Sunday, April 19, 2026
Huis Blog

இந்திய துணை ஜனாதிபதியின் வருகையை பிரச்சினைகளை தீர்க்கும் வாய்ப்பாக பயன்படுத்துங்கள்..!

0

இந்திய துணை ஜனாதிபதியின் இலங்கைப் பயணத்தை இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால மனிதாபிமான மற்றும் வாழ்வாதார பிரச்சினைகளை தீர்க்கும் வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும் என்று பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய துணைத் தலைவரின் இலங்கைப் பயணத்தை இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால மனிதாபிமான மற்றும் வாழ்வாதார பிரச்சினைகளை தீர்க்கும் வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும் என்றும் இந்த உயர்மட்ட விஜயம் விழாக்களாக மட்டும் மட்டுப்படுத்தாமல், பல தசாப்தங்களாக தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகளுக்கு நடைமுறை தீர்வுகளை வழங்கும் நோக்கில் அமைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் இலங்கைத் தமிழ் அகதிகள் பல ஆண்டுகளாக எதிர்காலம் இன்றி வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் எதிர்காலம் மேலும் தாமதப்படுத்தப்படக் கூடாது என்பதையும் வலியுறுத்திய அவர்,

அவர்களின் மீள்குடியேற்றத்தை பாதுகாப்பாகவும், மரியாதையுடனும், மனிதாபிமான அடிப்படையிலும் மேற்கொள்ள இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டுமெனவும் திரும்பி வரும் அகதிகள் எந்தவித தொந்தரவும், அச்சுறுத்தலும் அல்லது நிர்வாக தடைகளும் எதிர்கொள்ளாத வகையில் தெளிவான முறைகள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பாக்கு நீரிணை பகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் தமிழ்நாடு மற்றும் இலங்கையின் வட மாகாண மீனவர்களுக்கிடையேயான முரண்பாடுகள் மற்றும் கைது சம்பவங்கள் குறித்தும் கவலை தெரிவித்த அவர், இந்த பிரச்சினைக்கு நீடித்த மற்றும் நியாயமான தீர்வு காண, பாதிக்கப்பட்ட மீனவர்களின் பிரதிநிதிகளுடன் இணைந்து இரு நாடுகளும் செயல்பட வேண்டும்.

தமிழ்நாடு மற்றும் இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கிடையேயான வரலாற்று, பண்பாட்டு மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இணைப்புகளை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்றும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இருந்து வரும் இரு நாடுகளின் உறவுக்கு இடையே கடல் ஒரு தடையாக இல்லாமல், இணைப்பாக செயல்பட வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்திய துணைத் தலைவரின் இந்த விஜயத்தை பயன்படுத்தி அகதி பிரச்சினை, மீனவர் மோதல்கள் மற்றும் எல்லைத் தாண்டிய இணைப்புகள் போன்ற முக்கிய விடயங்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்ட தெளிவான செயற் திட்டத்தை இரு நாடுகளும் உருவாக்க வேண்டும் என கீதநாத் காசிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.

வலுசக்தி அமைச்சிற்கு புதிய செயலாளர் ஜனாதிபதியால் நியமனம்..!

0

னாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சின் செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, வெள்ளிக்கிழமை (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவரிடம் கையளித்தார்.

நிதி மற்றும் பொருளாதார அலுவல்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளராகப் பணியாற்றிய ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு, இலங்கை திட்டமிடல் சேவையின் (SLPS) சிரேஷ்ட அதிகாரியாவார்.

66.99 $ கொள்வனவு செய்த கச்சா எண்ணையின் விலையே பாரியளவில் கூட்டப்பட்டது..!

0

இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்யும் போது, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயை 286 டொலர் என்ற விலைக்கு கொள்வனவு செய்யவில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றை இவ்வளவு அதிக விலைக்கு கொள்வனவு செய்யவில்லை என்றும், மத்திய கிழக்கில் போர்ச் சூழல் ஆரம்பமான பின்னர், மார்ச் 11ஆம் திகதி நாட்டுக்கு வந்த கச்சா எண்ணெய் கப்பலில் ஒரு பீப்பாயின் விலை 66.99 டொலர் மாத்திரமே என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், இன்றைய தினம் (17) மற்றுமொரு கச்சா எண்ணெய் கப்பல் நாட்டை வந்தடைய உள்ளதாகவும், அதன் விலை ஒரு பீப்பாய்க்கு 71.99 டொலர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், டீசல் கொள்வனவின் போது 286 டொலருக்கும் அதிகமான விலையை செலுத்த வேண்டியிருந்ததாகத் தெரிவித்த தலைவர், மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக டீசல் விலை பாரியளவில் உயர்வடைந்துள்ளதாகவும், இதனால் ஒரு பீப்பாய் டீசலை 288 டொலர் முதல் 303 டொலர் வரையிலான விலைக்கு கொள்வனவு செய்ய நேரிட்டதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை உலக சந்தையில் குறைந்த விலைக்கு கொள்வனவு செய்த போதும் தமது தவறுகளால் ஏற்பட்ட நட்டத்தை மறைக்கவே மக்கள் மீது சுமைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

யாழ் அரசாங்க அதிபரை மீறி சட்ட விரோத விகாரை பிக்கு அடாவடி; தீர்வு என்ன???

0

அனைத்து பங்குதாரர்களையும் ஒருங்கிணைந்த வகையில் தையிட்டியில் காணி அளவீடு செய்யப்படும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

காணி நிர்ணயத் திணைக்களத்தினுடைய கோரிக்கைக்கமைவாக நில அளவைத் திணைக்களத்தினால் தையிட்டி பகுதியில் காணியை அளவீடு செய்யும் பணிகள் வெள்ளிக்கிழமை (17) மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்த வகையில் காணி அளவீடு செய்ய வேண்டுமென புத்தசாசன அமைச்சின் செயலாளரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, மே மாதம் 15ஆம் திகதிக்கு இடையில் அனைத்து பங்குதாரர்களையும் இணைந்த வகையில் தையிட்டி காணி அளவீடு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனால் பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதன் போது மேலதிக அரசாங்க அதிபர் (காணி), தெல்லிப்பளை பிரதேச செயலாளர், சிரேஸ்டநில அளவைத் திணைக்கள அத்தியட்சகர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், காணி நிர்ணயத் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்வதனை தடுத்து நிறுத்த கோரி விகாராதிபதி பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்களில் 17 பேரின் காணிகளை இன்றைய தினம் (17) வெள்ளிக்கிழமை அளவீடு செய்வது எனவும் , அதற்கு காணி உரிமையாளர்கள் சம்மதிக்க வேண்டும் என கடந்த 11ஆம் திகதி கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகரர் மற்றும் மாவட்ட செயலர் ம. பிரதீபன் ஆகியோர் காணி உரிமையாளர்களிடம் கோரி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மனைவியின் தகாத உறவு; கணவன் அரங்கேற்றிய கொடூர சம்பவம்..!

0

கள்ள உறவு காரணமாக ஏற்பட்ட தகராறு முற்றியதில், கணவன் தனது மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று (17) அதிகாலை குறித்த பெண் தனது படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்த போதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச் சம்பவத்தில் வெலிஓயா, UDK பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வெளிநாடு சென்றிருந்த இப்பெண், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே கண்டி, கலஹா – புபுரெஸ்ஸ பகுதியில் உள்ள தனது கணவர் வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

பின்னர், இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர் தனது குழந்தையுடன் வெலிஓயா தோட்டத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்குச் சென்ற நிலையில் மனைவி நீண்ட நாட்களாகத் தனது வீட்டிற்குத் திரும்பாததால், அவரை மீண்டும் அழைத்துச் செல்வதற்காகக் கணவன் நேற்று (16) மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இதன்போது, மனைவி அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் தகாத உறவில் இருப்பதாக அங்கிருந்தவர்கள் கணவனிடம் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியைக் கண்டித்ததோடு இது தொடர்பாக நேற்று மதியம் முதல் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியுள்ளது.

இந்த நிலையில், இன்று அதிகாலை படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த மனைவியைக் கணவன் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக 30 வயதுடைய கணவன் மற்றும் கள்ள உறவு வைத்திருந்ததாகக் கூறப்படும் இளைஞர் ஆகிய இருவரையும் வட்டவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பதவி விலகிய எரிசக்தி அமைச்சர் மற்றும் செயலாளர்..!

0

எரிசக்தி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் இன்று (17) பிற்பகல் தமது பதவி விலகல் கடிதங்களை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் சமர்ப்பித்துள்ளனர்.

கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதி தொடர்பான நடைமுறைகளை ஆராய்வதற்காக விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணைக்குழு முன்னெடுக்கவுள்ள விசாரணைகள் எவ்விதத் தலையீடுகளுமின்றி, பாரபட்சமற்ற முறையிலும் சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காகவே தாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அரச நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையை பேணுவதற்காக எடுக்கப்பட்ட ஒரு தீர்மானமாக இது அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.

யாழில் தங்கையின் மோதிரத்தை விற்று காதலிக்கு ஐபோன் வாங்கிக் கொடுத்த மாணவன்..!

0

தனது தங்கையின் மோதிரத்தை களவெடுத்து அதனை யாழ் நகர்ப் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் விற்று விட்டு அந்தப் பணத்தில் தனது காதலிக்கு 3 லட்சம் ரூபா பெறுமதியான ஐபோன் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளான் யாழ் நகர பகுதியில் பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் 16 வயது மாணவன்.

நல்லுார்ப் பகுதியைச் சேர்ந்த மாணவன் தனது தனது தங்கைக்கு பூப்புனித நீராட்டு விழாவுக்கு உறவினர்களால் அணிவித்த தங்க மோதிரம் ஒன்றை அன்று இரவே தங்கை நித்திரையில் இருக்கும் போது விரலிலிருந்து கழற்றி எடுத்து வைத்துள்ளான்.

அடுத்த நாள் தங்கை உட்பட பெற்றோர் அந்த மோதிரத்தை தேடி அலைந்து சலித்து விட்டார்கள். அதன் பின்னர் அந்த மோதிரத்தை தேடும் பணியை கைவிட்டார்கள்.

கடந்த புதன்கிழமை அவர்களின் வீட்டுக்கு ஒரு பெண்கள் மற்றும் 3 ஆண்கள் அடங்கிய குழு ஒன்று வந்து அவர்களின் 16 வயதான மகனைத் தேடியுள்ளது. சண்டைக்கு ஆயத்தமான நிலையில் வந்திருந்த குறித்த குழுவின் நடவடிக்கைகள் அயலில் வசிக்கும் இளைஞர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் பின்னர் அங்கு வாக்குவதாம் ஏற்பட்டுள்ளது. மாணவனின் குடும்பத்தினர் அவனைத் தேடுவதற்கான காரணம் கேட்ட போது தமது உறவினரான மாணவிக்கு மாணவனால் வாங்கிக் கொடுக்கப்பட்ட மிகப் பெறுமதியான ஐபோன் தொடர்பாகவும் அந்த ஐபோனில் காணப்பட்ட மாணவனின் நிர்வாணப் புகைப்படங்கள் தொடர்பாகவும் அவர்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து விளையாட்டு மைதானத்தில் நின்றிருந்த மாணவனை குடும்பத்தினர் அழைத்து வந்து வந்து விசாரணை செய்த போதே தங்கையின் மோதிரத்தை விற்று தனது காதலிக்கு ஐபோன் வாங்கிக் கொடுத்த விடயம் வெளியாகியுள்ளது.

ஐபோன் வாங்கிய மாணவியும் ஐபோனைக் கொடுத்த மாணவனும் ஒரே தனியார் கல்வி நிலையத்தில் கற்று வந்ததாகவும் அதன் மூலமே இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாகவும் தெரிய வருகின்றது.

மாணவியை தந்தை ரியூசனுக்கு அருகில் இறக்கிவிட்டுச் சென்ற பின் மாணவி ரியூசனுக்குள் நுழைவது போல் நுழைந்து தந்தை வெளியே சென்றவுடன் மாணவியும் ரியூனை விட்டு வெளியேறி மாணவனுடன் சுற்றித் திரிந்த விடயமும் அங்கு அம்பலமாகியுள்ளது.

குறித்த இருவரும் ரியூசனை விட்டு வெளியேறி அந்த ரியூசனுக்கு அருகில் இருந்த நுாலகம் ஒன்றில் பல தடவைகள் சந்தித்துள்ளதாகவும் குறித்த நுாலகத்தில் வேலை செய்யும் ஒருவரும் அவர்களின் செயற்பாடுகளுக்கு உடந்தையாக இருந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

பெற்றோரே உங்கள் பிள்ளைகளின் மீது மிகவும் அவதானமாக இருங்கள். இல்லாது விடின் உங்களது பிள்ளை மட்டுமல்ல உங்கள் குடும்பத்தின் எதிர்காலமே சந்தி சிரிக்கும் நிலைக்கு வந்துவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பிரபல பாடசாலையொன்றின் 16 வயதுடைய மாணவர்கள் மது அருந்திய நிலையில் கைது..!

0

பதுளை ஹல்துமுல்ல பகுதியில் உள்ள ஒரு முன்னணிப் பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் குழு ஒன்று, பாடசாலை நேரத்தில் மது அருந்தியதற்காக நேற்று(10) கைது செய்யப்பட்டது.

அவர்கள் அனைவரும் சுமார் 16 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் ஒருவர் கடுமையாக நோய் வாய்ப்பட்ட நிலையில் ஹல்துமுல்ல மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் கவலைக்கிடமான நிலையில் தியத்தலாவ ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

மருத்துவமனை வட்டாரங்களின்படி, அவர் மதுவின் வாசனையை மறைப்பதற்காக ஒரு வாசனைப் பொருளை அருந்திய பின்னர் மது அருந்தியுள்ளார்.

ஹல்துமுல்ல காவல்நிலைய பொறுப்பதிகாரி, சி.ஐ. அசோகா இந்துனில் ரத்நாயக்க, சம்பந்தப்பட்ட பாடசாலை முதல்வர் மற்றும் மாணவர்களின் பெற்றோரை அழைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறினார்.

இதற்கிடையில், அப்பகுதி மக்கள் இந்தச் சம்பவம் குறித்து கவலை தெரிவித்தனர்.

தீவுப் பகுதிகளில் இடர் கொடுப்பனவு நிறுத்தம்; விரைவில் வழங்க நடவடிக்கை..!

0

யாழ் நெடுந்தீவு உள்ளிட்ட பின்தங்கிய தீவுப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளை வகைப்படுத்தியதில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக, அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இடர் கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மத்திய கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவேவ இது குறித்துத் தெரிவிக்கையில், மாகாண சபைகளினால் முன்வைக்கப்பட்ட அளவீடுகளின் அடிப்படையில் புதிய சுற்றறிக்கை தயாரிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், இந்த வகைப்படுத்தலில் சிக்கல்கள் இருப்பதை அமைச்சு கண்டறிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வகைப்படுத்தல் செயல்பாட்டில் எங்கு தவறு நடந்தது என்பதைக் கண்டறிந்து அதனைச் சரி செய்ய ஒரு விசேட குழு நியமிக்கப்படவுள்ளது.

அக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தகுதியான ஆசிரியர்களுக்கு மீண்டும் கொடுப்பனவுகளை வழங்கத் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என செயலாளர் உறுதியளித்துள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் எரிபொருளுக்கு QR தேவை இல்லை..!

0

பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 18-ஆம் திகதி வரை பெற்றோல் வாகனங்களுக்கு QR குறியீட்டு முறைமை இன்றி எரிபொருள் வழங்கப்படவுள்ளது.

இத்தகவலை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் குறித்த காலப்பகுதியில் ஒற்றை மற்றும் இரட்டை இலக்க நடைமுறை பின்பற்றபடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!