Sunday, May 10, 2026
Huis Blog Bladsy 6

2026-ல் எரிபொருள் விலைகள் தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு..!

0

2026-ல் இலங்கையின் எரிபொருள் இறக்குமதி செலவுகள் கணிசமாக உயரக்கூடும் என்று இலங்கை மத்திய வங்கி கணித்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் புவிசார் அரசியல் நெருக்கடி மற்றும் உலகளாவிய எண்ணெய் சந்தையின் நிலையற்ற தன்மை காரணமாக, வரும் காலத்தில் எண்ணெய் விலைகள் உயர்வாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் மொத்த இறக்குமதி செலவுகளில் எரிபொருள் இறக்குமதி செலவுகள் ஒரு பெரும் பகுதியை உருவாக்குகின்றன என்றும், கடந்த 10 ஆண்டுகளில் மொத்த இறக்குமதிகளில் சராசரியாக கிட்டத்தட்ட 20% ஆக இருந்துள்ளன என்றும் மத்திய வங்கி சுட்டிக்காட்டுகிறது.

இருப்பினும், 2025-ல் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய இறக்குமதிகளின் அளவு அதிகரித்த போதிலும், மொத்த செலவு 2024-ல் 4.4 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 2025-ல் 4 பில்லியன் அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது.

கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் நிலக்கரி ஆகியவற்றின் விலைகளில் ஏற்பட்ட சரிவே இதற்கு முக்கிய காரணமாகும்.

சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, ஒரு பரல் கச்சா எண்ணெயின் சராசரி இறக்குமதி விலை 2024-ல் 84.7 அமெரிக்க டொலரிலிருந்து 2025-ல் 73.2 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டதாக ஜனாதிபதிக்கு ஊடக சங்கம் கடிதம்..!

0

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ஆலோசகர் ஒருவரால் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் முறைப்பாடொன்றைத் தாக்கல் செய்துள்ளது.

‘எகிபஸிக்கோ’ அமைதி நடைபயணத்தை செய்தியாக்கச் சென்ற அரசிற்குச் சொந்தமான ‘சண்டே ஒப்சேவர்’ பத்திரிகையைச் சேர்ந்த இரு ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டதாக அந்தச் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ஆலோசகர் சந்தன சூரிய பண்டாரவின் இத்தகைய நடவடிக்கைகளை சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளதுடன், அவர் ஒரு அரச அதிகாரிக்குரிய அதிகார வரம்பைத் தாண்டிச் செயற்பட்டதாகவும், நிகழ்வின் போது தனியார் ஊடக நிறுவனமொன்றுக்கு தேவையற்ற முன்னுரிமை அளித்து முறையற்ற வகையில் நடந்துகொண்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

அச்சுறுத்தலுக்கு உள்ளான இரு ஊடகவியலாளர்களும் அரச ஊடக நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஆலோசகரும் ஜனாதிபதி ஊடகப் பிரிவைச் சேர்ந்தவர் என்பது ஒரு முரணான விடயம் என்று அந்தச் சங்கம் சுட்டிக் காட்டியுள்ளது.

இந்த விவகாரத்தில் ஜனாதிபதி உடனடியாகத் தலையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ள அச் சங்கம், கடந்த கால அரசாங்கங்களின் ஊடக அடக்குமுறை நடைமுறைகளின் தொடர்ச்சியாகவே இந்தச் சம்பவம் தெரிவதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், பேச்சுச் சுதந்திரம் மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரம் மீதான கட்டுப்பாடுகள் குறித்த அண்மைக்கால விவாதங்கள் மற்றும் வெளிப்பாட்டு விவகாரங்களில் கலாசார அமைச்சு பாதுகாப்பு அமைச்சின் உதவியை நாடுவதாக வெளியாகும் செய்திகள் ஆகியவை தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடகக் கொள்கை எவ்வழியில் செல்கிறது என்பதைக் காட்டுவதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் தமது தொழில்முறை கடமைகளை கௌரவத்துடனும் சுதந்திரத்துடனும் முன்னெடுப்பதை உறுதி செய்யவும், அரச அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்கவும் ஜனாதிபதி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் துமிந்த சம்பத் மற்றும் செயலாளர் ரங்க பண்டாரநாயக்க ஆகியோர் கையொப்பமிட்ட இக்கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதியில் மாணவர்களுக்கு ‘ஸ்டைல் கட்’ முடி வெட்டிய சலூன்களுக்கு சீல்..!

0

பாடசாலை மாணவர்களுக்கு ‘ஸ்டைல்’ என்ற பெயரில் விசித்திரமாக முடி வெட்டி விட்ட சலூன்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு , மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உள்ள இரண்டு சிகை அலங்கார நிலையங்கள், மாணவர்களுக்கு நேர்த்தியான முறையில் முடி வெட்டாமல், ஒழுங்கற்ற முறையில் முடி வெட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது.

அது தொடர்பில் பாடசாலை அதிபர்கள் மற்றும் பெற்றோர்கள் விடுத்த தொடர் கோரிக்கையை அடுத்து,பிரதேச சபை தவிசாளர் மே.வினோராஜ் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மாணவர்களுக்கு முறையாக முடி வெட்டாதது உறுதி செய்யப்பட்டதை அடுத்து சலூன் உரிமையாளர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அத்துடன் குறித்த இரண்டு சிகை அலங்கார நிலையங்களும் தற்காலிகமாகப் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

திருக்கோணேஸ்வர ஆலய பகுதியில் விமானப் படைக்கு இடம் கோரப்பட்டுள்ளது..!

0

இலங்கையில் வரலாற்று பிரசித்தி பெற்ற சிவாலங்களுள் ஒன்றான திருக் கோணேஸ்வர ஆலய பகுதியில் இலங்கை விமானப் படையினால் ரேடார் அமைக்க இடம் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இத்திட்டத்திற்கு அனைத்து மக்களும் எதிர்ப்பு வெளியிட வேண்டும் என ஆலய நம்பிக்கை பொறுப்பாளர் சபை உறுப்பினர் ஜெயசங்கர் கருத்து தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

திருக்கோணேஸ்வர ஆலய நம்பிக்கை பொறுப்பாளர் சபையின் முதலாவது அங்கத்தவராக நான் இருக்கின்றேன். அத்துடன் ஆலயத்திற்கு 40 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றி வருகின்றேன். திருக்கோணஸ்வர ஆலயமானது 247 ஏக்கர் நிலப் பரப்பைக் கொண்டுள்ளது.

இதற்கு பிரித்தானியர் ஆட்சியில் வழங்கப்பட்ட சி.வி 217 என்ற இலக்கம் கொண்ட செம்பு உறுதி இந்தியாவில் உள்ள ஆதீனம் ஒன்றில் இன்னமும் பாதுகாப்பாக இருக்கின்றது. இந்நிலையில் ஆலய பகுதிகள் ஒவ்வொரு படையாலும் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

திருக்கோணேஸ்வர வாசலில் முதலாவதாக கேணி இருந்த இடத்தை மூடி ஸ்ரீ லங்கா இராணுவமும் அதனைத் தொடர்ந்து மத்தியில் பொலிஸ் கொட்டேச்சும் அதனைத் தொடர்ந்து நந்தி மலையில் கடற்படைத் தளமும் அமைந்துள்ளது.

இந்த நிலையில் ஆகாயப்படைத் தளத்திற்கும் இடத்தைக் கொடுத்தால் எமது நிலம் எங்கே என்று சிந்திக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படுகின்றோம். இதனால் கோணேசரின் இருப்பிடம் மட்டுமல்லாமல் சுற்றுலாத்துறையும் பாதிக்கப்படும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

ரேடார் கருவியை சீனக்குடா பகுதியிலேயே அமைக்க முடியும் அதை விடுத்து இங்கே அமைப்பதன் நோக்கம் என்ன என்றும் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

எனவே அனைத்து திருகோணமலை மக்களும் இணைந்து இதற்கு எதிர்ப்பு வெளியிட்டு நில அபகரிப்பை தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

கிளிநொச்சி மாணவியின் விபரீத முடிவால் துயரத்தில் உறவுகள்..!

0

கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் அமைந்துள்ள ஜெயபுரம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் தரம் 11 மாணவி உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாணவியின் திடீர் மரணம், குடும்பத்தினரும், நண்பர்களும், ஆசிரியர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த மாணவி விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. மாணவியின் மரணம் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலைகள் பிரச்சினைகளுக்கு தீர்வல்ல என்பதுடன், சட்டத்தினூடாக அதிபர் ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டுள்ள நிலையில் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு சிறு வயதிலிருந்தே தற்கொலைகள் பிரச்சினைகளுக்கு தீர்வல்ல பிரச்சினைகளை சவாலாக எடுத்து வென்று காட்ட வேண்டும் என்பதை போதிக்க வேண்டும்.

அதிபர் சேவைக்கான போட்டிப் பரீட்சை கால வரையறையின்றி பிற்போடப்பட்டது..!

0

இலங்கை அதிபர் சேவையின் தரம் 3 இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நாளை மறுதினம் (26) நடைபெறவிருந்த மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை, மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகேவால் இந்த உத்தியோகபூர்வ அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தவிர்க்க முடியாத காரணங்களினால் இந்த பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது. புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு நேரக் கட்டுப்பாடு – பொலிஸ் விசேட அறிவிப்பு

0

பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால காலவரையறைகள் குறித்து பொலிஸ் தலைமையகம் பொது மக்களுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்கள் நடைமுறையிலுள்ள சட்டதிட்டங்களுக்கு அமைய செயற்பட வேண்டும் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

பொலிஸ் அறிவித்தலின்படி, வாரத்தின் நாட்களைப் பொறுத்து ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கான கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,

திங்கள் முதல் வியாழன் வரை: காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை மட்டுமே அனுமதி
வெள்ளி மற்றும் சனிக்கிழமை: நள்ளிரவைத் தாண்டி அதிகாலை 1:00 மணி வரை அனுமதி நீடிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை : நள்ளிரவு 12:30 மணி வரை ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த முடியும்.
தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்கள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நிகழ்வுகளை நடத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த நேரக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

கட்சி உறுப்பினர்களை அழைக்காமல் கூட்டம் நடத்தியதாக சுமந்திரன் மீது குற்றச்சாட்டு..!

0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளை கூட்டம் நடைபெற்ற போது பெரும்பாலான வட்டுக்கோட்டை தொகுதிக் கிளை உறுப்பினர்களுக்கு கூட்டத்துக்கு அறிவித்தல் வழங்கவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குறித்த கூட்டமானது நேற்று முன்தினம் (23) இடம்பெற்ற நிலையில் சுமந்திரனுக்கு ஆதரவாக செயற்படுபவர்களுக்கே கூட்டத்துக்கு அறிவிக்கப்பட்டதாகவும், உப செயலாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலருக்கு அறிவிக்கவில்லை எனவும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தின் போது வட்டுக்கோட்டை தொகுதிக் கிளையின் தலைவர், செயலாளர் மற்றும் உபதலைவர் உள்ளிட்ட முக்கிய பதவிகள் தெரிவு செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்தநிலையில், குறித்த கூட்டம் நடைபெறுவதை அறிந்த சில வட்டுக்கோட்டை தொகுதிக் கிளை உறுப்பினர்கள் தாங்களாகவே கூட்டத்துக்கு சென்றதாக தெரிவித்துள்ளனர்.

இதன் போது சுமந்திரனின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிராக காரசாரமான கருத்துகளை முன்வைத்து தமது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தனர்.

தமக்கு சார்பானவர்களை நிர்வாகத்துக்குள் உள்ளீர்த்து, வழக்கு முடிவடைந்த பின்னர் கட்சியின் மத்திய குழு நிர்வாக தெரிவு கூட்டம் நடைபெறும் போது தான் தலைவராக வருவதற்கான தந்திரோபாயமே இது என்றும், வழக்கு நிலுவையில் இருக்கும் போது தொகுதிக் கிளை உறுப்பினர்களை தெரிவு செய்வது சட்டத்திற்கும் யாப்பிற்கும் முரணானது என உறுப்பினர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்திய துணை ஜனாதிபதியின் வருகையை பிரச்சினைகளை தீர்க்கும் வாய்ப்பாக பயன்படுத்துங்கள்..!

0

இந்திய துணை ஜனாதிபதியின் இலங்கைப் பயணத்தை இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால மனிதாபிமான மற்றும் வாழ்வாதார பிரச்சினைகளை தீர்க்கும் வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும் என்று பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய துணைத் தலைவரின் இலங்கைப் பயணத்தை இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால மனிதாபிமான மற்றும் வாழ்வாதார பிரச்சினைகளை தீர்க்கும் வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும் என்றும் இந்த உயர்மட்ட விஜயம் விழாக்களாக மட்டும் மட்டுப்படுத்தாமல், பல தசாப்தங்களாக தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகளுக்கு நடைமுறை தீர்வுகளை வழங்கும் நோக்கில் அமைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் இலங்கைத் தமிழ் அகதிகள் பல ஆண்டுகளாக எதிர்காலம் இன்றி வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் எதிர்காலம் மேலும் தாமதப்படுத்தப்படக் கூடாது என்பதையும் வலியுறுத்திய அவர்,

அவர்களின் மீள்குடியேற்றத்தை பாதுகாப்பாகவும், மரியாதையுடனும், மனிதாபிமான அடிப்படையிலும் மேற்கொள்ள இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டுமெனவும் திரும்பி வரும் அகதிகள் எந்தவித தொந்தரவும், அச்சுறுத்தலும் அல்லது நிர்வாக தடைகளும் எதிர்கொள்ளாத வகையில் தெளிவான முறைகள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பாக்கு நீரிணை பகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் தமிழ்நாடு மற்றும் இலங்கையின் வட மாகாண மீனவர்களுக்கிடையேயான முரண்பாடுகள் மற்றும் கைது சம்பவங்கள் குறித்தும் கவலை தெரிவித்த அவர், இந்த பிரச்சினைக்கு நீடித்த மற்றும் நியாயமான தீர்வு காண, பாதிக்கப்பட்ட மீனவர்களின் பிரதிநிதிகளுடன் இணைந்து இரு நாடுகளும் செயல்பட வேண்டும்.

தமிழ்நாடு மற்றும் இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கிடையேயான வரலாற்று, பண்பாட்டு மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இணைப்புகளை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்றும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இருந்து வரும் இரு நாடுகளின் உறவுக்கு இடையே கடல் ஒரு தடையாக இல்லாமல், இணைப்பாக செயல்பட வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்திய துணைத் தலைவரின் இந்த விஜயத்தை பயன்படுத்தி அகதி பிரச்சினை, மீனவர் மோதல்கள் மற்றும் எல்லைத் தாண்டிய இணைப்புகள் போன்ற முக்கிய விடயங்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்ட தெளிவான செயற் திட்டத்தை இரு நாடுகளும் உருவாக்க வேண்டும் என கீதநாத் காசிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.

வலுசக்தி அமைச்சிற்கு புதிய செயலாளர் ஜனாதிபதியால் நியமனம்..!

0

னாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சின் செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, வெள்ளிக்கிழமை (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவரிடம் கையளித்தார்.

நிதி மற்றும் பொருளாதார அலுவல்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளராகப் பணியாற்றிய ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு, இலங்கை திட்டமிடல் சேவையின் (SLPS) சிரேஷ்ட அதிகாரியாவார்.

error: Content is protected !!