Sunday, July 19, 2026
Huis Blog Bladsy 112

செம்மணியில் மேலும் 7 எலும்புக்கூடுகள்; மொத்தமாக 63 எலும்புக் கூடுகள் மீட்பு..!

0

யாழ், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய அகழ்வின் போது 7 என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 14 ஆம் நாள் அகழ்வு இன்று இடம்பெற்றது.

இன்றைய அகழ்வின் போது ஏழு என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அதற்கமைய செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 63 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் இதுவரை 54 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இன்று இடம்பெற்ற அகழ்வில் சிறுமியின் ஆடை ஒன்று உட்பட சில ஆடைகள் மற்றும் பாதணிகள் போன்ற தடயப் பொருட்களும் அகழ்ந்தெடுக்கப்பட்டு சான்றுப் பொருட்களாக நீதிமன்றக் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேலும் மனிதப் புதைகுழிகள் இருக்கலாம் எனச் சந்தேகத்தின் அடிப்படையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட புதிய பகுதியில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் குறித்த பகுதி “தடயவியல் அகழ்வாய்வுத்தளத்தின் இரண்டாவது பிரதேசமாக” நீதிமன்றத்தால் நேற்று பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.

அவற்றில் அடையாளம் காணப்பட்ட என்பு எச்சங்கள் துப்பரவு செய்யப்பட்டுள்ளன. அவை நாளை அகழ்ந்தெடுக்கப்பட்டு அவை தொடர்பான எண்ணிக்கைகள், அறிக்கையிடல்கள் நாளையே வெளியிடப்படும்.

யாழ். நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் துறைசார் நிபுணரும், பேராசிரியருமான ராஜ் சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் ஆணையாளர் மிராக் ரஹீம், காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணிகளான ஞா.ரனிதா, சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும் அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஓமந்தை காணி விவகாரம்; அரசாங்கம் அதிரடி அறிவிப்பு..!

0

வவுனியா, ஓமந்தை பொலிஸ் நிலையம் அருகில் உள்ள காணியை பொலிஸார் துப்புரவு செய்யும் வேலை நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஓமந்தை பொலிஸார் அத்துமீறி சென்று துப்புரவு செய்து அதில் விகாரை அமைக்க மேற்கொண்ட முயற்சி அப்பகுதி மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக பிரதேச சபை தீர்மானம் எடுக்கப்பட்ட பிறகும் வவுனியா ஓமந்தை பகுதியில் பொலிஸார் தனியார் காணிகளை அடாவடித்தனமாகக் கைப்பற்றி வைத்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால ”வவுனியா ஓமந்தை பொலிஸ் நிலையம் அருகில் உள்ள காணியை பொலிஸார் துப்புரவு செய்யும் வேலை உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபருடன் நான் பேசி அதற்கான உத்தரவை வழங்கியுள்ளேன். அந்த வேலை இனி இடம்பெறாது” எனத் தெரிவித்துள்ளார்.

செம்மணி புதைகுழியின் இன்றைய அகழ்வில் 04 எலும்புக் கூடுகள் அடையாளம்..!

0

யாழ் – அரியாலை சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுரை 56 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் 50 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

இன்று 13வது நாளாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளில் மேலும் 4 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

யாழ் – செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 13வது நாளாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா, சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் பங்கேற்போடு இன்றும் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது இன்றைய தினமும் 4 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்தோடு இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்ததோடு இதுவரை முழூமையாக 50 என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

வடக்கை பொருளாதார ரீதியில் அழிக்க தயாராகும் பிரமிட் திட்டங்கள்..!

0

பிரமிட் திட்டங்கள் என்பது ஒரு குறிப்பிட்ட வகையான மோசடி திட்டமாகும், இதில் பங்கேற்பாளர்கள் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதன் மூலம் வருமானம் ஈட்டுவார்கள். இந்தத் திட்டங்களில், ஆரம்பகால பங்கேற்பாளர்கள் அதிக லாபம் ஈட்டுவார்கள், ஆனால் புதிய உறுப்பினர்கள் அதிகமாக சேரும்போது, திட்டம் பெரும்பாலும் சரிந்துவிடும். இதனால், பெரும்பாலானோர் பணத்தை இழந்து விடுவார்கள்.

பிரமிட் திட்டங்களின் அம்சங்கள்

புதிய உறுப்பினர்களை சேர்ப்பது:

இந்த திட்டங்களின் முக்கிய அம்சம், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதன் மூலம் வருமானம் ஈட்டுவதாகும்.

உறுப்பினர் கட்டணம்:

புதிய உறுப்பினர்கள் திட்டத்தில் சேர ஒரு கட்டணம் செலுத்த வேண்டும்.

உறுப்பினர்களை சேர்ப்பதற்கான ஊக்கத் தொகை:

தங்கள் கீழ் உள்ள உறுப்பினர்கள் சேர்க்கும் ஒவ்வொரு புதிய உறுப்பினருக்கும் ஒரு ஊக்கத்தொகை கிடைக்கும்.

உறுப்பினர்கள் அதிகரிக்கும் போது சரிவு:

ஒரு கட்டத்திற்கு மேல் உறுப்பினர்கள் அதிகரிக்கும்போது, திட்டத்திற்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பது கடினமாகிவிடும். இதனால், திட்டம் சரிந்து, பல உறுப்பினர்கள் பணத்தை இழந்து விடுவார்கள்.

பிரமிட் திட்டங்களின் ஆபத்துகள்:

நிதி இழப்பு:

பெரும்பாலானோர் பணத்தை இழந்து விடுவார்கள்.

மோசடி:

சட்டவிரோதமானவை, மோசடி செய்பவர்கள் பணத்துடன் ஓடிவிடுவார்கள்.

நம்பகத் தன்மை இழப்பு:

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடையே நம்பிக்கையை இழக்க நேரிடும்.

இலங்கையில் பிரமிட் திட்டங்கள் சட்டத்திற்கு முரணானவையா?

1988 ஆம் ஆண்டு 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் பிரிவு 83(இ) இன் பிரகாரம் பிரமிட் திட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளது.

இத்திட்டங்களை ஆரம்பிப்பவர்கள் மட்டும் குற்றவாளிகளாக கருதப்படுவார்களா?

இல்லை ஏதாவது நபர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தடைசெய்யப்பட்ட திட்டங்களை ஆரம்பித்தல், வழங்குதல், ஊக்குவித்தல், விளம்பரப்படுத்துதல், நடாத்துதல், நிதியிடல், முகாமை செய்தல் அல்லது இயக்குதல் குற்றமாகக் கருதப்படும்.

பிரமிட் வகையிலான தடைசெய்யப்பட்ட திட்டங்கள் என்றால் என்ன?

பிரமிட் திட்டங்கள் பின்வரும் அமைப்பினைக்கொண்டிருக்கும்

திட்டத்தில் பதிவுசெய்துகொள்வதற்கு குறிப்பிட்டளவு பணம் அல்லது பணப்பெறுமதி செலுத்த வேண்டியிருத்தல் மற்றும் பரிந்துரை செய்யும் முறைமை ஊடாக புதிய உறுப்பினர்களை திட்டத்திற்குள் இணைப்பதற்கும் புதிய உறுப்பினர்கள் ஊடாக மேலதிக பணத்தினை பெற்றுக் கொடுப்பதற்கும் தொடர்ச்சியான ஊக்குவிப்புக்கள் அல்லது வருமானங்களை வழங்குதல்.

பிரமிட் திட்டங்கள் தொடர்பாக தெரிந்திருக்காது அத்திட்டங்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் கம்பனிகளுக்கான தண்டனைகள் என்ன?

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் பங்குபற்றியமைக்காக குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஏதாவது நபர் பின்வரும் தண்டனைகளுக்கு உட்படுவார்:

– மூன்று ஆண்டுகளுக்கு மேற்படாத சிறைத்தண்டனை அல்லது
– ரூ.1,000,000.00 இற்கு மேற்படாத தண்டப்பணம் அல்லது
– பணம் மற்றும் சிறைத்தண்டனை ஆகிய இரண்டும்

வங்கித்தொழில் சட்டத்தின் பிரிவு 83(இ) இல் தொடர்பான தண்டனைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

பிரமிட் திட்டங்கள் தொடர்பாக தெரிந்திருந்தும் அத்திட்டங்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் கம்பனிகளுக்கான தண்டனைகள் என்ன?

நபர் ஒருவர் பிரமிட் திட்டங்கள் தொடர்பாக தெரிந்திருந்தும் வேண்டுமென்றே இத்திட்டங்களை செயற்படுத்தி பிறநபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருப்பின் பின்வரும் தண்டனைகளுக்கு உட்படுவார்:

– மூன்று ஆண்டுகளுக்கு குறையாத ஐந்து ஆண்டுகளுக்கு மேற்படாத கடூழிய சிறைத்தண்டனை
– ரூ.2,000,000.00 அல்லது பங்குபற்றுணர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட மொத்த பணத்தின் இலங்கைப்பெறுமதியின் இரண்டு மடங்கு ஆகியவற்றில் கூடிய பெறுமதியின் அளவில் தண்டப்பணம்.

வங்கித்தொழில் சட்டத்தின் பிரிவு 83(இ) இல் தொடர்பான தண்டனைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

பிரமிட் திட்டங்கள் எவ்வாறு அடையாளங் காணப்படுகிறது?

பங்குபற்றுநர்கள் கீழ்வருமாறு கேட்கப்படின் திட்டத்தில் இணைவதற்கு பணம் அல்லது நாணயப் பெறுமதி வழங்க வேண்டியிருத்தல்; வருமானம் பின்வருமாறு வழங்கப்படல்

a. திட்டத்திற்கு புதிய உறுப்பினரை இணைத்தல் அல்லது
b. பங்களிப்பு தொகையினை அதிகரித்தல் அல்லது பதிய உறுப்பினர்களுடைய முதலீடுகள் அதிகரித்தல்

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களின் ஏனைய பண்புகள் யாவை?

உழைப்புக்கள் தொடர்பாக அடையமுடியாத மற்றும் தவறான போலி உத்தரவாதங்கள் மற்றும் திட்டத்தில் இணைப்பதற்காக அவசர ஊக்குவிப்புக்கள்

விற்பனை செய்யப்படும் பொருட்கள் சந்தைக் கேள்வி அற்றவையாக இருத்தல்

கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் திருப்ப செலுத்த முடியாதவையும் மீள விற்பனை செய்ய முடியாதவையாகவும் இருத்தல்

இத்திட்டத்தில் இணைவதற்கான நுழைவுக்கட்டணம் மிகவும் உயர்வாகவும் இருத்தல்

ஊக்கத்தொகைகளும் கொடுப்பனவுகளும் புதிய உறுப்பினர்களை இணைப்பதில் தங்கியிருக்கும். பொருள் விற்பனையில் அல்ல.

பொருட்களை விற்பதிலும் பார்க்க புதிய உறுப்பினர்களை இணைப்பதற்கே முக்கியத்துவம் வழங்கப்படும்.

வியாபாரத்தின் அமைவிடம் மற்றும் தொடர்பு விபரங்கள் கண்டுபிடிப்பதற்கு கடினமாக இருக்கும்.

பொருட்களை விற்பனை செய்வதற்கோ அல்லது புதிய உறுப்பினர்களை இணைப்பதற்கோ போதிய பயிற்சிகள் வழங்கப்பட மாட்டாது.

செயற்பாட்டிற்கான பிரதேசம் வரையறுக்கப்பட மாட்டாது.

பொருத்தமான வாடிக்கையாளர் சேவை வழங்கப்படமாட்டாது.
பிரமிட் திட்டங்களின் வகைகள் என்ன?

Naked Pyramid Schemes- நுழைவுக்கட்டணம் மட்டும் பெற்றுக் கொண்டு திட்டத்தில் இணைத்தல்

Product based Pyramid Schemes- பொருட்கள் சேவைகளை விற்பனை செய்வதன் மூலம் திட்டத்தில் இணைத்தல்

ஏன் பிரமிட் திட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளன?

பிரமிட் திட்டங்கள் குறிப்பிட்ட மட்டங்களைக் கடக்கும்போது பெரிய அளவிலான உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். இந்நிலையில் கடைசிமட்டத்தில் இருக்கும் பெருமளவு எண்ணிக்கை கொண்ட உறுப்பினர்களால் மேலதிக உறுப்பினர்களை இணைக்க முடியாத நிலை ஏற்படும். இது மக்கள் மத்தியில் பெரும் குழப்பங்களை ஏற்படுத்துவதோடு நாடுமுழுவதும் சமூக மற்றும் பொருளாதார குழப்பங்களை ஏற்படுத்தும்.

பிரமிட் திட்டத்தின் ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் புதிதாக இணைத்துக் கொள்வதற்கு நபர்கள் இருக்க மாட்டார்கள்

பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களின் பிரமிட் திட்டங்களில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா?

இல்லை. சட்டரீதியாக வேறுதேவைக்காக பதிவுசெய்யப்பட்ட நிறுவனமாகினும் அவற்றின் பிரமிட் திட்டங்களில் முதலீடு செய்வது ஆபத்தானதோடு அப்பணங்களை மீளப் பெற்றுக்கொள்ள முடியாது. சட்டரீதியாகவும் அப்பணங்களை மீளப் பெற்றுக்கொள்ள முடியாது.

ஏன் பிரமிட் திட்டங்கள் தொடர்பில்; அவதானமாக இருக்க வேண்டும்?

– இலங்கையில் பிரமிட் திட்டங்களில் ஈடுபடுதல் தண்டனைக்குரிய குற்றமாகும்.
– கஸ்டப்பட்டு உழைத்த பணம் இழக்கப்படும்.
– தடைசெய்யப்பட்ட திட்டங்களின் பரிந்துரைகள் முறிவடைவதனால் மக்கள் மத்தியிலுள்ள சமூக உறவு பாதிக்கப்படும்.
– இது நாட்டினுடைய பொருளாதாரத்தில் எதிர்மறையான பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

சாதாரணமாக ஒரு திட்டத்தில் முதலீடு செய்யும்முன்னர் மக்கள் கவனிக்க வேண்டிய விடயங்கள் யாவை?

– முதலீட்டினுடைய பண்புகள் மற்றும் அதன் நன்மைகள் தொடர்பாக முழுமையாக கற்றுக்கொள்ளவேண்டும்
– அத்திட்டம் பிரமிட் திட்டத்தினுடைய பண்புகளை கொண்டுள்ளதா என்பதை கவனமாக ஆராயவேண்டும்.
– பெரும்பாலான போலி திட்டங்கள் சட்டரீதியானவை போன்ற தோற்றப்பாடுகளோடு இருப்பதனால் பிரமிட் திட்டத்தினையும் ஏனைய திட்டங்களையும் வேறுபடுத்தவேண்டும்.
– மோசடிக்காரர்களுடைய வியாபாரத் தந்திரங்களைத் தெரிந்துகொள்ளுதல் நன்று.

– திட்டம் எவ்வாறு வருமானம் உழைக்கிறது? வருமான மூலங்கள் சாத்தியமானவையா? என்பனவற்றை அடையாளம் காணல்.

– பங்குபற்றுணருடைய வருமானங்கள் சாத்தியமானவையா?

தடைசெய்யப்பட்ட திட்டங்களை எதிர்த்து போராடுவதில் பொதுமக்களுடைய பொறுப்பு என்ன?

– நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தடைசெய்யப்பட்ட திட்டங்களை ஆரம்பித்தல், வழங்குதல், ஊக்குவித்தல், விளம்பரப்படுத்துதல், நடாத்துதல், நிதியிடல், முகாமை செய்தல் அல்லது இயக்குதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுதலைத் தவிர்த்தல்.
– மோசடி நடவடிக்கைகளில் சிக்காமல் இருத்தல்.
– மோசடி திட்டங்கள் தொடர்பாக சட்டம் மற்றும் நடைமுறைப்படுத்தல் அதிகாரிகளுக்கு அறிக்கையிடல்.
– விழிப்பாக இருப்பதோடு மற்றவர்களையும் விழிப்படையச்செய்தல்.

பிரமிட் திட்டங்கள் தொடர்பில் பொதுமக்கள் எங்கே முறையிட முடியும்?

– அருகிலுள்ள பொலிஸ் நிலையம்

– முறைப்பாடுகள் நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களத்திற்கு பின்வரும் முகவரிக்கு அனுப்பப்பட முடியும்:

பணிப்பாளர்,
நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களம்,
இலங்கை மத்திய வங்கி,
இல.30, சனாதிபதி மாவத்தை, கொழும்பு 01,
தொலைபேசி இல: 0112477966 / 1935

ஆகியவற்றில் முறையிடலாம்.

செம்மணியில் நிலமட்டத்திலிருந்து ஒன்றரை அடி ஆழத்திலேயே சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளன..!

0

செம்மணியில் நிலமட்டத்திலிருந்து ஒன்றரை அடி தொடக்கம் இரண்டு அடி ஆழத்திலேயே சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளன என மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரட்ண வேல் தெரிவித்துள்ளார்.

செம்மணி புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வின் 12ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது. குறித்த அகழ்வு பணிகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சட்டத்தரணி அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஏற்கனவே அகழ்வு பணிகள் இடம்பெறும் பகுதிகள் தவிர மேலும் புதிய பகுதிகளிலும் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. கண்டுபிடிக்கப்பட்ட என்புத் தொகுதிகள் நில மட்டத்திலிருந்து ஒன்றரை அடி, இரண்டடி ஆழத்திலேயே புதைக்கப்படிருக்கிறன.

இது சாதாரணமாக ‘மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட’ இடமாகத் தெரியவில்லை. மாறாக சடுதியாக புதைக்கப்பட்டது போல் காணப்படுகின்றது. சிறுவர்களின் என்புத் தொகுதிகளும் காணப்படுகின்றன.

இது மிகப்பெரும் சர்சையை தோற்றுவித்திருக்கிறது. எனவே முகத்தோற்றத்தின் அளவில், நிச்சயமாக குற்றம் நடைபெற்ற இடமாகவே இந்தப் புதைகுழி காணப்படுகின்றது.

இந்த விடயத்தில் மிகவும் அக்கறையுடன் ஆய்வாளர்கள் செயற்பட்டு வருகிறார்கள். தினமும் அவதானிக்கப்படும் விடயங்கள் உத்தியோகபூர்வமாக ஊடகங்களுக்கு அறிவிக்கப்படுகின்றன என தெரிவித்தார்.

யாழ் செம்மணியில் புதிதாக 5 என்புத் தொகுதிகள் மீட்பு..!

0

மனித பேரவலத்தின் சாட்சியமாக மாறிவரும், யாழ் செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இன்று 05 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதன்படி, இதுவரை 52 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில், 47 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், 04 என்புத் தொகுதிகள் பின்னிப்பிணைந்து காணப்படுவதாகப் பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜ் தெரிவித்துள்ளார்.

இனிய பாரதியின் சாரதி செழியன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது..!

0

இனிய பாரதி என்றழைக்கப்படும் கே.புஸ்பகுமாரின் சாரதியாக பணியாற்றிய செழியன் என்று அழைக்கப்படும் அழகரட்ணம் யுவராஜ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட கொலைகள், ஆட்கடத்தல்கள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள், சட்டவிரோத துப்பாக்கிப் பாவனை, கப்பம் பெற்றமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே.புஸ்பகுமார் உள்ளிட்ட இருவர் நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் அதிரடியாக கைது..!

0

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொழிலதிபர் ஒருவரிடம் 50 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் கோரிய சம்பவம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரின் 21 வயது மகள் கைது..!

0

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறப்பு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரின் 21 வயது மகள், லஞ்சம் மற்றும் ஊழல் சாத்துதல்களை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படிருந்தது. அது தொடர்பில், சிறப்பு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரின் மகளை ஆணைக்குழு அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.

வைத்தியர் மகேஷி விஜேரத்ன, தான் இணைந்த தனியார் நிறுவனம் மூலம் நோயாளிகளுக்கு ரூ.50,000 மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை ரூ.175,000க்கு விற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதனால் நோயாளிகளுக்கு ரூ.300 மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகக் குற்றம் சாட்டிய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, மருத்துவர் அதிகாரப்பூர்வ மருத்துவமனை நடைமுறைகள் மூலம் அறுவை சிகிச்சை பொருட்களை வாங்காமல் பொது சேவை கொள்முதல் விதிகளை மீறியதாகக் கூறியது. அதற்கு பதிலாக அந்தப் பொருட்கள் அவரது தனியார் நிறுவனம் மூலம் சுமார் 300 நோயாளிகளுக்கு விற்கப்பட்டன.

பல நாட்களாக மூளைச் சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மகேஷி விஜேரத்ன அறுவை சிகிச்சை செய்துள்ளார் என்பதும் சமீபத்தில் தெரியவந்தது.

குறித்த வைத்தியரும் அவரின் மருத்துவ மோசடிக்கு உதவிய அவரது இரண்டு கூட்டாளிகளும் தற்போது தடுப்புக் காவலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு..!

0

மட்டக்களப்பு, வாகரை – பனிச்சங்கேணி வாவியில் மூழ்கி, மூன்று சிறார்கள் உயிரிழந்துள்ளனர்.

கருவப்பஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 10 வயதான, மூன்று சிறார்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களில் இரண்டு சிறுமிகளும், ஒரு சிறுவனும் அடங்குவதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

நீதவான் விசாரணைகளின் பின்னர், உயிரிழந்த சிறார்களின் உடலங்களை வாழைச்சேனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மீன் பதனிடும் வாடிக்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த நிலையில், மூன்று சிறார்களும் வாவிக்குள் மூழ்கியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

error: Content is protected !!