Friday, July 24, 2026
Huis Blog Bladsy 157

ஒட்டுசுட்டான் ம.வி அதிபரை இடமாற்றுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்..!

0

ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபரை இடமாற்றம் செய்யுமாறு கோரி பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளால் இன்று (11) காலை 8 மணியளவில் பாடசாலைக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபரால் பாடசாலை மாணவர்களின் கல்வி, ஒழுக்கம் மற்றும் ஏனைய இணைபாடவிதான செயற்பாடுகள் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், நிர்வாக சீர்கேடுகள், நிதி மோசடிகள் என பல்வேறு முறைகேடுகளில் அவர் ஈடுபடுவதாகவும், பாடசாலையின் வளர்ச்சியை சீர்குலைத்து பாடசாலை சொத்துக்களை மோசடி செய்வதாகவும் தெரிவித்து, அதிபரை பாடசாலையிலிருந்து வெளியேற்றுமாறு கோரிக்கை முன்வைத்து பாடசாலை நுழைவாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பெற்றோர் அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர்கள் சங்கத்தினால் வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய அதிபர் தொடர்பில் மாகாண கல்வி அமைச்சினால் விசாரணை குழு அமைக்கப்பட்டு ஆரம்ப புலனாய்வு விசாரணை நடத்தப்பட்டும், குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டும் இந்த அதிபர் வலயத்துடன் இணைத்தே விசாரணை செய்யப்பட வேண்டும். அவ்வாறான ஒரு விசாரணையை மாகாண கல்வி அமைச்சு மேற்கொள்ளவில்லை. அதனால் இவ்விசாரணையை கண்துடைப்பாகவே நாங்கள் கருதுகிறோம் எனவும் போராட்டக்காரர்கள் இதன் போது தெரிவித்திருந்தனர்.

அதனையடுத்து, போராட்ட இடத்துக்கு சென்ற ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் நிஷாந்தன், தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளர் இந்திக்க ஆகியோரிடம் போராட்டக்காரர்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்தனர்.

இதன் பிரதிகள் வட மாகாண பொதுச்சபை ஆணைக்குழு, ஆளுநர் செயலகம், ஆளுநர் குறைகேள் வலையமைப்பு, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், ஜனாதிபதி செயலகம் ஆகியோருக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேற்றம்???

0

இலங்கை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன இதுவரை இது குறித்து யாருக்கும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதேவேளை சுகத் திலகரத்ன ஒலிம்பிக் போட்டிகளில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர் ஆவார்.

அதேவேளை இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற சுசந்திகா ஜெயசிங்க, தமயந்தி தர்ஷா ஆகியோரும் தற்போது அவுஸ்திரேலிய குடியுரிமைக்காக அங்கு வசித்து வருகின்றனர்.

தமிழர்களை பிரித்தாள்வதற்காக கைக்கூலியாக செயற்படும் கோமாளி..!

0

இவ்வுலகில் தமிழர்களுக்கென தனி மதிப்பு உள்ளது. அந்த மதிப்பை சீர்குலைப்பதற்கு அவ்வப்போது துரோகிகளும், கோமாளிகளும் வந்துசெல்வதும் வழமை. அப்படிதான் இம்முறையும் கோமாளியொன்று நாடாளுமன்றம் வந்துள்ளது என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

பிரதேசவாதம் பேசி தமிழர்களை பிரித்தாள்வதற்காக கைக்கூலியாக வந்துள்ள இந்த நபர், கத்தரித்தோட்ட வெருளிகள் பற்றி கதைப்பது வெட்கக் கேடாகும் எனவும் அவர் கூறியுள்ளார்

இது தொடர்பில் மேலும் கருத்துரைத்த அவர்,

“ இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் சம உரிமைகள் உள்ளன. எவரும் இரண்டாந்தர பிரஜைகள் அல்லர் என்ற நிலைப்பாட்டிலேயே தேசிய மக்கள் சக்தி உள்ளது. நாட்டில் வாழும் அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக் கூடிய கட்சிதான் தேசிய மக்கள் சக்தி. மாற்றம் வேண்டும் என்பதற்காகவே யாழ். மக்களும் எமக்கு அமோக ஆதரவை வழங்கினர்.

இந்த மக்கள் ஆணையை புரிந்துகொள்ள பக்குவமில்லாத அரசியல் கோமாளி, தற்போது விமர்சன அரசியலை முன்னெடுத்து வருகின்றது.

சமூக வலைத் தளங்களில் பிரபல்யமடைவதற்காக வீரவசனங்களை பேசி, தன்னையும், தன்னை சூழவுள்ள ஒரு சிலரை பற்றி மட்டுமே பேசும் கோமாளிகளெல்லாம் தலைவர்களாக முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

எமது மலையக உறவுகள் தமிழர்களின் சுயநிர்ணய கோரிக்கைக்கு எதிராக நின்றதில்லை. உரிமைப் போராட்டங்களைக் கூட ஆதரித்துள்ளனர்.

எனவே, இணைந்து வாழும் எங்களை பிரதேசவாதத்தை கிளப்பிவிட்டு பிரித்தாள முடியாது என்பதைக் கூறி வைக்க விரும்புகின்றோம்.

அரசிடமிருந்து பாரிய இழப்பீட்டுத் தொகையை பெற்ற எம்.பிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை..!

0

அரகலய போராட்ட காலத்தில் தமது சொத்து சேதமடைந்ததாக கூறி அரசிடமிருந்து பாரியளவான இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

பேராதனை போதனா வைத்திய சாலையில் இன்று சனிக் கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த காலங்களில் இழப்பீடுகளை பெற்றுக் கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான தகவல்கள் தற்போது கிடைத்துள்ள நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அத்துடன், குறித்த மக்கள் பிரதிநிதிகள் தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து நாடாளுமன்றத்திற்குத் தகவல் வழங்கியுள்ளனரா என்பது தொடர்பில் கண்டறியப்பட வேண்டும்” என்றார்.

வடக்கில் பயிர்களில் வெள்ளை ஈ தாக்கம்; நடவடிக்கைகளை உடன் ஆரம்பிக்குமாறு ஆளுநர் பணிப்பு..!

0

தென்னை மரத்தில் மாத்திரமல்லாது ஏனைய விவசாயப் பயிர்களிலும் வெள்ளை ஈ தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை உடனடியாக கட்டுப் படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பணிப்புரைவிடுத்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் விவசாயத் துறையினர் மற்றும் மாவட்டச் செயலர்களுடன் இன்று சனிக்கிழமை (08.02.2025) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் வேகமாகப் பரவிய வெள்ளை ஈ தாக்கம் தற்போது மீண்டும் வரத் தொடங்கியுள்ளது.

குளிரான காலநிலை காரணமாக அதன் தாக்கம் குறைவடைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அது பரவத் தொடங்கியுள்ளது என அதிகாரிகள் சுட்டிக் காட்டினர். தென்னை மரத்தில் மாத்திரமல்லாது ஏனைய விவசாயப் பயிர்களிலும் அது பரவி வருவதாக சுட்டிக் காட்டப்பட்டது.

விவசாய ஆராய்ச்சி திணைக்களத்தால் இதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதாக திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் குறிப்பிட்டார்.

தென்னை மரங்களில் பரவும் வெள்ளை ஈ தாக்கத்தை தம்மால் கட்டுப்படுத்துவது சவாலானது எனவும் அதற்கு தென்னை பயிர்ச் செய்கை சபையின் உதவியைப் பெற்றுக் கொள்ளுமாறும் குறிப்பிட்டார்.

ஏனைய விவசாயப் பயிர்களில் பரவும் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த இரசாயன முறையைப் பின்பற்றுவதாகக் குறிப்பிட்டார். அதற்கான உதவிகளை வடக்கு மாகாண விவசாயத் திணைக்களம் ஊடாக வழங்குவதாக, வடக்கு மாகாண பிரதம செயலர் இதன் போது உறுதியளித்தார்.

தென்னை பயிர்ச் செய்கை சபையினரையும், தென்னை பயிர்ச் செய்கை ஆராய்ச்சி அலகினரையும் அழைத்து விரைவில் இதனைக் கட்டுப்படுத்துவதற்கான செயற்பாட்டை துரிதமாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஆளுநர் இதன் போது குறிப்பிட்டார்.

புதிய பாடத் திட்டத்தில் அழகியல், உடற்கல்விப் பாடங்கள் நீக்கப்படுமா? பிரதமரின் அறிவிப்பு

0

2026 ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவனம், பரீட்சைகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் கல்விக் கொள்கைக் குழுவின் பிரதிநிதிகளுடன் இன்று அலரி மாளிகையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இதன் போது கல்வி முறையில் உள்ள பலவீனங்களைச் சமாளித்து, புதிய கல்விச் சீர்திருத்தங்களை எவ்வாறு செயற்படுத்துவது என்பது குறித்தும், அதற்காக இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

பாடத்திட்டத் திருத்தம், பாட உள்ளடக்கம், கல்வி, பாடசாலைகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ஆசிரியர் பயிற்சி, அணுகுமுறை, கல்வித் துறையில் தொழில்முறை விருத்தி, மதிப்பீட்டு முறைகளைச் சீர்திருத்துதல் மற்றும் கல்விக் கொள்கைகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

மேலும், பாலர் பாடசாலைக் கல்வி விருத்தி, தொடக்கக் கல்வி, இடைநிலைக் கல்வி, மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆகிய துறைகளில் கல்விச் சீர்திருத்தங்கள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

புதிய கல்வி சீர்திருத்தத்தினூடாக அழகியல் பாடங்கள், சுகாதாரம் மற்றும் உடற்கல்வி ஆகியவை நீக்கப்படாது எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மேலும், 1 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை, 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்புவரை, 10 ஆம் வகுப்பு முதல் 13 ஆம் வகுப்பு வரை கல்வியில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து தேசிய கல்வி நிறுவனத்தின் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

“கல்வியை மாற்றுவோம், இலங்கையை மாற்றுவோம்” என்ற தொனிப் பொருளின் கீழ் கல்வி சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அனைவரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல்..!

0

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் M.S.நளீம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று (08) காலை ஏறாவூர் ஆதார வைத்திய சாலைக்கு முன்பாக வைத்து சிலரால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் ஏறாவூர் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி அவசியம் – வைத்தியர் சத்தியலிங்கம்

0

நாட்டில் உள்ள அரசியல் பிரச்சினையைத் தீர்க்காமல் ஒருபோதும் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது என தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்தமைக்கு வெறுமனே ஊழல் மாத்திரமே காரணம் இல்லை. இலங்கையில் நீண்டகாலமாக நிலவும் அரசியல் பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய முக்கிய பொறுப்பு தற்போதைய அரசாங்கத்துக்கு உள்ளது.

தற்போது நாட்டின் பொருளாதார பிரச்சினையைத் தான் முதலில் தீர்க்க வேண்டும் எனவும் அதற்குரிய வழி வகைகளையே மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சரவை பேச்சாளர் கூறியிருக்கின்றமை மிகப் பாரதூரமான விடயம்.

அரசியல் தீர்வு, புதிய அரசியல் யாப்பு தொடர்பில் இப்போதைக்கு சிந்திக்கவில்லை எனக் கூறுவதும் பாரதூரமான விடயம்.” என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டை விட்டு வெளியேறத் தயாராகும் 7,000 வைத்தியர்கள்; வெளியாகிய அதிர்ச்சித் தகவல்..!

0

நாட்டை விட்டு சுமார் 7,000 வைத்தியர்கள் வெளியேறத் தீர்மானித்துள்ளனர் என்றும் சுமார் 2,000 வைத்தியர்கள் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தை அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (Colombo) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மேலும் 5,000 வைத்தியர்கள் தங்கள் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை பெற்றுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

2025 வரவு செலவுத் திட்டம் மூலம் வைத்தியர்களுக்கு அவர்களின் உரிமைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடு முழுவதும் உள்ள வைத்திய சாலைகளில் 7,000 வைத்தியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நாட்டில் வைத்தியர்கள் தங்கியிருப்பதை நீட்டிப்பதன் மூலம் இலவச சுகாதார சேவைகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட 2025 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்துக்கான முன்மொழிவை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சமர்ப்பித்துள்ளது.

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்த முன்மொழிவுகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கும். அனைத்து வகை வைத்தியர்களுக்கும் தகுதிகள், செயல்திறன் மற்றும் சந்தை மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு தனித்துவமான சம்பள அமைப்பு அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என பிரபாத் சுகததாச தெரிவித்துள்ளார்.

கால்நடை வைத்திய சாலைகளில் மருந்துகளை 10% விலைக் கழிவில் பெற்றுக் கொள்ளலாம் – எஸ்.வசீகரன்

0

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து கால்நடை வைத்திய அலுவலகங்களிலும் கால்நடைகளுக்கான பெரும்பாலான மருந்துகளை அதன் உச்சபட்ச சில்லறை விலையைவிட 10 சதவீதம் குறைவாகப் பெற்றுக் கொள்ள முடியும் என வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் தெரிவித்தார்.

2000ஆம் ஆண்டு காலப் பகுதிகளிலும் கால்நடை வைத்திய அலுவலகங்களில் கால்நடைகளுக்கான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டன. ஆனாலும், அந்த நடைமுறை சில காரணங்களால் பின்னர் நிறுத்தப்பட்டது.

எனினும் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பெரும்பாலான மாகாணங்களில் இன்றும் அரச கால்நடை வைத்திய அலுவலகங்களூடாக கால்நடைகளுக்கான பல்வேறு மருந்துவகைகளும் நியாயமான விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

பண்ணையாளர்களின் சிரமங்களை குறைக்கும் வகையில் சில கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக மருந்துகள் விற்பனை செய்யப்பட்டன. அது தொடர்பில் தொடர்ச்சியாக பண்ணையாளர்களால் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரச கால்நடை வைத்தியர்கள் கௌரவ வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை சந்தித்து பண்ணையாளர்கள் மருந்துகளை பெறுவதிலுள்ள சிரமங்கள் தொடர்பாக வலியுறுத்தியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து மாகாணப் பணிப்பாளர் அலுவலகத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஆளுநரால் அனுமதிக்கப்பட்டதன் அடிப்படையில் விசேட நிதி ஒதுக்கப்பட்டு கால்நடை மருத்துவர்களின் கோரிக்கைப்படி தெரிவு செய்யப்பட்ட அவசியமான மருந்து வகைகள் கொள்வனவு செய்யப்பட்டு சகல கால்நடை வைத்திய அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் பண்ணையாளர்களின் மருந்து தேவைகளை அலுவலகங்களிலேயே நிவர்த்தி செய்யவும் குறைந்த விலையில் மருந்துகளை பெற்றுக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வசதியை பெப்ரவரி மாதம் முதல் பண்ணையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும். இவற்றை சில்லறை விலையை விட 10 சதவீதம் குறைவாகப் பெற்றுக்கொள்ளவும் முடியும்.

இது தொடர்பான விலைப்பட்டியல் கால்நடை வைத்திய அதிகாரிகள் பணிமனையில் காட்சிப்படுத்தப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் குறிப்பிட்டார்.

error: Content is protected !!