Tuesday, October 28, 2025
Huis Blog

யாழ்பாணத்தை அடுத்து வவுனியாவில் வேட்டையை ஆரம்பித்த விசேட பொலிஸ் குழு..!

0

வவுனியாவில் சட்ட விரோதமான முறையில் சொத்து சேர்த்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்த்தவர்கள் தொடர்பில் விசாரணை செய்ய பொலிசாரின் விசேட பிரிவு ஒன்று அண்மையில் யாழில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.



அந்த பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து யாழ்ப்பாணத்தில் பலருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், வவுனியாவிலும் மீற்றர் வட்டி மற்றும் போதைப் பொருள் விற்பனை, மக்களிடம் அதிகமான காசோலைகளை பெற்றுக் கொண்டு அதை அடிப்படையாகக் கொண்டு மிரட்டப்பட்டு சொத்துக்களை பெற்றமை, மோசடியான முறையில் காணிகளை அபகரித்து சொத்து சேர்த்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பொலிஸார் சிலரிடம் வாக்கு மூலங்களைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 9 மாதங்களில் 414 முறைப்பாடுகள்..!

0

இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 414 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் 192 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அந்த அதிகாரசபை சுட்டிக்காட்டுகிறது.

இந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 7,677 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



இதில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தின் கீழ் 6,296 முறைப்பாடுகளும், சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்துடன் தொடர்பில்லாத 1,381 முறைப்பாடுகளும் உள்ளடங்குவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த முறைப்பாடுகளில் அதிகபட்ச எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் கடந்த செப்டெம்பர் மாதத்தில் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த மாதத்தில் மாத்திரம் 1,176 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 49 முறைப்பாடுகள் பாலியல் வன்புணர்வுடன் தொடர்புடையவை, 111 முறைப்பாடுகள் சிறுவர் தொழிலாளர் முறைமை தொடர்பாகவும், 203 முறைப்பாடுகள் பிச்சை எடுத்தலில் குழந்தைகளை ஈடுபடுத்துவது தொடர்பாகவும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்துடன் தொடர்பில்லாத ஏனைய முறைப்பாடுகளில், இளவயது கர்ப்பம் தரித்தல் தொடர்பான 62 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

அது தவிர, சிறுவர்களுக்கு எதிரான இணையத்தள துன்புறுத்தல் தொடர்பான 102 முறைப்பாடுகளும், வீட்டு வன்முறை தொடர்பான 38 முறைப்பாடுகளும், தற்கொலை முயற்சி தொடர்பான 13 முறைப்பாடுகளும், கருக்கலைப்பு தொடர்பான ஒரு முறைப்பாடும் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.



இந்த வருடத்தில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 83 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், போதைப்பொருள் கடத்தலுக்கு சிறுவர்களை பயன்படுத்துவது தொடர்பில் 27 முறைப்பாடுகளும், 16 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்வது தொடர்பில் 3 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

களுத்துறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜயந்த பத்மினி வீரசூரிய களுத்துறை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கையில், போதைப்பொருள் பாவனைக்கு சிறுவர்கள் அடிமையாகும் போக்கு அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.

ஜனவரியில் பாடசாலை நேரம் நீடிப்பு; கல்வி அமைச்சின் இறுதி முடிவு..!

0

இலங்கையில் அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சு திட்ட வட்டமாகத் தெரிவித்துள்ளது.

தேசிய கல்வி நிறுவகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவேவ குறிப்பிட்டுள்ளார்.

தாங்கள் இதில் நிபுணர்கள் அல்ல என்றும், இந்தக் கல்விச் சீர்திருத்தங்களை தேசிய கல்வி நிறுவகம் மட்டுமே வடிவமைப்பதாகவும் நாலக்க கலுவேவ தெரிவித்துள்ளார்.

தேசிய கல்வி நிறுவகத்தக்கு இந்தத் துறையில் தொழில்நுட்ப நிபுணத்துவம் உள்ளது என்றும், அமைச்சு அதை நடைமுறைப்படுத்துவதாகவும் அவர் விளக்கினார்.



தேசிய கல்வி நிறுவகம் முதலில் ஒரு பாட நேரத்தை ஒரு மணி நேரமாக நீட்டிக்க முன்மொழிந்தது. ஆனால், நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, ஒரு பாட நேரம் 50 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டது.

இதன் காரணமாகவே பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சீர்திருத்தங்கள் தேசிய கல்வி நிறுவகத்தின் பரிந்துரைகளின் படி செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், அதன் முக்கியக் கொள்கைகளை மாற்ற முடியாது என்றும் செயலாளர் நாலக்க கலுவேவ தெரிவித்தார்.



தொழிற் சங்கங்களுக்குத் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த உரிமை உண்டு, ஆனால் திட்டமிடப்பட்டதை நம்மால் மாற்ற முடியாது. இந்த நடவடிக்கைகளுக்காக ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட செலவு ஏற்கப்பட்டுள்ளது.

எனவே, பாடசாலை நேரத்தை 2 மணி வரை நீடிப்பதில் மாற்றம் இல்லை. அது அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும், என்றும் அவர் உறுதியளித்தார்.



தற்போது பிற்பகல் 1.30 மணி வரை இருக்கும் பாடசாலை நேரம், இந்தச் சீர்திருத்தத்தின் கீழ் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை (30 நிமிடங்கள் அதிகரிப்பு) நீட்டிக்கப்படவுள்ளது.

இந்த முடிவுக்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற் சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையிலும் அமைச்சு இந்த உறுதியை வழங்கியுள்ளது.

வடக்கில் இரு வருடத்திற்கு முன்னர் அதிபர் நியமனம் பெற்றவருக்கு ஆசிரியர் இடமாற்றம்..!

0

வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றப் பட்டியலில் அதிபர் சேவைக்குள் உள்ளீர்க்கப்பட்டு அதிபராக பணியாற்றும் ஒருவரின் பெயர் இடம்பெற்றுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றின் அதிபராக அதிபர் சேவைக்குள் உள்ளீர்க்கப்பட்ட ஒருவரின் பெயரே இவ்வாறு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

”ஏற்கனவே அதிபர் சேவைக்கு உள்ளீர்க்கப்பட்ட ஒருவரை 2026ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் வகையில் வட மாகாண கல்வி அமைச்சினால் வழங்கப்படும் இடமாற்றப் பட்டியலிலும் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது.



குறித்த ஆசிரியர் இடமாற்றத்திற்கு பெயர் பரிந்துரைக்கப்பட்ட அதிபர் இரண்டு வருடங்களுக்கு முன்பு அதிபராக கிளிநொச்சி கல்வி வலயத்திற்கு சென்றுள்ள நிலையில் வருடாந்த ஆசிரிய இடமாற்றத்திலும் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில் அதிபர் சேவைக்கு உள்ளீர்க்கப்பட்டவரின் பெயர் எவ்வாறு ஆசிரியர் இடமாற்றப் பட்டியலில் உள்ளடக்கப்படும் என பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.



இதேவேளை ஆசிரியர் இடமாற்றத்தில் முறைகேடுகள் இருப்பதாக கூறி அண்மையில் வடமாக ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மாகாண சபைத் தேர்தலை நடத்த தீவிரம் காட்டும் அனுர அரசாங்கம்..!

0

மாகாண சபைத் தேர்தலை இயலுமானவரை விரைவில் நடத்த அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, தேர்தலை நடத்துவதற்கான முக்கிய நகர்வாக 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை மக்கள் நலன் சார்ந்த பாதீடாக முன்வைப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.



குறித்த வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கு நேரடியாக தாக்கம் செலுத்தும் விதத்தில் புதிய வரிகள் எதுவும் அமுல்படுத்தப்படாது எனவும் தெரியவருகிறது.

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பாதாள குழுக்கள் ஒழிப்பு போன்ற செயற்பாடுகளால் மக்கள் மத்தியில் அரசாங்கத்திற்கு தற்போது ஆதரவு கிடைத்துள்ளது.



இந்நிலையில், இவ்விடயமும் அரசாங்கத்துக்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்பதால் விரைவில் தேர்தலை நடத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

இதேவேளை, மாகாண சபைத் தேர்தல் தொடர்பான பாதீட்டு கூட்டத் தொடருக்கு மத்தியில் கட்சி தலைவர்கள் கூட்டத்தையும் ஜனாதிபதி நடத்தவுள்ளார்.



மேலும், தேர்தல் எந்த முறையில் நடத்தப்படும் என்பது தொடர்பில் உறுதியான தீர்மானமொன்றை எடுப்பதற்காகவே இக்கூட்டம் நடத்தப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.

அத்தையின் தங்க நகை மாயம்; பாடசாலை மாணவி, காதலன் உட்பட மூவர் கைது..!

0

ஒரு பெண்ணிடமிருந்து 2 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் 16 வயது பாடசாலை மாணவி மற்றும் அவரது காதலன் மற்றும் மற்றொரு இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதன்போது கலேட்டுவமுல்ல, கணேமுல்லவைச் சேர்ந்த பாடசாலை மாணவி, அன்னாசிவத்த ராகமையைச் சேர்ந்த அவரது காதலன் மற்றும் மினுவங்கொட,நீல்பனகொடவைச் சேர்ந்த இளம் பெண் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.



சம்பந்தப்பட்ட பாடசாலை மாணவி தனது அத்தையின் தங்க நகைகளைத் திருடி, அதை தனது 17 வயது காதலனிடம் கொடுத்து, அதை விற்று அவளுக்கு ஒரு தொலைபேசி வாங்கித் தருமாறு கோரியுள்ளார்.

இந்த நிலையில், 17 வயதுடைய காதலன் வயது குறைந்தவர் என்பதால், 21 வயது உறவினரான பெண்ணை பயன்படுத்தி தங்க நகைகளை அடகு வைத்துள்ளார்.



அவர் மூலம் 1.9 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை அடகு வைத்து, அதில் ஒரு சிறிய தொகையை செலவழித்து, தனது காதலிக்கு ஒரு தொலைப்பேசியை வாங்கி கொடுத்துவிட்டு மீதமுள்ள பணத்தை மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக வைத்திருந்ததாக காதலன் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.

இந்த நிலையில், தங்க நகைகளை விட்டுச் சென்ற இடத்தில் இல்லை என்பதை அறிந்ததும், சிறுமியின் அத்தை காவல்துறையினர் முறைப்பாடு அளித்துள்ளார்.



முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை நடத்தி, பாடசாலை மாணவி, அவரது காதலன் மற்றும் மற்றொரு பெண்ணை கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

புதிய கல்வி மறுசீரமைப்பு; ஆசிரியர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காத அரசு..!

0

கல்வி மறுசீரமைப்பு தொடர்பான ஆசிரியர்கள் மற்றும் கல்வி சார்ந்த தரப்பினரால் எழுப்பப்பட்ட முக்கிய கேள்விகளுக்கு அரசாங்கம் மெளனம் காப்பது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிகாரிகள் இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடியாக பதிலளித்துத் தீர்வு காணுமாறும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.



நேற்று (26) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே ஜோசப் ஸ்டாலின் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது,

“தொழிற் சங்கங்கள் இந்த மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்துவதில் உள்ள குறைபாடுகள் மற்றும் சிக்கல்களை மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டியது.



இதன் போது அதற்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக, அரசாங்கம் இந்த பிரச்சினைகளைக் கேட்டுக்கொண்டதுபோல் நடித்துவிட்டு, தற்போது 9 மாகாணங்களுக்கும் காண்பிக்கப்பட்ட அதே திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறது.



புதிய பாடத்திட்டத்தின் கீழ் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகளுக்கு (workshops) கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சு கூறியிருந்தாலும், அத்தகைய கட்டணம் எதுவும் இதுவரை செலுத்தப்படவில்லை” என்று குறிப்பிட்டார்.

பாடசாலைக் கிரிக்கெட்டின் மேம்பாட்டிற்காக ஆண்டுதோறும் ரூ.1.5 பில்லியன் நிதி – விளையாட்டு அமைச்சர்

0

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே நேற்று (24) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாடசாலை கிரிக்கெட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) ஆண்டுதோறும் கிட்டத்தட்ட ரூ.1.5 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்கிறது.



தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் உப்புல் கித்சிறி பாடசாலை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு அளித்த பங்களிப்பு குறித்து வாய்மொழி பதில் கோரிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.

பாடசாலை கிரிக்கெட் தொடர்பான உட்கட்டமைப்பை மேம்படுத்துவது முதல் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குவது மற்றும் விளையாட்டு போட்டிகளை நடத்துவது வரை பல்வேறு துறைகளின் கீழ் பாடசாலை கிரிக்கெட் சங்கம் மூலம் பாடசாலை கிரிக்கெட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக இந்த பணம் வழங்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.



பாடசாலை கிரிக்கெட் சங்கத்துடன் கலந்துரையாடி நாட்டின் பல மாவட்டங்களில் பல இடங்களில் கிரிக்கெட் விளையாட்டு மைதானங்களை மேம்படுத்த நம்புவதாகவும் அமைச்சர் கூறினார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை கட்டுவதற்கு தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பியகமவில், கிரிக்கெட்டை கிராமத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கத்திற்காக, சர்வதேச கிரிக்கெட் மைதானங்களை நிர்மாணிப்பதற்காக, பல மாவட்டங்களுடன் இணைந்து, சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டப்படும்.



“இலங்கையில் தடகளத்தை மேம்படுத்துவதற்காக, குறிப்பாக மிஷன் ஒலிம்பிக் 2028 ஐ மேம்படுத்துவதற்காகவும், நம்பிக்கைக்குரிய இளம் விளையாட்டு வீரர்களை ஆதரித்து வளர்க்கவும், கிரீட சக்தி திட்டத்தை மேம்படுத்துவதற்காகவும் ஏற்கனவே பல சிறப்புத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. எனத் தெரிவித்தார்.

மிகவும் பாதிக்கப்படக் கூடிய சூழ்நிலையில் வாழும் 17,000 குழந்தைகள் – ஆனந்த விஜேபால

0

மிகவும் பாதிக்கப்படக் கூடிய நிலையில் வாழும் சுமார் 17,000 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

அரசாங்கம் அனைத்து மட்டங்களிலும் உள்ள குழந்தைகளை கண்காணித்து வருவதாகவும், யாரையும் விட்டு வைக்காமல் ஒவ்வொரு குழந்தையின் சமூக பாதுகாப்பையும் உறுதி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார்.



வடமேற்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் இன்று (26) வடமேற்கு மாகாணத்தில் உயர்தரப் பரீட்சையில் சிறந்து விளங்கியவர்களை பாராட்டி உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.



ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம், எதிர்கால சந்ததியினர் வாழ ஏற்ற ஒரு நாட்டை உருவாக்க உறுதி பூண்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் எண்பதாயிரத்துக்கும் அதிகமான பாலியல் தொழிலாளிகள்..!

0

இலங்கையில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக கணக்கெடுப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

எனினும், அவர்கள் அனைவரும் பதிவு செய்யப்பட்டு சட்டரீதியான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் பேராசிரியர், சட்டத்தரணி பிரதீபா மஹாநாமஹேவா வலியுறுத்தியுள்ளார்.



கொழும்பில் இடம்பெற்ற செயலமர்வு ஒன்றிலேயே பேராசிரியர் இதனைத் தெரிவித்தார்.

பாடசாலைகள் மூலம் பாலியல் கல்வியை மேலும் பிரபலப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.



அத்துடன், பாலியல் தொழிலாளர்களுக்கு அடிப்படை மனித உரிமைகள் இருக்க வேண்டும் என்றும், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களும் ஆண்களும் சமூகத்தில் ஒருவித அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்றும் பேராசிரியர் பிரதீபா மஹாநாமஹேவா வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!