Sunday, May 3, 2026
Huis Blog Bladsy 88

கதவடைப்புக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் – வலி. மேற்கு தவிசாளர்

0

அனைத்து தரப்பினரும் கதவடைப்புக்கு பூரண ஆதரவு வழங்க வேண்டும் என வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ச.ஜயந்தன் தெரிவித்துள்ளார்.

அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்திலே காலாகாலமாக இராணுவத்தின் அச்சுறுத்தல்கள் காணப்படுகிறது.

இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களுக்கான நீதியான விசாரணைகள் நடைபெறவுமில்லை, அதற்கான ஏற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டதாக தெரியவில்லை.

இது இவ்வாறு இருக்கையில் சென்றவாரம் முல்லைத்தீவு – முத்துஐயன்கட்டிலே ஒரு குடும்பஸ்தரின் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்த குடும்பஸ்தர் ஏதாவது தவறு இழைத்திருந்தால் கூட அவரை காவல் துறையினரிடம் ஒப்படைத்து அவருக்கெதிரான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தண்டிப்பதற்கு இராணுவத்தினருக்கு அதிகாரம் கொடுக்கப்படவில்லை.

அவரது மரணத்திற்கு காரணமான இராணுவத்தினர் கைது செய்யப்பட்டிருந்தாலும் கூட நீதியான விசாரணைகள் இடம்பெறுமா என்ற சந்தேகம் தமிழ் மக்களிடத்தே காணப்படுகிறது. இந்த பிரச்சினை தென்னிலங்கையில் ஏற்பட்டால் அங்கு பாரிய ஒரு ஆர்ப்பாட்டம் நடந்திருக்கும்.

அண்மைக்காலமாக அகழப்படும் செம்மணி மனிதப் புதைகுழியில் 150ற்கு அண்மித்ததான மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அது தொடர்பான சர்வதேச விசாரணைகள் இடம்பெறுமா அல்லது அந்த விடயங்கள் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லப்படுமா என்ற சந்தேகம் எங்களுக்கு காணப்படுகிறது.

400 தொடக்கம் 600 பேரை கொலை செய்து புதைத்ததாக கிருசாந்தி கொலை வழக்கு குற்றவாளியான இராணுவச் சிப்பாய் சோமரத்ன ராஜபக்ச கூறியுள்ளார்.

அந்தவகையில் முத்துஐயன்கட்டு கொலை சம்பவத்தையும் இந்த இராணுவமே செய்துள்ளதாக எமக்கு வலுவான சந்தேகம் எழுந்துள்ளது. இனியும் இவ்வாறான சம்பவங்கள் இந்த நாட்டிலே இடம்பெறக் கூடாது என்பதற்காகவும், இராணுவ அதிகரிப்புக்கு எதிராகவும் எதிர்வரும் 18ஆம் திகதி வடக்கு கிழக்கில் ஹர்த்தால் கடைப்பிடிக்கப்படவுள்ளது.

எனவே வர்த்தக சங்கம், உணவகங்கள், பேருந்து உரிமையாளர் சங்கம், முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் போன்ற அனைத்து தொழிற் சங்கங்களும் இந்த கதவடைப்புக்கு ஆதரவு தரவேண்டும் என தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவை ஆட்சேபிக்கும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவனம்..!

0

2021 ஆம் ஆண்டு கொழும்பு கடற்பரப்பில் பேரழிவை ஏற்படுத்திய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவனம், இலங்கை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ஆட்சேபித்துள்ளது.

அதன்படி, கப்பல் பேரழிவுக்கு 1 பில்லியன் டொலர்களை செலுத்த வேண்டும் என்ற உத்தரவையே இவ்வாறு குறித்த கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தீர்ப்பு நியாயமற்றது எனவும் உலகளாவிய கப்பல் போக்குவரத்திற்கு தீங்கு விளைவிக்கும் எனவும் அந்த நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் கப்பலின் தலைவரையும், நிறுவனத்தின் உள்ளூர் முகவர்களையும் விசாரணைகள் முடிவதற்கு முன்பே நீதிமன்றம் தண்டித்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே சுற்றுச்சூழலுக்கும் இலங்கையின் பொருளாதாரத்துக்கும் உதவும் நியாயமான முடிவுகளை வழங்குமாறு கப்பல் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

2021ஆம் ஆண்டு எக்ஸ்பிரஸ் பேர்ல் என்ற சரக்குக் கப்பல் தீப்பிடித்து கொழும்புக்கு அருகே மூழ்கியது, இதனால் பிளாஸ்டிக் துகள்கள் சிதறி இலங்கையில் மிக மோசமான கடல் மாசுபாடு ஏற்பட்டது.

இதனையடுத்து எக்ஸ்பிரஸ் ஃபீடர்ஸ் நிறுவனம் ஏற்கனவே சுத்தம் செய்வதற்கும் கடற்றொழிலாளர்களுக்கு உதவுவதற்கும் 150 மில்லியன் டொலருக்கும் அதிகமாக செலுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வனத்துறையின் நடவடிக்கையால் விவசாயிகள் கடும் அச்சம்..!

0

வனவளத் திணைக்களத்தின் அண்மைய செயற்பாடுகளால் விவசாயிகள் அச்ச நிலையில் இருப்பதாக வவுனியா மாவட்ட விவசாய சம்மேளனத்தின் தலைவர் எஸ்.பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“வனவளத்திணைக்களத்தால் எல்லையிடப்பட்ட காணிகள் விடுவிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்தாலும் வவுனியாவை பொறுத்தவரை அவ்வாறு எந்தகாணியும் விடுவிக்கப்படவில்லை என்றே கூறவேண்டும்.

அத்துடன் நீண்டகாலமாக பராமரிக்கப்படாத காணிகள் இனிமேல் மக்களுக்கு கிடைக்காது என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதனால் பொதுமக்கள் காடுகளாக இருக்கும் தமது காணிகளை துப்பரவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர், வனவளத் திணைக்களம் அந்த பணியை செய்ய தடை போடுகின்றது அவ்வாறு செய்பவர்களையும் கைது செய்கின்றது.

இந்த நிலை தொடர்ந்தால் எவ்வாறு மக்கள் தமது காணிகளை துப்புரவாக்குவது இதனால் விவசாயிகளும் மற்றும் மக்களும் அச்சநிலையில் உள்ளனர்.

இதற்கு ஒரு நீதியான முடிவினை அரசு வழங்க வேண்டும், சில காணிகளுக்குள் கிணறுகள் உள்ளது அவ்வாறான காணிகளையும் புணரமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

30 வருடங்களாக இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் தமது சொந்த இடங்களுக்கு மீளத்திரும்பவில்லை, அவர்களது வீடுகளை மூடி காடுகள் வளர்ந்துள்ளதுடன் அந்த காணிகள் தொடர்பாக கிராம அலுவலர்கள் உறுதிப்படுத்தி கடிதம் வழங்கினாலும் வனவளத்திணைக்களம் அதனை ஏற்க மறுக்கின்றது.

பலர் காணிகளுக்கான அனுமதிபத்திரத்தையும் வைத்துள்ளனர் ஆனால் அது செல்லுபடியாகாது என்று கூறுகின்றனர்.

இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது எனவே இதற்கு அரசாங்கம் நல்லதொரு தீர்வை வழங்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அண்மைய நாட்களில் வடக்கு ஆளுநரின் வவுனியாவிற்கான கள விஜயத்தின் போது வனவள திணைக்களத்தின் ஒருதலைப் பட்சமான செயற்பாடுகள் தொடர்பில் மக்களால் ஆதாரங்களுடன் முறைப்பாடுகள் பல செய்யப்பட்டன என்பதும் குறிப்பிடத்தகக்கது.

கடைந்தெடுத்த கயவர்கள் விடுத்துள்ள அழைப்பைப் புறக்கணியுங்கள் – சச்சிதானந்தம்

0

தோல்வியில் முடிந்த தமிழ் மக்களது போராட்டத்திலிருந்து மீண்டுவரும் பொருளாதார நகர்வுகளை மீட்டெடுக்கும் இன்றைய காலகட்டத்தில் ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றது என சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 18 ஆம் திகதியன்று வலிந்து அழைக்கப்பட்டுள்ள ஹர்த்தாலை சைவர்களும் தமிழ் மக்களும் புறக்கணிக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (15) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கூறிய சச்சிதானந்தம் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது அழைப்பு விடுக்கப்பட்ட கடையடைப்பு போராட்டம் என்பது கடைந்தெடுத்த கயவர்கள் விடுத்துள்ள அழைப்பு. இதை சைவர்கள் குறிப்பாக தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்.

கடை அடைப்புக்கான தேவை இன்றைய சூழலுக்கு தேவையற்ற ஒன்று. அத்துடன் கடை அடைப்புக்கு என்பது காலத்துக்கும் ஒவ்வாத போராட்டம்.

முல்லைத்தீவில் இளைஞன் இதந்த சம்பவத்துக்கு அது தொடர்பில் குற்றம் சாட்டபட்டவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அங்கு நடந்த சம்பவத்துக்கு காரணம் கஞ்சா குடித்து போதையில் நீரில் வீழ்ந்து இறந்ததே என மதுத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நேரம் இராணுவ பிரசன்னம் என்பது தோல்வி அடைந்த இனம் சந்திக்கும் ஒரு இயல்பன தாக்கம் அல்லது அடக்கு முறைதான்.

மடு மாதாவின் நலன் கருதி போராட்டத்தை பின்நகர்த்திய குறித்த தரப்னர் நல்லூர் திருவிழாவை குறிவைத்து கடை அடைப்பு என கூறி சுயநல அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதால் நாளாந்தம் உழைத்து வாழும் மக்களின் வாழ்வே பாதிக்கும்.

அந்த வகையில் ஏழை மக்களை பகடைக்காயாக்க முயற்சிக்கும் நரித்தன அரசியலுக்கு இடம் கொடுக்கக் கூடாது.

இந்த கடை அடைப்பு போராட்டத்துக்கு வர்த்தகர்களோ, போக்குவரத்துசார் சங்கங்களோ, பொது அமைப்புகளோ எதுவானாலும் ஒத்துழைப்பு வழங்க கூடாது.

தோல்வியில் முடிந்த போராட்டத்திலிருந்து மீண்டுவரும் பொருளாதார நகர்வுகளை மீட்டெடுக்கும் காலத்தில் இந்த போராட்டங்கள் அவசியமற்றது எனவும் அவர் தெரிவித்தார்.

செம்மணி வழக்கில் தொடர்புபட்ட இராணுவத்தினனர் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்பு – சுமந்திரன்

0

செம்மணி மனிதப் புதைகுழி விடயத்தில் சம்பந்தப்பட்ட இராணுவத்தினர் நாட்டை விட்டுத் தப்பி ஓடாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைகளின் போது ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றை தமது சமர்ப்பணத்தில் கோரினார்.

1990 களின் கடைசி வரையான காலத்தில் இந்தப் பிரதேசத்தில் காணாமல்போன ஆள்கள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நான்கு பேர் கொண்ட ஆணையம் ஒன்றை நியமித்து விசாரணை செய்தது.

தேவநேசன் நேசையா தலைமையிலான இந்தக் குழுவில் கே.எச்.கமிலஸ் பெர்னாண்டோ, ஜெஸிமா இஸ்மாயில், சி.எம்.இக்பால் ஆகியோர் அடங்கியிருந்தனர்.

அந்த ஆணைக்குழு நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றது. அந்தச் சமயத்தில் காணாமல்போன 300 பேர் வரையானோர் குறித்து அந்த ஆணைக்குழு விசாரணை நடத்தி இருக்கின்றது.

அவர்களில் 200 பேர் வரை இராணுவத்தினரால் கொல்லப் பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்ட அந்த விசாரணை ஆணைக்குழு அதில் சம்பந்தப்பட்ட பல படையினரின் பெயர் விவரங்களையும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது என்று தெரிவித்த சுமந்திரன் சுமார், 210 பக்கம் கொண்ட அந்த ஆணைக்குழு அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இந்த அறிக்கையின்படி, காணாமல்போனோரின் பெரும்பாலானோர் இந்த செம்மணிப் பிரதேசத்தை நெருக்கமான பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அது மாத்திரமல்ல அவ்வாறானோரில் பெரும்பாலானோரின் கதி செம்மணித் தரவையில் முடிவுற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அந்த அறிக்கை கொண்டிருந்தது.

அவற்றை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்த சுமந்திரன், அந்த அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இந்த எலுப்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, விசாரணை மும்முரமடையும் போது நாட்டை விட்டுத் தப்பி ஓடி தலைமறைவாகக் கூடிய வாய்ப்பு உண்டு. அது குறித்து முற்கூட்டியே நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுமந்திரன் நீதிமன்றத்தைக் கோரினார்.

அந்த ஆணைக்குழு அறிக்கையின் பிரதியைப் பெற்றுக்கொண்ட நீதிவான் இந்த விடயம் குறித்து புலனாய்வு செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவினரைப் பணித்தார்.

முன்னாள் அமைச்சர் ராஜிதவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய தீர்மானம்..!

0

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்து தலைமறைவாக இருந்தால் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்வதில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கவனம் செலுத்தவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவு பெறப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சேனாரத்ன இருந்த பல இடங்களில் அவரைக் கைதுசெய்ய சமீபத்திய நாட்களில் சோதனை நடத்தப்பட்டாலும், அவரைக் கைதுசெய்ய முடியவில்லை.

ராஜித சேனாரத்னவைக் கைதுசெய்ய நீதிமன்றத்தால் சமீபத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. முன்னதாக, தேசபந்து தென்னகோனைக் கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்ததால் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்யத் தயாரான போது அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.

அநுர அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியின் பரந்த கூட்டணியின் வரைவு தயாரிப்பு..!

0

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான எதிர்க்கட்சியின் பரந்த கூட்டணியின் வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

நாரஹேன்பிட்டி, கிருல வீதியில் உள்ள முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் இல்லத்தில் நேற்று மாலை கூடிய பல எதிர்க்கட்சிகளின் தலைவர்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி, இந்த வரைவு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை அடுத்த வாரம் தொடங்க இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பரந்த கூட்டணியின் இறுதி வரைவு, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தாத எதிர்க்கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் தயாரிக்கப்படவுள்ளது.

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதால், எதிர்காலத்தில் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், எதிர்க்கட்சி இந்த விடயத்தில் கவனம் செலுத்தி அதன் பங்கை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், சம்பிக்க ரணவக்க, மிலிந்த மொரகொட, தயாசிறி ஜயசேகர, அநுர பிரியதர்ஷன யாப்பா, மஹிந்த அமரவீர, ரமேஷ் பத்திரன, மனோ கணேசன், ரிஷாத் பதியுதீன், நிஷாம் காரியப்பர், மயந்த திசாநாயக்க, பிரேமநாத் சி.தொலவத்த உள்ளிட்ட அரசியல்வாதிகள் குழுவொன்று இதில் கலந்து கொண்டனர்.

மாகாண சபைத் தேர்தல்; அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு – தேர்தல் ஆணைக்குழு

0

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

மாகாண சபை தேர்தல் விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம்.

நீதியானதும், சுதந்திரமானதுமான வகையில் தேர்தலை நடத்துவதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தால் தேர்தலை சிறந்த முறையில் நடத்துவோம்.

கடந்த 09 மாதகாலத்துக்குள் மூன்று தேர்தல்களை சிறந்த முறையில் நடத்தினோம். மாகாண சபைத் தேர்தல் முறையில் காணப்படும் சட்டசிக்கலால் ஆணைக்குழுவினால் தேர்தலுக்கான பணிகளை முன்னெடுக்க முடியாத தடை காணப்படுகிறது.

தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுக்கள் மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுக்களில் பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றமை வரவேற்கத்தக்கது. என்றார்.

வட – கிழக்கில் ஹர்த்தால்; பொதுபாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பு..!

0

முல்லைத்தீவில் இளைஞன் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுகளின்படி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (15) ஹர்த்தால் நடத்துவது பயனற்ற செயல் என பொதுபாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசு கட்சி (ITAK) சமீபத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் இன்று ஹர்த்தால் நடத்தப்படும் என்று அறிவித்தது.

ஹர்த்தால் நடத்துவதற்கு எந்த காரணமும் இல்லை, இது தொடர்பாக ஊடகமொன்றிடம் பேசிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால,

“ஹர்த்தால் நடத்தப்படும் என்று அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் அதை நடத்த எந்த காரணமும் இல்லை. சம்பந்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டள்ளனர். ஹர்த்தால் நடந்தாலும் இல்லாவிட்டாலும், எங்களுக்கு வேறு எதுவும் செய்யத் தேவையில்லை. நீதிமன்ற உத்தரவுகளின்படி நாங்கள் அடுத்த நடவடிக்கை எடுப்போம். ஹர்த்தால் நடத்துவது பயனற்ற செயல்.”

மேலும், இதேபோன்ற சம்பவங்கள் மற்ற மாகாணங்களிலும் நிகழ்கின்றன என்றும், ஆனால் அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் ஹர்த்தால்களை நடத்துவதில்லை என்றும் அவர் கூறினார்.

“இந்த சம்பவங்களை இனம் அல்லது மதத்தின் பார்வையில் இருந்து நாம் பார்க்கக் கூடாது. ஒரு குற்றம் நடக்கும் போது, பொறுப்பான எவருக்கும் எதிராக, அவர்களின் பின்னணியைப் பொருட்படுத்தாமல் காவல்துறையினர் செயல்படுகிறார்கள். கடந்த சில மாதங்களாக இதை நடைமுறையில் நிரூபித்துள்ளோம்” என்றார்.

வடக்கின் கல்வியில் தொடரும் மோசடிகள்; ஆளுநருக்கு பறந்த கடிதம்..!

0

கிளிநொச்சியில் உள்ள பிரபல மகளிர் பாடசாலையொன்றின் அதிபர் நியமனத்தில் பெரும் மோசடி இடம்பெற்றுள்ளது என்று சிவசேனை அமைப்பால் வடக்கு மாகாண ஆளுநரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சிவசேனை அமைப்பினர் தெரிவித்ததாவது,

கிளிநொச்சியில் உள்ள பிரபல மகளிர் பாடசாலையொன்றின் அதிபர் பதவிக்குப் பொருத்தமான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் அண்மையில் கோரப்பட்டிருந்தன.

இந்த நியமனங்களுக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து ஒருவரும், கிளிநொச்சியில் இருந்து ஆறு பேருமாக ஒட்டுமொத்தமாக ஏழு பேர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

ஆனால், தகுதி நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் குறிப்பிட்டு, அவர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அதிபர் பதவிக்கு விண்ணப்பிக்காத அருட் சகோதரியொருவருக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு, புள்ளிகள் வழங்கப்பட்டு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

பதவி நிலைக்கு விண்ணப்பிக்காத அருட்சகோதரி எவ்வாறு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டார். எந்த அடிப்படையில் அவருக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன என்பதில் எமக்குப் பெரும் சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.

இதைவிட குறித்த பாடசாலைக்கு தரநிலை ஒன்றில் உள்ள அதிபரே நியமிக்கப்படலாம். தர நிலை ஒன்றில் உள்ளவர்கள் எவரும் விண்ணப்பிக்காத பட்சத்தில் தரநிலை இரண்டில் உள்ளவர்கள் நியமிக்கப்படலாம்.

ஆனால், இவை இரண்டிலும் இல்லாமல், தரநிலை மூன்றில் உள்ளவரே தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

எனவே, இந்த நியமனம் பக்கச்சார்பானது மற்றும் தவறானது என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.

வட மாகாண கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட அதிபர் நியமனத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை சிவசேன அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்ல பட்டுள்ளதாகவும் இதற்கு தீர்வு கிடைக்காத விடத்து தாங்கள் இதற்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க இருப்பதாகவும் என்.பீ. ஸ்ரீந்திரன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!