பாடசாலை உபகரணங்களைப் பெற்றுக் கொள்வதற்கு பிள்ளைகளுக்கான கொடுப்பனவு வழங்கும் வேலைத் திட்டத்தை இவ்வாண்டிலும் நடைமுறைப் படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அஸ்வெசும உரித்துள்ள குடும்பங்களிலுள்ள பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக ஒரு மாணவன் அல்லது மாணவிக்கு 6,000 ரூபா கொடுப்பனவை நலன்புரிகள் நன்மைகள் சபை மூலமாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அஸ்வெசும வேலைத் திட்டத்தில் உள்வாங்கப்படாததும், ஆனாலும் கொடுப்பனவு கிடைக்க வேண்டியவர்கள், நாடளாவிய ரீதியில் 300 பிள்ளைகளுக்கும் குறைவாகவுள்ள பாடசாலைகளில் கல்வி கற்கின்ற மாணவர்கள், பிரிவெனாக்கள் மற்றும் துறவுப் பெண்கள் ஆச்சிரமங்களில் கல்வி பயில்கின்ற மாணவர்கள் மற்றும் துறவு மாணவர்கள், சிறுவர் அபிவிருத்தி நிலையங்களிலுள்ள பாடசாலை செல்லும் மாணவர்களுக்காக ஒருவருக்கு 6000 ரூபா கொடுப்பனவை கல்வி. உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஊடாக செலுத்துவதற்கும், 2025 ஆம் ஆண்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டத்தை இவ்வாண்டிலும் நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி. உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாடு முழுவதிலும் மழையுடனான வானிலை நாளை முதல் குறைவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது .
கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
மேல் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 – 35 km வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
கொழும்பு தொடக்கம் புத்தளம் ஊடாக மன்னார் வரையான அத்துடன் ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி அதிகரித்து வீசக் கூடும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாக் காணப்படும்.
கல்வி மறுசீரமைப்பு செயல்முறை ஒன்றின் அவசியத்தை ஏற்றுக் கொள்வதாகவும், புதிய கல்வி மறுசீரமைப்புகளின் போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகவும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.
ஜனாதிபதி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (13) பிற்பகல் ஜனாதிபதி தலைமையில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடல் நடைபெற்றது.
அரசாங்கம் முன்னெடுத்துள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு செயல்முறை குறித்து இங்கு ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி இதன்போது தெளிவுப்படுத்தியுள்ளார்.
முதலாம் தரத்திற்கான மறுசீரமைப்பு பணிகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும். மொடியூல்களை தயாரிப்பதில் நிலவும் பிரச்சினைகள், ஆசிரியர் பயிற்சிகளில் ஏற்படும் தாமதம் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களைத் தவிர்த்துக் கொண்டு, 06 ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்புகளை 2027 ஆம் ஆண்டில் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டார்.
கல்வி மறுசீரமைப்பு செயல்முறை ஒன்றின் அவசியத்தை ஏற்றுக் கொள்வதாகவும், புதிய கல்வி மறுசீரமைப்புகளின் போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகவும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
மாகாணங்களுக்கு இடையிலான ஆசிரியர் இடமாற்றங்கள், பதவியுயர்வுகள், சம்பள முரண்பாடுகள் மற்றும் அதிபர் சேவையில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும் இக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
23ஆயிரத்து 344 பேரை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கிய அறிவுறுத்தல்களுக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
குறித்த விடயத்தை அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரச சேவையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையிலான குழு பரிந்துரை வழங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, 23ஆயிரத்து 344 ஆசிரியர்களும் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அரச சேவைக்கு 26,095 புதியவர்களை சேர்ப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
யாழில் சட்டவிரோதமாக மணல் கடத்திய டிப்பருடன் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் இந்த கைது நடவடிக்கை நேற்று (12) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில் சட்டவிரோதமாக நீண்ட காலமாக மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த டிப்பர் ஒன்றினையே மருதங்கேணி காவல்துறையினர் இவ்வாறு கைப்பற்றியுள்ளனர்.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (12) அதிகாலை குறித்த இடத்தை திடீரென மருதங்கேணி காவல் துறையினர் சுற்றி வளைத்துள்ளனர்.
இதையடுத்து, சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிக்கொண்டு சென்றகொண்டிருந்த டிப்பருடன் சாரதியை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சாரதி டிப்பருடன் மருதங்கேணி காவல் நிலையத்தில் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்ட நபரை கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரானில் தற்போது நிலவி வரும் கடுமையான உள்நாட்டுக் கலவரங்களை ஒடுக்க, அந்நாட்டு அரசு இணைய சேவையை முழுமையாக முடக்கியுள்ளது.
இதற்குப் போட்டியாக எலோன் மஸ்க் தனது ‘ஸ்டார்லிங்க்’ சேவையை ஈரானில் இலவசமாகச் செயல்படுத்தினாலும், முன்பை விட இம்முறை ஈரான் தொழில்நுட்ப ரீதியாகத் தன்னைத் தயார்படுத்தியுள்ளது.
Starlink இணையத்தை யாராலும் தடுக்க முடியாது என்ற பிம்பத்தை ஈரான் இன்று உடைத்துள்ளது.
ஸ்டார்லிங்க் மூலம் அனுப்பப்படும் தரவுகள் Data packets ஈரானின் பல பகுதிகளில் 80% வரை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதை டிஜிட்டல் பாதுகாப்பு வல்லுநர்கள் உறுதி செய்துள்ளனர்.
ஈரான் தனது வான்வெளியில் சுமார் 5,000 கி.மீ சுற்றளவிற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அதிநவீன Military-grade Jammers களை பயன்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது வெறும் சிக்னல் தடங்கல் மட்டுமல்ல, செயற்கைக்கோள்கள் மற்றும் தரைத்தள முனையங்களுக்கு இடையிலான அதிர் வெண்களை (Frequencies) முற்றிலுமாக மறைக்கும் ஒரு Electronic Shield என்று வர்ணிக்கப்படுகிறது.
இந்தத் தடுப்பு நடவடிக்கைக்குப் பின்னால் ரஷ்யா அல்லது சீனாவின் தொழில்நுட்ப உதவி இருக்கலாம் என்று மேற்குலக நாடுகள் சந்தேகிக்கின்றனர்.
உண்மையில் இது ஈரானிய உள்நாட்டுப் பொறியாளர்களின் திறமையின் மூலம் உருவாக்கப்பட்டது, எத்தகைய செயற்கைக் கோள் தொழிநுட்பத்தையும் முடக்கும் ஆற்றல் ஈரானியர்களுக்கு உண்டு .
starlink போன்ற “தோற்கடிக்க முடியாத” தொழிநுட்பங்கள் கூட ஒரு தேசத்தின் இறையாண்மை மற்றும் ராணுவ பலத்திற்கு முன்னால் தோல்வியடைந்து விட்டது என்பது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரன் மற்றும் கரைதுறைப் பற்று உதவிப் பிரதேசசெயலாளர் ஆகியோரை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன். 12.01.2025நேற்று நேரில் சென்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
மிக முக்கியமாக இச்சந்திப்பில் கேப்பாபுலவில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள மக்களின் காணிகளின் விபரங்களை மாவட்டச் செயலாளர் மற்றும் கரைதுறைப்பற்று உதவிப் பிரதேச செயலாளரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன் போது கோரியிருந்தார்.
குறிப்பாக கடந்த 07.01.2026அன்று பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டம் இடம்பெற்றபோது கேப்பாப்புலவில் தமிழ் மக்களுக்குரிய காணிகள் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும், விடுவிக்கப்படாத காணிகளுக்கு பதிலீட்டுக் காணிகள் வழங்கப்பட்டதுடன், வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ அதிகாரிகளால் ஜனாதிபதியிடம் பொய்யான தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இவ்வாறு இராணுவத்தினரால் வழங்கப்பட்ட பொய்யான தகவலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேப்பாப்புலவில் 55பேருக்குரிய 59.5ஏக்கர் காணிகளும் 4பேருக்குரிய 100ஏக்கர் மத்திய வகுப்புக் காணிகளுமாக மொத்தம் 59 பேருக்குரிய 159.5 ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் கேப்பாப்புலவில் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதியிடம் உண்மை நிலையினை சுட்டிக் காட்டியிருந்தார்.
இதன் போது கேப்பாப்புலவு காணிவிடுவிப்பு விடயம் தொடர்பாக அறிக்கையொன்றினைச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவால் இராணுவத்தினரிடம் கோரப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள 159.5ஏக்கர் மக்களின் காணிகள் தொடர்பான உண்மையான விபரங்களை ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் திட்டமிட்டுள்ளார்.
அந்த வகையியில் கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளின் விபரங்கள், ஆவணங்கள் என்பவற்றை முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் மற்றும் கரைதுறைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் ஆகியோரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கோரியுள்ளார்.
இந்நிலையில் விரைவாக அந்த ஆவணங்கள் மற்றும் விவரங்களை கையளிப்பதாக மாவட்டச்செயலாளர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ஆகியோரால் இதன் போது பதில் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இச்சந்திப்பில் முல்லைத்தீவு மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்தி விடயங்கள் தொடர்பிலும் கவனஞ் செலுத்தப்பட்டிருந்தன. அத்தோடு முல்லைத்தீவு மாவட்ட செயலக திட்டமிடல் பிரிவினர் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி.மஞ்சுளாதேவி சதீசன் ஆகியோரையும் இதன் போது சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மாவட்டத்தின் அபிவிருத்தி விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.
அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு சட்டமானால் நாட்டில் ஜனநாயகம் இல்லாதொழியும். இந்த சட்டவரைவை நீக்க கோரி மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அறிவுறுத்த வேண்டும் என்று முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரிடம் வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் கண்டி அஸ்கிரிய பீடத்துக்கு சென்று மகாநாயக்க தேரரை சந்தித்து கலந்துரையாடும் போது மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய கல்வி கொள்கை பல்வேறு தரப்பிலும் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது என்பதற்காக அரசாங்கம தான்தோன்றித்தனமாக செயற்பட முடியாது.
பொதுமக்களுடன் எவ்விதமான வெளிப்படையான கலந்துரையாடல்களும் இல்லாமல் தான் அரசாங்கம் புதிய கல்வி கொள்கையை அமுல்படுத்தியுள்ளது. நாட்டின் கலாசாரத்துக்கு எதிராக விடயங்களை கல்வி கொள்கையில் உள்ளடக்கினால் அது விளைவுகளை ஏற்படுத்தும்.
புதிய கல்விக் கொள்கை தொடர்பில் அரசாங்கம் சகல தரப்பினருடனும் வெளிப்படையான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்விடயத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயற்பட வேண்டும்.
நீதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை காட்டிலும் பாரதூரமானது.
பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு சட்டமானால் நாட்டில் ஜனநாயகம் இல்லாதொழியும், ஊடக சுதந்திரம் அரச அடக்குமுறைக்கு உள்ளாகும். ஆகவே இந்த சட்டவரைவை நீக்குமாறு மாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மக்களின் அடிப்படை உரிமையை மீறும் நாட்டை மீண்டும் பின்னுக்கு கொண்டு செல்லும் அரசாங்கத்தின் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் அரசியல் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கம் கொண்டுவந்துள்ள புதிய அரசுக்கு எதிரான பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் பல விடயங்கள் மக்களின் அடிப்படை உரிமையை மீறும் வகையில் அமைந்துள்ளன. அதேநேரம் எமது நாடு சர்வதேச நாடுகளால் ஒதுக்கப்பட்டு மீண்டும் பின்னுக்கு கொண்டு செல்லும் ஆபத்து இருக்கிறது. அதனால் இந்த சட்டமூலம் தொடர்பில் அனைவரது கருத்துக்களையும் கேட்டறிந்து செயற்படுத்த வேண்டும்.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நாட்டில் அமுல் படுத்தப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் எமது நாட்டுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP வரிச் சலுகை ரத்துச் செய்யப்பட்டிருந்தது. இதனால் எமது நாட்டின் ஆடை உற்பத்தி வீழ்ச்சியடைந்தது. என்றாலும் நல்லாட்சி அரசாங்கத்தில் மீண்டும் ஜீ.எஸ்.பி வரிச் சலுகையை எங்களுக்கு பெற்றுக் காெள்ள முடியுமாகியது.
அதனால் புதிய பயங்கரவாத எதி்ர்ப்பு சட்ட மூலத்தில் தெரிவிக்கப்படும் சில விடயங்கள் சர்வதேச நாடுகளுடன் நாங்கள் செய்து கொண்டிருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு எதிரான விடயங்கள் உள்வாங்கப்பட்டிருக்கிறதா? அரசாங்கம் தேர்தல் காலத்தில் தெரிவித்த வாக்குறுதிகளுக்கு மாற்றமான விடயங்களை உள்ளடக்கி இருக்கிறதா என நாங்கள் பார்க்க வேண்டும். இந்த புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்த்தின் தகவல்களை தகவல் அறியும் சட்டத்தின் மூலமும் பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறது.
அன்று இவர்கள் எதிர்க்கட்சியில் இருக்கும்போது சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தத்தைக் கூட கைச்சாத்திடுவதற்கு இடமளிக்காமல் போராட்டம் மேற்கொண்டு வந்தார்கள். இந்திய எதிர்ப்பு கொள்கையை கடைப்பிடித்து வந்தார்கள். ஆனால் இன்று இந்தியாவுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம் குறித்து எந்த தகவலும் வெளிப்படுத்தவில்லை. ஒப்பந்தத்தின் மூலம் கச்ச தீவை தற்காலிகமாக இந்தியாவுக்கு வழங்கியுள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது.
மேலும் இந்த அரசாங்கம் பொய் வாக்குறுதிகளை வழங்கே ஆட்சிக்கு வந்தது. தொடர்ந்தும் பொய்யாலே ஆட்சியை கொண்டு செல்ல முயற்சிக்கிறார்கள். நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதாக தெரிவித்த அடிப்படை நிவாரண தொகைகளை இன்னும் வழங்கி முடிக்கவில்லை. அனர்த்தத்தில் மரணித்தவர்களின் எண்ணி்க்கையைக் கூட இன்னும் உத்தியோகபூர்வமாக அரசாங்கம் அறிவிக்கவில்லை.
வடக்கு, வட-மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் இடைக்கிடையே பல தடவைகள் மழை பெய்யக் கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்பிரதேசங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யக் கூடும்.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம்.
மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக் கூடும்.
நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 – 35 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
சிலாபம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான அத்துடன் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 கிலோ மீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாக் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.