நாடு முழுவதும் தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் கனமழை மற்றும் வெள்ளப் பேரழிவுகளின் காரணமாக ஏற்பட்ட மரண எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது என அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல பகுதிகளில் வெள்ளம், மண்சரிவு மற்றும் கட்டிடங்களுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது. அபாயப் பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
இலங்கைக்கு தென்கிழக்கே நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்திற்குள் படிப்படியாக காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கிச் சாய்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணித்தியாலங்களுக்குள் ஆழமான தாழ்வு மண்டலமாக மேலும் தீவிரமடைய அதிக வாய்ப்புள்ளது.
இந்த தாக்கம் காரணமாக, நாட்டில் நிலவும் கனமழை மற்றும் பலத்த காற்று நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்படும் எதிர்கால எச்சரிக்கைகளுக்கு கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வடமத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிக கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், வடக்கு, மத்திய, சபரகமுவ, ஊவா, மேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் 150 மில்லிமீட்டருக்கும் அதிக மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும். அத்துடன், நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசக்கூடும்.
இதேவேளை, கனமழை மற்றும் பலத்த காற்றினால் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இன்றிலிருந்து (27) மறு அறிவிப்பு வரும் வரை பாடசாலைகள் மூடப்படும்.
கிழக்கு மாகாண ஆளுனரின் ஊடகப் பிரிவு நேற்று (26) இரவு 9.33 இற்கு இத் தவலை வெளியிட்டுள்ளது.
மேலும், நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக நவம்பர் 30 ஆம் திகதி வரை கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (உயர் தர) பரீட்சை இரண்டு நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) அறிவித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக்க லியனகே விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, இன்றைய தினம் (நவம்பர் 27) மற்றும் நாளைய தினம் (நவம்பர் 28) ஆகிய இரு தினங்களிலும் பரீட்சை நடைபெறாது என அவர் தெரிவித்துள்ளார்.
புதிய பரீட்சைத் திகதிகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என இந்திக்க லியனகே குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) யாழ் மாவட்ட அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம், பேட்ரியாட்ஸ் நெட்வொர்க்கின் இலங்கை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பேட்ரியாட்ஸ் நெட்வொர்க் என்பது உலகம் முழுவதிலுமிருந்து அரசியல் செய்திகள் மற்றும் புதுப்பிப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு சர்வதேச அமைப்பாகும்.
கீதநாத் காசிலிங்கத்தின் நியமனம், அமைப்பின் உலகளாவிய நடவடிக்கைகளில் இலங்கையின் ஈடுபாட்டை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவை நாட்டுப் பற்று என்ற முன் கோட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் வலதுசாரி சிந்தனைகளை கொண்டிருப்பதுடன் உலகம் முழுவதும் இத்தகைய தரப்பினர் தாய்நாட்டு உணர்வைத் தூண்டி சமூக பிரிவுபடுத்தலில் ஈடுபடுவதாக சில விமர்சனங்கள் உள்ளன.
நாட்டில் தற்போது 365,951 பேர் வேலையில்லாமல் இருப்பதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (26) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 4.5 ஆக இருந்த வேலையின்மை விகிதம் 2025 ஆம் ஆண்டில் 3.8 ஆகக் குறைந்துள்ளதாக அவர் கூறினார்.
இதே நேரத்தில், 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 4.7 ஆக இருந்த வேலையின்மை விகிதம் 2025 இல் 3.8 ஆகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
கல்வித் தகுதிகளின் அடிப்படையில் க.பொ.த சாதாரண தரத்திற்குக் கீழே உள்ள 103,308 பேரும் க.பொ.த சாதாரண தரத்தில் தேர்ச்சி பெற்றவர்களில் 91,405 பேரும் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கையில் அடங்குவர்.
மேலும் க.பொ.த உயர்தரத்தில் தேர்ச்சி பெற்ற 128,984 பேரும் , இளங்கலைப் பட்டம் மற்றும் உயர் கல்வித் தகுதிகள் பெற்ற 42,254 பேரும் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கையில் அடங்குவதாகப் பிரதமர் தெரிவித்தார்.
இவர்களில், 12,000க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு ஏற்கனவே வேலை வழங்கப்பட்டுள்ளது, மீதமுள்ளவர்களுக்கும் கொள்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி வேலை வழங்கப்படும்.
இதற்கிடையில், ஆசிரியர் நியமனங்கள் தொடர்பான வழக்குகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவும், மேல்முறையீட்டு நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக இது குறித்து அறிவித்தவுடன் ஆட்சேர்ப்பு தொடங்கும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் வாகனங்களுக்கான “தடைபட்ட தேவை” தற்போது ஸ்திரமடைந்து வருவதாகவும், சந்தை நிலைமைகள் மேம்படுவதால் வாகனங்களின் விலை மேலும் குறையும் என்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் நாணயக் கொள்கை மீளாய்வுக் கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜூலை, ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் திறக்கப்பட்ட கடன் கடிதங்கள் அதிகரித்தமையால் வாகனங்களுக்கான தேவை எதிர்பார்த்ததை விட அதிகமாக காணப்படுகிறது.
எவ்வாறாயினும், கடந்த இரண்டு மாதங்களாக இந்தத் தேவை குறைந்து வருவதாகவும், இது தொடர்ந்தும் குறைவதற்கான அறிகுறிகள் காணப்படுவதாகவும், இந்தத் தேவைக் குறைவு, மோட்டார் வாகனங்களின் விலை மேலும் வீழ்ச்சியடைய வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் மத்திய வங்கியின் தரவுகளின்படி, இலங்கை இதுவரை 1.2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியான வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதேநேரம் சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதிவசதியின் கீழான ஐந்தாவது தவணைக் கடன் எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி அங்கீகரிக்கப்படும் என நம்பப்படுகின்றது.
அதன்பின்னர் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி ஆகியவற்றிலிருந்தும் டிசம்பர் மாதம் நிதி உதவி கிடைக்க இருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
வருட இறுதிக்குள் வெளிநாட்டுப் பண அனுப்பல்கள் மற்றும் சுற்றுலா வருமானம் ஆகியவையும் உயரும் என்பதால், உரிய இலக்கை அடைய முடியும் என்றும் அவர் மேலும் விளக்கினார்.
நெடுந்தீவிலிருந்து உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் மீண்டும் வட மாகாண கல்வி அமைச்சுக்கு விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் கொண்டு கொண்டு வரப்பட்டுள்ளன.
வானிலை மாற்றம் காரணமாக, வட மாகாணத்தின் நெடுந்தீவில் அமைந்துள்ள தேர்வு மையத்திலிருந்து க.பொ.த. உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் இலங்கை விமானப் படையினரால் (26 ) இன்று இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான பெல் 212 ஹெலிகாப்டர் மூலம் வட மாகாண கல்வி அமைச்சு அலுவலகத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
யாழ் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெவ்வேறு இடங்களில் போதைப் பொருள் குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 07 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 10 நாட்களுக்குள், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 08 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் ஏழுபேர் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானமை உறுதியானது.
இந்நிலையில் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை 07 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
புலம்பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க செய்து கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை அல்லது அதற்கான முன்னெடுப்பு ஆமை வேகத்தில் செல்வதற்கு எதிராக காட்டப்பட்ட எதிர்ப்பே லண்டன் போராட்டம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி எதிர்க்கட்சியில் இருக்கும் போது ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று புலம்பெயர் தமிழ் மக்களிடம் பல சுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். அச்சந்தர்ப்பத்தில் என்னென்ன வாக்குறுதிகளை வழங்கினார் என்று எமக்கு தெரியாது.
அரசாங்கம் வடக்கு – கிழக்கு இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு மற்றும் காணி விடுவிப்பு தொடர்பில் தேர்தலின் போது பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர்.
அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசின் செயற்பாடுகள் மந்த கதியிலும் எதிர்பார்க்கப்படும் வெளிப்பாடுகள் இல்லாமை போன்றவை லண்டன் ஆர்ப்பாட்டத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.