Saturday, March 14, 2026
Huis Blog Bladsy 56

ஆளுநர் தலைமையில் நடைபெற்ற கல்வி மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல்..!

0

அனலைதீவு, எழுவைதீவு பிரதேச கல்வி மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை (31.10.2025) நடைபெற்றது.

இது தொடர்பான முதலாவது கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயசந்திரன், மேற்படி பிரதேசங்களுக்கு நேரடியாக களப் பயணம் மேற்கொண்டு தனது அவதானிப்புக்களை சமர்ப்பித்திருந்தார்.


அதற்கு அமைவாக எடுக்கப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் தொடர்பிலும் இன்றைய கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.

அத்துடன் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களைத் தயார் படுத்தும் முகமாக யாழ் இந்துக் கல்லூரியின் ஆதரவுடன் அந்த மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கும் இன்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இந்தக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் – நிர்வாகம், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் ஆகியோர் பங்கேற்றனர்.

யாழ். பல்கலையில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் வெளியாகிய சந்தேகம்..!

0

தமிழர்களின் அடையாளமான யாழ்.பல்கலைக் கழகத்தில் நேற்றைய தினமும், இன்றைய தினமும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் மிகவும் முக்கியமான பேசுபொருளாக மாறியுள்ளது.

ஆனால், குறித்த சம்பவம் தொடர்பில் அங்கிருந்த பொலிஸாரிடமோ, படைத் தரப்பினரிடமோ பரபரப்பு தன்மை அற்று இருந்ததாக ஊடகவியலாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.


அத்தோடு, மீட்கப்பட்ட ஆயுதங்கள் 2008 அல்லது 2009 ஆண்டு காலப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கார்த்திகை மாதத்தில் பாதுகாப்பு படையினரின் கெடுபிடிகள் அதிகரிக்கப்படுவது வழமை.இந்த நிலையிலே குறித்த சம்பவம் பாதுகாப்பு படையினரின் கெடுபிடிகளை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் செய்யப்பட்டதா என்கின்ற கேள்வி எழுகின்றது.


மேலும், பல்கலைக் கழகத்தில் மீட்கப்பட்ட துப்பாக்கி பாகங்கள், வயர்கள், T – 56 ரக துப்பாக்கி போன்றவை புதியது போன்று காணப்படுவதால் அவை நவம்பர் மாத அஞ்சலியை இலக்கு வைத்து அண்மைக் காலங்களில் கொண்டு வந்து வைக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

யாழில் பாண் விற்கும் முச்சக்கர வண்டியில் போதைப் பொருள் விற்பனை..!

0

முச்சக்கர வண்டியில் பாண் விற்பணையில் ஈடுபட்டு வந்த ஒருவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைதாகியுள்ள சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில், பதிவாகியுள்ளது.

காவல் துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய நாவற்குழி பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இதேவேளை, ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் ஜந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

ஒரு பெண் மற்றும் நான்கு ஆண்கள் உள்ளிட்ட ஐவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதன் போது, ஒவ்வொருவரிடமிருந்தும் மொத்தமாக 4 கிராம் 530 மில்லி கிராம் ஹெரோயன் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக யாழ்ப்பாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்துடன், தொடர்புடைய ஐந்து சந்தேகநபர்களும், மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளனர்.

எரிபொருள் விலை குறைப்பு; வெளியாகிய அதிரடி அறிவிப்பு..!

0

மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

நடைமுறைக்கு வரும் வகையில் இன்று (31) நள்ளிரவு 12.00 மணி முதல் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டது.

குறித்த அறிவிப்பை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டிருந்தது.

இந்தநிலையில், தற்போதைய விலைத் திருத்த அறிவிப்பின் படி இரண்டு பிரதான எரிபொருள் வகைகளின் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.


இதனடிப்படையில், லங்கா பெற்றோல் 92 ஒக்டேன் லீற்றரின் விலை 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 294 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், லங்கா சூப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 லீற்றரின் விலை 05 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 318 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றுமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அரச வைத்தியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்..!

0

நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் இன்று காலை 8.00 மணி முதல் முன்னெடுக்கப்படவிருந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.


அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த சங்கம் இதனை அறிவித்துள்ளது.


நேற்று (30) இரவு சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ (தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு), சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் இடையே நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது எட்டப்பட்ட இணக்கத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

திருகோணமலையை உலுக்கிய இரட்டை கொலை வழக்கு; சிறுமிக்கு நீதிமன்றின் உத்தரவு..!

0

திருகோணமலையில் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுமிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு நேற்றைய தினம் (30) பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

மூதூரில் கடந்த (2025.03.14) அன்று நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (30) திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.


இதில் கொலைக் குற்றச்சாட்டுக்கு உள்ளான 15 வயது சிறுமி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி தனது அம்மம்மா மற்றும் அம்மம்மாவின் சகோதரி ஆகிய இருவரை கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், நேற்று (30) திருகோணமலை மேல் நீதிமன்றில் சிறுமி முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது, சிறுமியின் கல்வி கற்கும் உரிமை, அவர் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்தமை மற்றும் அரசியல் அமைப்பில் சிறுவர்களின் சட்ட உரிமை தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு அவரை பிணையில் விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


குறித்த உத்தரவை திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம். அப்துல்லாஹ் பிறப்பித்திருந்தார். நீதிமன்றம் சிறுமிக்கு கடுமையான நிபந்தனைகளுடன் பிணை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில், காசிப் பிணை: 25,000 ரூபாய் மற்றும் பத்து லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

அத்தோடு, சிறுமியின் செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமை சிறுமியைப் பற்றிய முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என மூதூர் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தருக்கு நீதிவான் அறிவுறுத்துதல் வழங்கியுள்ளார்.


சிறுமி சார்பாக சட்டத்தரணி எம்.எம்.நஸ்லீம் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறுவர்களின் எதிர்காலத்தையும் மற்றும் கல்வி கற்கும் உரிமையையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முக்கிய முடிவாகப் இத்தீர்ப்பு காணப்படுவதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய ரீதியில் இரண்டாம் இடம் பிடித்து சாதித்த மன்னார் மாவட்டம்..!

0

இந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில், மொனராகலை மாவட்டத்தில் 97.9% என்ற அதிகபட்ச எழுத்தறிவு விகிதம் பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் 97.3% என்ற இரண்டாவது அதிகபட்ச எழுத்தறிவு விகிதம் பதிவாகியுள்ளது.


மிகக் குறைந்த எழுத்தறிவு விகிதம் உள்ள மாவட்டமாக மட்டக்களப்பு தெரிவாகியுள்ளதுடன் அம் மாவட்டத்தில் 88.0% ஆக பதிவாகியுள்ளது.

தன்னை விடுதலை செய்யக் கோரிய எழுத்தாணை மனு நாளை உயர் நீதிமன்றில்..!

0

பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை மேலும் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், பிள்ளையானின் அடிப்படை உரிமை மீறல் தொடர்பான எழுத்தாணை உத்தரவு மனு மீதான விசாரணை நாளை நடைபெறவுள்ளது.


அதன் நிமித்தம் பிள்ளையானின் சட்டத்தரணியான முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு சென்று பிள்ளையானை சந்தித்தார்.

இதன்போது வழக்கு தொடர்பில் அவருடன் கலந்துரையாடியதாக உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கம் தெரிவித்து வருகிறது.


எனினும், கிழக்கின் பேராசிரியர் ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலேயே, அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அதன்படி, தடுப்புக் காவல் உத்தரவுக்கு அமைய சுமார் ஏழரை மாதங்கள் பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


இதனடிப்படையில், தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையில் எவ்வித அடிப்படையும் இல்லை எனவும், இதனூடாக தனது உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் அறிவித்து உத்தரவிடுமாறு கோரி, பிள்ளையான் தாக்கல் செய்த எழுத்தாணை மனு நாளை உயர் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

அரசுக்கு 1,277 மில்லியன் ரூபாய்களை செலுத்த வேண்டிய மருத்துவ அதிகாரிகள்..!

0

சேவையில் இருந்து விலகிய, அரச மருத்துவ அதிகாரிகள் 1,277 மில்லியன் ரூபாய்க்கும் அதிகளவான நிதியை, அரசுக்கு செலுத்த வேண்டியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி நிலவரப்படி, இந்த தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசினால் அறவிடப்பட வேண்டிய பிணை முறி, தண்டப் பணம் மற்றும் கடன் முற்பண நிலுவைகளே இதற்குள் உள்ளடங்குகின்றன.


விசேட கணக்காய்வு அறிக்கை ஊடாக இந்த விடயம் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், பல காரணங்களுக்காக, வெளிநாடு செல்லும் மருத்துவ அதிகாரிகள் சேவையை விட்டு விலகுவது மற்றும் சேவையை கைவிடுவது போன்ற செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.


அதே நேரம் இந்த நிதியை அறவிடுவதற்கான நடவடிக்கைகளில் பல குறைபாடுகள் இருப்பதாகவும் கணக்காய்வு அறிக்கை குறிப்பிட்டுள்ளது.


2015 ஆம் ஆண்டு முதல், 2024 ஆம் ஆண்டு இறுதி வரை மொத்தம் 705 மருத்துவர்கள் தமது ஒப்பந்தத்தை மீறியுள்ளமை இந்த கணக்காய்வு அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

நாட்டின் தேசிய சுகாதாரக் கொள்கை குறித்து விரிவான கலந்துரையாடல்..!

0

தேசிய சுகாதாரக் கொள்கைகள் மற்றும் மூலோபாயங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்கும் நோக்குடன் “தேசிய சுகாதார அபிவிருத்தி குழு” கூடியுள்ளது.

மக்களுக்குத் தரமான, பயனுள்ள மற்றும் வினைத்திறன் மிக்க சுகாதார சேவையை வழங்குவது பற்றியும், எதிர்காலத்தில் நாட்டின் சுகாதாரக் கொள்கைகள் எவ்வாறு வகுக்கப்பட வேண்டும் என்பது பற்றியும் இக் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப் பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர், விசேட வைத்தியர் அனில் ஜாசிங்கவின் தலைமையில், இலங்கை மன்றத்தின் கேட்போர் கூடத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.


கடந்த வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் உரிய முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளனவா? என்பது பற்றியும், எதிர்காலத்தில் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியை முறையான திட்டத்தின்படி பயன்படுத்துவது பற்றியும் இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

error: Content is protected !!