Sunday, August 9, 2026
Huis Blog Bladsy 7

யாழில் தந்தையின் உடலை தகனம் செய்த பிரதேச உறுப்பினர்; அதிகார துஸ்பிரயோகம்..!

0

யாழ் மானிப்பாய் பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரின் தந்தையின் பூதவுடல் தகனம் செய்ய கட்டணம் செலுத்தப்படாத நிலையில் , தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக தகவல் கோரப்பட்ட நிலையில் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் வடலியடைப்பு பிரதேச சபை உறுப்பினரின் தந்தையார் கடந்த ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி காலமானர். அவரது பூதவுடல் மறுநாள் 5ஆம் திகதி விளாவெளி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் , மானிப்பாய் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட குறித்த விளாவெளி இந்து மயானத்தில் உடல் தகனம் செய்ய பிரதேச சபையில் விண்ணப்ப படிவம் பெற்று , அதற்கான கட்டணமாக 2ஆயிரம் ரூபாய் செலுத்தி பற்று சீட்டை இந்து மயானத்திற்கு பொறுப்பான உத்தியோகஸ்தரிடம் கையளித்தே தகனம் செய்யப்பட வேண்டும்.

ஆனால் , பிரதேச சபையிடம் அனுமதி பெறாமல் , அதற்கான கட்டணத்தையும் செலுத்தாது , பிரதேச சபை உறுப்பினர் தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து , தந்தையின் உடலை தகனம் செய்துள்ளார்.

இது தொடர்பில் தகவல் அறிந்த பிரதேச வாசி ஒருவர் , குறித்த இந்து மயானத்தில் உடல் தகனம் செய்தவர்களின் விபரம் தொடர்பிலும் , அதற்காக செலுத்தப்பட்ட கட்டணம் தொடர்பிலும் தகவல் அறியும் சட்டம் ஊடாக மே மாதம் 15ஆம் திகதி தகவல் கோரியுள்ளார்.

இதனையடுத்து கட்டணம் செலுத்தாது தந்தையின் உடலை தகனம் செய்த உறுப்பினரிடம் பிரதேச சபையினர் கட்டணம் செலுத்த கோரி , உடல் தகனம் செய்து சுமார் 50 நாட்களின் பின்னர் மே மாதம் 25ஆம் திகதி கட்டணத்தை அறவிட்டு அதற்கான பற்று சீட்டை வழங்கியுள்ளனர்.

அதேவேளை பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட இந்து மயானத்தில் உடல் தகனம் செய்யும் போது, மரண சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு , தகனம் செய்வதற்கான விண்ணப்ப படிவத்தை பெற்று , பூரணப்படுத்தி சமர்பிப்பதுடன் , அதற்கான கட்டணத்தை செலுத்தி, பற்று சீட்டை பெற்ற பின்னரே உடலை தகனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பது நியதியாக இருக்கும் போது குறித்த பிரதேச சபை உறுப்பினர் இவை எவற்றையும் பின்பற்றாது தந்தையின் உடலை தகனம் செய்துள்ளார்.

இந் நிலையில் குறித்த உறுப்பினர் தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்துள்ளமை இதனூடாக வெளிப்பட்டுள்ளதால் , உறுப்பினருக்கு எதிராகவும் , பற்று சீட்டு எதுவும் வழங்காது உடலை தகனம் செய்ய அனுமதித்த உத்தியோகஸ்தர்கள் , 50நாட்கள் கடந்தும் கட்டணம் செலுத்த தவறியதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காத பிரதேச சபையின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தகவல் அறியும் உரிமை சட்டம் ஊடாக தகவலை பெற்றுக் கொண்ட பிரதேசவாசி கோரியுள்ளார்.

2027 ஆம் ஆண்டுக்கான பாடசாலை காலணி விநியோகத் திட்டத்திற்கு அங்கீகாரம்..!

0

எதிர்வரும் 2027ஆம் ஆண்டிற்காகத், தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்கள் மற்றும் சீலமாதா கல்வி நிறுவனங்களின் மாணவர்களுக்கு தலா ஒரு ஜோடி காலணிகளை (Footwear) வழங்குவதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு இந்த அனுமதி கிடைத்துள்ளது.

தகுதியுடைய ஒவ்வொரு மாணவருக்கும் காலணிகளைக் கொள்வனவு செய்வதற்காக தலா 3,000 ரூபாய் பெறுமதியான வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன.

2026ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட முறையைப் போன்றே இம்முறையும் விநியோகம் இடம்பெறும்.

மேல், தென், சபரகமுவ, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ளூர் உற்பத்தியாளர்களின் ஊடாக பாடசாலை மட்டத்திலேயே காலணிகள் விநியோகிக்கப்படும்.

மத்திய, வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மாணவர்கள் சந்தையிலிருந்து நேரடியாகக் காலணிகளைக் கொள்வனவு செய்ய முடியும்.

இந்த திட்டத்தை 2026ஆம் ஆண்டின் மூன்றாம் பாடசாலைத் தவணை முடிவடைவதற்குள் பூர்த்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் (2025/2026) இரு வேறு கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்த உதவித் திட்டத்தின் மூலம் 836,571 பாடசாலை மற்றும் பிரிவெனா மாணவர்கள் பயனடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த டித்வா புயலின் அகோரத்தால் முழுமையாக பாதிக்கப்பட்ட வவுனியாவின் செட்டிகுள கோட்டம் மற்றும் மன்னாரின் நானாட்டான், முசலி கோட்டப் பாடசாலைகள் முழுவதற்கும் இம்முறை விசேட திட்டத்திலாவது பாதணி வவுச்சர்களை வழங்க இந்த அரசாங்கம் முன்வர வேண்டும்.

சமூக வலைத் தளங்களில் அவதூறு; 14 பேருக்கு எதிராக பேராசிரியர் ரகுராம் வழக்கு..!

0

யாழ் பல்கலைக் கழக ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது சமூக வலைத் தளங்களில் அவதூறு பரப்பினர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் 14 எதிர் மனுதாரர்களுக்கு நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுதாரர் தொடர்பான அவதூறான கூற்றுக்களை பிரசுரித்தனர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் ஆறு பேருக்கு எதிராகவும், முகநூல் தளங்கள், வலையொளி தளங்கள், ரிக்ரொக் தளங்கள் உள்ளிட்ட சில தரப்புகளுக்கு எதிராகவும் நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் 20ம் பிரிவின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் இந்துகா சிவலிங்கம் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

வழக்கினை எடுத்துக் கொண்ட பருத்தித்துறை நீதிவான் எதிர்வரும் ஜூலை மாதம் பத்தாம் திகதிக்கு நிபந்தனை உடனான கட்டளை ஒன்றை பிறப்பிப்பது தொடர்பிலான தீர்மானத்திற்காக வழக்கை திகதியிட்டார்.

மனுதாரர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி லக்சான் டயஸ், சட்டத்தரணி கனகலிங்கம் கிஷோபனா ஆகியோர் ஆஜராகி தமது வாதங்களை முன்வைத்தனர்.

அதேவேளை யாழ் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்த நிகழ்நிலை காப்புச் சட்ட வழக்கினுடைய தீர்ப்பின் பிரதியையும் இந்த வழக்கில் இணைக்குமாறு தெரிவிக்கப்பட்டதாக மனுதாரரின் சட்டத்தரணி தெரிவித்தார்.

அமெரிக்காவுடன் எந்தச் சந்திப்பும் இல்லை – ஈரான் திட்டவட்ட அறிவிப்பு..!

0

அமெரிக்காவுடன் எந்த சந்திப்பும் நடத்தப் போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தத்தை செயல்படுத்த அமெரிக்கா – ஈரான் அதிகாரிகள் சந்திப்பு நடத்த இருப்பதாகச் செய்திகள் வெளியான நிலையில் அதனை ஈரான் மறுத்துள்ளது.

சமீப நாள்களில் இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல்களை நடத்தி வந்த நிலையில், போர்நிறுத்த ஒப்பந்தம் கேள்விக்குள்ளானது.

இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக வெளியான செய்திகளை ஈரான் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் காசிம் கரிபாபாடி மறுத்துள்ளார்.

“தொழில்நுட்ப ரீதியான எந்தச் சந்திப்பையும் இந்த வாரம் நடத்தப்போவதில்லை” என அவர் ஈரான் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக நாளை (29) கட்டாரில் பேச்சுவார்த்தை நடத்த ஈரானும் அமெரிக்காவும் முடிவு செய்ததாக அமெரிக்க செய்தி நிறுவனம் கூறியிருந்தது. ஆனால், வெள்ளை மாளிகையில் இருந்து அதுபற்றி உத்தியோக பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், பாகிஸ்தானுடன் இணைந்து கட்டாரும் மத்தியஸ்தம் செய்தது. இதனைத் தொடர்ந்து, 4 நாட்டு பிரதிநிதிகள் முன்னிலையில் ஜூன் 21 அன்று சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

வளைகுடா நாடுகளில் ஒன்றான கட்டார், நிதி அம்சங்கள் தொடர்பான பேச்சு வார்த்தையில் முக்கிய பங்கு வகித்தது. அமெரிக்காவின் தடைகள் காரணமாக முடக்கப்பட்ட ஈரானின் சொத்துக்கள் கட்டாரில் உள்ளன. இந்த நிதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படு வருவதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் இன்று தெரிவித்தார்.

அரச அதிகாரிகள் சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்கும் இறுதி நாள் நாளை..!

0

பொது அதிகாரிகள் மற்றும் சட்டப்பூர்வமாக சொத்து, பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய நபர்கள், அபராதமின்றி அவற்றைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நாளை (30) முடிவடைகிறது என இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பிரகடனங்களைச் சமர்ப்பிக்கத் தவறுகின்ற அரசு அதிகாரிகள் உள்ளிட்ட நபர்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்படுவதோடு, கடுமையான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து அறிவிப்புகளும் https://ald.ciaboc.gov.lk/ என்ற இணைய தளத்தின் ஊடாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். காகித வடிவிலான சமர்ப்பிப்புகள் இனி ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனவும் கூறப்பட்டுள்ளது,

இதனிடையே, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பொது அதிகாரிகள் மற்றும் ஆண்டு தோறும் சொத்து விபரங்களைத் தாக்கல் செய்ய வேண்டிய பிரிவினருக்கு இக்கட்டளை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது

மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கு சத்தியலிங்கம் எம்பி விஜயம்..!

0

யாழ் – மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் இன்று விஜயம் செய்திருந்தார். இதன் போது முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தன் அவர்களும் இணைந்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினரின் 2026ம் ஆண்டிற்காக பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதியொதுக்கீட்டினூடாக குறித்த பாடசாலையில் கழிவு முகாமைத்துவ தொட்டியுடன் பாதுக்காப்புக் கூரை அமைத்தல் மற்றும் கூட்டெரு தயாரித்தலுக்கான தொட்டி அமைத்தல் செயற்திட்டத்திற்காக ரூபா. இரண்டு இலட்சம் நிதியொதுக்கீடு மேற்கொண்டிருந்தார்.

முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி ம.ஆ.சுமந்திரன் மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோரின் பரிந்துரையின் பிரகாரம் குறித்த நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்விஜயத்தின் போது கல்லூரியின் அதிபருடன் குறித்த வேலைத் திட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கலந்துரையாடியதுடன், பாடசாலையின் தேவைப்பாடுகள், முக்கிய பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.

மயிலிட்டி மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்.!

0

யாழ் மாவட்டச் செயலக முன்றலில் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மயிலிட்டி மக்கள் இன்றைய தினம் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, வடக்கு மாகாண ஆளுநரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை உத்தியோகபூர்வமாகக் கையளித்துள்ளனர்.

கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி இடம்பெயர்ந்த தமது மக்கள், 36 வருடங்கள் நிறைவடைந்த நிலையிலும் இன்னமும் அகதிகளாகவே வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ள அவர்கள், மாண்புமிகு ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக இரு பிரதான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

அதன்படி, 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிஉயர் பாதுகாப்பு வலயம் தொடர்பான 1810ஆம் இலக்க வர்த்தமானி முழுமையாக நீக்கப்பட வேண்டும் எனவும், தொடர்ச்சியாக நிலம் மீட்பதற்காக அறவழியில் போராடி வரும் ஜே/248, ஜே/251, ஜே/255 மற்றும் ஜே/246 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளுக்குட்பட்ட மக்களின் காணிகள் முதற்கட்டமாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஊழல் வழக்கில் முன்னாள் தென் மாகாண முதலமைச்சரின் செயலாளர் கைது..!

0

முன்னாள் தெற்கு மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலாலின் தனிப்பட்ட செயலாளர் ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவால் இன்று (15) கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு ரூ.16.5 மில்லியன் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்த சம்பவத்தில், கொள்முதல் நடைமுறைகளை மீறி நாற்காலிகள் வாங்கப்பட்டு பல மாவட்டங்களில் விநியோகிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கொழும்பு பிரதான நீதித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் சங்கீதனை விடுதலை செய்; ஜனாதிபதி செயலகம் முன் வெடித்த போராட்டம்..!

0

சொல்லிசைப் பாடகரான கணேஸ்குமார் சங்கீதன் என்பவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரியும், பல தசாப்தங்களாக நாட்டில் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக நீக்கக் கோரியும் இன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழிற் சங்கத் தலைவர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு தமது பலத்த எதிர்ப்பினை வெளியிட்டனர்.

இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “Repeal PTA! Withdraw PSTA!”, “பயங்கரவாத ஒடுக்குமுறைச் சட்டங்கள் வேண்டாம்!” போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் தமது எதிர்ப்பை பலமாகப் பதிவு செய்தனர்.

இதன் போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அருட்தந்தை ஜீவந்த பீரிஸ்,

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்பதாக மக்களுக்குத் தெளிவான வாக்குறுதி அளித்திருந்ததாகக் குறிப்பிட்டார்.

ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் நெருங்கும் நிலையிலும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை எனவும், மாறாக இந்த அரசாங்கத்தின் கீழ் சுமார் 80 பேர் வரை இந்த மிலேச்சத்தனமான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் சாடினார்.

கடந்த காலங்களில் தெற்கில் உரிமைக்காகப் பேசிய சிங்கள மக்களுக்கும், வடக்கில் போராடிய தமிழ் மக்களுக்கும், கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் வாழும் முஸ்லிம் மக்களுக்கும் எதிராகவே இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டதைச் சுட்டிக் காட்டிய அவர், தற்போது கிளிநொச்சியில் ஒரு பாடலைப் பாடினார் என்பதற்காக கலைஞர் சங்கீதன் கைது செய்யப்பட்டுள்ளமை பேச்சு சுதந்திரத்திற்கும் கலை சுதந்திரத்திற்கும் விடுக்கப்பட்ட மரண அடியாகும் என்றார்.

மேலும், அரசாங்கம் புதிய ஒடுக்குமுறைச் சட்டங்களை (PSTA) கொண்டுவந்து மக்களை ஒடுக்குவதை விடுத்து, உடனடியாக இந்தத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் அமைப்பாளர் வசந்த முதலிகே கருத்துத் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறியே சுரேஷ் சலே போன்றவர்கள் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் எனப் பேசப்பட்டு வரும் நிலையில், அத்தகைய தீவிர சம்பவங்களுடன் சங்கீதன் போன்ற கலைஞர்களின் கைதை எவ்விதத்திலும் ஒப்பிட முடியாது என்றார்.

 

இலங்கையின் சிறைச்சாலைகளுக்குள் கைதிகள் மனிதர்களாக நடத்தப்படுவதில்லை எனக் குறிப்பிட்ட அவர், ஒரு சிறையறையின் கொள்ளளவை விட மூன்று மடங்கு கைதிகள் அடைக்கப்பட்டு, டின்மீன் டப்பாக்களைப் போல மிக மோசமான சூழலில் வாழ்கின்றனர் என்றும், சிறை அதிகாரிகள் கூட இதனால் பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்துத் தெரிவிக்கையில்,

1979 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த தற்காலிக பயங்கரவாதத் தடைச் சட்டம், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியாளர்களால் தங்களது பதவியையும் அதிகாரத்தையும் தக்கவைத்துக் கொள்வதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம், தேர்தலின் போது இந்தச் சட்டத்தை முழுமையாக நீக்குவதாக உறுதியளித்திருந்ததை நினைவுபடுத்திய அவர், வடக்கில் ஒரு இளம் கலைஞர் பாடினார் என்பதற்காகக் கைது செய்யப்பட்டிருப்பதும், எழுத்தாளர் தீபச்செல்வன் போன்றவர்களின் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அச்சுறுத்தப்படுவதும் இந்தச் சட்டத்தின் கொடூரத்தையே காட்டுவதாகக் குறிப்பிட்டார்.

வடபகுதியில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துக – ரவிகரன் எம்.பி

0

வடபகுதிக் கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக்கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் 10.06.2026இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வடக்குமாகாண கடற்றொழிலாளர்கள் மிகவும் பாவப்பட்டவர்கள் முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் என வடமாகாணத்தில் நான்கு மாவட்டங்களிலும் மீனவர்கள் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத தடைசெய்யப்பட்ட தொழில்களான சுருக்குவலை, வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடித்தல், டைனமெற் வெடிவைத்து மீன்பிடித்தல் போன்ற தீய செயல்களால் வடபகுதிக் கடல்வளம் முற்றாக அழிந்து போகின்றது.

 

இத்தகைய சட்டவிரோத தொழில்களைத் தடுக்க வேண்டிய கடற்றொழில் திணைக்களமோ, கடற்படையோ செயலற்றவர்களாக இருக்கின்றனர்.

இதுகுறித்த கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்திடம் கேட்டால், ஆளணிப் பற்றாக்குறை இருப்பதாகவும், ஆளணிக்கு ஏற்ப செயற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

கடற்றொழில் அமைச்சரிம் இதுதொடர்பில் நாம் ஏற்கனவே கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். எனவே இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி உரியவகையில் சீர்செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன் – என்றார்.

error: Content is protected !!