திருகோணமலை புல்மோட்டையில் அமைந்துள்ள இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனத்தில் அமைய அடிப்படையில் கடமை புரியும் ஊழியர்களுக்கு கடந்த 9 மாதங்களாக கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என தெரிவித்து இன்றைய தினம்(07) காலை புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தில் அமைய அடிப்படையில் கடமையாற்றும் 83 ஊழியர்களுக்கு இவ்வாறு 9 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.
இது தொடர்பாக உரிய நிர்வாகத்துடன் இவர்கள் பேச்சுவார்த்தை நடாத்தியும் இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லையென தெரிவித்து இவ் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இக் கவனயீர்ப்பில் ஈடுபட்டோர் சுலோகங்களை ஏந்தி, தமது கோரிக்கைகளை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பெராரி ரக வாகனத்தை ஓட்டுபவர் அல் ஜசீராவில் மோதி நசுங்கி விட்டதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இன்று (07) நாடாளுமன்றத்தில் நிதி ஒதுக்கீட்டு குழு விவாதத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பெரராரி ரக வாகனத்தை ஓட்டுபவருக்கு போலியான அனுமதிப்பத்திரம் ஒன்றே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த பிமல் ரத்நாயக்க,
“ உண்மையிலேயே, சபாநாயகர் அவர்களே, இன்றைய விவாதத்தை நாம் ஒரு சோகமான செய்தியுடன் ஆரம்பிக்க வேண்டும்.
அண்மையில் இடம்பெற்ற ஒரு பயங்கரமான வாகன விபத்து தொடர்பிலான அறிவித்தல் தான் அது. பெரராரி ரக வாகன அனுமதிப்பத்திரம் இருப்பதாக கூறியவர் அல்ஜசீராவில் மோதி நசுங்கி விட்டார். அவருடைய மூளைக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதன் காரணமாக, இப்போதெல்லாம் அவர் கண்டவற்றை உளறி வருகிறார்.” எனத் தெரிவித்தார்.
அண்மையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது மீண்டும் நாடாளுமன்றத்திற்கு உட்பிரவேசிக்க வாய்ப்புகள் உள்ளதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, “பெராரி ரக வாகனத்தின் அனுமதிப் பத்திரம் உடையவர், எல்போர்ட் உள்ளவர்களுடன் பயணிக்க விரும்புவதில்லை” என அரசாங்கத்தை விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், நேற்றைய தினம் (06) அவர் சர்வதேச ஊடகமான அல் ஜசீராவுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இழப்பீட்டுத் தொகைக்கு மேலதிகமாக அரசாங்கத்திடம் வீடுகளை பெற்ற முன்னாள் 26 அமைச்சர்கள், M. P மார்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது.
கடந்த போராட்டத்தின் போது வீடுகள் எரிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து பெறப்பட்ட இழப்பீட்டுத் தொகைக்கு மேலதிகமாக அரசாங்கத்தின் வியத்புர வீட்டுத் தொகுதியில் வீடுகள் பெறப்பட்டுள்ளதாக வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர்,
வியட்புர வீர மாவத்தையில் அமைந்துள்ள இந்த வீட்டுத் தொகுதியில் வீடுகளை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் அப்போதைய சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.
இதன்படி, வியட்புர வீடமைப்புத் தொகுதியிலிருந்து 26 எம்.பி.க்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டதாகவும், சாதாரணத் திட்டத்தைத் தவிர்த்து, எம்.பி.க்களுக்கான ஆரம்பக் கொடுப்பனவு 25% ஆகக் குறைக்கப்பட்டு, மீதியை 15 வருடங்களில் செலுத்தும் முறைமை ஏற்படுத்தப்பட்டு வீடுகள் வாங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்த வீடுகளின் மதிப்பு ஆரம்ப மதிப்பீட்டுத் தொகையையும், தற்போதைய மதிப்பீட்டுத் தொகையையும் சேர்த்து இரண்டாகப் பிரித்து சொத்தின் மதிப்பாகக் கணக்கிடப்பட்ட தொகையைச் செலுத்தி அதற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றார்.
*குலசிங்கம் திலிபன்
*பிரசன்ன ரணதுங்க
* முகம்மது முஸம்மில்
*ஓபநாயக்க நிமல் பியதிஸ்ஸ
*காமினி ஜெயானந்த வலேபொட
*மஹிந்த யாப்பா அபேவர்தன
*காமினி குலவன்ச லொகுகே
*ஆர். எம். குமாரசிறி ரத்நாயக்க
*அஜித் நிஷாந்த ராஜபக்ச
*அமல் மாயாதுன்ன
*சஜித் ஜயதிலக்க
*திஸ்ஸகுட்டி ஆராச்சி
*பிரேம்நாத் சமிந்த டோலவத்த
*புனித்த பண்டார
* லலித் வர்ண குமார்
*அசங்க சமித்தஜீவ நவரத்ன
*எச்.எம்.டி. பண்டார ஹெராத்
*சமரகோன் சந்திர சேனா
*ரம்பத தேவாவின் பிரியமான அசோகர்
*எஸ். எம். எம். முஷாரப்
*பியால் நிஷாந்த டி சில்வா
*சுமித் வீரசிங்க உடுகும்புர
*எஸ்.ஏ. சேமசிங்க
*பி.ஏ.கே. அதுகோரல
திருகோணமலை – முதூர் பொலிசாரினால் தனது கணவன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு நீதி கோரி பாதிக்கப்பட்டவரின் மனைவியினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த திருமதி லிங்கேஸ்வரன் முனீஸ்வரி என்பவரினால் இன்று (07) திருகோணமலை பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவில் குறித்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டில், கடந்த 24.02.2025 அன்று குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தின் பின்னர் ஏற்பட்ட கைகலப்பின் காரணமாக தெகிவத்தை பகுதியில் இருந்து 30க்கும் மேற்பட்ட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் எமது கிராமத்திற்குள் நுழைந்து தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது எமது கிராமத்தைச் சேர்ந்தவர்களும் தற்பாதுகாப்பிற்காக திருப்பி தாக்கியதோடு தப்பியும் ஓடினார்கள்.
இதன்போது அவ்விடத்திற்கு வருகை தந்த மூதூர் பொலிசார் தெகிவத்தைப் பகுதியைச் சேர்ந்த 4 பேரையும், குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த 6 பேரையும் கைது செய்யது சிறையில் அடைத்ததுடன் இரு தரப்பிலும் சிலரை தேடி வந்தார்கள்.
பின்னர் இரு தரப்பினரும் சமாதானமான முறையில் இணக்கப்பாட்டுக்கு வந்த நிலையில் கடந்த 28.02.2025 அன்று கைது செய்யப்பட்ட அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள்.
இந்நிலையில் இன்றைய தினம் (07) பாலர் பாடசாலைக்குச் சென்று திரும்பி வரும் வழியில் மூதூர் பொலிசார் எனது கணவரான லிங்கேஸ்வரன் என்பவரை முச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்று எனது கணவரின் தலை, கை, கால் ஆகிய பகுதிகளை மிகவும் கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர்.
அத்துடன் 30 பேருக்கு மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் எமது ஊருக்குள் வந்து தாக்குதல் மேற்கொண்டபோதும் வெறும் 4 பேரை மாத்திரம் கைது செய்து பிணையில் விடுவித்தும் ஏனையவர்களை கைது செய்யாமலும் ஒரு பக்கச்சார்பாக பொலிசார் நடந்து கொள்கின்றனர்.
எனவே சட்டத்திற்கு முரனாண வகையிலும் அடிப்படை உரிமையை மீறும் வகையிலும் தாக்குதல் மேற்கொண்டதுடன், பக்கச்சார்பான முறையிலும் நடந்து வருகின்ற பொலிசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எனது கணவரின் தாக்குதல் சம்பவத்திற்கு நீதி வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
வவுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, பண்டாரிக்குளம், 3 ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்தே குறித்த குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது மனைவி ஆசிரியராக பணி புரிவதால் பாடசாலைக்கு சென்ற நிலையில் குறித்த நபர் மட்டும் வீட்டில் நின்றுள்ளார்.
பாடசாலை முடிந்து மனைவி வந்து பிற்பகல் 1.45 மணியளவில் வீட்டில் உள்ள கணவரை அழைத்த போதும் நீண்ட நேரமாக வீட்டு வாயில் திறக்கப்படவில்லை.
இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் மதிலால் ஏறி சென்று கதவை திறந்த போது கணவன் அறை ஒன்றில் இறந்த நிலையில் காணப்பட்டதுடன், தலையில் காயமும் காணப்பட்டது.
இந்நிலையில், உறவினர்கள் பிற்பகல் 1.55 மணியளவில் பண்டாரிக்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கிய போதும் அவர்கள் மரணத்தை தாம் பார்ப்பதில்லை வவுனியா பொலிஸிற்கு தெரிவிக்குமாறு கூறியுள்ளனர்.
அதன்பின் பிற்பகல் 2 மணியளவில வவுனியா பொலிஸாருக்கு நேரில் சென்று தகவல் வழங்கப்பட்டது. நீண்ட நேரமாக சம்பவ இடத்தில் கிராம அலுவலர் உள்ளிட்ட பொது மக்கள் திரண்டிருந்த போதும் பொலிஸார் வரவில்லை.
அதன் பின் பிற்பகல் 4 மணியளவில் வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் இயங்கும் அவசர தொலைலைபேசி இலக்கமான 107 தகவல் வழங்கப்பட்டது.
அதன் பின் 4.30 மணியளவில் வவுனியா பொலிஸார் வருகை தந்ததுடன், பண்டாரிக்குளம் பொலிஸார் மாலை 5 மணிக்கு வருகை தந்து விசாரணைகளை நடத்தினர். திடீர் மரண விசாரணை அதிகாரி டா.சுரேந்திரசேகரன் சம்பவ இடத்திற்கு சடலத்தை பார்வையிட்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டிருந்தார்.
பொலிஸார் தாமதமாக வந்தமையால் மாலை 5 மணிக்கே சடலம் அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு உடற் கூற்று பரிசோதனைகக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வீட்டில் உள்ள கட்டிலின் மேல் ஏறி அறை ஒன்றின் சுவருக்கு வர்ணம் பூசிய போது கட்டிலில் இருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
நில அளவைத் திணைக்களத்தில் பணி புரிந்து கடந்த மாதம் ஓய்வு பெற்ற சி.மகேந்திரராஜா (வயது 60) என்ற இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2015 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கி நடத்திய பிணைமுறி வெளியீட்டின் போது அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தால் இலங்கை மத்திய வங்கியில் பராமரிக்கப்படும் கணக்குகள் குறித்த அறிக்கையை அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் கோரிக்கையை பரிசீலித்த பின்னர், கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியால் 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி 27 ஆம் திகதி நடத்தப்பட்ட பிணைமுறி வெளியீட்டில் அரசாங்கத்திற்கு ரூ.688 மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் பரிசீலித்துள்ளது.
அதில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக, இலங்கை மத்திய வங்கியில் பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனம் பராமரிக்கும் கணக்குகள் குறித்த விரிவான அறிக்கையைப் பெற வேண்டும் என்று நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த தலைமை நீதவான், இந்த உத்தரவைப் பிறப்பித்ததுடன், விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, அந்த குற்றச் செயல் தொடர்பாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் உட்பட 9 சந்தேக நபர்களுக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் எட்டு மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபாரான ஆசிரியர் இன்று (07) அரலங்கவில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலன்னறுவை – திம்புலாகல கல்வி வலயத்தின் அரலகங்வில கல்விப் பிரிவில் உள்ள உயர்நிலை பாடசாலையொன்றின் கணித ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் அரலகங்வில காவல்துறையினர், பெற்றோர்கள் பல சந்தர்ப்பங்களில் செய்த முறைப்பாடுகளை தொடர்ந்து, கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டதாகவும், பாடசாலையில் 10 ஆம் வகுப்பு படிக்கும் எட்டு மாணவிகள் சந்தேகநபரான ஆசிரியரால் பல சந்தர்ப்பங்களில் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
அதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இன்று (07) பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் மகளிர் காவல்துறை பணியகம் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் இளம் குடும்ப பெண் ஒருவரை மிரட்டி தவறான முறைக்கு உட்படுத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் நேற்று(06) கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
வவுனியா – பம்பைமடு கிராம அலுவலர் பிரிவில் வசிக்கும் 31 வயது குடும்ப பெண் ஒருவரை கடந்த 2023ஆம் ஆண்டு ஜுன் மாதம் அயலில் வசிக்கும் குடும்பஸ்தரான 37 வயது நபர் ஒருவர் தனது வீட்டிற்கு அழைத்து தவறான முறைக்கு உட்படுத்தியுள்ளார்.
அத்துடன், சந்தேக நபரான குடும்பஸ்தர் காணொளி ஒன்றை பதிவு செய்து அதனை வெளியிடுவதாக மிரட்டி குறித்த பெண்ணை மீண்டும் பல தடவை அழைத்து தவறான முறைக்கு உட்படுத்தியுள்ளார். இதனால் கர்ப்பமான அந்த பெண் குழந்தை ஒன்றையும் பிரசவித்துள்ளார்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் பூவரசன்குளம் காவல் நிலையத்தில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பூவரசன்குளம் காவல்துறை தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வந்த போதும், குற்றம் சாட்டப்பட்ட குடும்பஸ்தர் தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில், வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து முள்ளியவளைப் பகுதியில் உள்ள காட்டில் மறைந்திருந்த நிலையில் சந்தேக நபர் நேற்று(06) கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின் சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ் கொக்குவில் பகுதியில் 36 வயதான இரு பிள்ளைகளின் தாயார் கிணற்றில் பாய்ந்த நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளது.
யாழில் உள்ள அரச நிறுவனம் ஒன்றில் உயர் பதவி வகிக்கும் இப் பெண்ணின் அயல் வீட்டில் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தங்கியிருந்து கற்று வந்துள்ளார்.
குறித்த மாணவனுக்கும் பெண்ணுக்கும் இடையில் தவறான தொடர்பு இருந்து வந்துள்ளது. பெண்ணின் கணவர் வெளி மாவட்டம் ஒன்றில் தனியார் துறையில் உயர் பதவியில் உள்ளதாகத் தெரிய வருகின்றது.
பெண்ணுக்கும் கணவருக்கும் இடையில் சில காலமாக முரன்பாடுகள் வலுத்த நிலையில் கணவன் வீட்டுக்கு வருவதை தவிா்த்திருந்தார்.
இந் நிலையில் குறித்த மருத்துவபீட மாணவன் பெண்ணுடன் தவறான தொடர்புகளைப் பேணி அதனை வீடியோவாக எடுத்து வந்துள்ளார், குறித்த மாணவன் போதைக்கு அடிமையாகி பெண்ணிடம் பணம் கேட்டு வற்புறுத்தி வந்ததாகத் தெரிய வருகின்றது.
இதன் காரணமாக பெண் அவனை விட்டு விலகியதுடன் மாணவன் தங்கியிருந்த வீட்டுச் சொந்தக்காரரான வயதான தம்பதிகளிடமும் மாணவன் தொடர்பாக கூறி அவனை அங்கிருந்து அகற்ற முயன்றுள்ளார்.
இதனால் கடுப்பான மாணவன் தான் உறவு கொள்ளும் போது எடுத்து வைத்திருந்த வீடியோக்களை காட்டி பெண்ணை அச்சுறுத்தி நகைகள் மற்றும் பணம் என்பவற்றை தொடர்ச்சியாக பறித்து வந்ததாகத் தெரிய வருகின்றது.
இதனையடுத்து தனது பிள்ளைகளை பாடசாலைக்கு விட்டுவிட்டு அயல்வீட்டு தம்பதிகளிடம் குறித்த மாணவன் வீடியோ காட்டி அச்சுறுத்துவதை தெரிவித்த பின் வீட்டுக்கு சென்று கிணற்றில் பாய்ந்ததாகத் தெரிய வருகின்றது.
கிணற்றில் பாய்ந்த சத்தத்தை கேட்ட அயல் வீட்டு தம்பதிகள் குக்குரல் இட்டு தெருவில் சென்றவர்களை அழைத்து குடும்பப் பெண்ணை காப்பாற்றியுள்ளார்கள்.
இந் நிலையில் அயல்வீட்டு தம்பதிகளின் தகவல்களை அடுத்து மருத்துவபீட மாணவன் கடுமையாக அங்கு நின்றவர்களால் தாக்கப்பட்டதாகத் தெரிய வருகின்றது. இச் சம்பவம் நேற்று முன்தினம் காலை இடம் பெற்றுள்ளது.
குடும்பம் என்ற வரையறைக்குள் கட்டுப்பாட்டுடன் வாழாது அற்ப இச்சைக்காக தவறான வழியில் சென்று தவறான நபர்களின் கைகளில் சிக்குண்டு தமது வாழ்க்கையை தினம் தினம் தொலைத்த பல கதைகளை கேட்டும் எம்மவர்கள் திருந்துவதாகத் தெரியவில்லை.
நுவரெலியா பகுதியில் பாடசாலை மாணவர்களை இலங்கை போக்குவரத்துச் சபைக்கு பேருந்திவ் ஏற்ற மறுத்த நடத்துனர் சேவையிலிருந்து இடைநிறுத்தப் பட்டுள்ளாரென போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இ.போ.ச பேருந்து நடத்துனர் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு முடியும் வரை அவர் சேவையில் உள்ளீர்க்கப்பட மாட்டார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் விசேட கொள்கையொன்றினை அரசாங்கம் வகுத்திருக்கும் சூழ்நிலையில் இப்படியானவற்றை அனுமதிக்க முடியாதென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
“நாவலபிட்டியில் இருந்து கினிகத்தேனை ஊடாக ஹட்டனுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் இருந்து பாடசாலை மாணவர்களை வெளியேறுமாறு நடத்துநர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அரச பேருந்திலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவர்கள் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கினிகத்தேனை கடவளை விக்னேஸ்வரா கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்கள் என தெரிய வந்துள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு என இலங்கை போக்குவரத்து சபையின் ஊடாக வழங்கப்படும் பருவச்சீட்டினை பேருந்து நடத்துநரிடம் காண்ம்பிக்கும் போது பருவச்சீட்டினை வைத்திருக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து வெளியேறுமாறு நடத்துநர் தெரிவிப்பதாக மாணவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
நாவலபிட்டியில் இருந்து கினிகதேனை ஊடாக ஹட்டன் வரை செல்லும் அரச பேருந்தில் அதிகமாக தமிழ் மாணவர்களே இவ்வாறு புறக்கணிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
“இது அரச பேருந்து நடத்துநரின் சொந்த பேருந்து அல்ல, பாடசாலை மாணவர்களாகிய நாங்கள் பணம் கொடுத்து பருவச்சீட்டினை பெற்றுள்ளோம் எமக்கு பேருந்தைவிட்டு வெளியேற முடியாது“ என மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதற்கு பதிலளித்த பேருந்து நடத்துநர், “ஆம் இது என்னுடைய பேருந்து நீங்கள் எல்லாம் பேருந்தைவிட்டு இறங்குங்கள்” என வலியுறுத்தியதாக வெளியிடப்பட்ட காணொளி ஊடாக தெரிய வந்துள்ளது.