எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார சேதத்திற்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்குமாறு சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இழப்பீடு திறைசேரியின் செயலாளருக்கு வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணைக்குழுவுக்கு பொறுப்பான அப்போதைய அமைச்சர் நாலக்க கொடஹேவா, இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியதன் மூலம் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த சம்பவத்தால் ஏற்பட்ட சேதங்களுக்காக பேராயர் கரத்தினால் மெல்கம் ரஞ்சித் உட்பட பல தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுக்கள் தொடர்பில், தலைமை நீதிபதி முர்து பெர்னாண்டோ தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அணுவாயுதங்களை சுமந்து செல்லக் கூடிய திறன் கொண்ட மூலோபாயக் குண்டுவீச்சு விமானங்களைக் கொண்டு உக்ரைன் மீது பெரும் தாக்குதலைத் தொடுத்ததைத் தொடர்ந்து, நேட்டோ படைகள் உடனடியாகப் போர் விமானங்களை அனுப்பி வான்வெளியில் உஷார் நிலையை எட்டியுள்ளன.
மூன்று நாட்களுக்குள் இரண்டாவது முறையாக நேட்டோ படைகள் இவ்வாறு போர் விமானங்களை அனுப்பியுள்ளது, ஐரோப்பிய வான்வெளியில் நிலவும் பதட்டமான சூழலை மேலும் அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக உக்ரைன் மீது ரஷ்யா தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது. குறிப்பாக, சமீபத்திய தாக்குதலில், ரஷ்யாவின் Tu-22M3 மூலோபாயக் குண்டுவீச்சு விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் குண்டுவீச்சு விமானங்கள், அணுவாயுதங்களை ஏந்திச் செல்லக் கூடியவை என்பதால், நேட்டோ உறுப்பு நாடுகள் உடனடியாக விழிப்படைந்துள்ளன.
சமீபத்திய தாக்குதலில், 600-க்கும் மேற்பட்ட டிரோன்கள் மற்றும் 26 Kh-101 குரூஸ் ஏவுகணைகள் உட்பட, சுமார் 700-க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல் சாதனங்களை ரஷ்யா உக்ரைன் மீது ஏவியுள்ளது.
இது போரின் தொடக்கத்திலிருந்து ரஷ்யா நடத்திய மிகத் தீவிரமான குண்டுவீச்சுத் தாக்குதல்களில் ஒன்றாகும் என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்குப் பதிலடியாகவும், தங்கள் வான்வெளியைப் பாதுகாக்கவும், நேட்டோ உறுப்பு நாடுகளின் போர் விமானங்கள் போலந்து எல்லைப் பகுதிக்கு அவசரமாக அனுப்பப்பட்டுள்ளன.
நேட்டோ படைகள், ரஷ்ய போர் விமானங்கள் தங்கள் வான்வெளிக்கு அருகே “வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளில்” ஈடுபட்டபோது, இது போல் பலமுறை போர் விமானங்களை அனுப்பியுள்ளன.
ஆனால், அணுவாயுதத் திறன் கொண்ட குண்டுவீச்சு விமானங்களின் அச்சுறுத்தல், தற்போதைய பதட்டத்திற்குப் புதிய பரிமாணத்தை அளித்துள்ளது.
இந்தச் சம்பவம், அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே ஏற்கனவே நிலவி வரும் பதட்டமான சூழலை மேலும் அதிகரித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனில் அமைதியை ஏற்படுத்த புடினுக்கு 50 நாட்கள் கெடு விதித்து, இல்லையெனில் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று எச்சரித்திருந்த பின்னணியில் இந்தத் தாக்குதல்கள் வந்துள்ளன.
நேட்டோ படைகளின் இந்த உடனடிப் பதில், ரஷ்யாவின் எந்தவொரு ஆத்திரமூட்டலையும் தடுக்கவும், நேட்டோ உறுப்பு நாடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் கூட்டணி உறுதியுடன் உள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தொடர்ச்சியான தாக்குதல்களும், நேட்டோ பதிலடிகளும் கிழக்கு ஐரோப்பாவில் ஸ்திரமற்ற தன்மையை மேலும் அதிகரிக்கின்றன.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று காலை சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காலை நடைப் பயிற்சியின் போது லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதையடுத்து, மருத்துவப் பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நேற்றுக் காலை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். இந்த நிகழ்ச்சி தேனாம் பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு முதலமைச்சர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார்.
மருத்துவமனையில் அவருக்கு முழு உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், மருத்துவர்கள் அவருக்கு சில முக்கிய அறிவுரைகளையும் வழங்கியுள்ளனர். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என முறைகேடுகள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு அறிவித்துள்ளதாக சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்ரமரத்ன பாராளுமன்றத்தில் இன்று(22) அறிவித்தார்.
தேஷபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்காக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த குழுவின் அறிக்கை தம்மிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.
தேஷபந்து தென்னகோன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் முறைகேடுகள் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை இடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் தலைவராக உயர் நீதிமன்ற நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன செயற்படுகின்றார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தவிசாளர் ஓய்வு பெற்ற நீதிபதி நீல் இத்தவெல மறறும் தேசிய பொலிஸ் ஆணைக் குழுவின் தவிசாளர் E.W.M.லலித் ஏக்கநாயக்க ஆகியோரும் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புரிமைகளை இரத்து செய்வது தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
1986ஆம் ஆண்டின் 04ஆம் இலக்க ஜனாதிபதிகளுக்கான உரிமை சட்டமூலத்தை நீக்குவது தொடர்பான சட்டமூலமாக இது சமர்ப்பிக்கப்படவுள்ளது.
குறித்த சட்டமூலத்தை தயாரிப்பதற்காக கடந்த ஜூன் 16ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதுடன், அதற்கமைய தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்ட மாஅதிபரின் அனுமதி கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தையிட்டியில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு விகாராதிபதி ஜின்தோட்ட நந்தராம தேரருக்கு வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சுகிர்தனால் குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது
தையிட்டிஇறை, முத்துக்கலட்டி என்னும் பகுதியில், தனக்குச் சொந்தமான ஆதனத்தை, ஜின்தோட்ட நந்தராமதேரர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து அங்கு புதிய கட்டுமானம் ஒன்றை அமைத்துவருகின்றார் என்று பொதுமகன் ஒருவர் முறைப்பாடு வழங்கியுள்ளார்.
இதையடுத்தே குறித்த பகுதிக்கு ஜின்தோட்ட நந்தராம தேரர் உரித்தாளர் என்றால் அதற்குரிய ஆவணங்களை ஒப்படைக்குமாறும், இல்லையேல் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறும் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சுகிர்தன் கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும், அவ்வாறு வெளியேறாவிடின், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தனது கடிதத்தில் தவிசாளர் தெரிவித்துள்ளார்.
யாழில் இரு வாரங்களுக்கு முன்னர் திருமணம் செய்த சுவிஸ் மாப்பிள்ளை விவாகரத்துக்கு தயாராவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மாப்பிள்ளையின் இந்த முடிவால் பெண் வீட்டினர் நிலைகுலைந்து போயுள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
சுவிஸ் வாழ் 30 வயதான இளைஞனுக்கும், யாழ் தென்மராட்சியை சேர்ந்த 25 வயதான யுவதிக்கும் சில நாட்களின் முன்னர் திருமணம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் மணமகளான் யுவதிக்கு ஏற்கனவே காதலன் இருப்பதாக விசமிகள் யாரோ AI மூலம் சித்தரித்து பெறப்பட்ட புகைப்படத்தை மாப்பிள்ளைக்கு அனுப்பியதாக கூறப்படுகின்றது.
அதனை உண்மையென நம்பிய புது மாப்பிள்ளை, பெண்ணிடம் அது தொடர்பில் ரகளை பண்னியதாக கூறப்படுகின்றது.
எனினும் அப்படி எதுவும் இல்லையென பெண் வீட்டினர் நியாயப் படுத்தியும் அதனை ஏற்காத மாப்பிள்ளை, தனியே கொழும்பு சென்றதுடன் பெண்னிடம் விவாகரத்து பெற முயல்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் வெளிநட்டு மாப்பிள்ளையால் மகளின் வாழ்க்கை கேள்விகுறியில் இருப்பதாக பெண்ணின் பெற்றோர் அதிச்சியடைதுள்ளதாக கூறப்படுகின்றது.
யாழ், வடமராட்சியில் கணவனால் தீமூட்டி எரிக்கப்பட்ட குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வடமராட்சி துன்னாலை பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
கடந்த 17ஆம் திகதி 38 வயதான குடும்பப் பெண்ணொருவர் தீயில் எரிந்த நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவர் ஆபத்தான நிலையில் இருந்ததால் உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அவர் பொலிசாரிடம் வழங்கிய வாக்குமூலத்தில், தனது கணவர் தன்னை எரித்ததாக தெரிவித்திருந்தார். கசிப்பு குடித்து விட்டு வந்த கணவன், வேறொரு ஆணுடன் அந்த பெண்ணுக்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டு, தகராறில் ஈடுபட்ட பின்னர், அந்த பெண்ணை தீமூட்டி எரித்துள்ளார்.
யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்னி இன்று உயிரிழந்தார். அவரது கணவர் நெல்லியடி பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
வவுனியா தாண்டிக்குளத்தில் உள்ள மாடு அறுக்கும் மடுவம் தொடர்பாக பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அங்கு பல பிரச்சனைகள் உள்ளது. இதனை அரசியலாக்குவது பர்ஸ்சான் தலைமையிலான அரசியல் கட்சியே என்று வவுனியா மாநகரசபையின் முதல்வர் சு.காண்டீபன் தெரிவித்துள்ளார்.
வவுனியா தாண்டிக்குளத்தில் உள்ள மாடு அறுக்கும் மடுவத்தில் தற்போது ஏற்ப்பட்டுள்ள பிரச்சனை தொடர்பாக கருத்து கேட்ட போது முதல்வர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
மின்சாரசபையால் இதுவரை அனுப்பப்பட்ட பட்டியலுக்கு அமைய திங்கட்கிழமை நிலுவையிலுள்ள மின் கட்டணத்தை செலுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும். அந்த செயற்பாடுகளை சபையின் நிர்வாக அதிகாரியே செய்கின்றார். இதனை அரசியலாக்குவது பர்ஸ்சான் தலைமையிலான அரசியல் கட்சியே.
தாண்டிக்குளம் மாடு அறுக்கும் மடுவத்தில் அதிகமான மாடுகள் அறுக்கப்படுகின்றது. அவை வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுவதால் எமது மாவட்டத்தில் மாடுகளின் விலை அதிகரித்துள்ளது.
கால்நடைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன் மக்களின் வாழ்வாதாரத் தேவைக்காக வளர்க்கப்படும் கால்நடைகள் கூடக் திருடப்படுகின்றது. அண்மையில் கூட ஓமந்தையில் ஒருவருக்கு சொந்தமான 20 மாடுகள் களவாடப்பட்டுள்ளது. எனவே இவற்றை தடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை நாம் விதிக்க வேண்டும்.
அத்துடன் மடுவத்தில் அறுக்கப்படும் ஒருகிலோ மாட்டு இறைச்சிக்காக சபைக்கு 10 ரூபாவே கட்டணமாக செலுத்தப்படுகின்றது. கடந்த 25 வருடங்களாக இந்த தொகையே அறவிடப்படுகின்றது. ஆனால் தேறிய இலாபமாக குறைந்தது கிலோக்கு 800ரூபாயை அவர்கள் பெறுகின்றனர்.
எனவே இவற்றை திருத்தி சபையின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும். அந்தவகையில் பர்ஸ்சானின் நடவடிக்கை தொடர்பாக மாநகரசபையின் அடுத்த அமர்வில் கூடி கலந்துரையாடப்பட்டு ஒழுக்காற்று முடிவுகள் எடுக்கப்படும்.
ஒரு மாநகரசபை உறுப்பினர் சபையின் வியாபாரத்தை தன்னுடையது என்று சொல்லி செய்ய முடியாது. சபை உறுப்பினராக சத்தியப் பிரமாணம் எடுப்பதற்கு முன்னரே அவர் அதனை வேறு ஒருவருக்கு மாற்றிக் கொடுத்திருக்க வேண்டும்.
ஆகவே அவர் மக்களுக்கான பிரச்சினைக்காக அல்ல, தனது வர்த்தகத்திற்கு மாடுகளை வெட்டுவதற்காகவா மாநகரசபைக்கு வந்துள்ளார் என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது என்றார்.