Monday, May 4, 2026
Huis Blog

தையிட்டி ‘பவானி வீதி’ மீட்பு விவகாரம்; நடவடிக்கையை கைவிடுமாறு பொலிஸார் அச்சுறுத்தல்..!

0

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் காணப்படும் வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான ‘பவானி வீதி’யை மீட்கும் நடவடிக்கையைக் கைவிடுமாறு, தவிசாளர் சோ.சுகிர்தனை பலாலி பொலிஸார் அழைத்து அச்சுறுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் பிரதேச சபைக்குச் சொந்தமான பவானி வீதி காணப்படுவதை உறுதிப்படுத்திய தவிசாளர், கடந்த 28ஆம் திகதி நில அளவையாளர்கள் மூலம் அதனை அடையாளம் கண்டு அளவீடு செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, குறித்த வீதியை எதிர்வரும் 11ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்க வேண்டும் என விகாராதிபதிக்கு தவிசாளர் கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.

அக்கடிதத்தில், “11ஆம் திகதிக்குள் வீதி விடுவிக்கப்படாவிட்டால், 12ஆம் திகதி பிரதேச சபையினால் வேலி அகற்றப்படும். அவ்வாறு அகற்றப்பட்டால், அதற்கான செலவை விகாராதிபதியே செலுத்த வேண்டும்” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அறிவித்தலுக்கு எதிராக விகாராதிபதி பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, தவிசாளர் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

இதன்போது, “வேலியை அகற்றினால் இன நல்லிணக்கம் பாதிக்கப்படும் என்பதால் அந்த முயற்சியை கைவிட வேண்டும். மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பொலிஸார் தவிசாளரை மிரட்டும் தொனியில் கூறினார்கள் என்று தெரிகின்றது.

பொலிஸாரின் எச்சரிக்கைக்குப் பதிலளித்த தவிசாளர் சோ.சுகிர்தன், “சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நான் தயார். இது பிரதேச சபைக்குச் சொந்தமான வீதி என்பதற்கான ஆவணங்கள் எம்மிடம் உள்ளன.

விகாராதிபதி வீதியை விடுவிக்காது விட்டால், நாம் வேலியை அகற்றி வீதியை மீட்போம். அதற்கு எதிராக பொலிஸார் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யலாம். அதனை நாம் அங்கு சந்திப்போம்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 28ஆம் திகதி விகாரை அமைந்துள்ள காணியை அளக்க முற்பட்டபோது, “காணிகள் விடுவிக்கப்படும்” என்ற உறுதிமொழியை மாவட்ட அல்லது பிரதேச செயலர் கடிதம் மூலம் வழங்கினால் மட்டுமே அளவீடு செய்ய அனுமதிப்போம் என காணி உரிமையாளர்கள் மறுத்திருந்தனர்.

இதன் காரணமாக அன்றைய தினம் காணி அளவீட்டுப் பணிகள் கைவிடப்பட்டன என்று யாழ். மாவட்ட செயலர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

11 தமிழ் இளைஞர்கள் கடத்தல்; முன்னாள் கடற்படை தளபதிக்கு இறுகும் பிடி..!

0

கொழும்பு மற்றும் பிற பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில், முன்னாள் கடற்படைத் தளபதி, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை இரண்டாவது சந்தேக நபராக மீண்டும் பெயரிடுமாறு, கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமர உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதி அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

சந்தேக நபரைக் குற்றஞ்சாட்டப் போதுமான சான்றுகள் இருந்த போதிலும் அவரை விடுவிக்கப் பரிந்துரைப்பது தவறான செயல் என்றும் நீதிவான் குறிப்பிட்டுள்ளார்.

2008-2009 ஆம் ஆண்டுகளில் கொழும்பில் 11 தமிழ் இளைஞர்களைக் கடத்தி, தடுத்து வைத்து, கப்பம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் தொடரப்பட்ட வழக்கில், முன்னர் இரண்டாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டிருந்த அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பின்னர் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

எனினும், அதே வழக்கில் அவரை மீண்டும் சந்தேக நபராகப் பெயரிடுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பாக விரிவான வாதங்களை முன்வைத்த சட்டவாளர் அச்சல செனவிரத்னவின் கோரிக்கையை ஏற்று நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இலங்கையில் தொடர் அதிர்ச்சி; அதிரடியாகக் கைதாகும் மோசடிக் குழுக்கள்..!

0

சிறிலங்கா திறைசேரியில் நடந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி மையத்தில் உயர்அதிகாரி ஒருவரின் உடல் நரம்புகள் அறுக்கப்பட்ட குருர தற்கொலையின் பின்னணியில் இந்த மோசடியின் நதிமூலம் ரிசிமூலம் குறித்து இதுவரை எந்த துப்புகளும் கிட்டவில்லை.

இப்போது அமெரிக்காவின் FBI அமைப்பின் கால்களில் சிறிலங்கா விழுந்து விட்ட நிலையில் இணைய மோசடி குழுக்களை தேடி உள்ளுர் அதிரடிகளும் இடம் பெறுகின்றன.

நேற்று நடத்தப்பட்ட முதல் ஒப்ரேசனில் ஒரு பெண் உட்பட 37 சீனர்கள் தலங்கமவின் கொஸ்வத்த பகுதியில் மாட்டிய நிலையில் கொழும்பின் புறநகரான ராஜகிரிய பகுதியில் நடத்தப்பட்ட ஒப்ரேசனில் சிறிலங்கா காவற்துறையையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் நூற்றுக்குமேற்பட்ட வெளிநாட்டவர்களை கொண்ட மெகா குழு சிக்கியுள்ளது.

ஒரு கட்டிடத்தில் பல தளங்களை வாடகைக்கு எடுத்து, இந்தக குழு தமது அதிநவீன மோசடித் தொழிலை நடத்திய நிலையில் காவற்துறையின் இந்த ஒப்ரேசனில் பிடிபடாமல் பலர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

நீதிமன்றில் கணவர்களை மாற்றித் தரக் கோரிய சகோதரிகள்; புதிதாக உருவாகும் தற்குறி சமூகம்..!

0

இந்தியா மத்தியப் பிரதேச மாநில உயர்நீதிமன்றக் கிளையில் விசித்திரமான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது.

தனது மனைவியைக் கடத்தியதாகக் கணவர் ஒருவர் தொடுத்த வழக்கு விசாரணையின் போது சம்பந்தப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜராகி, தான் விரும்பியே தனது தங்கையின் கணவருடன் சென்றதாகத் தெரிவித்தார்.

இதில் மேலும் ஒரு திருப்பமாக, அவரது தங்கை நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில், “தனது கணவர் தனது அக்காவுடன் வாழ்வதில் எனக்கு எவ்விதப் பிரச்சினையும் இல்லை” எனக் கூறினார்.

அத்தோடு நில்லாமல், “நானும் அக்காவின் கணவருடன் தான் வாழப்போகிறேன்” என அவர் கூறியதைக் கேட்டு நீதிமன்றமே அதிர்ச்சியடைந்தது.

இதனைத் தொடர்ந்து அதிருப்தியடைந்த நீதிபதி, “இது ஒரு தனிப்பட்ட குடும்ப விவகாரம்” என்று கூறி, கடத்தல் வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

திராவிடக் கோட்டைகளை அசைத்துப் பார்க்கும் சக்திகள்; முடிவுக்கான இறுதிக் கணங்கள்..!

0

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்குப்பதிவு முடிந்து, ஒட்டுமொத்த மாநிலமும் நாளை (மே 04) காலைக்காகக் காத்திருக்கிறது.

இம்முறை பதிவாகியுள்ள 85.15% வாக்குப்பதிவு என்பது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. இது வெறும் ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறியா அல்லது ஒரு மிகப்பெரிய அரசியல் புரட்சியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாம் தமிழர் கட்சியின் அசுர வளர்ச்சியும் தமிழக அரசியலில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு கட்சி பெற்ற மிகப்பெரிய வளர்ச்சி என்றால் அது நாம் தமிழர் கட்சி (NTK) தான். 2024 மக்களவைத் தேர்தலில் சுமார் 36 இலட்சம் (8.1%) வாக்குகளைப் பெற்று, எந்தவொரு கூட்டணியும் இன்றி தனித்து நின்று தமிழகத்தின் தவிர்க்க முடியாத மூன்றாவது பெரிய சக்தியாக சீமான் உருவெடுத்துள்ளார்.

2016-ல் வெறும் 1.1% வாக்குகளைப் பெற்ற இந்தக் கட்சி, 2021-ல் 6.89% ஆக உயர்ந்து, தற்போது 10%-ஐ நெருங்கும் ஒரு மாபெரும் சக்தியாக வளர்ந்துள்ளது.

இம்முறை பதிவான 85% வாக்குகளில், நாம் தமிழர் கட்சியின் “விவசாயி” சின்னத்திற்குப் பின்னால் அணிவகுத்த இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாக்குகள் பல தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுகவின் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக மாறப்போகிறது.

வழக்கமாக திராவிடக் கட்சிகளுக்கு இடையே மட்டுமே இருந்த போட்டி, இம்முறை சிதறியுள்ளது.திமுக ஆட்சியைத் தக்கவைக்கத் தீவிரமாகப் போராடுகிறது. அதிமுக இழந்த செல்வாக்கை மீட்க எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி களமிறங்கியுள்ளது.

நடிகர் விஜய்யின் வருகை நகர்ப்புற வாக்கு விகிதத்தில் ஒரு புதிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சியானது கொள்கை ரீதியான வாக்கு வங்கி மற்றும் கிராமப்புற இளைஞர்களின் ஆதரவுடன் தனிப்பாதையில் பயணிக்கிறது.

கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் வெற்றி – தோல்வியைப் பற்றியே பேசுகின்றன. ஆனால், 36 இலட்சம் வாக்குகளைக் கொண்டுள்ள நாம் தமிழர் கட்சி போன்ற இயக்கங்கள் இம்முறை சட்டமன்றத்திற்குள் நுழைவார்களா என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

முதல்முறை வாக்களிக்கும் இளைஞர்கள் திராவிடக் கட்சிகளைத் தாண்டி மாற்று அரசியலை (சீமான் அல்லது விஜய்) ஆதரிக்கும் போக்கு அதிகரித்துள்ளது.

அதிக வாக்குப்பதிவு: 85.15% வாக்குப்பதிவு என்பது அமைதியான முறையில் ஒரு “மௌனப் புரட்சி” நடந்திருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது. வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் இரட்டை இலக்கைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசியலைப் பொறுத்தவரை, மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது பதிவான வாக்குகளில் தெரிகிறது. நாளை மே 04 அன்று, 36 இலட்சமாக உயருமா? அல்லது பாரம்பரியக் கட்சிகள் தங்கள் செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்ளுமா? என்பதை நாளை வரை பொறுத்திருக்க வேண்டும்.

மஹிந்த ராஜபக்ஷ, பிரியங்கர ஜயரத்னவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக் குழு அழைப்பாணை..!

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன ஆகியோரை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆஜராகுமாறு இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது.

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான தற்போதைய விசாரணை குறித்து வாக்கு மூலங்களைப் பதிவு செய்வதற்காக இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அச்சுறுத்தல்களுக்கு நாம் அஞ்ச மாட்டோம்; மே தினப் பேச்சுகளுக்கு நாமல் பதிலடி..!

0

யாருடைய வழக்கை முதலில் விசாரிக்க வேண்டும் மற்றும் யாரைச் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்பதைத் தேசிய மக்கள் சக்தியின் பெலவத்த கட்சி அலுவலகமே தீர்மானிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

களனி விகாரையில் நேற்று நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மே தினக் கூட்டங்களில் தொழிலாளர் உரிமைகள் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக, அரசியல் எதிராளிகளைச் சிறைக்கு அனுப்புவது குறித்தே ஜனாதிபதியும் ஆளும் தரப்பினரும் பேசினார்கள். இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை.

தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதிகள் போலியானவை என்பதை மக்கள் உணர்ந்துள்ளதால், அரசு தற்போது அடக்கு முறையைக் கையாண்டு வருகின்றது. 323 கொள்கலன்கள் விடுவிப்பு குறித்து முறைப்பாடளித்த டான் பிரசாத் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.

2.5 மில்லியன் டொலர் மோசடி விவகாரத்தில் திறைசேரியின் முன்னாள் உதவிப் பணிப்பாளர் உயிரிழந்துள்ளமை சந்தேகத்துக்குரியது. அரசின் ஊழல் மோசடிகளைத் நாம் தொடர்ச்சியாக வெளிப்படுத்துவோம்.” – என்றார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு; போக்குவரத்து கட்டணங்களும் உயரும் வாய்ப்பு..!

0

எரிபொருள் விலை திருத்தத்தைத் தொடர்ந்து டீசல் விலை அதிகரித்துள்ளதால், பாடசாலைப் போக்குவரத்து கட்டணங்களையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பாடசாலைப் போக்குவரத்துச் சங்கத்தின் செயலாளர் மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தக் கட்டணத் திருத்தத்தை ஒரு குறிப்பிட்ட சதவீதமாக அதிகரிக்காமல், பெற்றோருடன் கலந்துரையாடி ஓரளவுக்கு உயர்த்துவதற்கு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் டீசல் விலை உயர்த்தப்பட்ட போதும், பெற்றோரின் நிலையைக் கருத்திற்கொண்டு போக்குவரத்து கட்டணங்களை அதிகரிக்கவில்லை.

எனினும், தற்போது ஏற்பட்டுள்ள சிரமங்களைக் கருத்திற்கொண்டு இம்முறை ஒரு குறிப்பிட்ட தொகையினால் கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் என செயலாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் கூட, பேருந்துக் கட்டணத்தில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு மேலதிக சுமை ஏற்படாமல் பாதுகாப்பதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், எரிபொருள் விலை உயர்வின் தாக்கம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தேவையெனில் எதிர்காலத்தில் பொருத்தமான முடிவுகள் எடுக்கப்படும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வவுனியாவில் கலந்துரையாடல்..!

0

ஈழத் தமிழர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50வது ஆண்டு நிறைவை ஒட்டி, வடகிழக்கு மாகாணங்கள் எங்கும் தமிழ் மக்களின் ஜனநாயக ரீதியான எழுச்சியை வலியுறுத்தும் நோக்கில், மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் இன்றைய தினம் வவுனியாவில் நடைபெற்றது.

சமூக செயற்பாட்டாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வவுனியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி சமயத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

1976ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானம், இலங்கைத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல்லாகும்.

இத்தீர்மானத்தின் 50வது ஆண்டு பூர்த்தியை எழுச்சியுடன் கொண்டாடுவதற்கும், அதன் முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதற்கும் இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இதன் ஒரு கட்டமாக, வவுனியா மாவட்டத்திற்கான ஏற்பாட்டுக் குழு இன்றைய தினம் முறைப்படி தெரிவு செய்யப்பட்டது. இக் குழுவின் ஒருங்கிணைப்பில், வவுனியா மாவட்டத்தின் கிராமங்கள் தோறும் பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகள் மற்றும் விழிப்புணர்வு கூட்டங்களை ஒழுங்கு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கில் மாவட்ட ரீதியான நிர்வாகத் தெரிவுகள் பூர்த்தியடைந்த பின்னர், பொதுக் கலந்துரையாடல் ஒன்றின் மூலம் வடகிழக்கிற்கான ஆரம்ப நிகழ்வுகள் குறித்த மேலதிக விபரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

நாட்டில் தேசிய சைபர் பாதுகாப்பு ஒழுங்குபடுத்தல் அதிகார சபையை நிறுவுவதற்கு அனுமதி..!

0

நாட்டில் தேசிய சைபர் பாதுகாப்பு ஒழுங்குபடுத்தல் அதிகார சபையை நிறுவுவதற்கான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் கணினி அவசர தயார் நிலை குழு ஆகியவற்றுடன் இணைந்து, சட்ட வரைஞர் திணைக்களத்தின் ஆலோசனைகளைப் பெற்று வருவதாக அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால குறிப்பிட்டார்.

எதிர்வரும் 03 மாதங்களில் இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுவதற்கு எதிர்பார்ப்பதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால தெரிவித்தார்.

error: Content is protected !!