ததாகக் கூறப்படும் சந்தேகத்தின் அடிப்படையில், யாழ்ப்பாணம் உடுவிலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய சந்தேக நபர் சிற்றூந்தில் பயணித்த போது நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.


அவரிடமிருந்து வாள், ஐயாயிரம் வரையான போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர் பயணித்த சிற்றூந்து போலி இலக்க தகடு கொண்டது என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு வாகன உதவி புரிந்தார் என்ற அடிப்படையில் கைதான குறித்த நபருக்கு யாழ்ப்பாணத்தில் இயங்கும் குற்றக் குழுக்களுடன் தொடர்புள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.


சந்தேக நபர், யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, அதன் பின்னர் கொழும்பு விசேட காவல்துறை குழுவினரிடம் ஒப்படைக்கவுள்ளார்.

இதேவேளை கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் அண்மையில் யாழில் கைது செய்யப்பட்ட மூவரும் கொழும்பிலிருந்து வந்த விசேட காவல்துறை குழுவால் மேலதிக விசாரணைக்காகக் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயர்தரப் பரீட்சைகள் நிறைவடைவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணி ஆரம்பம்..!

0

இம்முறை உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகப் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர (க.பொ.த) உயர்தரப் பரீட்சை இன்று (10) ஆரம்பமான நிலையில், டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.


உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் இன்று வெற்றிகரமாக ஆரம்பமான நிலையில், இது தொடர்பாக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று குறித்த நேரத்தில் பரீட்சை ஆரம்பமானதுடன் நாட்டிலுள்ள அனைத்துப் பரீட்சை நிலையங்களிலும் எவ்விதத் தடங்கலும் இன்றிப் பரீட்சை வழமைபோல நடைபெற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


பரீட்சை முடிவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆரம்பிக்க தற்போது நாங்கள் திட்டங்களைத் தயாரித்துள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆசிரிய இடமாற்றத்தை தடை செய்யக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு..!

0

வடமாகாண கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட சேவையின் தேவை கருதிய ஆசிரிய இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் எதிர்வரும் 24ஆம் திகதிக்கு தவணை இடப்பட்டது.

கடந்த இருபதாம் திகதி யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தில் வட மாகாண கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட சேவையின் தேவை கருதிய இடமாற்றத்தில் பாரபட்சம் இருப்பதாக தெரிவித்து குறித்த இடமாற்றத்தினை நிறுத்தும் தடை உத்தரவை வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.


குறித்த வழக்கானது அன்றையதினமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த முறைப்பாட்டாளர் தொடர்பான விடையங்களுக்கு நேற்று 10 ஆம் திகதி சம்பந்தப்பட்ட அரச தரப்பினை பதில் வழங்குமாறு மன்று கட்டளையிட்டது.

இவ்வாறான நிலையில் நேற்றைய தினம் குறித்த வழக்கானது யாழ் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது அரச சட்டத்தரணி தயார் இல்லாத காரணத்தினால் வழக்கானது இம்மாதம் 24ஆம் திகதி மீண்டும் தவணையிடப்பட்டுள்ளது.


குறித்த வழக்கில் வழக்கு தொடுனரான இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் வருகை தந்ததுடன் அவர்கள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகி இருந்தார்.

வடக்கில் தொடரும் ஆசிரிய இடமாற்ற சர்ச்சை; பதவி வறிதாகிய ஆசிரியருக்கும் இடமாற்றம்..!

0

வட மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சேவையின் தேவை கருதிய ஆசிரிய இடமாற்றப் பட்டியலில் வெளிநாடு சென்ற ஆசிரியர் ஒருவரின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆசிரியர் கல்வி திணைக்களத்தின் அனுமதியின்றி வெளிநாடு சென்றமையினால் 2024.09.12 திகதி NP/41/20/01/01/06/1-123 இலக்கமும் கொண்ட கடிதத்திற்கு அமைவாக 2024.03.01 முதல் அவரது பதவி வறிதாக்கப்பட்டது.


இவ்வாறான நிலையில் அண்மையில் வெளியாகிய வடமாகாண ஆசிரிய இடமாற்றப்பட்டியலில் குறித்த ஆசிரியர் மடு வலயத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில், கிளிநொச்சி வலயத்தில் அதிபர் சேவையில் உள்ள ஒருவருக்கு 2026 ஆம் ஆண்டு ஆசிரியர் இடமாற்ற பட்டியலில் பெயர் உள்வாங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


வடமாகாண கல்வியில் முறைகேடான இடமாற்றங்கள் இடம் பெறுவதாக தெரிவித்து யாழ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறுவது கல்வி அமைச்சின் மீது ஏற்பட்டுள்ள சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாக அமைகிறது.

தன்மீது திட்டமிட்ட அவதூறு; ஊடக சந்திப்பை தவிர்த்த செல்வம் எம்.பி..!

0

வவுனியாவில் இடம்பெற்ற கட்சியின் ஊடக சந்திப்பை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் புறக்கணித்து வெளியேறியுள்ளார்.

ரெலோ கட்சியின் தலைவரும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தொடர்பாக சில சமூக வலைத்தளங்கள் மற்றும் சில இணைய தளங்களில் வெளிவந்த குரல் பதிவு தொடர்பிலும், கட்சியின் செயற்பாடுகள் தொடர்பிலும் கட்சியின் தலைமைக் குழு வவுனியாவில் நேற்று (09.11) காலை முதல் மாலை வரை கூடி ஆராய்ந்து இருந்தது.


இதன்பின் ஊடக சந்திப்பும் இடம்பெற்றது. குறித்த ஊடக சந்திப்பை கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசாமி நடத்தியிருந்தார்.

ஊடக சந்திப்புக்கு முன்னதாகவே அங்கு பிரசன்னமாகியிருந்த ஊடகவியலாளர்கள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைகலநாதனையும் ஊடக சந்திப்பில் கலந்து கொள்ளுமாறும் பலமுறை கேட்டனர்.


ஆயினும், அதற்கு மறுப்பு தெரிவித்த செல்வம் அடைகலநாதன் எம்.பி ஊடக சந்திப்பைத் தவிர்த்து அங்கிருந்து வெளியேறிச் சென்றிருந்தார்.

இதேவேளை, குறித்த ஊடக சந்திப்பில் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கட்சிக்கு எதிராக வேண்டுமென்றே சேறுபூசும் நோக்கில் திட்டமிட்டு ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன என ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தலாவ விபத்தில் அறுவர் பலி; உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவனும் உள்ளடக்கம்..!

0

தலாவ விபத்தில் உயிரிழந்தவர்களுள், உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அநுராதபுரம், தலாவ, ஜெயகங்கா சந்தி பகுதியில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் அறுவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மேலும், 40 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


காயமடைந்தவர்கள் தம்புத்தேகம மற்றும் தலாவ வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வடக்கு மாகாண முன்னாள் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் சடலமாக மீட்பு..!

0

மன்னார்-யாழ் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில் இருந்து இன்று திங்கட்கிழமை (10) காலை சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளராகவும், இலங்கை கல்வி வெளியிட்ட பிரிவின் பணிப்பாளராக வும் கடமையாற்றிய திருஞானம் ஜோன் குயின்ரஸ் (வயது-60) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


இன்றைய தினம் திங்கட்கிழமை(10) காலை தனது வாகனத்தில் பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலயத்திற்கு வருகை தந்து வழிபாட்டில் ஈடுபட்ட நிலையில் உயிரிழந்திருக்கலாம் என தெரிய வருகின்றது.

சடலத்தை கண்ட ஆலய நிர்வாகத்தினர் இலுப்பைக்கடவை பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த போலீசார் சடலத்தை பார்வையிட்டனர்.


அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.பிரபானந்தன் சடலத்தை பார்வையிட்டார்.

பின்னர் மேலதிக நடவடிக்கைகளுக்காக சடலத்தை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார்

வயதுக்கு ஏற்ற பாலியல் கல்வி முறையே; யாரும் அச்சங்கொள்ளத் தேவையில்லை – பிரதமர்

0

பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்களை தவிர்க்க பிள்ளைகளுக்கு வயதுக்கு ஏற்ற பாலியல் கல்வி முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து கண்டி மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தும் நிகழ்ச்சி இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பான திட்டங்களைத் தயாரிப்பதற்கு நிபுணர்களின் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் இதன்போது கூறினார்.


அங்கு மேலும் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

6 ஆம் தரத்திற்காக, வயதுக்கு ஏற்ற வகையில் ஒரு புத்தகத்தை நாங்கள் தயாரித்துள்ளோம். பாலியல் கல்வி வழங்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சு, குறிப்பாகக் குடும்பநல சுகாதாரப் பிரிவு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

நம் நாட்டில் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தலுக்குக் பிள்ளைகள் உள்ளாகும் போக்கு அதிகரித்து வருவதால், இதிலிருந்து பாதுகாக்க பிள்ளைகளுக்கு இது பற்றி கற்பிக்க வேண்டும் என்று குடும்பநல சுகாதாரப் பிரிவு மற்றும் சுகாதார அமைச்சு தொடர்ந்து எங்களிடம் கூறி வருகின்றன.


அதேபோல், இது ஒரு பாரதூரமான பிரச்சினை என்று சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் எங்களிடம் கூறியுள்ளது. தங்களது உடலைப் பாதுகாத்துக் கொள்வது குறித்துக் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இது குறித்து அந்தந்த அமைச்சுக்கள் மற்றும் அதிகார சபைகளுடன் நாங்கள் கலந்துரையாடி வருகிறோம். அவர்களின் பரிந்துரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

எந்த வயதில், எவ்வாறு, எப்போது இதை அறிமுகப்படுத்துவது என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை.


இந்தக் கலந்துரையாடல்களின்படி, பிள்ளைகளுக்குத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய விதம் மற்றும் தங்களது உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து வயதுக்கு ஏற்ற வகையில் சரியான கல்வி கிடைக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். என்றார்.

1818க்கு கிடைத்த பாடசாலைகள் தொடர்பான தகவல்கள் – அமைச்சர் தெரிவிப்பு

0

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாகத் தகவல் வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 1,818 தொலைபேசி இலக்கத்துக்கு 800 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார்.

குறித்த விடயத்தினை தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த 800 முறைப்பாடுகளும் கடந்த 4 நாட்களுக்குள் கிடைத்துள்ளதாக சுட்டிக் காட்டியுள்ளார்.


கொழும்பு மாவட்டச் செயலகத்தில் நேற்று (09) நடைபெற்ற, விஷப் போதைப்பொருள் ஒழிப்புக்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கொழும்பு மாவட்டச் செயற்பாட்டுத் திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பாடசாலைகள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளன. 1818 அவசர அழைப்பு இலக்கத்தை அறிமுகப்படுத்தியதன் பின்னர், 4 நாட்களுக்குள் சுமார் 800 தொலைபேசி அழைப்புகள் கிடைத்துள்ளன.

அவை சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளுமாறு காவல்துறை மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் இருந்து அதிகளவான தகவல்கள் வருகின்றன.


அதேபோல், இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட முதல் 4 நாட்களில் காவல் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 5,300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது கொழும்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பரவல் அதிகளவில் உள்ளதைக் காண முடிந்தது.” என தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

0

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் நிதி மோசடிகள், அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

குறிப்பாக Telegram, WhatsApp, பேஸ்புக் போன்ற கணக்குகள் மற்றும் ஏனைய சமூக ஊடக குழுக்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் நிதி மோசடிகள் குறித்து தொடர்ச்சியாக முறைப்பாடுகள் பதிவாகி வருகின்றன.


மோசடியாளர்கள் பொதுமக்களை ஏமாற்றி இலவசங்கள் வழங்குவதாக அவர்களது வங்கிக் கணக்கு இலக்கங்கள், கடவுச்சொல், தொலைபேசி இலக்கங்கள், மின் அஞ்சல்கள் மற்றும் QR குறியீடுகள் போன்ற இரகசிய தகவல்களைப் பெற்றுக் கொள்கின்றனர்.

பின்னர் நிகழ்நிலை (online) வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பல்வேறு கணக்குகளுக்குப் பணம் செலுத்தும்படி ஊக்குவித்து நிதி மோசடிகளில் ஈடுபடுவதாக அறியமுடிகின்றது.


இதுமட்டுமன்றி அண்மைக் காலமாகக் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகவும் உயர்கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதாகவும், பிறமிட் திட்டங்களூடாகவும், மரங்களில் முதலீடு எனவும் பாரிய அளவிலான நிதி மோசடிகள் இடம் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

எனவே வடக்கு கிழக்கு மக்கள் இணைய மோசடிகள் தொடர்பாக எச்சரிக்கையாக செயற்படுமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!