Friday, July 17, 2026
Huis Blog Bladsy 89

அரச நிறுவனங்கள் மக்களுக்கானதேயன்றி ஊழியர்களுக்கானதல்ல – ஜனாதிபதி

0

நாட்டின் வலுசக்தி இறையாண்மையை அரசாங்கம் எப்போதும் பாதுகாத்து வருவதாகவும், எந்தவொரு சூழ்நிலையிலும் மின்சாரத் துறையை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (22) நடைபெற்ற மின்சாரத் துறையில் புதிய மறுசீரமைப்புகள் குறித்த முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தேசிய பாதுகாப்பு மற்றும் இறைமைக்காக வலுசக்தி இறையாண்மையை உறுதி செய்வது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும், மின்சாரத் துறையின் நிறுவனக் கட்டமைப்பில் உள்ள குழப்ப நிலையைத் தீர்த்து, முறையான நிறுவனக் கட்டமைப்பை உருவாக்குவதே அரசாங்கத்தின் தேவை என்றும் அவர் தெரிவித்தார்.

மின்சாரத் துறையின் செயல்திறனை அதிகரிப்பதன் மூலம் புதிய மாற்றத்திற்கு ஒரு புதிய நிறுவனக் கட்டமைப்பு அவசியம் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக பழைய கட்டமைப்பு இனிமேலும் போதுமானதாக இல்லை என்றும், புதிய கட்டமைப்பின் அவசியத்தை யாரும் மறுக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

தற்போது வகிக்கும் பதவிகள் அல்லது வேதன அளவுகள் எந்த வகையிலும் குறைக்கப்படாமலும், பதவி உயர்வுக்கு செல்வதற்கு நிலவிய தடைகளை நீக்கும் வகையில் செயற்படல், அனைத்து ஊழியர் உரிமைகளையும் பாதுகாத்தல், புதிய நிறுவன கட்டமைப்பில் இலங்கை மின்சார சபையாக இருந்த அனைத்து உரிமைகளையும் உறுதி செய்தல், புதிய நிறுவன கட்டமைப்பில் உள்வாங்கப்படும்போது இலங்கை மின்சார சபையாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளைத் தீர்த்தல், வலுசக்தி இறையாண்மையைப் பாதுகாத்தல் மற்றும் அதை முழுமையாக அரசுக்குச் சொந்தமான நிறுவனமாக மாற்றுவது ஆகிய கோட்பாடுகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நிறுவனங்கள் அதன் ஊழியர்களுக்காக அன்றி, நாட்டிற்காகவும் பொதுமக்களுக்காகவும் உள்ளன என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மிகவும் செயற்திறனுடம், தொடர்ச்சியாகவும், நியாயமான விலையிலும் நுகர்வோரின் மின்சாரத் தேவைகளை பூர்த்தி செய்ய முடிந்தால், அது அரசாங்கத்திற்கும் ஊழியர்களுக்கும் கிடைத்த வெற்றியாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாக்க அரசாங்கம் எப்போதும் தயாராக இருப்பதாகவும், இலங்கை மின்சார சபையில் நடப்பது நீண்டகால நிறுவன கட்டமைப்பை புதிய நிறுவன கட்டமைப்பாக மாற்றுவது மாத்திரமேயாகும்.

இது விற்பனையோ, அரச உரிமையை கைவிடுவதோ அல்லது வலுசக்தி இறையாண்மையை கைவிடுவதோ அல்ல என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஒக்டோபர் – டிசம்பர் காலப்பகுதிக்குள் மின்சார கட்டணம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு..!

0

ஒக்டோபர் முதல் டிசம்பர் மாத காலப்பகுதிக்குள் மின்சார கட்டணம் 6.8 சதவீதத்தால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை மின்சார சபை தற்போது நட்டத்தில் இயங்குவதாகக் கூறி, மின்சாரக் கட்டண உயர்வுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையினால் 7.2 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பாதிப்படைய உள்ளனர்.

இதுவரை இந்த காலாண்டில் மின்சார சபைக்கு 7.83 பில்லியன் ரூபாய் நிதிச் செலவுகள் ஏற்பட்டு உள்ளன.

இது கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது 2.48 பில்லியன் ரூபாயால் அதிகரித்துள்ளது.

அதற்கமைய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தற்போது மக்களின் கருத்துக்களையும் பெற்றுக் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதுக்குடியிருப்பு – திம்பிலியில் மூன்று துப்பாக்கிகளுடன் இளம் குடும்பஸ்தர் கைது..!

0

புதுக்குடியிருப்பு – திம்பிலியில் சட்டவிரோத துப்பாக்கியுடன் இளம் குடும்பஸ்தர் ஒருவரை கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (21.09.2025) இடம்பெற்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு திம்பிலியில் உள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக துப்பாக்கி (இடியன்) மூன்றினை மறைத்து வைத்திருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இரகசிய தகவலினையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸாரால் குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டதுடன் அதனை தமது வீட்டில் வைத்திருந்த குற்றச்சாட்டில் திம்பிலி பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் விசாரணைகளின் பின்னர் நாளையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

கனகராயன் குளத்தில் பெண்ணை மோதி தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்த பொலிஸார்..!

0

கனகராயன்குளம் பகுதியில் பெண் ஒருவரை மோதிக் கொன்று விட்டு தப்பிச் சென்றிருந்த வாகனம் வவுனியா மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் இன்று மீட்கப்பட்டதுடன் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

கனகராயன்குளம் பகுதியை சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் கடந்த 16ஆம் திகதி இரவு கணவருடன் ஏற்பட்ட முரண்பாட்டை தொடர்ந்து கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்க சென்றுள்ளார்.

இதன்போது ஏ-9வீதியில் வைத்து வாகனம் ஒன்று அவரை மோதியதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்ப்படுத்திய வாகனம் நிறுத்தாமல் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தது.

சம்பவத்தில் அந்தபகுதியை சேர்ந்த ம. இதயரஞ்சினி என்ற 32 வயதான நான்கு பிள்ளைகளின் தாயே உயிரிழந்திருந்தார்.

இது தொடர்பாக வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

இந்த நிலையிலேயே விபத்தை ஏற்படுத்திய வாகனத்துடன் சாரதி மற்றும் உரிமையாளர் ஆகியோர் விசுவமடுப் பகுதியில் வைத்து வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டனர்.

வாகனத்தின் நிறம் உட்பட ஏனைய அமைப்புக்களை மாற்றியமைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே இந்தக் கைது இடம் பெற்றுள்ளது.

கொழும்பு விமான நிலைய கணினி கட்டமைப்பு செயலிழப்பு..!

0

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வருகை மற்றும் புறப்பாடு முனையங்களில் நிறுவப்பட்ட “எல்லை கணினி கட்டமைப்பு” செயலிழந்துள்ளது.

இன்று (20) பிற்பகல் 01.45 மணி முதல் குறித்த கணினி கட்டமைப்பு செயலிழந்த நிலையில், மாலை 4.15 மணியளவில் அதன் செயற்பாடு வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் உள்ள இந்த கணினி அமைப்பு கடந்த 08 ஆண்டுகளாக ஒரு தனியார் நிறுவனத்தால் நிறுவப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த அமைப்பு ஒவ்வொரு மாதமும் பல முறை இவ்வாறு செயலிழப்பதாகவும் பெரும்பாலான நாட்களில் பிற்பகலில் இந்த அமைப்பு மெதுவாகச் செயல்படுவதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் இலங்கைக்கு வருகை தரும் நேரத்தில், இதுபோன்ற பலவீனமான கணினி அமைப்புக்குப் பதிலாக அரசாங்கத்தால் நிறுவப்பட்ட மற்றும் அரசாங்கத்தால் பராமரிக்கப்படும் கணினி அமைப்பின் தேவையை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதேவேளை ஐரோப்பா மற்றும் பிற நாடுகளில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள கணினி கட்டமைப்புகளில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கின் கல்வி ஊழலை நிறுத்தக்கோரி அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு..!

0

வடக்கின் கல்வியில் நிகழும் துஸ்பிரயோகங்கள் மற்றும் மோசடிகள் உட்பட வடக்கின் கல்வி ஊழலை நிறுத்தக் கோரி சிவசேன அமைப்பு ஒரு நாள் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தினை எதிர்வரும் திங்கள் 22.09.2025 ஆளுநர் அலுவலகம் முன்னால் காலை 6.00மணி தொடக்கம் பிப 6.00மணி வரை நடாத்தவுள்ளது.

உங்களின் ஆதரவு வடக்கின் கல்வி ஊழலையும் தொடரும் அதிகார துஸ்பிரயோகத்தையும் இல்லாது ஓழிக்கும்.

எனவே இதற்கான ஆதரவை வழங்கும் முகமாக திங்கட்கிழமை தங்களுக்குப் பொருத்தமான நேரத்தில் கலந்து கொள்ளுங்கள். என ஏற்பாட்டுக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை வடக்கு மாகாணம் தொடர்ச்சியாக பெறுபேற்றில் ஒன்பதாவது மாகாணமாக இறுதி நிலையிலேயே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் பஸ்சிலிருந்து தவறி வீழ்ந்து இளைஞன் மரணம்..!

0

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் வீதியில் அறிவியல் நகர் திசையிலிருந்து உருத்திரபுரம் திசை நோக்கி பயணித்த பேருந்தில் இருந்தே நேற்று (18) இரவு இவ்வாறு ஒருவர் தவறி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

உருத்திரபுரத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்தார்.

சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்திலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதுடன், பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் கைது..!

0

நீண்ட காலமாக ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட 22 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று (19.09.2025) யாழ் – குருநகர் 5மாடி பகுதியில் வைத்து 2 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், குருநகர் பொலிஸ் பொலிஸ் காவலரணில் கடமையில் இருந்த பொலிசாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் இரத்தக் கசிவு காரணமாக ஆலயத்திலேயே பலியான இளைஞன்..!

0

யாழ், ஏழாலை – மயிலங்காடு வைரவர் ஆலயத்தில் பூஜை செய்யச் சென்ற இளைஞர் ஒருவர் ஆலயத்திலேயே உயிரிழந்த சம்பவம் நேற்று (19) பதிவாகியுள்ளது.

மானிப்பாய் – சுதுமலை தெற்கு பகுதியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார்.

கிடைத்த தகவல்களின் படி, இவருக்கு செப்டம்பர் 14 முதல் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மானிப்பாயில் உள்ள தனியார் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், ஆலயத்தில் பூஜை செய்யச் சென்ற போது மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனை அவர் தனது தந்தைக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார்.

உறவினர்கள் ஆலயத்திற்கு சென்று பார்த்த போது, அசைவற்ற நிலையில் இருந்துள்ளர். அவரை உடனடியாக தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தினர்.

உடற்கூற்று பரிசோதனைகளில், நுரையீரலில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக மரணம் நிகழ்ந்ததாக தெரியவந்துள்ளது.

சிறுமிக்கு சாரதியால் நேர்ந்த கொடூரம்; நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!

0

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய நபரொருவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவை கொழும்பு (Colombo) உயர் நீதிமன்ற நீதிபதி நேற்று (18) பிறப்பித்துள்ளார்.

வயது முதிர்ந்த வான் சாரதி ஒருவருக்கே இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

“பாடசாலையில் இருந்து வீடு திரும்புவதற்காக காத்திருந்த ஒன்பது வயது சிறுமி ஒருவரே சாரதியால் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

வான் ஒன்றுக்குள் வைத்து சிறுமியை குறித்த சாரதி தகாத முறைக்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்தோடு, மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் அவர் மீது முன்வைக்கப்பட்ட நிலையில், அரசு தரப்பு சட்டதரணிகளால் சந்தேகத்திற்கு இடமின்றி அவை நிரூபிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவரின் வயதைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்ற பிரதிவாதியின் வழக்கறிஞருடைய கோரிக்கையை நீதிபதி நிராகரித்துள்ளார்.

இதையடுத்து, 30,000 ரூபாய் அபராதமும் மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு 500,000 ரூபாய் இழப்பீடும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனுடன், குற்றம் சமத்தப்பட்ட சாரதிக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

மஹரகம காவல்துறையினரால் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, சட்டமா அதிபர் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்குத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!