எரிபொருள் விநியோகம் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை மீறிச் செயற்படும் எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களம் இன்று (18) பிற்பகல் விடுத்துள்ள அறிக்கையில், இது தொடர்பான முறைகேடுகள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, பின்வரும் இலக்கங்களுக்குத் தொடர்பு கொண்டு உரிய தகவல்களை வழங்குமாறு பொதுமக்கள் தயவுடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்
வடக்கு மாகாணப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு பைபிள் விநியோகிக்கப்படவுள்ளது தொடர்பில் அண்மைய நாட்களாக எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் கரிசனைகளைக் கருத்திற் கொண்டு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளார்.
இது தொடர்பில் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயசந்திரன் அவர்களுக்கு ஆளுநர் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
வெளிநாட்டுத் தொண்டு நிறுவனமொன்றால் பாடசாலை மாணவர்களுக்கு பைபிள் வழங்குவது தொடர்பில் மாகாணக் கல்வித் திணைக்களத்தால் ஆரம்பத்தில் வழங்கப்பட்ட அனுமதி கடிதம் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் சுட்டிக் காட்டப்பட்டது.
குறித்த அமைப்பு கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவ மாணவர்களுக்கு மாத்திரம் வழங்குவதற்கே அனுமதி கோரியிருந்த போதிலும், கல்வித் திணைக்களத்தின் ஆரம்பக் கடிதத்தின் வாசகங்கள் அனைத்து மாணவர்களுக்கும் விநியோகிக்கப்படவுள்ளதாக புரிந்து கொள்ளப்பட்டு சர்ச்சைகள் எழுந்தன.
இதனையடுத்து, குறித்த விநியோகமானது ரோமன் கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவ மாணவர்களுக்கு மாத்திரமே என மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளரால் திருத்தப்பட்ட கடிதம் ஒன்றின் மூலம் பின்னர் தெளிவு படுத்தப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், இவ்விடயம் தொடர்பிலான சர்ச்சைகள் தொடரும் நிலையில், பாடசாலைக் கட்டமைப்புக்குள் மத நல்லிணக்கத்தைப் பேணுவதும், தேவையற்ற குழப்பங்களைத் தவிர்ப்பதும் மிகவும் அவசியமானது என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், இதற்கான உரிய ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்துமாறு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கமைவாக, பாடசாலைகளுக்குள் வெளிநபர்களோ அல்லது அமைப்புகளோ நேரடியாகச் சென்று மத நூல்களை விநியோகிக்கும் நடைமுறை முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும் என ஆளுநர் பணித்துள்ளார்.
மேற்படி பைபிள்களை விநியோகிக்க விரும்பும் குறித்த நிறுவனம், அவற்றை வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்திடம் உத்தியோக பூர்வமாக ஒப்படைக்க வேண்டும்.
அவ்வாறு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் நூல்களை, கிறிஸ்தவ பாடத்துக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ், அந்த நூல் அவசியமான மற்றும் அப் பாடத்தைக் கற்கும் மாணவர்களுக்கு மாத்திரம் வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆளுநர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்த முறையான நிர்வாக நடைமுறையின் ஊடாக, பாடசாலைகளில் சகல மத மாணவர்களிடையேயும் நல்லிணக்கம் பாதுகாக்கப்படுவதுடன், தேவையற்ற முரண்பாடுகள் தவிர்க்கப்படும் என நம்புவதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான கா.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
இதன்படி, பெறுபேறுகளை வெளியிடுவதற்கான தேவையான செயல்முறைகள் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கா.பொ.த சாதாரண பரீட்சை தாள்கள் தொடர்பான மதிப்பீட்டுப் பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும் சாதாரண பரீட்சைக்கான செய்முறை பரீட்சைகள் ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதன்படி, செய்முறைத் பரீட்சைகள் முடிந்தவுடன் சாதாரண பரீட்சை பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
தேவையற்ற முறையில் எரிபொருளைச் சேமித்து வைப்பதையும், தற்காலிகத் தட்டுப்பாடுகள் உருவாவதை தடுக்கவும் கியூ ஆர் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.
வவுனியாவில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் திங்கட்கிழமை (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் பாரிய நெருக்கடியைச் சந்தித்துள்ளது.
இதன் தாக்கத்தினால் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல நாடுகளில் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிகிறது. அபிவிருத்தி அடைந்த நாடுகள் கூட இந்த நெருக்கடிக்கு முகம் கொடுக்க முடியாமல் தவிர்த்துக் கொண்டுள்ளார்கள்.
இலங்கையில் நிலைமையைக் கட்டுப்படுத்த அரசு புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. எரிபொருள் நிலையங்களில் நிலவும் நீண்ட வரிசைகளைத் தவிர்க்கும் பொருட்டு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கோட்டா +கியூ ஆர்) முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நடைமுறையின் மூலம் எரிபொருள் விநியோகம் தற்போது சீரான முறையில் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேவையற்ற முறையில் எரிபொருளைச் சேமித்து வைப்பதையும், தற்காலிகத் தட்டுப்பாடுகள் உருவாவதை தடுக்கவும் இந்த முறை பெரிதும் உதவுகிறது.
கியூ ஆர் முறைமையில் பதிவு செய்யும் போது பொதுமக்கள் சில நடைமுறைச் சிக்கல்களை எதிர்நோக்குவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
புதிதாகப் பதிவு செய்பவர்களுக்கு இது இலகுவாக இருந்தாலும், வாகனங்களின் இரண்டாம் அல்லது மூன்றாம் உரிமையாளர்கள் பழைய பதிவுகளை நீக்கிவிட்டுப் புதிதாகப் பதிவு செய்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இந்தத் தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரி செய்ய டிஜிட்டல் அமைச்சகம் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது. அடுத்த ஓரிரு நாட்களில் இந்தச் சிக்கல்கள் முழுமையாகத் தீர்க்கப்பட்டு, அனைவரும் தடையின்றிப் பதிவு செய்ய வழிவகை செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
சாதாரணமாக இலங்கைக்கு ஒரு நாளைக்கு 6,000 மெற்றிக் தொன் எரிபொருள் தேவைப்படுகிறது. இருப்பினும், கடந்த சில வாரங்களில் நிலவிய அச்சம் காரணமாக மக்கள் அதிகளவில் எரிபொருளைக் கொள்வனவு செய்ததால், தினசரி நுகர்வு 10,000 மெட்ரிக் தொன் ஆக உயர்ந்துள்ளது.
தற்போதுள்ள கையிருப்பை வைத்து எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை விநியோகத்தைத் தொடர முடியும் என அரசு கணித்துள்ளது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளிடமிருந்து எரிபொருளைக் கொள்வனவு செய்யத் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதி செயலாளருடன் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு கிபூஆர் நடைமுறை இன்றி எரிபொருள் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மீனவர்களுக்கும் தடையின்றி எரிபொருள் கிடைக்க விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த உலகளாவிய நெருக்கடியை எதிர்க்கட்சிகள் அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள். எனினும், இது ஒரு சர்வதேசப் பிரச்சினை என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளார்கள்.
ஆனால் போலிப் பிரச்சாரம் மூலம் எதிர்கட்சிகள் அரசியல் இலாபம் தேட முயல்கிறார்கள். மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றார்.
விசேட அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமைகளில் மேலதிக பயிற்சி வகுப்புகளுக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதனை மீறிச் செயற்படும் நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்
வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியகோமரசங்குளம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வு இன்று (16.03.2026) வெகுசிறப்பாக இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், சிறப்பு விருந்தினர்களாக வவுனியா தெற்கு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.போல் அமல்ராஜ், வவுனியா தெற்கு வலய உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு.வி.விமலன் உள்ளிட்ட அயற்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வில் அணிநடைவகுப்பு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், வெற்றியீட்டியோருக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
வவுனியா, ஒமந்தை பகுதியைச் சேர்ந்த 15 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்த தாயின் சகோதரரான குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி அ.ஆனந்தராஜா தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு வவுனியா, ஓமந்தை, பகுதியைச் சேர்ந்த 15 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக அதே இடத்தைச் சேர்ந்த சிறுமியின் தாயின் சசோகதரான 47 வயது சந்தேக நபரை பொலிசார் கைது செய்து பி அறிக்கை மூலம் வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தி வழக்கு தொடரப்பட்டது.
தொடர்ந்து சந்தேக நபருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கு அரச சட்டவாதி ஸ்ரீ.சிவஸ்கந்தஸ்ரீ அவர்களால் நெறிப்படுத்தப்பட்ட நிலையில், குறித்த வழக்கின் சந்தேக நபரான வவுனியா ஓமந்தை பகுதியில் வசித்து வந்த 47வயது நபர் இரு குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டார்.
குறித்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்புக்காக திகதிடப்பட்டிருந்த நிலையில் எதிரியின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு குறித்த தீர்ப்பினை வவுனியா மேல் நீதிமன்றம் வழங்கியது.
பண்டிகை காலத்தில் எரிபொருள் நெருக்கடி ஏற்படலாம் என்பதைக் கருத்திற் கொண்டே QR முறைமை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார் .
வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியனவற்றின் கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் காணிகளை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள சில நிர்வாகச் சிக்கல்கள் வெகுவிரைவில் தீர்க்கப்படும் எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ். மாவட்டத்தின் தீவுப் பகுதிகளிலிருந்து மக்கள் பெருமளவில் வெளியேறியுள்ளமையால் அப்பிரதேசங்கள் சோபையிழந்து காணப்படுகின்றன என்றும் தாம் தற்போது உட்கட்டமைப்பு அபிவிருத்திகளைச் செய்வதால் அப்பகுதி மக்கள் மீண்டும் தமது சொந்தப் பிரதேசங்களில் வந்து குடியமரலாம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார் .
மேலும், உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் காரணமாக சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர் எரிபொருள் நெருக்கடி ஏற்படலாம் என்பதைக் கருத்திற்கொண்டே QR முறைமை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் போர்ப் பதற்றம் இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் தொடருமாக இருந்தால், அது உள்நாட்டில் முன்னெடுக்கும் அபிவிருத்திப் பணிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சம்மாந்துறை பிரதேச சபை, வலயக் கல்வி அலுவலகம், நம்பிக்கையாளர் சபை, சமூகசேவைகள் அமைப்புக்களுடன் மேற்கொண்ட தீர்மானத்திற்கமைய பாடசாலை மாணவர்களுக்கு நவீன முறையில் சிகை அலங்காரம் செய்வதைத் தடை செய்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
20 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு நவீன முறையில் சிகை அலங்காரம் செய்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு சம்மாந்துறை பிரதேச சபை சிகை அலங்கரிப்பாளர்ளை அறிவுறுத்தி உள்ளது.
இதை மீறும் சிகை அலங்கரிப்பாளர்களுக்கான கடை உரிமப்பத்திரம் இரத்து செய்யப்பட்டு, அவ்வுரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சம்மாந்துறை பிரதேச சபை தகவல் மையம் அறிவித்துள்ளது.
இத் தீர்மானத்தினை முன்னுதாரணமாக ஏனைய சபைகளும் முன்னெடுக்க வேண்டும்.
தற்போதைய எரிபொருள் விநியோகப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு, அடுத்த புதன்கிழமை (17) முதல் வாரந்தோறும் புதன்கிழமைகளில் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி இதனைத் தெரிவித்தார்.
மேலும், வாரத்தின் ஏனைய 4 வேலை நாட்களிலும், எத்தனை பணியாளர்களை பணிக்கு அழைக்க வேண்டும் என்பது குறித்த முடிவை எடுப்பதற்கான அதிகாரம் அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், இந்த விடுமுறை சுகாதாரத் துறை, துறைமுகங்கள், நீர்வழங்கல் மற்றும் சுங்கத் திணைக்களம் உள்ளிட்ட துறைகளுக்குப் பொருந்தாது என அவர் தெளிவுபடுத்தினார்.
அரச ஊழியர்களுக்கு மேலதிகமாக, அனைத்து அரச பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கும் புதன்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
அத்துடன் அனைத்து அரச விழாக்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் விடுமுறை தொடர்பில் தனியார் நிறுவனங்களும் இதே நடைமுறைகளைப் பின்பற்றுமாறு கோரப்படுவதாக இதன்போது அவர் மேலும் தெரிவித்தார்.