Friday, April 3, 2026
Huis Blog

ஒலுமடுவில் நெல் உலர்த்தும் தளம் அமைக்க சத்தியலிங்கம் எம்பி 1.2 மில்லியன் ஒதுக்கீடு..!

0

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஒலுமடு பகுதியில் நெல் உலர்த்தும் தளம் அமைப்பதற்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களின் 2026ம் ஆண்டிற்கான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து 1.2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினர் செல்வராசா சுசீலன் அவர்களின் கோரிக்கையின் பிரகாரம் குறித்த பகுதியை சேர்ந்த விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு குறித்த நிதியொதுக்கீட்டினை பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அவர்கள் மேற்கொண்டுள்ளார்.

இதற்கான அனுமதி கடிதம் நேற்று (02.04.2026) ஒலுமடு கமக்காரர் அமைப்பினரிடம் கையளிக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் தி.கிருஸ்ணவேணி, பிரதேசசபை உறுப்பினர் செ.சுசீலன், பாராளுமன்ற உறுப்பினரின் வவுனியா வடக்கு பிரதேச இணைப்பாளர் தவேந்திரராசா (அமலன்) உள்ளிட்டோர் குறித்த அனுமதி கடிதத்தினை அமைப்பினரிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்?

0

கொழும்பு மாவட்டத்தின் பிரதான நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், எதிர்வரும் வாரங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் (NWSDB) தகவல்களின்படி கலாட்டுவாவ நீர்த்தேக்கத்தில் இன்னும் 22 நாட்களுக்கு மாத்திரமே நீர் போதுமானதாக உள்ளது.

அத்துடன் லபுகம நீர்த்தேக்கத்தில் இன்னும் 50 நாட்களுக்கு மாத்திரமே நீர் போதுமானதாக உள்ளது.

வரண்ட வானிலை காரணமாக மேல் மாகாணமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் உற்பத்தி செய்யப்படும் 2.5 மில்லியன் கனமீட்டர் நீரில், 1.25 மில்லியன் கனமீட்டர் மேல் மாகாணத்திலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.

கலாட்டுவாவ நீர்த் தேக்கத்தில் நீர்மட்டம் குறைவினால் இங்கு 15,000 கனமீட்டர் நீர் உற்பத்தி குறைக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் வாரங்களில் பண்டிகைக் காலம் என்பதால் நீரின் பயன்பாடு அதிகரிக்கக்கூடும், எனவே நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது அவசியமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

மந்தகதியில் இடம்பெறும் நித்தகைக்குளச் சீரமைப்புப் பணிகள்; நேரில் சென்ற ரவிகரன் எம்.பி..!

0

முல்லைத்தீவு – குமுழமுனை கமநலசேவை நிலையப் பிரிவிலுள்ள ஆண்டான்குளம் பகுதியில் அமைந்துள்ள நித்தகைக்குளத்தின் சீரமைப்புப் பணிகள் மந்தகதியிலும், வினைத்திறனற்ற வகையிலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அப்பகுதிக்குரிய கமக்கார அமைப்புப் பிரதிநிதிகள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் முறையிட்டுள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதி கமக்கார அமைப்பு பிரதிநிதிகளின் அழைப்பையேற்று, நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் 02.04.2026 நேற்று குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டிருந்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

குறிப்பாக கடந்த 2009ஆம் ஆண்டிற்குப் பிற்பாடு நித்தகைக்குளம் மற்றும், குளத்தின் கீழான 1500 ஏக்கர் வயல்நிலங்கள் என்பவற்றை வனவளத் திணைக்களம் ஆக்கிரமிப்புச் செய்திருந்தது.

இத்தகைய சூழலில் அப்பகுதி விவசாயிகள் மற்றும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருடைய தொடர்ச்சியான வலியுறுத்தலையடுத்து குறித்த குளம் வனவளத் திணைக்களத்தால் விடுவிக்கப்பட்டதுடன், குளத்தின் கீழான வயல் நிலங்களும் வனவளத் திணைக்களத்தால் விடுவிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மற்றும் அப்பகுதி விவசாயிகளின் தொடர்ச்சியான கோரிக்கைக்கு அமைவாக கடந்த 2025ஆம் ஆண்டு நித்தகைக்குளத்தின் சீரமைப்பு வேலைகளுக்கென நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு, குளத்தின் சீரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்நிலையில் எதிர்வரும் 15.07.2026ஆம் திகதியுடன் முடிவுறுத்தப்பட்டு விவசாயிகளிடம் கையளிக்கப்படும் என்ற ஒப்பந்தத்துடன் தொடங்கப்பட்ட நித்தகைக் குளத்தின் சீரமைப்பு வேலைகள் தற்போது மந்தகதியில் இடம்பெற்று வருவதுடன், வினைத்திறனற்ற வகையில் சீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விவசாயிகளால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக் காட்டப்பட்டது. அத்தோடு சீரமைப்புப் பணிகளின் நிலைமைகளையும் விவசாயிகள் இதன் போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் நேரடியாகக் காண்பித்தனர்.

குறிப்பாக 02கிலோமீற்றருக்கும் மேலான தூரமுடைய குளக்கடில் தற்போது 150 மீற்றர் வரையிலேயே சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இதன் போது தெரிவித்த விவசாயிகள், ஒப்பந்தக் காலத்திற்குள் சீரமைப்பு வேலைகள் முடிவுறுத்தப்படாதெனவும் சுட்டிக்காட்டினர்.

அத்தோடு குளக்கட்டுச் சீரமைப்பிற்கு பயன்படுத்தப்படும் மண் தூய்மைப் படுத்தப்படாமல், மரவேர்களுடன் பயன்படுத்தப்படுவதாகவும், முறையற்ற விதத்தில் சீரமைப்பு வேலைகள் செய்யப்படுவதாகவும், ஒப்பந்ததாரரிடம் போதுமான இயந்திர வசதிகள் இல்லையெனவும், வினைத்திறனற்ற வகையில் சீரமைப்புச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இதன்போது விவசாயிகள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையிட்டனர்.

இந்நிலையில் மந்தகதியிலும் வினைத்திறனற்ற வகையிலும் முன்னெடுக்கப்பட்டுள்ள சீரமைப்புப்பணிளை பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், சீரமைப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளவர்களுடனும் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

இவ்வாறு மந்தகதியிலும், வினைத்திறனற்ற வகையிலும் முன்னெடுக்கப்படும் சீரமைப்பு பணிகள் தொடர்பில் உரிய திணைக்களங்களின் கவனத்திற்கு கொண்டு வரப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் இதன் போது தெரிவித்தார்.

மேலும் குறித்த சீரமைப்புப் பணிகளை துரிதகதியிலும், வினைத்திறனாகவும் முன்னெடுப்பதற்கு தம்மால் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினரால் தெரிவிக்கப்பட்டது.

யாழில் மணல் கடத்தல் கும்பலின் தாக்குதலில் காவல்துறை அதிகாரி பலி; இருவர் கைது..!

0

யாழ்ப்பாணத்தில் காவல்துறை அதிகாரியை உழவு இயந்திரத்தால் மோதிக் கொலை செய்ததுடன் மற்றுமொரு காவல் உத்தியோகஸ்தருக்குப் படுகாயம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதான சந்தேகநபர் தலைமறைவாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளைக் காவல்துறையினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கொடிகாமம், கெற்பேலி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாகக் கொடிகாமம் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, கடந்த சனிக்கிழமை சம்பவ இடத்திற்கு இரண்டு காவல்துறை உத்தியோகஸ்தர்கள் விரைந்துள்ளனர்.

இந்தநிலையில், காவல்துறையினரைக் கண்டதும் உழவு இயந்திரத்தைச் செலுத்தி வந்தவர், தான் தப்பிப்பதற்காக அதன் வேகத்தை அதிகரித்து, காவல்துறையினர் இருவர் மீதும் மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

இதன்போது உழவு இயந்திரம் மோதியதில், கொடிகாமம் காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல் சார்ஜெண்ட் தர அதிகாரியான ஹெட்டியாராட்சி அல்பேட் (வயது 50) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணி தெரிவு…!

0

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணியின் தெரிவுக்கூட்டம் இன்று (29.03.2026) கட்சியின் வவுனியா மாவட்டத்தின் உபதலைவர் பாலச்சந்திரன் சிந்துஜன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது புதிய நிர்வாகத்தின் தலைவராக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தலைவர் பாலகிருஸ்ணன் பாலேந்திரன் அவர்களும், செயலாளராக வெங்கலச் செட்டிகுளம் பிரதேசசபை உறுப்பினர் யோகேஸ்வரன் சனோஜன் அவர்களும் பொருளாளராக மருத்துவர் ஞானசிங்கம் நிரோசன் அவர்களும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும், உபதலைவர், உபசெயலாளர் உள்ளிட்ட நிர்வாகசபை உறுப்பினர்களும் இதன் போது தெரிவு செய்யப்பட்டனர்.

குறித்த தெரிவுக்கூட்டத்தில் கட்சியின் மாவட்டக் கிளையின் செயலாளர் நடராசா கருணாநிதி, பொருளாளர் சி.சந்திரசேகரம், மாவட்டக் கிளை உறுப்பினர் மயூரதன், பாபு ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஒரே வாரத்தில் 38,000 ரூபா சரிந்த தங்க விலை; மேலும் பாரியளவில் சரியும் சாத்தியம்..!

0

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு ஏற்ப, இலங்கையிலும் இன்று தங்கத்தின் விலை மேலும் 5,000 ரூபாவால் குறைவடைந்துள்ளது.

இது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 38,000 ரூபா வீழ்ச்சியாகும்.

இதன்படி, கடந்த வாரம் 17ஆம் திகதி 408,000 ரூபாவாகக் காணப்பட்ட 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று (24) 370,000 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

அதேவேளை, கடந்த வாரம் 17ஆம் திகதி 375,300 ரூபாவாக காணப்பட்ட 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று 340,400 ரூபாவாகக் வீழ்ச்சியடைந்துள்ளது.

நேற்றுடன் ஒப்பிடுகையில் உலக சந்தையிலும் தங்கத்தின் விலை இன்று வீழ்ச்சியடைந்துள்ளதுடன், அதன்படி இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,344 டொலர்களாகக் பதிவாகியுள்ளது.

400 பாடசாலைகளுக்கு கிடைக்கும் வசதி; கல்வி அமைச்சரின் முன்மொழிவிற்கு அனுமதி..!

0

விளையாட்டுகளில் மாணவர்களின் பங்கேற்பை அதிகரிப்பதையும், உடல், சமூக மற்றும் மன நலனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, நாடு முழுவதும் உள்ள அரசாங்கப் பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களை மேம்படுத்துவதற்கான ஒரு பெரிய திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

பரீட்சையை மையமாகக் கொண்ட கல்வி முறையும், போதுமான வசதிகள் இல்லாததும் விளையாட்டுகளில் மாணவர்களின் ஈடுபாட்டைக் கட்டுப் படுத்துவதோடு, தேசிய மற்றும் சர்வதேச அளவில் திறமை மிக்க விளையாட்டு வீரர்களைக் கண்டறிவதையும் தடுக்கின்றன என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

தற்போது, ​​நாட்டின் 10,096 அரசாங்கப் பாடசாலைகளில் சுமார் 5% பாடசாலைகளில் மட்டுமே தரமான அளவிலான விளையாட்டு மைதானங்கள் உள்ளன.

இந்த இடைவெளியை நிவர்த்தி செய்வதற்காக, இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கல்வி வலயத்திலும் 400 மீட்டர் ஓடுதளத்துடன் கூடிய குறைந்தபட்சம் ஒரு தரமான விளையாட்டு மைதானம் அமைக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ், 25 மாவட்டங்களில் ஒவ்வொன்றிலும் ஒரு தேசியப் பள்ளி மற்றும் மூன்று மாகாணப் பள்ளிகள் மேம்படுத்தப்படும்.

இதன் மூலம் நான்கு ஆண்டுகளில் 400 பள்ளிகள் உள்ளடக்கப்படும். இந்த முன்னெடுப்பு 2026-ஆம் ஆண்டு முதல் 2029-ஆம் ஆண்டுக்குள் ரூ. 2,010.50 மில்லியன் மதிப்பீட்டில் செயற்படுத்தப்படும்.

கல்வி அமைச்சர் என்ற தகுதியில் பிரதமர் ஹரினி அமரசூரியவால் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

ஏர் பஸ் ஊழல் விவகாரம்; பிடியாணை பிறப்பிப்பது தொடர்பில் ஏப்ரல் 02 இல் நீதிமன்ற தீர்மானம்..!

0

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி மற்றும் முன்னாள் குழும உறுப்பினர் முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் மகன் ஷமீந்திர ராஜபக்ஷ ஆகியோர் குற்றச்சாட்டில் சந்தேக நபராக பெயரிடப்பட்டவர்கள் மீது பிடியாணை உத்தவை பிறப்பிப்பதா என்பதைப் பற்றிய தீர்மானத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி அறிவிக்க உள்ளதாகத் கொழும்பு நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு அதிகாரிகள் முன்வைத்த வாதங்களைக் கருத்தில் கொண்ட பின்னர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

அமைச்சர்களது வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை..!

0

எரிபொருளை சிக்கனப்படுத்துவதற்காக அமைச்சர்களது வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரச சேவையாளர்களின் எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான சுற்றுநிரூபத்தை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ளார்.

அதற்கமைய, செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அரச அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோக முறைகேடுகளை அறிவிக்க தொலைபேசி எண் அறிமுகம்..!

0

எரிபொருள் விநியோகம் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை மீறிச் செயற்படும் எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களம் இன்று (18) பிற்பகல் விடுத்துள்ள அறிக்கையில், இது தொடர்பான முறைகேடுகள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, பின்வரும் இலக்கங்களுக்குத் தொடர்பு கொண்டு உரிய தகவல்களை வழங்குமாறு பொதுமக்கள் தயவுடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

தொலைபேசி இலக்கங்கள்: 0112106767 / 0117296130

error: Content is protected !!