Saturday, March 7, 2026
Huis Blog Bladsy 93

பொலிஸாரின் மோசமான செயலால் வவுனியாவில் ஒருவர் கொலை..!

0

வவுனியா கூமாங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவரை பொலிஸார் தடுத்து நிறுத்த முயன்ற போது அவர் உயிரிழந்துள்ளார்.

இதனால் இன்று(11.07.2025) அப்பகுதியில் பதற்ற நிலையொன்று உருவாகியுள்ளது.

வவுனியா, கூமாங்குளம் மதுபான விற்பனை நிலையம் அமைந்துள்ள வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பொலிஸார் வந்தனர்.

இதன் போது அந்த வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த நபர் ஒருவரை அவர்கள் துரத்திச் சென்றதுடன் மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் தடியொன்றை வீசித் தடையை ஏற்படுத்தியுள்ளனர்.

இதனால் நிலைதடுமாறி கீழே வீழ்ந்த மேற்படி நபர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அவதானித்த மக்கள் ஆத்திரமடைந்து பொலிஸாரின் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும், ஒரு வாகனத்தையும் சேதப்படுத்தினர்.

பொலிஸாரின் இந்தச் செயலுக்கு நீதி கிடைக்க வேண்டும் என மக்கள் தெரிவித்ததுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை நீண்ட நேரமாகச் சிறைப்பிடித்து வைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டது.

உயிரிழந்தவரின் சடலத்தைப் பொலிஸார் அங்கிருந்து அகற்றுவதற்கு மறுப்புத் தெரிவித்த மக்கள், “நீதிவான் இங்கு வரவேண்டும். அவர் வந்த பின்னரே சடலத்தை அகற்ற அனுமதிப்போம்” என்று தெரிவித்தனர்.

இதனால் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.

இந்நிலையில் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்துக்கு வருகை தந்து, இந்த மரணத்தைக் கொலை வழக்காகப் பதிவு செய்து அதனுடன் தொடர்புடையை சந்தேக நபர்களை விசாரிப்பதாகத் தெரிவித்ததுடன், சடலத்தை அகற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அங்கு நின்ற மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்கள், “பொலிஸார் மீது எமக்கு நம்பிக்கை இல்லை. நீதிவான் இங்கு வரவேண்டும்’ என்று விடாப்பிடியாக நின்றனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் கலவரம் ஏற்படுவதற்கான நிலைமை ஏற்பட்டது.

இதையடுத்துத் திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்துக்கு வருகை தந்து மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தார்.

அதன் பின்னர் மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சடலம் அந்தப் பகுதியில் இருந்து அகற்றப்பட்டு பொலிஸாரின் வாகனத்தில் வைத்திய சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த இராமசாமி அந்தோனிப்பிள்ளை (வயது 58) என்ற குடும்பஸ்தர் என்று தெரிய வந்துள்ளது.

அவரது சடலத்துக்கு அருகில் மக்கள் சிறைப்பிடித்து வைத்திருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் பெயர் பொறிக்கப்பட்ட இலட்சினை ஒன்றும் காணப்படுகின்றது.

இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் விசேட அதிரடிப் படையினர், கலகத் தடுப்புப் பொலிஸாரும் களமிறக்கப்பட்டிருந்தனர்.

செம்மணியில் புத்தகப் பை, பொம்மையோடு மீட்கப்பட்ட எலும்புக் கூட்டின் அறிக்கையை சமர்ப்பிக்குக..!

0

யாழ் – செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து நீல நிறப் பாடசாலைப் புத்தகப் பை (யுனிசெவ் நிறுவனத்தின் புத்தகப் பை), சிறுவர்கள் விளையாடும் பொம்மை என்பவற்றோடு அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித என்புத் தொகுதி தொடர்பான மனித என்பு ஆய்வு அறிக்கையை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையாவுக்கு யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவால் கட்டளை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வுப் பணிகள் யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் துறைசார் நிபுணரும் பேராசிரியருமான ராஜ் சோமதேவாவின் தலைமையில் இடம் பெற்றிருந்தன.

சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும் அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகி இருந்தனர். நேற்றைய தினம் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன. எதிர்வரும் 21ஆம் திகதி அகழ்வுப் பணிகள் மீள ஆரம்பமாகவுள்ளன.

இந்நிலையில் செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் போது எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நீல நிறப் பாடசாலைப் புத்தகப் பையோடு (யுனிசெவ் நிறுவனத்தின் புத்தகப் பையோடு) சிறுவனுடையது எனச் சந்தேகிக்கப்படும் என்புத் தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டிருந்தது.

அந்த என்புத் தொகுதிக்கு அருகில் சிறுவர்கள் விளையாடும் பொம்மை, ஆடை, சிறுமிகள் பயன்படுத்தும் பாட்டா நிறுவனத் தயாரிப்பு காலணி, சிறு கண்ணாடி வளையல்கள் என்பனவும் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட அந்த மனித என்புத் தொகுதி தொடர்பான மனித என்பு ஆய்வு அறிக்கையை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையாவுக்கு நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜாவால் கட்டளை ஒன்று நேற்று வழங்கப்பட்டுள்ளது.

செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ?

0

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கை, பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் பாரப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யாழ்ப்பாணப் பொலிஸாராலேயே தற்போது இந்த வழக்கு கையாளப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் கீழ் செம்மணிப் புதைகுழி வழக்கை ஒப்படைக்க பொலிஸ் தரப்பால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று நம்பகரமாக அறிய முடிகின்றது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர தலைமையிலான குழுவினர், ஈஸ்டர் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான வழக்குகளைத் தற்போது விசாரித்து வருகின்றனர்.

இவ்வாறிருக்கையில், செம்மணிப் புதைகுழி வழக்கு அவர்களின் கீழ் ஒப்படைக்கப் படவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் இந்த விடயத்தில் மிகுந்த எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வடக்குத் தமிழரிடமிருந்து முழுமையாக விலகிச் செல்லும் வடக்கின் கல்வி மரபு..!

0

வடக்கு மாகாணத்தின் கல்வி அமைப்பு, வரலாற்று ரீதியாக, தமிழ் மக்களின் மிக முக்கியமான சொத்தாகக் கருதப்பட்டு வந்துள்ளது.

இது பல சவால்களையும், மோதல்களையும் தாண்டி, கல்வியறிவு மற்றும் உயர் கல்வி வாய்ப்புகளில் முன்னணியில் இருந்த ஒரு பகுதியாகும்.

ஆனால், “கல்வி படிப்படியாக அழிக்கப்படுகிறதா?” என்ற கேள்வி பல கோணங்களில் ஆராயப்பட வேண்டிய ஒரு சிக்கலான விடயமாக இன்று மாறியுள்ளது.

இதற்கு பிரதான காரணம், இன்று வெளியாகிய க.பொ.த சாதாரணத்தர பரீட்சையில் வடக்கு மாகாணத்தில் உயர்தரத்திற்கு தகுதி பெற்ற மாணவர்களின் சராசரியில் ஏற்பட்ட பின்னடைவு நிலையே.

வடக்கு மாகாணத்தில் 2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த சாதாரணத்தர பரீட்சையில் 69.86% மாணவர்கள் மாத்திரமே உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.

2024 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மொத்தம் 237,026 மாணவர்கள் க.பொ.த உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

இந்த எண்ணிக்கை பரீட்சைக்குத் தோற்றிய மொத்த பரீட்சார்த்திகளின் எண்ணிக்கையில் 73.45% ஆகும்.

கூடுதலாக, மொத்தம் 13,392 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ‘ஏ’ சித்திகளைப் பெற்று சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.

இந்த சாதனை மொத்த பரீட்சார்த்திகளின் எண்ணிக்கையில் 4.15% ஆகும். இதற்கிடையில், 2.34% மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்துள்ளனர்.

இந்த நிலையை நாம் வடக்கில் கருத்தில் கொண்டால் பரீட்சைக்கு தோற்றும் 5 மாணவர்களில் 1 அல்லது 2 மாணவர்கள் சித்திப்பெறாத நிலை உருவாகிறது. யுத்தம் முடிவடைந்த 2010ல் கூட வடக்கு நான்காமிடத்தில் இருந்தது.

ஒரு மாணவன் சிறந்த பெறுபேற்றையோ அல்லது மோசமான பெறுபேற்றையோ பெற்றால் அதற்கு பொறுப்பானவர்கள் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களே.

அவ்வாறென்றால் மாகாண ரீதியாக பெறுபேறு வீழ்ச்சியடையும் போது அதன் பொறுப்பு யாருடையது? அதன் முழுப் பொறுப்பும் வலய, மகாண பணி்பாளர்கள் மட்டுமன்றி மாகாண கல்வி அமைச்சர் ஆகியோரையே சாரும் எனினும் மாகாண சபை இயங்காத நிலையில் அந்தந்த மாகாணங்களின் செயலாளரே முழுமைக்கும் பொறுப்பாளியாவார்.

இந்த நிலையில் இலங்கையில் உள்ள 9 மாகாணங்களுடன் ஒப்பிடும் போது வட மாகாணம் தொடர்ந்து இறுதி நிலையில் இருப்பது ஏற்க முடியாத விடயமே.

வடக்கிலுள்ள மத்திய கல்வி அமைச்சின் கீழ் உள்ள தேசிய பாடசாலைகளை விலக்கி, மாகாணப் பாடசாலைகளை கணக்கிட்டால் வடக்கின் கல்வியின் வீழ்ச்சியின் உண்மை முகம் தெரியும்.

இந்த நிலையில் மாகாண சபை முறை என்ற ஒன்றினை உருவாக்கி அதிகாரிகளுக்கு இருக்கக் கதிரையும் 25ம் திகதி குளிரூட்டிக்குள் இருந்தபடி சம்பளம், வாகன பெர்மிட், வெளிநாட்டு சுற்றுலா போன்ற சலுகைகளைப் பெறுவதற்கு மட்டுமா மாகாண சபை முறை? இது எமக்கு தேவையற்ற சுமையாகவே காணப்படுகின்றது.

குறிப்பாக வடக்கில் பொருத்தமற்ற வெளிப்படையற்ற பழிவாங்கல் இடமாற்றங்கள், பழிவாங்கல்கள், அதீத அழுத்தம், அதிகார துஸ்பிரயோகம் என அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது மாலைக்கும், பொன்னாடைக்கும் ஆசைப்படும் அதிகாரிகளால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள சூழலில் எவ்வாறு வினைத்திறனையும், விளைதிறனையும் எதிர்பார்க்க முடியும்?

குயிலைப் பிடித்து கூண்டில் அடை்த்து கூவச் சொல்கிறது கல்விப் புலம் ” அது எவ்வாறு கூவும்?

வடக்கின் கல்வியின் அதிபாதாள நிலைக்கு காரணமான அதிகாரிகள் தாமே தமது தவறினை ஏற்று பதவி விலகுவார்களா அல்லது ஆளுநர் பதவி நீக்கம் செய்வாரா? என்பதே மக்களின் முன்னுள்ள வினா.

பொலிஸாரின் அசமந்தத்தால் வவுனியாவில் ஒருவர் கொலை; நீதி கிடைக்குமா?

0

வவுனியா கூமாங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கிப் பயணித்த இளைஞனை பொலிஸார் தடுத்து நிறுத்த முயன்ற போது அவர் உயிரிழந்துள்ளார். இதனால் இன்று(11.07.2025) அப்பகுதியில் பதற்ற சூழ்நிலையொன்று உருவாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனை போக்குவரத்து பொலிஸார் தாங்கள் வைத்திருந்த தடியை சில்லுக்குள் செருகி முறையற்ற வகையில் நிறுத்த முயன்றுள்ளனர். இதன் போது, இளைஞன் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனால், அப்பகுதியில் அதிகளவான மக்கள் குவிந்துள்ளதோடு மக்கள் கொதி நிலையில் காணப்படும் நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகின..!

0

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளது.

பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சைக்கு மொத்தம் 4 இலட்சத்து 78 ஆயிரத்து 182 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். அவர்களில் 3 இலட்சத்து 98ஆயிரத்து 182 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என்பது குறிப்பிடத்தக்கது.

click here

www.doenets.lk

யாழில் மன அழுத்தம் காரணமாக யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு..!

0

யாழ். புத்தூர் – வாதரவத்தை, வீரவாணி பகுதியில் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

கிளிநொச்சி – முழங்காவில் பகுதியைச் சேர்ந்த லோகவேந்தன் றுகிந்தா (வயது 21) என்ற யுவதியே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், முழங்காவில் பகுதியைச் சேர்ந்த குறித்த யுவதி புத்தூர் பகுதியில் உள்ள உறவினரின் வீட்டில் தங்கியிருந்து யாழ்ப்பாணத்தில் தாதியர் பயிற்சிநெறியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் மன அழுத்தம் காரணமாக தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தவிசாளர் தெரிவின் போது தான் தடுத்து வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு..!

0

மன்னார் நகரசபை தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவின் போது நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையிலான தன் கட்சியினரே தன்னை அமர்வுக்கு செல்ல முடியாத வகையில் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் தடுத்து வைத்ததாக நகரசபை உறுப்பினர் ஜோன் பொலின்டன் நேற்றைய தினம் (9) பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.

கடந்த மாதம் 24 ஆம் திகதி மன்னார் நகரசபையின் தலைவர்,உப தலைவர் தெரிவின் போது மஸ்தான் தலைமையில் தொழிலாளர் கட்சி சார்பாக போனஸ் ஆசனம் மூலம் தெரிவு செய்யப்பட்ட நகரசபை உறுப்பினர் ஜோன் பொலின்டன் சபை அமர்வில் கலந்து கொள்ளவில்லை.

இவ்வாறான பின்னணியில் தன்னை சபை அமர்வுக்கு வரவிடாமல் தனது கட்சியின் தலைவரும் மன்னார் மாவட்ட இணைப்பாளரும் தடுத்து வைத்ததாகவும் அதன் காரணமாக தான் சபை அமர்வில் கலந்து கொள்ள முடியாமல் போனதாகவும் தலைவர் தெரிவின் போது தனது ஜனநாயக உரிமையை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டதாகவும் கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.

இவ்வாறான நிலையில் குறித்த விடயத்தை கூட்டறிக்கையில் விடுமுறை என தெரிவித்த நிலையில் ஏனைய உறுப்பினர்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டதுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் குறித்த உறுப்பினரால் நகர சபைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் சபையில் வாசிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து குறித்த உறுப்பினருக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதி தொடர்பில் தமது எதிர்ப்பையும் கண்டனங்களையும் உறுப்பினர்கள் வெளிப்படுத்தியிருந்தனர்.

சாராவின் மரணத்தில் சந்தேகம்; மூன்றாவது டி.என்.ஏ சோதனை சர்ச்சையில்..!

0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு சில நாட்களுக்குப் பிறகு சாய்ந்தமருது பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட சாரா ஜாஸ்மினின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நாடாளுமன்றத்தில் நேற்று (09) உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாரா ஜாஸ்மின் எனும், புலஸ்தினி மகேந்திரனும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு பொருப்பானவர் என்பதை உறுதிப்படுத்தப் பயன்படுத்தப்படும் மூன்றாவது டி.என்.ஏ சோதனைக்கான மாதிரிகளை எடுப்பதற்கான நடைமுறை குறித்து கடுமையான சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில், அவர் இறந்தாரா இல்லையா என்பது குறித்து கடுமையான சந்தேகங்கள் எழுந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“26.04.2019 அன்று சாய்ந்தமருது பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் சாரா ஜாஸ்மின் இறந்தாரா இல்லையா என்பது குறித்து இரண்டு சந்தர்ப்பங்களில் நடத்தப்பட்ட டிஎன்ஏ அறிக்கைகள் கோரப்பட்டது.

ஆனால் அந்த அறிக்கைகள் அவரது நெருங்கிய உறவினர்களின் அறிக்கைகளுடன் பொருந்தவில்லை. மூன்றாவது மாதிரியின் டி.என்.ஏ அவரது தாயாரின் டி.என்.ஏவுடன் பொருந்துகிறது.

டி.என்.ஏ மாதிரியை எடுக்கும் செயல்முறை இப்போது கடுமையான சந்தேகத்தின் கீழ் உள்ளது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பாக மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது பிள்ளையான் இந்தத் தகவலை அறிந்திருந்தார் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் அந்த நேரத்தில் அவர் புலனாய்வு அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார் என்பதும் தெரிய வந்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்திய சஹாரா ஹாஷிமை வழிநடத்தியவர்கள் யாராவது இருந்தார்களா என்பது குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம். இது தொடர்பான தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க எதிர்பார்க்கிறோம்.

சஹாரா ஹாஷிமின் நான்கு நெருங்கிய கூட்டாளிகள் இப்போது நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அந்த விசாரணைகள் அனைத்தும் இப்போது தொடங்கப்பட்டுள்ளன. 29.04.2019 அன்று நடந்த ஒரு கொலையில், சஹாரானின் குழுவின் சாரா ஜாஸ்மினின் DNA அறிக்கைகள் எதனுடனும் பொருந்தவில்லை அதற்காக சமர்ப்பிக்கப்பட்ட DNA மாதிரிகள் கடுமையான சந்தேகங்களை எழுப்பியுள்ளன.

சாரா ஜாஸ்மின் சாய்ந்தமர்து தாக்குதலில் இறந்தாரா இல்லையா என்பது குறித்து தற்போது ஒரு கேள்வி எழுந்துள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு கல்விப் பணிப்பாளராக கிழக்கைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் நியமனம்..!

0

அரச சேவை ஆணைக்குழுவினால் வட மாகாணக் கல்விப் பணிப்பாளராக சிரேஷ்ட கல்வி நிர்வாக சேவை அதிகாரி யோகேந்திரா ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கிழக்கு மாகாணத்தின் திருக்கோயிலை பிறப்பிடமாகக் கொண்டவர்.

1975.10.09 ஆம் திகதி பிறந்தவர் என்பதால் 2035.10.08 ஆம் திகதி வரை சேவையில் இருப்பார். அத்துடன் எதிர்வரும் 21.08.2025 ஆம் திகதி திங்கட்கிழமை வடமாகாண கல்விப் பணிப்பாளராக கடமையை பொறுப்பேற்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு மாகாணத்தில் இருந்து துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் அன்னமலர், தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் கமலராஜன் ஆகியோர் நேர்முகப் பரீட்சைக்குச் சென்ற போதிலும் சிரேஷ்ட நிலையில் இருந்ததால் ஜெயச்சந்திரன் தெரிவு செய்யப்பட்டார்.

பதவியேற்கவுள்ள மாகாணப் பணிப்பாளர் அவர்கள் ஊழல், மோசடிகளுக்கு துணைபோய் வடக்கின் கல்வியை அழிக்கும் அதிகாரிகளின் கபடத்தனமான மாலைக்கும், உபசரிப்புக்கும் மயங்கி அவர்களின் கதிரைகளைக் காப்பாற்றத் துணை போகாது அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக செயற்பட வேண்டும் என்பதே கல்விப் புலம் சார்ந்த அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.

error: Content is protected !!