வயம்ப பல்கலைக் கழக பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக் கட்டாயமாக தடுத்து வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் குறித்து பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு முறையான விசாரணை நடத்தி வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
வயம்ப பல்கலைக் கழகத்தில் கொரிய அரசாங்கத்தின் உதவியுடன் கட்டப்பட்ட தேசிய தொழில்நுட்பக் கல்லூரியை அதிகாரபூர்வமாக கையளிக்கும் தேசிய விழாவில் இன்று (03) பங்கேற்ற பின்னர், இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது பிரதமர் இவ்வாறு கூறினார்.
இந்த விசாரணை மிகவும் சுயாதீனமான மற்றும் பாரபட்சமற்ற முறையில் ஒரு குழுவால் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.
நிகழ்வைத் தொடர்ந்து, பல்கலைக் கழகத்தின் தற்போதைய மாணவர் தலைவர் உட்பட மாணவர்கள் குழு ஒன்று சம்பவம் குறித்து புகார் அளிக்க வந்திருந்தது.
அவர்களில் இருவருக்கு பிரதமரைச் சந்தித்து சம்பவம் குறித்து எழுத்து மூலமாகவும் வாய்மொழியாகவும் தெரிவிக்க வாய்ப்பு கிடைத்தது.
இராமேஸ்வரத்திலிருந்து மன்னாருக்கு படகு மூலம் வந்த இலங்கையைச் சேர்ந்த வர்த்தகர் உட்பட நால்வரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மன்னாரைச் சேர்ந்த அந்த வர்த்தகர், தனக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கு நடவடிக்கைகள் குறித்த அச்சத்தில் படகு வழியாக இராமேஸ்வரத்திற்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் அவர், தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
அவர் மீதான வழக்குகள் தற்போது முடிவடைந்த நிலையில் அவர் தமிழகத்தில் இருந்து மீண்டும் மன்னாருக்குத் திரும்ப முடிவு செய்துள்ளார்.
இராமேஸ்வரம் பகுதியில் இருந்து மன்னாருக்கு படகொன்றில் பயணித்துள்ளார்.
இந்நிலையில் இலங்கை கடற்பரப்பில் வைத்துக் குறித்த வர்த்தகர் உட்பட நால்வரும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடு பூராகவும் இரண்டு நாட்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் குதிக்க உள்ளதாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆசிரியர் பணியை உறுதிப்படுத்தி தருமாறு கோரி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தினை இன்று (03) திகதி முதல் மேற்கொள்ளவுள்ளனர்.
இலங்கை பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கணேசன் அனீரன் கையொப்பமிட்டு கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், தமக்கான ஆசிரியர் நியமனத்தை உறுதிப் படுத்தித்தராமல் கடந்த ஐந்து வருடங்களாக அபிவிருத்தி உத்தியோகத்தர் எனும் நியமனத்தின் ஊடாகவே தாம் கற்பித்தல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் தமக்கு ஆசிரியர் நியமத்தை வழங்காதமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 03.11.2025 திகதியும் நாளை 04.11.2025 திகதியும் நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறை போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை முழுவதும் 16600 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பாடசாலைகளில் இணைக்கப்பட்டு கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுன்னாகம் காவல் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் இன்றைய தினம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் திலக் தனபால இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நால்வர் ஹெரோயினுடன் சுன்னாகம் பொலிசாரால் கைது செய்யப்பட்டடனர்.
கைது செய்யப்பட்ட நால்வரும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். பின்னர் பிரதான சந்தேகநபரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய பொலிசார் அனுமதி கோரிய நிலையில் மன்றும் அதற்கு அனுமதி வழங்கியது.
தடுப்புக் காவல் விசாரணையின் பின்னர் குறித்த சந்தேகநபரை நேற்றைய தினம் மல்லாகம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற வேளை சந்தேகநபர் ஒருவர் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அந்த சம்பவத்தின்போது கடமையில் இருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் இன்றைய தினம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாப் பல்கலைக் கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் கடந்த 31ஆம் திகதி இரவு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்தார்.
எனினும், இந்த மரணத்திற்கு பகிடிவதை காரணமாக இருக்கலாம் என மாணவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர், அநுராதபுரம் ஜயசிறிபுர பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவர் என தெரிவிக்கப்படுகின்றது.
திடீர் சுகயீனம் காரணமாக அவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவர் உயிரிழந்த போது, அவரது உடலில் கணிசமான அளவு மதுபான செறிவு இருந்திருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
எவ்வாறாயினும், இந்தத் திடீர் மரணத்திற்கு பகிடிவதையே காரணம் என மாணவரின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
உயிரிழந்த மாணவரின் சகோதரி தெரிவிக்கையில், கடந்த 31ஆம் திகதி இரவு பல்கலைக் கழக மாணவர்களின் விருந்தொன்றில் சிரேஷ்ட மாணவர்கள் தனது சகோதரருக்கு பலவந்தமாக மதுபானம் வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தனது சகோதரனுக்கு வேறு எந்த நோயும் இருந்திருக்கவில்லை என்றும், பல்கலைக் கழகத்தில் இடம்பெறும் பகிடிவதை குறித்து பல தடவைகள் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
பாடசாலை நேரத்தை 30 நிமிடங்களால் நீடிப்பதன் மூலம், ஆசிரியர்களின் பாடசாலை நேரத்திற்குப் பின்னரான பணிச்சுமை குறையும் என கல்வி இராஜாங்க அமைச்சர் மதுர சேனவிரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ், தொகுதி முறை (Module) முறை அறிமுகப்படுத்தப் படவுள்ளதாகவும், இதன் மூலம் ஆசிரியர்களின் வேலைப்பளு பாடசாலை நேரத்திற்குள் மட்டுப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
அத்துடன் பாடசாலை நேரம் 30 நிமிடங்களால் நீடிக்கப்பட்ட பின்னர், ஆசிரியர்களுக்குப் போக்குவரத்து வசதிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த கல்வி மறுசீரமைப்பின் மூலம் கல்வித் துறைக்கு மிகவும் பயனுள்ள மாற்றம் நடைபெறுகிறது என தாம் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவளை புதிய நடைமுறையில் மாணவர்களுக்கு பயனுள்ள பல விடயங்கள் உள்ள போதும் ஆசிரியர்கள் விடுமுறை பெறுவதில் சிக்கல் நிலை காணப்படுவதுடன் பரிகாரக் கற்பித்தல் செயற்பாட்டை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பில் தெளிவான விளக்கம் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.
யாழ், சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாவற்குழி பகுதியில் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டிருந்த சோதனை நடவடிக்கையின்போது, உடமையில் 25 கிராம் ஹெரோயின் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி பொலிஸ் பொறுப்பதிகாரி கோணேஸ்வரன் தலைமையில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 36 வயதுடைய என தெரிவித்த பொலிசார் சந்தேக நபரையும் சான்று பொருளையும் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அண்மைக்காலமாக பல பகுதிகளில் போதை பொருள் பாவனைகள் அதிகரித்து வரும் நிலையில் பொலிஸார் தீவிர சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக சட்டத்தை அமுல்படுத்தச் சென்ற போது, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண்ணை எதிர்வரும் திங்கள் (3) வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உடுகம்பொல பகுதியில் கைது செய்யப்பட்ட குறித்த பெண் கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
lசந்தேகநபரான குறித்த பெண் காரை ஓட்டிச் சென்ற போது, போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக அவருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் முற்பட்டுள்ளனர்.
எனினும் குறித்த பெண், போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகின்றது.
அதன் போது தான் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவரின் சகோதரி எனவும் கூறியுள்ளார். எனினும் அவர் கூறியதில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.
இந்நிலையில் அந்த பெண் நடந்துக் கொண்ட விதம் தொடர்பான வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய குறித்த பெண்ணுக்கு எதிராக அபாயகரமான மற்றும் கவனக் குறைவான முறையில் வாகனம் செலுத்தியமை, பொலிஸாரின் சமிஞ்கையை மீறியமை, குற்றவியல் அத்துமீறல் மற்றும் வேறொருவர் போல ஆள்மாறாட்டம் செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கம்பஹா நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வழங்குமாறு சுமார் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக பாராளுமன்ற வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கோரிக்கையை பாராளுமன்றத் பிரதானிகளிடமும் பாதுகாப்பு தரப்பிடமும் முன் வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்தக் கோரிக்கைகள் தற்போது பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக அண்மையில் பொலிஸ் மாஅதிபரின் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்றும் நடத்தப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க சபாநாயகரும் பொலிஸ் மாஅதிபரும் இணக்கம் தெரிவித்திருந்தனர்.
எனினும், பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் துப்பாக்கிகளை வழங்க தீர்மானிக்கப்படவில்லை.
தற்போதைய அச்சுறுத்தல்கள் குறித்து மேற்கொள்ளப்படும் ஆய்வு ஒன்றின் பின்னரே, தகுதியானவர்களுக்கு துப்பாக்கிகளை வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
வவுனியாவின் சில கிராமங்களுக்கு இ.போ.சபை பேருந்தின் சேவை சீரின்மை தொடர்பில் கேள்வி எழுப்பிய வன்னி மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நடாளுன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரனுக்கும் இ.போ.சபை வவுனியா சாலை உதவி முகாமையாளருக்கும் இடையில் கடும் தர்க்கம் ஏற்ப்பட்டுள்ளது.
வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று (31.10) செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற போதே இந்த தர்க்க நிலை ஏற்பட்டது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
வவுனியாவின் கூமாங்குளம், கள்ளிக்குளம், கந்தபுரம், வேலங்குளம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு இ.போ.ச பேருந்து சேவை சீராக இடம் பெறுவதில்லை எனவும், இதனால் மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் பாதிக்கப்படுவதாகவும் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரனால் கேள்வி எழுப்பபட்டது.
இதற்கு பதில் அளித்த இ.போ.சபை வவுனியா சாலை உதவி முகாமையாளர்,
எமக்கு சாரதிகள், காப்பாளர்கள் பற்றாக்குறை உள்ளது. எங்களால் முடிந்தளவு நாம் செயற்படுகின்றோம். இல்லாதவிடத்து நடத்துங்கள் என்றால் எம்மால் எப்படி செயற்பட முடியும். நீங்களே எமக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த பேருந்து ஏன் வரவில்லை என கேட்கிறீங்கள்.
எங்களது இடத்தில் இருந்து பார்த்தால் எங்கள் நிலை தெரியும். விபத்து நடந்தால் நான் அந்த இடத்திற்கு போக வேண்டும். அப்போது பேருந்தை அனுப்ப சொன்னால் நான எப்படி அனுப்புவது எனத் தெரிவித்தார்.
இதன் போது குறுக்கிட்ட தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், அரச அதிகாரிகள் கதைக்கும் போது தெளிவாக கதைக்க வேண்டும். மக்கள் பிரதிநிதி ஒருவர் தனது தனிப்பட்ட பிரச்சினை கதைக்கவில்லை. மக்களது பிரச்சனையைத் தான் கதைக்கிறார்.
உங்கள் வேலையை விட்டு போங்கள். நான் இருந்து பார்க்கிறேன். என்ன கதைக்கிறீர்கள். கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கவும். மக்களது முறைப்பாடு வரும் போது உங்களிடம் தான் கேட்க முடியும். வீதியால் செல்பவனிடம் கேட்க முடியுமா. இது உங்களது கடமை. கேட்ட கேள்விக்கு பதில் வழங்குங்கள். சரியான முறையில் பதில் அளிக்க பழகிக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதன் போது பதில் அளித்த ஒருங்கிணைப்பு குழுர் தலைவரும், பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க, மக்கள் வரிப்பணத்தில் தான் உத்தியோகத்தர்கள் சம்பளம் பெறுகிறார்கள். எங்களுக்கு தேவைப்பாடுகள் இருக்கிறது.
மக்களது தேவைகள், அபிவிருத்தி தொடர்பில் இங்கு தான் கதைக்க முடியும். இதில் அமைதியாகவும், பொறுமையாகவும் கதைக்க வேண்டும். புத்திசாதுரியகமாக நடக்க வேண்டும். நாங்கள் உங்களை வரவேற்கின்றோம்.
இ.போ.சபைக்கு திறைசேரியில் இருந்து பெருமளவான பணத்தை ஒதுக்கீடு செய்கின்றோம். வவுனியா சாலை நட்டத்தில் இயங்குகின்றது. மக்கள் வரிப்பணத்தில் வவுனியா சாலைக்கும் பெருமளவு பணம் சம்பளத்திற்காக வழங்குகின்றோம். சங்கமாக கதைப்பதாக இருந்தால் வெளியில் வந்து அப்படி கதைக்க வேண்டும்.
இங்கு உள்ள பற்றாக்குறை தொடர்பில் எமக்கும் தெரியும். அது தொடர்பில் கதைப்பதானால் வெளியில் தான் கதைக்க வேண்டும். மக்களுக்கான சேவைக்காக தான் நிதி ஒதுக்கீடு செய்கின்றோம். அதற்கான சேவைவை உரிய கால அட்டவணை படி நீங்கள் செயற்பட வேண்டும், என்றார்.