Friday, July 24, 2026
Huis Blog Bladsy 156

உயர் தர மற்றும் சாதாரண தர பாடத்திட்ட மாற்றங்கள் குறித்து வெளியான தகவல்..!

0

புதிய கல்வி சீர்திருத்த திட்டத்தின் கீழ் பரீட்சை முறை மற்றும் சாதாரண தர மற்றும் உயர் தர பாடத் திட்டங்கள் மாற்றப்படாது என்று தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் மஞ்சுள விதான பத்திரன ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

சீர்திருத்தங்கள் கல்வி முறையில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வராது என்று கூறிய அவர் பரீட்சை முறை மற்றும் பாடங்களைப் புதுப்பிக்க கணிசமான அளவு நேரம் எடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, புதிய உலகிற்கு ஏற்றவாறு மாணவர்களுக்கு ஒரு பாடத்திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளதாகவும், அந்த சீர்திருத்தங்கள் ஒரே நேரத்தில் மாணவர்களுக்கு அறிமுகப் படுத்தப்பட்டால், ஒரு பெரிய நெருக்கடி உருவாகும் எனவும் பணிப்பாளர் நாயகம் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதேவேளை, பரீட்சைகள் மற்றும் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டால், மாணவர்கள் தயாராவதற்கு குறைந்தது இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதன்படி, பாடத்திட்டம் படிப்படியாக புதுப்பிக்கப்பட்டு தரம் 1 முதல் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்றும், தற்போது 10, 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து கல்வி அமைச்சகத்துடன் கலந்துரையாடல்கள் நடந்து வருவதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், எட்டு வருடங்களுக்கு ஒருமுறை பாடத் திட்டத்தைப் புதுப்பிக்கும் முறை வழக்கம் போல் தொடரும் என்றும் பணிப்பாளர் நாயகம் விதான பத்திரண மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சிறீதரனை கைது செய்யுமாறு வலியுறுத்து; பூதாகரமாகும் தையிட்டி விவகாரம்..!

0

யாழ் – தையிட்டியில் உள்ள திஸ்ஸ ராஜ மகா விகாரையை இடிப்பதாக மிரட்டியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை கைது செய்ய வேண்டும் என ஓய்வுபெற்ற ஜெனரல் ஜகத் டயஸ் கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கருத்துகள், அரசியலமைப்பை மீறுவதாகவும், அரசாங்கம் இதுபோன்ற சூழ்நிலைகளைப் புறக்கணித்தால், அது வன்முறையை ஊக்குவிப்பதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அத்தகைய சூழ்நிலையில் உடனடியாகவும் தீர்க்கமாகவும் செயல்படத் தவறினால், அரசாங்கம் தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில், அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஜனாதிபதி அநுர கூறியதை போன்று சட்டம் அனைவருக்கும் சமமானது என்றால் தையிட்டி விகாரை உடைக்கப்பட வேண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்திருந்தார்.

அத்தோடு, விகாரையை உடைக்க வேண்டும் என தான் கூறியது இனவாத கருத்து அல்ல என்றும் சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்ற அடிப்படையில் இதுவே தீர்வு எனவும் அவர் சுட்டிக் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் விபத்துக்குள்ளான NPP எம்.பி; வைத்திய சாலையில் அனுமதி..!

0

நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார். சாவகச்சேரி – தனக்கிளப்பு பகுதியில் இன்றைய தினம் (15) இந்த விபத்து சம்பவித்துள்ளது.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வயலுக்குள் பாய்ந்து விபத்து சம்பவித்துள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர், அவரது உதவியாளர் மற்றும் வாகனத்தின் சாரதி காயமடைந்து யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர், யாழ் நோக்கி தனது வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த வேளையே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விபத்து தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் ஆக்கிரமிக்கப்படும் நிலங்கள்; கமநல திணைக்களம் விடுத்துள்ள கோரிக்கை..!

0

வவுனியாவில் ஏ9 வீதியை மையமாக கொண்டு பல விவசாய நிலங்கள் மண் போட்டு நிரப்பட்டு ஆக்கிரமிக்கபடுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறிப்பாக வவுனியா, நொச்சிமோட்டை, தாண்டிக்குளம், யாழ் வீதி, பட்டாணிச்சூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய காணிகளில் மண் போட்டு அவற்றை நிரவி புதிதாக வர்த்தக நிலையங்கள், கட்டடங்கள் என்பவற்றை அமைக்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இது தொடர்பில் ஊடகங்களில் பல தடவை வெளி வந்துள்ளதுடன், விவசாயிகளும் கமநல அபிவிருத்தி திணைக்களத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கபடவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் க.விமலரூபன் அவர்களிடம் கேட்ட போது,

எமக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக யாழ் வீதியில் விவசாய காணியில் கிரவல் போட்டு நிரப்பும் நடவடிக்கை இடம் பெற்றுள்ளது. இதனை நிறுத்தி உடனடியாக கிரவலை அகற்றுமாறு அறிவுறுத்தியுள்ளோம்.

தாண்டிக்குளம், பட்டாணிச்சூர் ஆகிய பகுதிகளிலும் குறித்த செயற்பாட்டை இடைநிறுத்துமாறு எமது திணைக்களத்தால் நோட்டீஸ் முதல் கட்டமாக ஒட்டப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடரும்.

ஏனைய இடங்களிலும் இவ்வாறு நடந்தால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

வட மாகாணத்தில் அதிகரிக்கும் நிதி மோசடி; பொலிசார் விடுத்துள்ள எச்சரிக்கை..!

0

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி இளையோரை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் வடக்கில் அதிகரித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமான முறைகளில் ஆட் கடத்தல்களில் ஈடுபடும் முகவர்கள் இளையோரை இலக்கு வைத்து , அவர்களை சமூக ஊடகங்கள் ஊடாக அணுகி, ஆசை வார்த்தைகளை கூறி பெருந்தொகையான பணத்தினை பெற்று மோசடி செய்து வருகின்றனர்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம், மானிப்பாய், கிளிநொச்சி உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

வெளிநாடு செல்வதற்கு வங்கி கணக்கில் பெருந்தொகை பணம் வங்கி கணக்கில் இருப்பில் இருக்க வேண்டும் என கூறி , வங்கி கணக்கு இலக்கங்களை பெற்று , அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பெற்று , வங்கியில் உள்ள பணத்தினை மோசடியாக கும்பல் பெற்றுக்கொண்டு தலைமறைவாகி வருகிறது.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கபெற்றள்ள நிலையில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வெளிநாடு செல்ல காத்திருக்கும் இளையோர் , வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மற்றும் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு முகவர்கள் ஊடாக பயண ஏற்பாடுகளை செய்து சட்ட ரீதியான முறையில் செல்ல வேண்டும்.

இது தொடர்பில் இளையோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டாலே இவ்வாறான மோசடி சம்பவங்களில் இருந்து அவர்கள் தப்பிக் கொள்ள முடியும். இல்லையெனில் பெருந்தொகை பணத்தினை இழக்க நேரிடும் என பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

யாழில் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி; இளைஞன் தலைமறைவு..!

0

யாழில் 14 வயது மாணவி ஒருவர் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பிலான முறைப்பாடு நேற்று (14) முன் வைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

சம்பவமானது செட்டியார்மடம் பகுதியில் இடம் பெற்றுள்ளது. 14 வயது சிறுமியொருவர் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டதாக நேற்று (14) வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த குற்றச்செயலுடன் சந்தேகநபரான 21 வயதுடைய இளைஞர் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, மருத்துவ பரிசோதனைக்காக சிறுமி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை வட்டுக்கோட்டை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வன்னி அபிவிருத்தி நாயகன் போலிக் கடவுச்சீட்டுடன் இந்தியாவில் கைது..!

0

வன்னி மாவட்ட முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரும் கோட்டா அரசில் அபிவிருத்தி நாயகனாக வலம் வந்தவருமான கு.திலீபன் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து இந்தியாவின் மதுரைக்கு சென்ற ஈபிடிபி கட்சியின் முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் அங்கிருந்து பிறிதொரு கடவுச் சீட்டில் வெளிநாடு செல்ல முற்பட்ட நிலையில் இந்தியாவின் கேரளாவின் கொச்சி என்ற இடத்தில் வைத்து தமிழகப் பொலிஸாரால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்தியாவின் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா நீதிமன்றில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் நாட்டை விட்டு தப்பியோட முயன்றமை பாரிய குற்றம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையை விட்டு வெளியேறவில்லை; அமைச்சர் வெளியிட்ட தகவல்..!

0

நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை என விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரட்ன தெரிவித்துள்ளார்.

இரகசியமாக நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல வேண்டிய எவ்வித அவசியமும் தமக்கு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதி அமைச்சர் சுகத் திலகரட்ன குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர் அவுஸ்திரேலியாவில் குடியேறவுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டிருந்தன.

எனினும் தாம் நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை என சுகத் திலகரட்ன அவுஸ்திரேலியாவிலிருந்து தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு தாம் 10 முதல் 12 தடவைகள் பயணம் செய்துள்ளதாகவும் இந்த பயணம் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த ஓர் பயணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் 20ம் திகதி நாம் நாடு திரும்ப உள்ளதாக சுகத் திலகரட்ன தெரிவித்துள்ளார். நாட்டின் விளையாட்டுத் துறை தொடர்பில் தம்மிடம் வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை சரியான முறையில் நிறைவேற்றி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத போதைப்பொருள் பாவனை; 17 பொலிசார் சேவையிலிருந்து நீக்கம்..!

0

ஹெராயின் மற்றும் ஐஸ் போன்ற சட்டவிரோத போதைப் பொருட்களை பயன்படுத்தியதால் கடந்த நான்கு மாதங்களில் 17 பொலிஸ் அதிகாரிகளை இலங்கை காவல்துறை பணிநீக்கம் செய்துள்ளது.

புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் சிறப்பு புலனாய்வுப் பிரிவு, போதைப்பொருள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இலங்கை காவல் துறையில் உள்ள அதிகாரிகளின் பட்டியலைத் தொகுத்துள்ளதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் எஸ்எஸ்பி புத்திக மனதுங்க தெரிவித்தார்.

குறித்த அதிகாரிகளின் மருத்துவ அறிக்கைகள் தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டு ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டன. வெளியாகிய முடிவுகளைத் தொடர்ந்து, குறித்த அதிகாரிகள் சேவையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

இது போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் பல அதிகாரிகள் மீது விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்எஸ்பி மனதுங்கா உறுதிப்படுத்தினார்.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய சிரேஷட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறைமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

அரச சேவையில் காணப்படும் 7,456 வெற்றிடங்களை நிரப்ப அமைச்சரவை அங்கீகாரம்..!

0

அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணிக் குழாமினரை முகாமைத்துவம் செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளுக்கமைய 7,456 பதவி வெற்றிடங்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்து தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் நேர அட்டவணையை அடையாளங் கண்டு, அதுதொடர்பாக கட்டாயமாக ஆட்சேர்ப்புச் செய்ய வேண்டிய அளவை அடையாளங் கண்டு அதற்கமைய, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்காக கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

குறித்த குழுவுக்கு அந்தந்த அமைச்சுக்களால், அவற்றின் கீழ் காணப்படுகின்ற திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் காணப்படுகின்ற வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேண்டுகோள்களைக் கருத்தில் கொண்டு, அக்குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்காக அந்தந்த அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் நிலவும் 3,000 பதவி வெற்றிடங்களையும், பாதுகாப்பு அமைச்சில் நிலவும் 9 பதவி வெற்றிடங்களையும், விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப அமைச்சில் நிலவும் 179 பதவி வெற்றிடங்களையும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சில் நிலவும் 132 பதவி வெற்றிடங்களையும் நிரப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் 400 பதவி வெற்றிடங்களையும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சில் நிலவும் 161 பதவி வெற்றிடங்களையும், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் நிலவும் 3,519 பதவி வெற்றிடங்களையும், மேல் மற்றும் கிழக்கு மாகாணசபைகளில் நிலவும் 39 பதவி வெற்றிடங்களையும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நிலவும் 17 பதவி வெற்றிடங்களையும் நிரப்புவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

error: Content is protected !!