பிறப்புச் சான்றிதழ்களால் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் அனைவருக்கும் சாதகமாகப் பரிசீலிக்கப்படும் என நம்புவதாக ஜனாதிபதி சட்டத்தரணி M. நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் நேற்று (30) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
“கடந்த 28ஆம் திகதி உயர் நீதிமன்ற அமர்வு, நீதியரசர் ச. துரைராஜா(PC), நீதியரசர் மஹிந்த சமயவர்தன, மற்றும் நீதியரசர் சம்பத் பி. அபயகோன் ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இடம்பெற்றது.
அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட உள்ளூராட்சி தேர்தலில் வேட்புமனுக்கள் சில நிராகரிக்கப்பட்டதை ஆட்சேபித்துத் தாக்கல் செய்யப்பட்ட 21 வழக்குகள் இதன்போது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இந்தநிலையில் உயர் நீதிமன்றம், மார்ச் 30 சட்டமா அதிபர், தேர்தல் ஆணைக்குழு மற்றும் மனுதாரர்களின் வழக்கறிஞர்களுடன் கலந்துரையாட வேண்டும் என உத்தரவிட்டதுடன் இதன் மூலம் இந்த வழக்குகளுக்கு தீர்வைக் காண முயற்சி செய்யலாம் எனக் கருதப்பட்டது.
அதன்படி, சட்டமா அதிபர் திணைக்களத்தில், மேலதிக மன்றாடியார் நாயகம் கனிஷ்கா டி சில்வா பாலபடபெந்தியை பிரதிநிதித்துவப் படுத்தியும் 20 வழக்குகளில் மனுதாரர்களின் சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணி M. நிசாம் காரியப்பர், ஒரு மனுதாரரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெஃப்ரி அழகரத்தினம், வழக்கறிஞர்கள் கே. குருபரன் மற்றும் இல்ஹாம் காரியப்பர் ஆகியோர் ஏனைய மனுதாரர்களின் சார்பில் பிரசன்னமாகியிருந்தார்கள்.
இதன் போது முக்கியமாகக் கலந்துரையாடப்பட்ட விடயங்களாவன,
1. பிறப்புச் சான்றிதழ்களால் ஏற்பட்ட நிராகரிப்புகள். (சான்றுபடுத்தப்பட்ட நகல்களுக்கு பதிலாக உண்மையான புகைப்படநகல்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.)
2. சத்தியப்பிரமாணங்களில் ஏற்பட்ட குறைபாடுகளாலான நிராகரிப்புகள். (சில பிழைகள் அல்லது தேவையான தகவல்களின் குறைவுகள்)
3. மற்ற ஏதேனும் நிராகரிப்பு காரணங்கள்.
குறித்த கலந்துரையாடலின் முடிவில், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், “பிரஸ்தாப கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகவும், பிறப்புச் சான்றிதழின் புகைப்படநகல்களுக்கான நிராகரிப்பு, அனைவருக்கும் சாதகமாகப் பரிசீலிக்கப்படும் என தாம் நம்பிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரத்தில் இறுதி நிலைப்பாடு ஏப்ரல் 1ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்று அரச தரப்பு சட்டத்தரணி உறுதியளித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.