Sunday, May 3, 2026
Huis Blog Bladsy 87

தபால் ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு நியாயமற்றது – அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ

0

உரிய சம்பளமும் மேலதிக நேர கொடுப்பனவும் வழங்கப்பட்ட போதிலும் தபால் ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு நியாயமற்றதென சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு, சேவைக்கு திரும்புமாறு அமைச்சர் அனைத்து தபால் ஊழியர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அனைத்து தபால் ஊழியர்களும் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.

மேலதிக நேரக் கொடுப்பனவு உரிய வகையில் செலுத்தப்படாமை மற்றும் ஊழியர் பற்றாக்குறைக்கு தீர்வு வழங்கப்படாமை உள்ளிட்ட 19 விடயங்களை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தபால் மற்றும் தொலைத் தொடர்புகள் அதிகாரிகள் சங்கம், ஒன்றிணைந்த தபால் ஊழியர்களின் தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற் சங்கங்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் இணைந்துள்ளனர்.

எவ்வாறாயினும், பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்த போதிலும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட உப தபாலகங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தபால் மாஅதிபர் ருவன் சத்குமார தெரிவித்தார்.

வடகிழக்கில் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் வெற்றியே – சுமந்திரன் தெரிவிப்பு

0

யாழ் நகரம் தவிர்ந்த ஏனைய இடங்களில் இன்றைய ஹர்த்தால் வெற்றியளித்துள்ளது என தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம் . ஏ சுமந்திரன் மற்றும் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

யாழில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்.

குறித்த ஊடக சந்திப்பில் சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கில் உள்ள இராணுவத்தினரை அகற்றுமாறு கோரிக்கையை முன் வைத்து ஹர்த்தாலுக்கு தமிழரசு கட்சி அழைப்பு விடுத்தது.

அதனை ஏற்று வடக்கு கிழக்கில் பெரும்பாலான இடங்களில் ஹர்த்தலுக்கு ஆதரவு கிடைத்திருந்தது.

யாழ்ப்பாணத்தில் குறிப்பாக யாழ், நகர் பகுதியில் மாத்திரமே வர்த்தக நிலையங்கள் திறந்திருந்தது. அவர்கள் ஆதரவு வழங்காதது மன வருத்தமே.

வடக்கு கிழக்கு முழுவதும் மக்களை ஒன்றிணைந்து போராட்டம் நடாத்த கூடிய கட்சியாக தமிழரசு கட்சியே உள்ளது. அந்த வகையில் நாம் ஹர்த்தலுக்கு அழைப்பு விடுத்தோம். அது வெற்றியை தந்துள்ளது.

எமது ஹர்த்தால் அறிவிப்பு வந்தவுடனையே ஜனாதிபதி , அமைச்சர் பிமல் உள்ளிட்டவர்கள் எம்மை தொடர்பு கொண்டு பேசி இருந்தனர். முத்துஐயன்கட்டு இராணுவ முகாமை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம் என கூறினார்கள். இதுவே வெற்றி.

வடக்கு கிழக்கு பகுதிகளில் இருந்து இராணுவத்தினர் முற்றாக வெளியேற்றப்பட வேண்டும் அவர்கள் மக்களுடன் மக்களாக இருக்க முடியாது.

தெற்கில் இராணுவ முகாம்கள் உள்ளன. அங்கு அவர்கள் இராணுவ முகாம்களுக்குள் முடங்கி காணப்படுவார்கள். ஆனால் வடக்கு கிழக்கில் அந்த நிலைமை இல்லை. அவர்கள் மக்களோடு மக்களாக , மக்களின் இயல்வு வாழ்வில் தலையீடு செய்கின்றனர்.

பாடசாலைகள் , தனியார் காணிகள் , ஏன் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றுக்கு சொந்தமான காணியை கூட கையகப்படுத்தி அதில் நிலைகொண்டுள்ளனர். அதனால் அவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டும்.

இந்த ஹர்த்தால் ஒரு அடையாள போராட்டமே. இனிவரும் காலங்களில் இராணுவ முகாம்களை அகற்ற கோரி போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்போம்.

வடக்கு – கிழக்கில் உள்ள பெரும்பாலான உள்ளூராட்சி சபைகள் தமிழரசு கட்சியின் கட்டுப்பாட்டிலையே உள்ளன. அதனால் , அந்த அந்த பிரதேசங்களில் மக்களை ஒன்றிணைந்து , அந்த பிரதேசங்களில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற கோரி போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளோம்.

பருத்தித்துறை நீதிமன்றுக்கு சொந்தமான காணியில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்ற கோரி, பருத்தித்துறை நகர சபை நகர பிதாவின் அழைப்பில் போராட்டம் நடைபெறவுள்ளது. அவர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்றாலும் அந்த போராட்டத்திற்கு தமிழரசு கட்சி பூரண ஆதரவை வழங்கும்.

வடக்கு கிழக்கில் இராணுவ மயமாக்கலுக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.

கொட்டாஞ்சேனை மாணவி துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டாரா? CCTV காணொளிகள் ஆய்வு

0

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் உயிரை மாய்த்துக் கொண்டதாகக் கூறப்படும், மாணவி துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டாரா என்பது தொடர்பான விசாரணைகள் இடம் பெறுகின்றன.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று இந்த விடயம் அறியப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு, கொழும்பு மேலதிக நீதவான், பசன் அமரசேன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த விடயம் அறியப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சிசிடிவி காணொளிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக, இந்த வழக்கை முன்னெடுத்துச் செல்லும் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக விசாரணை பணியகத்தின் கொழும்பு வடக்கு பிரிவின் பொறுப்பதிகாரி நீதிமன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

இந்தக் காட்சிகள் பரிசோதனைக்காக மொரட்டுவை பல்கலைக் கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அறிக்கைகள் தொடர்ந்தும் நிலுவையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களைப் பரிசீலித்ததன் பின்னர், விசாரணையின் முன்னேற்றம் தொடர்பில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான், பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.

மன்னார் மக்களால் 15வது நாளாகத் தொடரும் போராட்டம்..!

0

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் (17) 15 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு இன்றைய தினம் (17) ஆதரவு வழங்கும் வகையில் பள்ளிமுனை மற்றும் பெரிய கரிசல் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் குறித்த போராட்டத்தில் இணைந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் மன்னாரைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களும் பங்கேற்றனர். குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தலையில் கருப்பு பட்டி அணிந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்றைய போராட்டத்தில் தமிழ் முஸ்லிம் மக்களும் மத தலைவர்களும்,அருட் சகோதரிகளும் ஒன்றிணைந்துள்ளனர்.

இன்றைய தினம் (17) காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற குறித்த போராட்டமானது மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம் பெற்று வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவை முழுமையாக நிறுத்தும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

32 வயது ஆசிரியையை கர்ப்பமாக்கிய யாழ் பல்கலை மாணவன் உயிர்மாய்க்க முயற்சி..!

0

திருமணமாகாத நிலையில் கர்ப்பமாகிய 32 வயது ஆசிரியை ஒருவர் தனது கர்ப்பத்திற்கு காரணமான 23 வயதான யாழ் பல்கலைக் கழகத்தின் கலைப் பீடத்தில் கற்கும் வவுனியா மாணவனை, தன்னைத் திருமணம் செய்யக் கோரி அழுத்தம் கொடுத்த காரணத்தால் குறித்த மாணவன் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளான். குறித்த சம்பவம் கடந்த புதன்கிழமை வவுனியா பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட ஆசிரியை ஒருவர் அங்குள்ள வீடு ஒன்றில் தங்கி கல்வி கற்பித்து வந்துள்ளார்.

அவர் யாழ்ப்பாணம் சென்று வரும் போது யாழ் பல்கலைக் கழக மாணவனுடன் பஸ்சில் நட்பாகியதாகத் தெரிய வருகின்றது. இந்த நட்பு பின்னர் தவறான நட்பாக மாறி ஆசிரியை தற்போது 5 மாத கர்ப்பமாகியுள்ளார்.

இதனையடுத்து ஆசிரியை குறித்த மாணவனை தன்னைத் திருமணம் செய்ய வற்புறுத்தி வந்ததாகத் தெரிய வருகின்றது.

இது தொடர்பாக குறித்த மாணவனின் பெற்றோரிடமும் ஆசிரியை நியாயம் கேட்டு வந்ததுடன் அடுத்த கட்ட நடவடிக்கையாக தன்னைத் திருமணம் செய்யாது விடின் பொலிசாரின் உதவியை நாட போவதாக மாணவனை அச்சுறுத்தியுள்ளார். இதனையடுத்தே குறித்த மாணவன் தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிய வருகின்றது.

தற்போது மாணவன் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறித்த சம்பவமானது வடக்குப் பகுதியில் இடம்பெற்றள்ளது.

மாணவன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சென்ற ஆசிரியை மாணவனுடன் வைத்தியசாலை விடுதியிலும் தனது கணவர் என்று கூறி சர்ச்சைகளை உருவாக்கி வருவதாகவும் இதனால் மாணவனின் உறவுகள் கடும் கோபத்தில் காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

தபால் ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் இரத்து..!

0

இன்று (17) முதல் அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ. எம்.ஆர்.பி. சத்குமார விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் இணைந்து நாளை முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். நல்லூர் ஆலயத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல்; பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு..!

0

யாழ் நல்லூர் ஆலயத்தில் வெடிகுண்டு உள்ளதாக யாழ், மாநகர சபை முதல்வருக்கு வந்த அநாமதேய தொலைபேசி அழைப்பினால் , ஆலய சூழலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த தொலைபேசி அழைப்பு விஷமி ஒருவரின் விஷமத்தனமான செயற்பாடு என யாழ் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

முதல்வருக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்ட நபர் ஒருவர் நல்லூர் ஆலயத்திற்கு வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் முதல்வர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, ஆலய சூழலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடமையில் உள்ள பொலிஸாருக்கு மேலதிகமாக பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் , பொலிஸ் விசேட அதிரடி படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுளள்னர்.

அத்துடன் ஆலய சூழலில் உள்ள வீதி தடைகளுக்கு அருகில் சோதனை கூண்டுகள் அமைத்து , பொதிகளுடன் வருவோர் மற்றும் சந்தேகத்திற்கு இடமான முறையில் வருவோரை பொலிஸார் சோதனை செய்தனர்.

அதேவேளை , முதல்வருக்கு வந்த வெடிகுண்டு எச்சரிக்கை தொலைபேசி அழைப்பு தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நிர்வாக முடக்கத்துக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு..!

0

எதிர்வரும் திங்களன்று (18) வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட உள்ள நிர்வாக முடக்கத்துக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த கட்சியின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி, நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் கையொப்பமிட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

முல்லைத்தீவில் அண்மையில் இடம்பெற்ற படுகொலை, இலங்கை இராணுவ உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டதாக அறியப்படுகிறது.

பொது மக்களைப் பாதுகாக்க வேண்டிய படைகள் தாமே சட்டமும் ஒழுங்கும் இழந்து இப்படிப்பட்ட கொடூரச் செயல்களைச் செய்வது, இந்த நாட்டின் சட்ட அமுலாக்கத்தின் ஆழமான சீர்கேட்டை வெளிப்படுத்துகிறது.

இப்படிப்பட்ட குற்றங்களுக்குப் பொறுப்பேற்கச் செய்வதில் அரசின் இயலாமை, அல்லது விருப்பமின்மை, பொதுமக்களின் நம்பிக்கையைச் சிதைத்து, நிரபராதிகளின் உயிரை ஆபத்துக்குள்ளாக்கியுள்ளது.

இன்னும் ஒரு கவலைக்குரிய விடயம் என்னவெனில் அரசாங்கம் இஸ்ரேலிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா விலக்கு வழங்கும் போக்காகும்.

இவர்கள் பலர் காசாவில் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மீறியதாகப் பரவலாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) உறுப்பினர்களே.

இந்த சூழ்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை 18 ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்துள்ள நிர்வாக முடக்கத்தை முழுமையாக ஆதரிக்க எங்கள் கட்சி தீர்மானித்துள்ளது.

இது நீதி, பொறுப்புகூறல், மற்றும் இராணுவத்தினுள் நிலவும் தண்டனையற்ற சூழ்நிலைக்கு முடிவு கோரும் அமைதியான எதிர்ப்பாகும்.

வடகிழக்கில் உள்ள நமது முஸ்லிம் சகோதரர்களும், சகோதரிகளும், திங்கட்கிழமை 18 ஆம் திகதி குறைந்தபட்சம் காலை நேரத்தில் தங்கள் கடைகள் மற்றும் தொழில்களில் இருந்து விலகியிருப்பதன் மூலம் இந்த ஒற்றுமை போராட்டத்தில் இணையுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

தமிழ் மற்றும் முஸ்லிம் என அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து வன்முறையை நிராகரித்து, அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என குறித்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கதவடைப்புக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் – வலி. மேற்கு தவிசாளர்

0

அனைத்து தரப்பினரும் கதவடைப்புக்கு பூரண ஆதரவு வழங்க வேண்டும் என வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ச.ஜயந்தன் தெரிவித்துள்ளார்.

அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்திலே காலாகாலமாக இராணுவத்தின் அச்சுறுத்தல்கள் காணப்படுகிறது.

இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களுக்கான நீதியான விசாரணைகள் நடைபெறவுமில்லை, அதற்கான ஏற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டதாக தெரியவில்லை.

இது இவ்வாறு இருக்கையில் சென்றவாரம் முல்லைத்தீவு – முத்துஐயன்கட்டிலே ஒரு குடும்பஸ்தரின் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்த குடும்பஸ்தர் ஏதாவது தவறு இழைத்திருந்தால் கூட அவரை காவல் துறையினரிடம் ஒப்படைத்து அவருக்கெதிரான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தண்டிப்பதற்கு இராணுவத்தினருக்கு அதிகாரம் கொடுக்கப்படவில்லை.

அவரது மரணத்திற்கு காரணமான இராணுவத்தினர் கைது செய்யப்பட்டிருந்தாலும் கூட நீதியான விசாரணைகள் இடம்பெறுமா என்ற சந்தேகம் தமிழ் மக்களிடத்தே காணப்படுகிறது. இந்த பிரச்சினை தென்னிலங்கையில் ஏற்பட்டால் அங்கு பாரிய ஒரு ஆர்ப்பாட்டம் நடந்திருக்கும்.

அண்மைக்காலமாக அகழப்படும் செம்மணி மனிதப் புதைகுழியில் 150ற்கு அண்மித்ததான மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அது தொடர்பான சர்வதேச விசாரணைகள் இடம்பெறுமா அல்லது அந்த விடயங்கள் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லப்படுமா என்ற சந்தேகம் எங்களுக்கு காணப்படுகிறது.

400 தொடக்கம் 600 பேரை கொலை செய்து புதைத்ததாக கிருசாந்தி கொலை வழக்கு குற்றவாளியான இராணுவச் சிப்பாய் சோமரத்ன ராஜபக்ச கூறியுள்ளார்.

அந்தவகையில் முத்துஐயன்கட்டு கொலை சம்பவத்தையும் இந்த இராணுவமே செய்துள்ளதாக எமக்கு வலுவான சந்தேகம் எழுந்துள்ளது. இனியும் இவ்வாறான சம்பவங்கள் இந்த நாட்டிலே இடம்பெறக் கூடாது என்பதற்காகவும், இராணுவ அதிகரிப்புக்கு எதிராகவும் எதிர்வரும் 18ஆம் திகதி வடக்கு கிழக்கில் ஹர்த்தால் கடைப்பிடிக்கப்படவுள்ளது.

எனவே வர்த்தக சங்கம், உணவகங்கள், பேருந்து உரிமையாளர் சங்கம், முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் போன்ற அனைத்து தொழிற் சங்கங்களும் இந்த கதவடைப்புக்கு ஆதரவு தரவேண்டும் என தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவை ஆட்சேபிக்கும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவனம்..!

0

2021 ஆம் ஆண்டு கொழும்பு கடற்பரப்பில் பேரழிவை ஏற்படுத்திய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவனம், இலங்கை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ஆட்சேபித்துள்ளது.

அதன்படி, கப்பல் பேரழிவுக்கு 1 பில்லியன் டொலர்களை செலுத்த வேண்டும் என்ற உத்தரவையே இவ்வாறு குறித்த கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தீர்ப்பு நியாயமற்றது எனவும் உலகளாவிய கப்பல் போக்குவரத்திற்கு தீங்கு விளைவிக்கும் எனவும் அந்த நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் கப்பலின் தலைவரையும், நிறுவனத்தின் உள்ளூர் முகவர்களையும் விசாரணைகள் முடிவதற்கு முன்பே நீதிமன்றம் தண்டித்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே சுற்றுச்சூழலுக்கும் இலங்கையின் பொருளாதாரத்துக்கும் உதவும் நியாயமான முடிவுகளை வழங்குமாறு கப்பல் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

2021ஆம் ஆண்டு எக்ஸ்பிரஸ் பேர்ல் என்ற சரக்குக் கப்பல் தீப்பிடித்து கொழும்புக்கு அருகே மூழ்கியது, இதனால் பிளாஸ்டிக் துகள்கள் சிதறி இலங்கையில் மிக மோசமான கடல் மாசுபாடு ஏற்பட்டது.

இதனையடுத்து எக்ஸ்பிரஸ் ஃபீடர்ஸ் நிறுவனம் ஏற்கனவே சுத்தம் செய்வதற்கும் கடற்றொழிலாளர்களுக்கு உதவுவதற்கும் 150 மில்லியன் டொலருக்கும் அதிகமாக செலுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!