இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 1,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவானதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
இன்று (24) பாராளுமன்றத்தில் தண்டனைச் சட்டத் திருத்த சட்ட மூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர்,
வீடுகள், பாடசாலைகள், தடுப்பு மையங்கள் மற்றும் பெருந்தெருக்கள் போன்ற இடங்களில் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகுவதாகவும் குறிப்பிட்டார்.
அதன்படி, கடந்த ஆண்டு 1,350 சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் மட்டும் 1,126 சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை அதிபர், ஆசிரியர்களின் கைகளைக் கட்டி மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவதையும் துஸ்பிரயோகம் என வகைப்படுத்தி சிறைக்குள் தள்ளும் அரசு இத்தகைய பாலியல் துஸ்பிரயோகங்கள் நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதற்கு எதிராக எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?
கொழும்பு பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, ஆசிரியையை 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் தர்ஷிமா பிரேமரத்ன உத்தரவிட்டுள்ளார்.
மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
குறித்த ஆசிரியை பாடசாலையின் நூலகத்தில் வைத்து 13 வயது பாடசாலை மாணவன் ஒருவனிடம் பாட புத்தகம் தொடர்பில் கேள்வி கேட்டட்போது இந்த மாணவன் ஆசிரியையின் கேள்விக்கு பிழையான பதிலை அளித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த ஆசிரியை மாணவனை தாக்கியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பேரில் சந்தேக நபரான ஆசிரியை கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியையின் தாக்குதலில் காயமடைந்த பாடசாலை மாணவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஆசிரியைக்கு பிணை வழக்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்து உரையாடியுள்ளனர்.
இச் சந்திப்பு கொழும்பில் உள்ள தூதுவரின் இல்லத்தில் நேற்று செவ்யாக் கிழமை பிற்பகல் இடம்பெற்றது.
கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், இரா.சாணக்கியன், ச.குகதாசன், து.ரவிகரன், மருத்துவர் இ.சிறிநாத் ஆகியோர் கலந்து கொண்டு வடக்கு கிழக்கு தமிழர்களின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக விளக்கமளித்தனர்.
13 ஆவது திருத்தச் சட்டம் பற்றியும் எடுத்துக் கூறினர், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படாமல் பிற்போடப்படுகின்றமை குறித்தும் விளக்கிக் கூறியுள்ளனர். அனைத்து விடயங்களையும் தூதுவர் செவிமடுத்தாக தமிழரசுக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
சர்வதேச நீதி கோரி மக்களிடம் பெறப்பட்ட கையொப்பம் அடங்கிய மனுவை கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ரெலோ இயக்கப் பேச்சாளர் கு.சுரேன் முகநூலில் பதிவிட்டுள்ளார்.
முகநூலில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் பின்வருமாறு,
ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி திரு மார்க் அண்ட்ரே பிரான்சே அவர்களிடம் அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றிணைந்து கையெழுத்துப் போராட்டத்தில் பெற்றுக் கொண்ட கையொப்பங்கள் இன்றைய தினம் கொழும்பில் கையளிக்கப்பட்டன.
23-09-2025 செவ்வாய் மாலை 3:30 மணியளவில் கொழும்பில் உள்ள ஐநா அலுவலகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது.
இக்கையொப்பங்களுடன் தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து கையொப்பமிட்ட கடித வரைவும் கையளிக்கப்பட்டது.
தமிழ் தேசிய கட்சிகளின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வம் அடைக்கலநாதனும், சமத்துவ கட்சியின் செயலாளர் நாயகம் சந்திரகுமார், கட்சிகளின் ஒருங்கிணைப்பாளரான குருசுவாமி சுரேந்திரனும் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு எழுதப்பட்டு ஐநா செயலாளர் நாயகத்துக்கும் பாதுகாப்பு சபைக்கும் மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் பிரதி செய்யப்பட்டுள்ள இக் கடிதத்தில் நீதியரசர் திரு சீ.வீ. விக்னேஸ்வரன், கெள.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சார்பில் திரு செ. கஜேந்திரன், திரு. செல்வம் அடைக்கலநாதன், திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், திரு சுரேஷ் பிரேமச்சந்திரன், திரு. முருகேசு சந்திரகுமார் மற்றும் திரு எஸ். நவீந்திரா (வேந்தன்)ஆகியோர் கையொப்பம் இட்டு இருந்தனர்.
காலம் காலமாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அட்டூழிய குற்றங்களுக்கான நீதியை விரைந்து நிலை நாட்டவும், பிரதானமாக செம்மணி உட்பட எமது வடக்கு கிழக்கு தாயகத்தில் அடையாளப்படுத்தப்படும் மனிதப் புதைகுழிகளில் தொடர்ந்தும் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும், கண்டெடுக்கப்படும் ஆதாரங்களை உறுதிப்படுத்துவும் சர்வதேச மேற்பார்வையுடன் கூடிய ஆலோசனே, தொழில்நுட்பம், நிதி, பாதுகாப்பு என பல கோரிக்கைகள் இக்கடிதத்தில் உள்ளடங்கியிருந்தன.
அவற்றை நேரடியாகவும் ஐநா ஒருங்கிணைப்பாளரிடம் இச்சந்திப்பின் போது தமிழ் மக்களின் பிரதிநிதிகளால் வலியுறுத்தப்பட்டன. கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக நடந்த இச்சந்திப்பு கையெழுத்து ஆவணங்களையும் கடிதப் பிரதியையும் கையளித்ததுடன் முடிவு பெற்றது. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழில் மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (24) இடம்பெற்றுள்ளது.
விஷ்ணுராஜ் யதுர்மன் (வயது 21) என்ற இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞர் யாழ். மாதா கோவில் வீதி, உடுவில், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞன் ஆடைகளை மினுக்கிக் கொண்டிருந்த வேளை மின் இணைப்பில் இருந்த கோளாறு காரணமாக மின்சாரம் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து, அவரது சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் சாட்சிகளை சுன்னாகம் காவல்துறையினர் நெறிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரான தனது மகனுக்கு நீதி கோரி வந்த தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி, லோகிதராசா ரொகான், சண்முகராஜா சஜீந்திரன், மனோகரன் வசீகர், தங்கத்துரை சிவானந்தன், யோகராஜா கேமச்சந்திரன் ஆகிய மாணவர்கள் மிலேச்சத்தனமாக படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களில் ரஜீகர் மனோகரன் என்ற மாணவனின் படுகொலைக்கு நீதி கோரிப் போராடி வந்த, அவரின் தந்தையான வைத்தியர் காசிப்பிள்ளை மனோகரன் (வயது 84) என்பவரே, எவ்வித நீதியும் கிடைக்காமல் கடந்த ஞாயிற்றுக் கிழமை உயிரிழந்துள்ளார்.
அரச பயங்கரவாதத்தில் கொல்லப்பட்ட ரஜீகர் மனோகரனின் பிறந்தநாள் கடந்த ஞாயிற்றுக் கிழமையாகும்.
மகனின் பிறந்த தினத்திலேயே, அவருக்கு நீதி கோரி வந்த தந்தை காலமாகியுள்ளார்.
யாழில் பிறந்து சிறிது நேரத்தில் இரட்டை குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். நிமலராஜ் சாருமதி தம்பதிகளின் குழந்தைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
குறித்த தம்பதியினர் சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
குறித்த குழந்தைகளின் தாயாருக்கு கடந்த 21ஆம் திகதி இரவு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதன் பின்னர், அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்த நிலையில், பெண் குழந்தை இறந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
அத்தோடு, ஆண் குழந்தை உயிருடன் பிறந்த நிலையில் 45 நிமிடங்கள் கழித்து உயிரிழந்துள்ளது.
குழந்தைகளின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வயிறு வீக்கம் காரணமாக யாழ். போதனா வைத்திய சாலையில் சேர்ப்பிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பன்னங்கண்டி, கிளிநொச்சியைச் சேர்ந்த முத்து சசிக்குமார் (வயது 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
இவர் மனைவியை பிரிந்த நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 21ஆம் திகதி இவருக்கு திடீரென வயிறு வீக்கம் ஏற்பட்டதால் கிளிநொச்சி வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர் அன்றிரவே யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ் போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு, குமுழமுனை மகா வித்தியாலயத்திற்கு முன்பாக நேற்று (22) முறைகேடான ஆசிரியர் இடமாற்றம் மற்றும் அதிபர் நியமனம் தொடர்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
வலய மற்றும் மாகாண அதிகாரிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக அதிபரை நியமிக்கத் தவறியதோடு, வேண்டுமென்றே இந்த நியமனச் செயல்முறையை தாமதப்படுத்தியதாகவும், பின்னர் உத்தியோகபூர்வ நேர்முகத் தேர்வு முடிவுகளுக்கு எதிராக ஒரு ஆசிரியரை அதிபராக நியமிக்க முடிவு செய்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த விவகாரம் தொடர்பான மனுக்கள் ஆளுநர், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
ஆர்ப்பாட்டத்தின் போது, ஆளுநர் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்ப வேண்டிய மனு, அவ்விடத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கையில் போதைப்பொருள் வலையமைப்புடன் பாதுகாப்புப் படையினர் மற்றும் அரசியல்வாதிகள் கொண்டிருந்த தொடர்புகள் குறித்த சில தகவல்கள் வெளிச்சத்துக்கு வரும் சூழலில், எவரும் அச்சமடைய வேண்டாம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.
சம்பத் மனம்பேரி கைது செய்யப்பட்டதையடுத்து, அவரது வாக்கு மூலங்களின் அடிப்படையில் சில ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
எனவே, மக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்க வேண்டும். அரசியல் தொடர்புகள் எதிர்காலத்தில் படிப்படியாக வெளிப்படும், என்றார்.