Sunday, March 8, 2026
Huis Blog Bladsy 79

செம்மணி வழக்கில் தொடர்புபட்ட இராணுவத்தினனர் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்பு – சுமந்திரன்

0

செம்மணி மனிதப் புதைகுழி விடயத்தில் சம்பந்தப்பட்ட இராணுவத்தினர் நாட்டை விட்டுத் தப்பி ஓடாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைகளின் போது ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றை தமது சமர்ப்பணத்தில் கோரினார்.

1990 களின் கடைசி வரையான காலத்தில் இந்தப் பிரதேசத்தில் காணாமல்போன ஆள்கள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நான்கு பேர் கொண்ட ஆணையம் ஒன்றை நியமித்து விசாரணை செய்தது.

தேவநேசன் நேசையா தலைமையிலான இந்தக் குழுவில் கே.எச்.கமிலஸ் பெர்னாண்டோ, ஜெஸிமா இஸ்மாயில், சி.எம்.இக்பால் ஆகியோர் அடங்கியிருந்தனர்.

அந்த ஆணைக்குழு நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றது. அந்தச் சமயத்தில் காணாமல்போன 300 பேர் வரையானோர் குறித்து அந்த ஆணைக்குழு விசாரணை நடத்தி இருக்கின்றது.

அவர்களில் 200 பேர் வரை இராணுவத்தினரால் கொல்லப் பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்ட அந்த விசாரணை ஆணைக்குழு அதில் சம்பந்தப்பட்ட பல படையினரின் பெயர் விவரங்களையும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது என்று தெரிவித்த சுமந்திரன் சுமார், 210 பக்கம் கொண்ட அந்த ஆணைக்குழு அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இந்த அறிக்கையின்படி, காணாமல்போனோரின் பெரும்பாலானோர் இந்த செம்மணிப் பிரதேசத்தை நெருக்கமான பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அது மாத்திரமல்ல அவ்வாறானோரில் பெரும்பாலானோரின் கதி செம்மணித் தரவையில் முடிவுற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அந்த அறிக்கை கொண்டிருந்தது.

அவற்றை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்த சுமந்திரன், அந்த அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இந்த எலுப்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, விசாரணை மும்முரமடையும் போது நாட்டை விட்டுத் தப்பி ஓடி தலைமறைவாகக் கூடிய வாய்ப்பு உண்டு. அது குறித்து முற்கூட்டியே நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுமந்திரன் நீதிமன்றத்தைக் கோரினார்.

அந்த ஆணைக்குழு அறிக்கையின் பிரதியைப் பெற்றுக்கொண்ட நீதிவான் இந்த விடயம் குறித்து புலனாய்வு செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவினரைப் பணித்தார்.

முன்னாள் அமைச்சர் ராஜிதவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய தீர்மானம்..!

0

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்து தலைமறைவாக இருந்தால் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்வதில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கவனம் செலுத்தவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவு பெறப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சேனாரத்ன இருந்த பல இடங்களில் அவரைக் கைதுசெய்ய சமீபத்திய நாட்களில் சோதனை நடத்தப்பட்டாலும், அவரைக் கைதுசெய்ய முடியவில்லை.

ராஜித சேனாரத்னவைக் கைதுசெய்ய நீதிமன்றத்தால் சமீபத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. முன்னதாக, தேசபந்து தென்னகோனைக் கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்ததால் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்யத் தயாரான போது அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.

அநுர அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியின் பரந்த கூட்டணியின் வரைவு தயாரிப்பு..!

0

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான எதிர்க்கட்சியின் பரந்த கூட்டணியின் வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

நாரஹேன்பிட்டி, கிருல வீதியில் உள்ள முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் இல்லத்தில் நேற்று மாலை கூடிய பல எதிர்க்கட்சிகளின் தலைவர்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி, இந்த வரைவு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை அடுத்த வாரம் தொடங்க இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பரந்த கூட்டணியின் இறுதி வரைவு, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தாத எதிர்க்கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் தயாரிக்கப்படவுள்ளது.

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதால், எதிர்காலத்தில் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், எதிர்க்கட்சி இந்த விடயத்தில் கவனம் செலுத்தி அதன் பங்கை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், சம்பிக்க ரணவக்க, மிலிந்த மொரகொட, தயாசிறி ஜயசேகர, அநுர பிரியதர்ஷன யாப்பா, மஹிந்த அமரவீர, ரமேஷ் பத்திரன, மனோ கணேசன், ரிஷாத் பதியுதீன், நிஷாம் காரியப்பர், மயந்த திசாநாயக்க, பிரேமநாத் சி.தொலவத்த உள்ளிட்ட அரசியல்வாதிகள் குழுவொன்று இதில் கலந்து கொண்டனர்.

மாகாண சபைத் தேர்தல்; அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு – தேர்தல் ஆணைக்குழு

0

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

மாகாண சபை தேர்தல் விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம்.

நீதியானதும், சுதந்திரமானதுமான வகையில் தேர்தலை நடத்துவதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தால் தேர்தலை சிறந்த முறையில் நடத்துவோம்.

கடந்த 09 மாதகாலத்துக்குள் மூன்று தேர்தல்களை சிறந்த முறையில் நடத்தினோம். மாகாண சபைத் தேர்தல் முறையில் காணப்படும் சட்டசிக்கலால் ஆணைக்குழுவினால் தேர்தலுக்கான பணிகளை முன்னெடுக்க முடியாத தடை காணப்படுகிறது.

தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுக்கள் மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுக்களில் பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றமை வரவேற்கத்தக்கது. என்றார்.

வட – கிழக்கில் ஹர்த்தால்; பொதுபாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பு..!

0

முல்லைத்தீவில் இளைஞன் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுகளின்படி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (15) ஹர்த்தால் நடத்துவது பயனற்ற செயல் என பொதுபாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசு கட்சி (ITAK) சமீபத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் இன்று ஹர்த்தால் நடத்தப்படும் என்று அறிவித்தது.

ஹர்த்தால் நடத்துவதற்கு எந்த காரணமும் இல்லை, இது தொடர்பாக ஊடகமொன்றிடம் பேசிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால,

“ஹர்த்தால் நடத்தப்படும் என்று அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் அதை நடத்த எந்த காரணமும் இல்லை. சம்பந்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டள்ளனர். ஹர்த்தால் நடந்தாலும் இல்லாவிட்டாலும், எங்களுக்கு வேறு எதுவும் செய்யத் தேவையில்லை. நீதிமன்ற உத்தரவுகளின்படி நாங்கள் அடுத்த நடவடிக்கை எடுப்போம். ஹர்த்தால் நடத்துவது பயனற்ற செயல்.”

மேலும், இதேபோன்ற சம்பவங்கள் மற்ற மாகாணங்களிலும் நிகழ்கின்றன என்றும், ஆனால் அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் ஹர்த்தால்களை நடத்துவதில்லை என்றும் அவர் கூறினார்.

“இந்த சம்பவங்களை இனம் அல்லது மதத்தின் பார்வையில் இருந்து நாம் பார்க்கக் கூடாது. ஒரு குற்றம் நடக்கும் போது, பொறுப்பான எவருக்கும் எதிராக, அவர்களின் பின்னணியைப் பொருட்படுத்தாமல் காவல்துறையினர் செயல்படுகிறார்கள். கடந்த சில மாதங்களாக இதை நடைமுறையில் நிரூபித்துள்ளோம்” என்றார்.

வடக்கின் கல்வியில் தொடரும் மோசடிகள்; ஆளுநருக்கு பறந்த கடிதம்..!

0

கிளிநொச்சியில் உள்ள பிரபல மகளிர் பாடசாலையொன்றின் அதிபர் நியமனத்தில் பெரும் மோசடி இடம்பெற்றுள்ளது என்று சிவசேனை அமைப்பால் வடக்கு மாகாண ஆளுநரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சிவசேனை அமைப்பினர் தெரிவித்ததாவது,

கிளிநொச்சியில் உள்ள பிரபல மகளிர் பாடசாலையொன்றின் அதிபர் பதவிக்குப் பொருத்தமான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் அண்மையில் கோரப்பட்டிருந்தன.

இந்த நியமனங்களுக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து ஒருவரும், கிளிநொச்சியில் இருந்து ஆறு பேருமாக ஒட்டுமொத்தமாக ஏழு பேர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

ஆனால், தகுதி நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் குறிப்பிட்டு, அவர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அதிபர் பதவிக்கு விண்ணப்பிக்காத அருட் சகோதரியொருவருக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு, புள்ளிகள் வழங்கப்பட்டு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

பதவி நிலைக்கு விண்ணப்பிக்காத அருட்சகோதரி எவ்வாறு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டார். எந்த அடிப்படையில் அவருக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன என்பதில் எமக்குப் பெரும் சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.

இதைவிட குறித்த பாடசாலைக்கு தரநிலை ஒன்றில் உள்ள அதிபரே நியமிக்கப்படலாம். தர நிலை ஒன்றில் உள்ளவர்கள் எவரும் விண்ணப்பிக்காத பட்சத்தில் தரநிலை இரண்டில் உள்ளவர்கள் நியமிக்கப்படலாம்.

ஆனால், இவை இரண்டிலும் இல்லாமல், தரநிலை மூன்றில் உள்ளவரே தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

எனவே, இந்த நியமனம் பக்கச்சார்பானது மற்றும் தவறானது என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.

வட மாகாண கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட அதிபர் நியமனத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை சிவசேன அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்ல பட்டுள்ளதாகவும் இதற்கு தீர்வு கிடைக்காத விடத்து தாங்கள் இதற்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க இருப்பதாகவும் என்.பீ. ஸ்ரீந்திரன் தெரிவித்துள்ளார்.

வெகு விமர்சையாக நடைபெற்ற ஆயிஷா வித்தியாலயத்தின் மாணவர் கெளரவிப்பு நிகழ்வு..!

0

இன்றைய தினம், வவுனியா புதிய சாலம்பக்குளம் ஆயிஷா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும், மாணவர் கெளரவிப்பும் பாடசாலையின் அதிபர் திருமதி பிரதாத் பகீரதி அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

இவ் விழாவில் 2023, 2024ம் ஆண்டுகளில் புலமைப் பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் கெளரவிப்பும், தற்போது தரம் ஐந்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான மாணவத் தலைவர் சின்னம் சூட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.

இவ் நிகழ்வின் பிரதம அதிதிகளாக வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. முகுந்தன், இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகர் திரு. ஜமீஸ், பாடசாலையின் முன்னாள் அதிபர் திரு. பைசல் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

சிரேஸ்ட காவல்துறை பதில் பணிப்பாளர் அதிரடியாக கைது..!

0

காவல்துறை கலாசார பிரிவின் பதில் பணிப்பாளர், சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் சதீஸ் கமகே கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (14) இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபருக்கு எதிரான பல்வேறு இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விசாரணைக்கு எவ்வித அவசியமும் இல்லை – ஆனந்த விஜேபால

0

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், நேற்று வெளியிட்ட அறிக்கை குறித்து எமது செய்தி சேவைக்கு பதிலளித்த போது, மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனைத் தெரிவித்தார்.

அத்துடன், தற்போதைய அரசியல் நிலவரங்கள் உள்ளிட்ட பல விடயங்களையும் அவர் எமது செய்தி சேவையிடம் பகிர்ந்து கொண்டார்.

இதன்படி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் நேற்று வெளியிட்ட அறிக்கை குறித்து கருத்துரைத்த அவர், கடந்த அரசாங்கத்தின் கீழ் சர்வதேச விசாரணைக்கான தேவை ஏற்பட்டிருக்கலாம்.

ஆனால், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அதற்கான தேவை ஏற்படவில்லை எனக் கூறினார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் இலங்கைக்கு விஜயம் செய்த போது, தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து தெளிவான விளக்கத்தை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் எந்தவொரு மனித உரிமை மீறலும் இடம்பெறவில்லை என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால சுட்டிக் காட்டினார்.

எனவே, செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜெனீவா கூட்டத் தொடரில் அரசாங்கத்தின் தெளிவான நிலைப்பாட்டை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

யுத்த காலத்தில் ஏதேனும் மனித உரிமை மீறல்கள் இடம் பெற்றிருந்தால், உள்ளக விசாரணையின் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தற்போதைய அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

அத்துடன், செம்மணி விவகாரத்தையும் தற்போதைய அரசாங்கம் மூடி மறைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

செம்மணி மனித புதைகுழி, விடுதலை புலிகளின் கீழும் இராணுவத்தின் கீழும் இருந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.

ஆகவே, செம்மணியில் கிடைக்கும் மனித என்புக்கூடுகள் எந்த காலத்திற்கு உரியது என்பதை கண்டறிய வேண்டும்.

அதன்பின்னர் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஆனால், இவற்றுக்கு உடனடியாக தீர்வுகளை வழங்க முடியாது என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார்.

வவுனியா வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் சட்டத்தரணி சுமந்திரன் கலந்துரையாடல்..!

0

வவுனியா வர்த்தக சங்க பிரதிநிதிகளுக்கும், தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் நேற்றைய தினம் (13.08.2025) வவுனியாவில் இடம் பெற்றுள்ளது.

வடக்கு, கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரசன்னம் மற்றும் முல்லைத்தீவில் இளைஞர் சடலமாக மீட்கப்பட்டமை போன்ற விடயங்களிற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் ஹர்த்தால் ஒன்றை மேற்கொள்வதற்கு இலங்கை தமிழரசு கட்சியால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

குறித்த ஹர்த்தாலுக்கு வவுனியா மாவட்ட வர்த்தகர்கள் ஆதரவினை வழங்குமாறு கோரியே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், எதிர்வரும் திங்கட்கிழமை 18ஆம் திகதி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் ஹர்த்தால் ஒன்றை அனுஸ்டிப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) அதனை அனுஸ்டிக்குமாறு அறிவிக்கப்பட்ட நிலையில் மன்னார் மாவட்டத்தில் இருந்து வந்த கோரிக்கை காரணமாக அதனை 18ஆம் திகதி என மாற்றியுள்ளோம்.

அந்தவகையில் முல்லைத்தீவில் இளைஞர் ஒருவர் இராணுவ முகாமுக்கு அழைக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு மரணமான சம்பவம் இடம்பெற்றிருந்தது. பிரதானமாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இப்போராட்டம் அழைக்கப்பட்டிருக்கின்றது.

அத்துடன் எமது பகுதிகளில் மக்கள் மத்தியில் தேவைக்கு அதிகமான இராணுவக்குவிப்பு மற்றும் இராணுவ முகாம்கள் நீண்டகாலமாக நிலைகொண்டிருப்பதால் இப்படியான தொடர் விளைவுகள் ஏராளமாக நடக்கின்றது. எனவே இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும்.

மக்களின் சாதாரண வாழ்க்கையிலே அவர்களின் ஈடுபாடு இருக்க கூடாது என நீண்ட நாட்களாக நாங்கள் சொல்லி வருகின்றோம். அதன் விளைவே இந்த மரணமும் கூட. எனவே இவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் யாழ். செம்மணி மனிதப்புதைகுழியானது மிகவும் மோசமான முறையிலே செய்யப்பட்டிருக்கின்றது. குழந்தைகளது சடலங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான ஆதாரங்கள் வெளிவரும் சந்தர்ப்பங்களில் அவற்றை எல்லாம் முன்னிலைப்படுத்தி இந்த ஹர்த்தாலை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளோம். வடக்கு, கிழக்கை முற்றிலுமாக முடங்கச் செய்யும் போராட்டமாக இதனை நாம் நடத்த வேண்டும்.

வடக்கின் ஏனைய மாவட்டங்களின் வர்த்தக பிரதிநிதிகளுடனும் நாங்கள் கலந்துரையாடலை முன்னெடுத்துள்ளோம். அவர்கள் ஆதரவினை வழங்குவதாக சொல்லியிருக்கின்றனர். கிழக்கிலும் முழுமையான ஆதரவு வழங்குவதாக சொல்லியிருக்கின்றார்கள். இதுவரை பாரியளவிலான ஆதரவு இந்த ஹர்தாலுக்கு கிடைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!