Sunday, June 28, 2026
Huis Blog Bladsy 32

ஆங்கிலப் பாடப் புத்தகம் தொடர்பில் எடுக்கப்பட்ட அதிரடித் தீர்மானம்..!

0

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய 6ஆம் தர ஆங்கிலப் பாடப் புத்தகம் தொடர்பில் கல்வி நிபுணர்களுடன் தீவிர ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய பக்கத்தை நீக்கிய பின்னர், அவ்விடத்தில் புதிய திருத்தப்பட்ட பக்கத்தை அச்சிட்டு இணைப்பதா அல்லது மாற்று ஏற்பாடுகளைச் செய்வதா என்பது குறித்து மூன்று திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ தெரிவித்தார்.

மேலும், பாடப்புத்தகத்தின் உள்ளடக்கத்திற்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலும், அரசாங்கத்திற்கு ஏற்படும் மேலதிக செலவுகளைக் குறைக்கும் வகையிலும் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவுள்ளது.

தரம் 6 மாணவர்களுக்காக சுமார் 350,000 புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இதற்காக 6 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. எனவே, முழுப் புத்தகத்தையும் மீண்டும் அச்சிடப் போவதில்லை எனவும், பிரச்சினைக்குரிய பக்கத்தை மாத்திரம் அகற்றிவிட்டு நிபுணர்களின் ஆலோசனைப்படி குறித்த விடயத்திற்கு தீர்வு காணப்படும் எனவும் கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அரச சொத்து துஸ்பிரயோகம்; முன்னாள் அமைச்சரை வலைவீசித் தேடும் பொலிசார்..!

0

சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் புதல்வர் ஜோஹான் பெர்னாண்டோ பொலிஸ் நிதிச் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை அவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் எதனோல் நிறுவனத்தின் பணிகளுக்காகப் பயன்படுத்தியதாக முறைப்பாடு அளிக்கப்பட்டது.

இதன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 2.5 இலட்சம் ரூபாய் (250,000) நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய, ஜோஹான் பெர்னாண்டோ குருநாகலில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார்.

இவருக்கு எதிராக பணச் சலவை தடுப்புச் சட்டம், பொதுச் சொத்துச் சட்டம், அரசாங்கச் சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தல் மற்றும் குற்றவியல் மோசடி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

தையிட்டி விஹாரை சட்டவிரோதம் என தீர்ப்பளித்தால் ஏற்க தயார் – விஹாராதிபதி பகிரங்கம்

0

யாழ் – தையிட்டி விஹாரைப் பிரச்சினைக்கு முறையான தீர்வு எட்டப்படும் வரையில், விஹாரை வளாகத்திற்குள் எவ்விதமான புதிய கட்டுமானப் பணிகளும் முன்னெடுக்கப்பட மாட்டாது என தையிட்டி திஸ்ஸ விஹாரையின் விஹாராதிபதி ஜின்தோட்டே நந்தாராம தேரர் உறுதியளித்துள்ளார்.

தையிட்டி விகாரையில் நேன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் 3ஆம் திகதி பௌர்ணமி தினத்தில் விகாரையில் வழமையான பூஜை வழிபாடுகள் மாத்திரமே நடைபெறும் எனத் தெரிவித்த அவர், அன்றைய தினம் எவ்வித விசேட பூஜைகளுக்கும் தாம் இடமளிக்கவில்லை எனத் தெளிவுபடுத்தினார்.

தெற்கிலிருந்து புத்தர் சிலை கொண்டு வரப்படுவதாகவும், விசேட பெரஹரா நடைபெறவுள்ளதாகவும் பரவும் செய்திகளுக்கு அவர் மறுப்பு தெரிவித்ததுடன், அத்தகைய நிகழ்வுகளுக்குத் தாம் எவ்வித அனுமதியும் வழங்கவில்லை என்றும், அரசியல் நோக்கங்களுக்காகக் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், விஹாரை அமைந்துள்ள தனியார் காணிகள் தொடர்பான சர்ச்சையை விசாரிக்க அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள புதிய குழுவிடம் விஹாரைக்குரிய ஆவணங்கள் கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதேபோன்று, காணிக்கு உரிமை கோருபவர்களும் தங்களது ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் இது ஒரு சட்டவிரோதமான செயல் எனத் தீர்ப்பளிக்கப்பட்டால், அதனை ஏற்க நான் தயாராக உள்ளதாகவும் விஹாராதிபதி இதன் போது பகிரங்கமாகத் தெரிவித்தார்.

இந்தநிலையில் அரசாங்கக் குழுவின் விசாரணைகளுக்கு மதிப்பளித்து, இறுதித் முடிவு எட்டப்படும் வரை விகாரை வளாகத்தில் எவ்விதமான புதிய கட்டுமானங்களையும் மேற்கொள்ளப் போவதில்லை என அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

காணி விடுவிப்புத் தொடர்பாக இதுவரை எவரும் தன்னுடன் நேரடியாகப் பேசவில்லை என்றும், தற்போது அரசாங்கக் குழுவின் விசாரணைகளே நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வெகு சிறப்பாக நடைபெற்ற தெற்கு தமிழ் பிரதேச சபையின் கெளரவிப்பு நிகழ்வு..!

0

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் 2025ம் ஆண்டுக்கான உத்தியோகத்தர் மற்றும் ஊழியர் கௌரவிப்பு நிகழ்வு தவிசாளர் பாலகிருஸ்ணன் பாலேந்திரன் அவர்களின் தலைமையில் சபையின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.சரத்சந்திர அவர்களும் சிறப்பு விருந்தினராக மேலதிக அரசாங்க அதிபர் நா.கமலதாசன், வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாபன், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் இ.ரதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கடந்த பேரிடர் காலப் பகுதியில் சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளின் மீட்பு நடவடிக்கைகள், இடர் முகாமைத்துவ செயற்பாடுகள், உதவி வழங்கல் ஆகியவற்றை சபையின் தவிசாளர் தலைமையில் திறம்பட முன்னெடுத்த தொழினுட்ப உத்தியோகத்தர்கள், வருமானவரி பரிசோதகர்கள் மற்றும் ஏனைய நிரந்தர, அமைய ஊழியர்களுக்கான விருதுகளும் மெச்சுரைகளும் வழங்கப்பட்டன.

மேலும் இடர்கால மீட்பு பணியில் பணியாற்றிய சபையின் ஊழியர்களுக்கு உபதவிசாளர் கோணேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்களின் சொந்த நிதியில் உலருணவு பொதிகளும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் 2024ம் ஆண்டு பிரதேச சபைகளுக்கிடையிலான தரப்படுத்தலில் தேசிய ரீதியில் 3ம் இடத்தை பெற்று “சுவர்ணபுரவர” விருதினை தனதாக்கி கொண்ட மேற்படி சபையின் செயலாளர், உத்தியோகத்தர்களுக்கு விருதுகளும் மெச்சுரைகளும் வழங்கப்பட்டன.

தொடர்ந்து தேசிய ஆவணமாக்கல் சபையால் கடந்த வருடம் தேசிய வாசிப்பு மாத போட்டிகளை திறம்பட நடாத்திய நூலகங்களில் சபையின் ஆளுகைக்குட்பட்ட கூமாங்குளம் நூலகம் தேசிய தரப்படுத்தலில் உள்வாங்கப்பட்டதை கெளரவிக்கும் வகையில் நூலக உத்தியோகத்தர்களுக்கு விருதுகளும் மெச்சுரைகளும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் சபையின் சகல உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் கெளரவிக்கப்பட்டதுடன் இந்த நிகழ்வு எதிர்வரும் காலங்களில் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் மேலும் ஆர்வத்துடனும் திறம்படவும் மக்களுக்கு சேவையாற்ற ஊன்றுகோலாய் அமையுமென சபையின் தவிசாளர் இதன்போது தெரிவித்தார்.

சிறுமி உயிரிழப்பு விவகாரம்; இரு மருத்துவர்கள் தற்காலிக இடைநிறுத்தம்..!

0

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் கடந்த 21 ஆம் திகதி உணவு ஒவ்வாமையினால் அனுமதிக்கப்பட்ட சிறுமி மருத்துவர்களின் சிகிச்சையின் பின்னர் உயிரிழந்துள்ளமை மருத்துவமனையின் நிர்வாகத்தின் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து முல்லைத்தீவு சமூகம் இன்று நீதி வேண்டிய கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் முன்பாக இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது இந்த போராட்டத்திற்கு மாவட்டத்தில் உள்ள சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட அமைப்பினர் ஆதரவினை தெரிவித்துள்ளார்கள்.

உயிரிழந்த சிறுமியின் உருவப்படங்களை தாங்கிய பதாதைகைள கையில் வதை;து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.அதனை தொடர்ந்து கோரிக்கை அடங்கிய மனு ஒன்றும் மாவட்ட மருத்துவமனை பணிப்பாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு வழங்கியுள்ளார்கள்.

டினோயாவுக்கு நடந்த கொலை தொடர்பிலான உண்மைத் தன்மையினை பணிப்பாளர் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியர்களுக்கும், தாதியர்களுக்கும் நீங்கள் தொடர்ந்தும் அரசாங்க சேவையில் அமர்த்த அனுமதிக்கின்றீர்களா? அரசாங்க கோவைகளை அழிக்கவோ, கிழிக்கவோ, காணாமல் ஆக்கச் செய்யவோ உங்கள் அதிகாரிகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளீர்களா?

தொடர்ந்து இவ்வாறான நீதி நெறிமுறைகளுக்கு முரணாக செயல்படும் வைத்தியர்களுக்கும் தாதியர்களுக்கும் இவ்வாறான நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? வைத்தியசாலையை திறம்பட நடத்துவதற்காக கொலைச் சம்பவங்கள் நடைபெறாதிருக்க பாதுகாப்பான தரமான சிகிச்சை முறைவ வழங்க பணிப்பாளரின் எதிர்கால திட்டங்களை மக்களுக்கு தெளிவு படுத்தவும்.

சிற்றூழியர்கள், தாதியர்கள் அரசாங்க கடமைகளுக்கு ஒழுங்காக சமூகமளிக்கின்றார்கள் என்பதனை கண்கூடாக அவதானிக்கின்றோம் ஆனால் 15 நாட்கள் வேலை செய்யும் வைத்தியர்களுக்கு முழுமாத சம்பளம் மேலதிக நேர கொடுப்பனவு வழங்கப்படுகின்றது எந்த அனுமதியும் இல்லாமல் விடுமுறைகளை எடுக்கின்ற வைத்தியர்களுக்கு முழு மாத கொடுப்பனவையும் பெறுவதற்கு ஏன் துணை போகின்றீர்கள்?

கண்சிகிச்சை பிரிவில் கிழமையில் திங்கள்,புதன்,வெள்ளி ஆகிய நாட்களில் மட்டும் நடைபெறுகின்றது ஆனால் வைத்தியசாலையினை நம்பி மாவட்டத்தில் உள்ள மக்களும் அந்த சேவையினை நாடி வருகின்றார்கள் எனவே தினமும் கண்சிகிச்சை பிரிவு செயற்பட கோரி நிக்கின்றோம்.வைத்தியர்கள் கடமை நேரத்தில் அலுவலகத்தில் நிற்பதை உறுதிப்படுத்தல் வேண்டும்.

போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனு கையளிக்கப்பட்டுள்ளதுடன் இந்த மனுவின் பிரதிகள் சுகாதார அமைச்சர், சுகாதார பணிமனை செயலாளர் நாயம்,வடமாகாண ஆளுநர்,மாவட்ட செயலாளர், செயலாளர் வடமாகாண சுகாதார சேவைகள் பணிமனை, பிராந்திய சுகாதாதார சேவைப் பணிப்பாளர் முல்லைத்தீவு, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் நளின் பிரேமதாஸ சிறுமி உயிரிழப்பு தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் வடமாகாண சுகாதார திணைக்களம் இது தொடர்பில் ஆறுபேர் கொண்ட குழு 12 மணிநேரம் விசாரணை செய்துள்ளார்கள்.

அவர்களின் அறிக்கை வந்ததன் பின்னர்தான் சரியான முடிவு சொல்ல முடியும் என்றும் தற்போது இரண்டு மருத்துவர்களை தற்காலிகமாக வேலையிலிருந்து நிறுத்தியுள்ளதாகவும் போராட்ட காரர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்து கவனயீர்ப்பினை நடத்திய போராட்டகாரர்கள் மனுக்களை அங்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கிவிட்டு கலைந்து சென்றுள்ளார்கள்.

ஆளுநருக்கா பின்கதவு செயலாளருக்கா அதிகாரம் வெடித்தது புதிய சர்ச்சை..!

0

பிரதேச பாடசாலை ஒன்றின் அதிபராகவுள்ள ஒருவர் 30 வருட காலத்திற்கும் அதிகமாக குறித்த பாடசாலையில் அதிபராக கடமையாற்றி வருகின்றார்.

இது தொடர்பில் பொதுமக்கள் மற்றும் பாடசாலைச் சமூகம் கடந்த ஆட்சிக் காலத்தில் பல தடவைகள் ஆர்ப்பாட்டம் செய்தும் அப்போதைய ஆட்சியாளர்களின் ஆதரவுடன் பாடசாலையில் தொடர்ச்சியாக அதிபராகக் கடமையாற்றி வந்துள்ளார்.

மாணவர்களுக்கு கொடுக்கும் உணவுக்கான நிதியில் பாரியளவு மோசடிகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றமை தொடர்பாகவும், அதிபரின் ஏனைய சில்மிசங்கள் மற்றும் ஊழல், முறைகேடுகள் தொடர்பாகவும், ஆசிரியர்கள் முரண்பட்டால் அவர்களை தனக்கு இருக்கும் அதிகார செல்வாக்கு காரணமாக இடம்மாற்றம் வழங்கி பந்தடித்து வந்துள்ளார்.

அதிபரின் ஊழல் மற்றும் துர்நடத்தைகள் தொடர்பாக தற்போதைய ஆளுநருக்கு தெரியப்படுத்திய போது அதிபரை உடனடியாக கல்விப் பணிமனையில் இணைக்குமாறு ஆளுநர் உத்தரவிட்டும் இதுவரை அவர் பாடசாலையை விட்டு விலகவில்லை எனத் தெரிய வருகின்றது.

ஊழலுக்கு எதிரான அரசாங்கத்தின் ஆசிரிய சங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவரை குறித்த அதிபர் ஏதோ ஒரு விதத்தில் உள்வாங்கி அவரைப் பயன்படுத்தி ஆளுநரை சாந்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆனாலும் ஆளுநர் தொடர்பில் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என குறித்த பின்கதவு அதிகாரி ஆளுநரின் உத்தரவை குப்பைக் கூடைக்குள் போட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

அதிபரை புனிதராக்கும் நடவடிக்கையில் கல்வி உயரதிகாரிகள் நடவடிக்கை எடுத்து செயற்பட்டு வருவதுடன் அதிபரின் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு ஒரு குழுவை அமைத்துள்ள போதும் அந்தக் குழு, பாடசாலை விடுமுறை விட்ட பின் அதிபருக்கு தாம் பாடசாலைக்கு வரப் போகின்றோம் என தெரியப்பட்டுத்தியுள்ளார்கள்.

இதன் காரணமாக அதிபரின் ஏற்பாட்டில் அதிபருக்கு சார்பான சிலரை பாடசாலைச் சமூகம் எனும் பெயரில் ஆயத்தப்படுத்தி அதிபர் நல்லவர் என விசாரணைக் குழு வந்த போது அதிபரின் துாண்டுதலில் தெரிவித்துள்ளார்களாம்.

குறித்த விசாரணைக் குழு எப்போது வந்தது எனத் தெரியாது அதிபரால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பாடசாலைச் சமூகம் கடும் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் உள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இதேவேளை குறித்த பின்கதவு அதிகாரி தனக்கு கீழ் உள்ளவர்களை மனச்சாட்சி இல்லாது பந்தாடி வரும் நிலையில் தனது உறவினரான பெண் முகாமைத்துவ அலுவலர் ஒருவரை வவுனியாவிலிருந்து யாழிற்கு கடந்த அரசாங்கத்தின் அமைச்சரின் செல்வாக்கில் 1 1/2 வருடத்தில் சட்ட விரோதமாக இடமாற்றம் வழங்கியுள்ளார்.

ஊழல், மோசடி, அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபடும் குறித்த பின்கதவு அதிகாரி தற்போதைய அரசாங்கத்திலும் அமைச்சர் ஒருவரின் வால்பிடியாக மாறியுள்ள நிலையில் அவரை எதுவும் செய்ய முடியாதுள்ளமை கல்விக்கும் அனுர அரசாங்கத்தின் கொள்கைக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஆறாம் தர ஆங்கில பாடப் புத்தகத்தில் தவறான மோசமான இணையப் பக்கம்..!

0

ஆறாம் தர ஆங்கில மொழிப் பாடப் பயிற்சிப் புத்தகத்தில் பொருத்தமற்ற இணைய தளமொன்றின் பெயர் இடம்பெற்றுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஆறாம் தர ஆங்கில மொழிப் பாடப் பயிற்சிப் புத்தகத்தில் பொருத்தமற்ற இணையத்தளமொன்றின் பெயர் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கிடைத்த முறையப்பாட்டை கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தொடரப்பட்ட விசாரணைகளில் அந்தத் தகவல் உண்மையெனத் தெரிய வந்துள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய கல்வி நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இந்தப் புத்தகங்களின் அச்சிடும் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து, குறித்த பயிற்சிப் புத்தகங்களை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்தியுள்ள கல்வி அமைச்சு, இது தொடர்பில் அவசர விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளது.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக நாளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றைச் செய்யவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் தொடர் மக்கள் சந்திப்புக்களை நடாத்திய ரவிகரன் எம்.பி..!

0

மன்னார் மாவட்டத்தின் இருவேறு இடங்களில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 30.12.2025 இன்று மக்கள் குறைகேள் சந்திப்புக்களை நடாத்தினார்.

அந்த வகையில் முத்தரிப்புத் துறையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்திலும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் மக்கள் குறைகேள் சந்திப்புக்கள் நடாத்தப்பட்டிருந்தன.

இந்த மக்கள் குறைகேள் சந்திப்புக்களில் மக்கள் பலரும் கலந்து கொண்டு தமது கோரிக்கைகளையும், குறைபாடுகளையும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முன் வைத்தனர்.

மேலும் குறித்த மக்கள் குறைகேள் சந்திப்புக்களின் போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் மாவட்டக் கிளைப் பிரமுகர்கள், நகரசபை மற்றும், பிரதேசசபை உறுப்பினர்கள் என பலரும் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட மகளீர் அணி தெரிவு..!

0

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட மகளீர் அணியின் நிர்வாகத் தெரிவு இன்று (30/12) இடம்பெற்றது.

கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகமான தாயகத்தில் இடம்பெற்ற மேற்படி தெரிவுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் வவுனியா மாவட்டக் கிளை தலைவருமாகிய மருத்துவர் ப.சத்தியலிங்கம், மாவட்ட உபதலைவர் பாலச்சந்திரன் சிந்துஜன், செயலாளர் ந.கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது கட்சியின் வவுனியா மாவட்ட மகளீர் அணியின் தலைவியாக பிரதேசசபை உறுப்பினர் திருமதி.தர்சினி கேதீஸ்வரன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். செயலாளராக பிரதேச சபை உறுப்பினர் திருமதி.பத்திமா கெபிரியேல் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.

பொருளாளராக மாநகரசபை உறுப்பினர் திருமதி.யோகேஸ்வரி அவர்களும் உப தலைவியாக பிரதேச சபை உறுப்பினர் திருமதி.சரோஜாதேவி அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

தொடர்ந்து நிர்வாக சபை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மருத்துவமனையில் அனுமதி..!

0

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.

அதன்படி, அவர் மஹர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதேசமயம் டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்பு தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் நேற்று பகிரங்கமாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் தொடர்பில் இதுவரை எவ்வித சிக்கல்களும் ஏற்படவில்லை என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார கூறியுள்ளார்.

எனினும் டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள் அல்லது முறைப்பாடுகள் இருப்பின் அவற்றை முறையாக சமர்பிக்கும் பட்சத்தில், அவற்றை ஆராயந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சுட்டிக் காட்டியுள்ளார்.

டக்லஸின் ஸில் துப்பாக்கி தொடர்பில் திட்டமிட்ட குற்றக்குழு தலைவரான மாகந்துரே மதுஷ் வழங்கிய தகவலுக்கு அமைய, டக்ளஸ் தேவானந்தா குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.

இலங்கை இராணுவத்தினால், டக்ளஸ் தேவானந்தாவிற்கு உத்தியோக பூர்வமாக வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று வெலிவேரிய பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பான விசாரணைக்கு சென்ற டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டு எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள்ளமை குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!