Saturday, July 25, 2026
Huis Blog

இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு தப்பியோடிய குற்றவாளிகள்; ஒரு வாரத்தில் மீள இலங்கைக்கு..!

0

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த இருவர், தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் பகுதியில் இந்திய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

படகு மூலம் சட்டவிரோதமாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றபோதே அவர்கள் கைதுசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இராமநாதபுரம் தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில், இலங்கையிலிருந்து வந்த படகிலிருந்து இருவர் இறங்கியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளில், கைதுசெய்யப்பட்ட இருவரும் வத்தளை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், மன்னார் மாவட்டத்தின் பேசாலை கடற்கரையிலிருந்து படகு மூலம் இந்தியாவுக்கு வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதற்காக சுமார் 3 இலட்சம் ரூபாய் செலுத்தியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இந்திய மத்திய மற்றும் மாநில உளவுத்துறை அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்தினர்.

அதன்படி, கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக ஹெரோயின், கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதை இலங்கை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் 30 மற்றும் 31 ஆகிய வயதுடைய வத்தளை மற்றும் கம்பஹா பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை வத்தளைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் இவர்களுக்குத் தொடர்பிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இவர்களைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், சந்தேகநபர்கள் தற்போது திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒரு வாரத்திற்குள் அவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப எதிர்பார்க்கப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் 14 வயது சிறுமி கர்ப்பம்; குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறை..!

0

14 வயது சிறுமியை தவறான முறைக்கு உட்படுத்திய பாதுகாவலருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் ரூபா நீதிமன்ற அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

வவுனியா, பூவரசன்குளம் பகுதியில், பாதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பமாகியமையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட காவல்துறை புலன் விசாரணைகளின் பிரகாரம் 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குறித்த பிரதிவாதிக்கு எதிராக வவுனியா நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு பிரதிவாதிக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றபகர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கானது விளக்கத்திற்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் பிரதிவாதிக்கு தலைமறைவாகியிருந்தார்.

அதனை தொடர்ந்து பிரதிவாதிக்கு இல்லாத விளக்கத்துக்கு நியமிக்கப்பட்ட இவ்வழக்கானது சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாதி ஸ்ரீ சிவஸ்கந்தஸ்ரீயால் நெறிப்படுத்தபட்டிருந்தது.

குறித்த விசாரணைகளின் பின்னர் தீர்ப்பினை வழங்கிய நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, வழக்கு தொடுநர் தரப்பு குறித்த எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டினை சந்தேகத்திற்கு அப்பால் நிரூபித்துள்ளதாக குறிப்பிட்டார்.

அதன் பிரகாரம் பிரதிவாதிக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும், ஒரு இலட்சம் ரூபா நீதிமன்ற அபராதம், மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபா இழப்பீடும் செலுத்தப்பட வேண்டுமென தீர்ப்பினை வழங்கியிருந்தார்.

குறித்த குற்ற செயலின் போது பிரதிவாதியால் சிறுமிக்கு இழைக்கப்பட்ட கடுமையான உடல் மற்றும் உளவியல் சித்திரவதைகள், குறித்த சிறுமி கர்ப்பம் தரித்தமை, எதிரி வழக்கு விசாரணைகளில் இருந்து தலைமறைவாகியமை.

மற்றும் சிறுமியின் பாதுகாவலரே குறித்த செயலை புரிந்தமை போன்ற காரணிகள் எதிரிக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட பிரதான காரணிகளாக அமைந்துள்ளது என மேல் நீதிமன்ற நீதிபதி ஏ ஏ ஆனந்தராஜா தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தார்.

சாவகச்சேரி உப தவிசாளர் தெரிவுக்கு தடை விதிக்கக் கோரிய மனு; நீதிமன்றின் அதிரடி உத்தரவு..!

0

சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் பதவி மற்றும் நகரசபை உறுப்புரிமையிலிருந்து ஞானப்பிரகாசம் கிஷோர் என்பவரை நீக்கி வட மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யக் கோரிய மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனு யாழ் மேல் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் (24) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் மனுதாரர் சார்பாக சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன், எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனச் சமர்ப்பணங்களை முன்வைத்தார்.

மனுவை ஆராய்ந்த யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி சின்னத்துரை சதீஸ்தரன், புதிய உப தவிசாளர் தெரிவை தடை செய்யக்கோரிய கோரிக்கையை நிராகரித்தார்.

அத்துடன் வழக்கின் எழுத்து மூல சமர்ப்பணங்களைச் சமர்ப்பிப்பதற்காக குறித்த வழக்கை எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ். பொது நூலகத்தைத் தீக்கிரையாக்கிய பாவிகளே, தற்போது மக்கள் நலன் பற்றிப் பேசுகின்றனர்..!

0

“1983 கறுப்பு ஜூலை கலவரத்தில் மலையக மக்களையும் ஐக்கிய தேசியக் கட்சியினரே நாசமாக்கினார்கள். தமிழர்களின் இதயமாகக் கருதப்படும் யாழ். பொது நூலகத்தைத் தீக்கிரையாக்கிய பாவிகளே, தற்போது மக்கள் நலன் பற்றிப் பேசுகின்றனர்” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

கறுப்பு ஜூலை கலவரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

“1983 ஆம் ஆண்டில் நுவரெலியாவை எரித்துச் சாம்பலாக்கியது யார்? ஐக்கிய தேசியக் கட்சியினரே எமது மக்களை நாசமாக்கினார்கள். பதுளையில் தமிழர்களின் கடைகளுக்கு முன்னால் ராணுவத்தினர் கோடு போட்டனர். அதன் பின்னரே வந்த ஐதேக காடையர்கள் கடைகளை எரித்து நாசமாக்கினார்கள். பச்சிளம் குழந்தைகளைக் கூட இந்தப் பாவிகள் தீயிலிட்டுக் கொளுத்தினார்கள்.

தோட்டத் தொழிலாளர்களைச் சீரழித்தவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியினர்தான். அவர்கள் அவசரகாலச் சட்டத்தையும், கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் கொண்டு வந்தார்கள்.

1981 மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலில் மோசடி செய்தனர். எங்களின் இதயமாகக் கருதப்பட்ட யாழ். பொது நூலகத்தை எரித்துச் சாம்பலாக்கியவர்களும் அவர்களே.

அக்காலத்தில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் வடக்கு மக்களின் விருப்பம் பிரதிபலிக்கவில்லை. அதற்கு எதிராக எமது தலைவர் ரோஹண விஜேவீர வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கில் வெற்றி பெற்றிருந்தால், ஜனநாயக ரீதியில் தேர்தலை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

ஆனால், எமது கட்சியைத் தடை செய்தார்கள். தேர்தல் நடத்தப்பட்டு எமது கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வந்திருந்தால், ஜே.ஆரின் அடக்குமுறைகளை எதிர்த்திருப்பார்கள்; கறுப்பு ஜூலை போன்ற கொடூரச் சம்பவமும் நடந்திருக்காது” எனத் தெரிவித்தார்.

அரசியல் கைதிகள் சிறைகளில் படுகொலை செய்யப்பட்ட போது எந்த அரசு பொறுப்பேற்றது?

0

அரசியல் கைதிகள் சிறைகளில் படுகொலை செய்யப்பட்ட போது எந்த அரசு பொறுப்பேற்றது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் இன்று பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஸன நாணயக்கார அவர்களுக்கு எதிராக எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் இன்று (24.07.2026) கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் கெளரவ ஹர்ஸன நாணயக்கார அவர்களுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதத்தில் எமது நிலைப்பாட்டை தெரிவிப்பதற்கு விரும்புகிறேன்.

கெளரவ அமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில் அவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் பலவற்றுக்கு பதில் சொல்லவேண்டிய, பொறுப்பேற்க வேண்டிய கடப்பாடு அமைச்சர் அவர்களுக்கும் இந்த அரசாங்கத்திற்கும் உள்ளது என்பதில் எமக்கு மாற்றுக்கருத்து இல்லை.

நீர்கொழும்பு சிறைக்கூடத்தில் நடந்த அநியாயமான கொலைகளுக்கு பொறுப்புக்கூறவேண்டியது மட்டுமல்ல அவ்விடயம் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு கெளரவ அமைச்சருக்கு உள்ளது என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இவ்வாறான ஒரு சிறைக்கலவரம் வருவதற்கு ஏற்ற பல காரணங்கள் அங்குள்ளது, அங்கு மாத்திரமல்ல இன்னும் பல சிறைச்சாலைகளில் உள்ளது. ஆனால் எமக்கு இருக்கும் கேள்வி

இந்நிலை ஏற்படுவதற்கு பொறுப்புக் கூறவேண்டியவர் தற்போதை கெளரவ அமைச்சர் அவர்கள் மட்டுமா? அல்லது இதுவரை காலமும் இருந்த அனைவருமா?

சிறைச்சாலைகளில் காணப்படும் பிரச்சனைகள் கடந்த காலங்களில் காணப்படவில்லையா? கடந்த காலங்களில் சிறைக்கூடங்களில் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டபோது எந்த அமைச்சர், எந்த அரசாங்கம் பொறுப்புக்கூறியது?

இவ்வாறான படுகொலைகள் ஒருதடவையா நடந்தது? மீண்டும் மீண்டும் அவ்வாறான நிகழ்வுகள் நடைபெறாமல் தடுப்பதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? அவற்றிற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார்?

அங்கு காணப்படும் பிரச்சனைகளுக்கு பொறுப்பு சொல்வதற்காக கடந்த காலத்திலும் அமைச்சர்கள் பலர் பதவி விலகியிருக்க வேண்டுமில்லையா? ஏன் அவ்வாறு செய்யவில்லை??

அவ்வாறான பிழைகளை ஏற்றுக்கொண்டு பதவியிலிருந்து சுயமாக விலகும் கலாச்சாரம் எமது நாட்டில் அன்றும் இல்லை இன்றும் இல்லை. ஆனால் குறைந்தபட்சம் அமைச்சர் ஹர்ஸன அவர்கள் சம்பவம் நடந்து ஒரு சில மணி நேரத்தில் சம்பவத்திற்கான காரணம் விசாரிக்கப்பட முன்னரே அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டார், அதற்காக அவரை பாராட்டுகின்றோம்.

ஆனால், கெளரவ அமைச்சர் அவர்கள் பதவியில் இருந்து விலக அல்லது அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டுவரக்கூடிய சில காரணங்களை நாங்கள் முன் வைக்கின்றோம்.

தேசிய மக்கள் சக்திக்கு நாடுமுழுவதிலும் விசேடமாக வடக்கிலும் கிழக்கிலும் பெருமளவான மக்கள் வாக்களித்தது ஒரு மாற்றத்தை வேண்டி என்று நேற்று இங்கு உரையாற்றிய கெளரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள் தெரிவித்தார். அவர் குறிப்பிட்டது உண்மை. ஆனால் அதை புரிந்தவர்களாக அந்த மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற ஏதாவது முயற்சி எடுக்கிறீர்களா என அதே மக்கள் சந்தேகம் கொள்ளுமளவிற்கு நடந்து கொள்கிறீர்கள்.

தேசிய மக்கள் சக்தி அரசின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட மிக முக்கியமான சில விடயங்களை நடைமுறைக்கு கொண்டுவரவேண்டிய பொறுப்பில் உள்ள கெளரவ அமைச்சர் அவர்கள் அவ்விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்காமையையிட்டு மனம்வருந்துகிறோம்.

புதிய அரசியல் யாப்பொன்றை கொண்டு வருவோம் என்று மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி. அதற்காக அமைச்சர் அவர்கள் எடுத்த முயற்சி என்ன?

அடுத்தது அரசியல் கைதிகள் விடுதலை,

கெளரவ உறுப்பினர் அஜித் பி பெரேரா அவர்களின் அரசியல் கைதிகள் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போது சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்திலும் ஏனைய ஒழுங்கு விதிகளிலும் அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை என்று கெளரவ அமைச்சர் அவர்கள் பதிலளித்தார். அப்படியாயின் உங்களுடைய தேர்தல் அறிக்கையில் அரசியல் கைதிகள் என்று யாரை குறிப்பிட்டீர்கள்?

செம்மணி மனிதப்புதைகுழியில் அகழ்வுகள் நடைபெறுகிறது. கடந்த மாதம் கெளரவ சாணக்கியன் அவர்கள் 27/2 இனூடாக அமைச்சர் அவர்களிடம் கேள்வியொன்றை கேட்டிருந்தார். அதன் போது அகழ்வுப்பணிகள் நடைபெறும் அதேவேளை அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களை ஆராய்ந்து படுகொலைகள் நடைபெற்ற காலம் மற்றும் டி என் எ பரிசோதனைகள் ஊடாக அவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் தொடர்பாக பேசியிருந்தார்.

ஆனால் ஏற்கனவே சந்திரிக்கா அம்மையாருடைய காலப்பகுதியில் ஐக்கிய இராச்சியத்திற்கு அனுப்பப்பட்ட 12 மனித எச்சங்களை ஆராய்வதனூடாக படுகொலைகள் நடைபெற்ற காலத்தையும் படுகொலை செய்யப்பட்டவர்களை அடையாளம் காணும் செயற்பாட்டையும் செய்யலாம்.

ஆனால் கெளரவ அமைச்சர் அவர்களால் அவ்வாறான செயற்பாட்டுக்கான நடவடிக்கை எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பது கவலையளிக்கும் விடயமாகும். எனவே எதிர்வரும் காலத்திலாவது அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்.

எனவே இறுதியாக ஒரு விடயத்தை இந்த உயரிய சபைக்கு கூற விரும்புகிறேன். அதாவது எமது நாட்டில் அரச சேவையில் காணப்படும் முறைமைக் குறைபாடுகளை நிவர்த்திசெய்ய நடவடிக்கை எடுக்காமல் தனிநபர்களை குற்றம் சுமத்துவதனாலோ அல்லது மாற்றுவதனாலோ இப்பிரச்சனைகளிற்கு தீர்வு காண முடியாது.

எனவே பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் அச்சந்தர்ப்பம் கிடைக்காத அனைவரும் ஒன்றுசேர்ந்து அரச சிறைச்சாலை முறைமை மாற்றத்திற்கு உழைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.

உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சாத்திகளுக்கு வெளியான விசேட அறிவிப்பு..!

0

2026 கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையானது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இம்முறை பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை விண்ணப்பதாரர்களின் பரீட்சை அனுமதி அட்டைகள் (Admission Cards) ஏற்கனவே உரிய வலையக் கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அனைத்து அதிபர்களும் தமது பாடசாலைக்குரிய வலையக் கல்வி அலுவலகத்தின் பரீட்சைப் பாடத்திற்குப் பொறுப்பான பிரதி அல்லது உதவிக்கல்விப் பணிப்பாளரிடமிருந்து அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்குத் தபால் மூலம் அனுப்பிவைக்கப் பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகளில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பின், அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (Username) மற்றும் கடவுச் சொல்லைப் (Password) பயன்படுத்தி இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசித்து அத்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் தமது அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் இருப்பின், மேற்கூறிய இணையத்தளத்திற்குப் பிரவேசித்து, தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்வதன் மூலம் அவற்றை இணையவழியில் (Online) திருத்திக்கொள்வதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதி அட்டைத் திருத்தப் பணிகளை மேற்கொள்ளும் காலம் ஓகஸ்ட் மாதம் 03ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடையும் என்பதுடன், அந்தத் திருத்தக் காலம் எக்காரணம் கொண்டும் மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது என்றும் பரீட்சைத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

இந்தப் பரீட்சை தொடர்பில் ஏதேனும் விசாரணைகள் இருப்பின், 1911 என்ற உடனடி அழைப்பு இலக்கம், 011-2784208 அல்லது 011-2784537 ஆகிய தொலைபேசி இலக்கங்கள், 011-2784422 என்ற தொலைநகல் (Fax) இலக்கம் மற்றும் gcealexamsl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் பரீட்சைத் திணைக்களத்திடமிருந்து தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்..!

0

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் எம். கே. சமன் ஸ்ரீ ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன் ஏனைய உறுப்பினர்களாக எம். பி. ரோஹண புஷ்பகுமார மற்றும் கே. தவலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (24) பிற்பகல் அவர்களிடம் கையளிக்கப்பட்டன.

எல்லை நிர்ணய ஆணைக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்தமையால் ஏற்பட்ட வெற்றிடங்களுக்காகவே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

முன்னாள் பிரதம செயலாளர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது..!

0

தென் மாகாண சபையின் முன்னாள் பிரதம செயலாளரொருவர், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டு தென் மாகாண சபை உறுப்பினர் ஏற்பாட்டின் கீழ் ஒதுக்கப்பட்ட ரூ.16.5 மில்லியன் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தென் மாகாண அபிவிருத்தி அதிகார சபையினால் பொது தன்னார்வ அமைப்புகளுக்கு நாற்காலிகள் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அரசின் கொள்முதல் நடைமுறைகளை மீறி ஒரு உற்பத்தி நிறுவனத்தைத் தேர்வு செய்து, அதற்கு சாதகமாக செயற்பட்டு அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதம செயலாளர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளார்.

கேப்பாப்பிலவு மக்களின் தொடர் போராட்டம்; சிறீதரன் மற்றும் ரவிகரன் எம்.பிகள் பங்கேற்பு..!

0

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, கேப்பாப் பிலவு கிராம மக்கள் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி 25ஆவது நாளாக 18.07.2026 இன்று தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கேப்பாப்பிலவு மக்களின் 25ஆவது நாள் தொடர் போராட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் துரைராசா ரவிகரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

அத்தோடு இவ்வாறு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களுக்கு, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மற்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்களாலும் தமது போராட்டம் தொடர்பான தெளிவூட்டல்களும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் நாட்களில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும் சாத்தியம்???

0

எதிர்வரும் நாட்களில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படும் சாத்தியம் தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு அதன் தலைவர் ஜனக ராஜகருணா தனது நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக வீழ்ச்சியடைந்திருந்த எரிபொருள் விலைகள் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளன.

இன்று காலை நிலவரப்படி பிரென்ட் (Brent) சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை 85 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது.

அமெரிக்க WTI சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை 80 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது.

இதனிடையே, மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியிலும் நாட்டுக்குப் பெற்றோலிய உற்பத்திகளைக் கொண்டு வருவதற்கு எவ்வித தடையும் இல்லை.

எனினும் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகளில் சடுதியாக ஏற்படும் மாற்றங்கள் சவாலாக அமைந்துள்ளாதாகவும் யுத்தம் நிறைவடைந்த பின்னர் இந்த மாத இறுதியில் மக்களுக்கு பாரிய நன்மைகளை வழங்க எதிர்பார்த்ததாகவும் தற்போதைய விலை நிலவரங்களுக்கு அமைய அந்த நிலைமை சந்தேகத்திற்குரியதாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

எவ்வாறாகினும் எதிர்வரும் 15 நாட்களில் சர்வதேச எரிபொருள் விநியோகத்தில் ஏற்படும் தாக்கங்களின் அடிப்படையிலேயே அடுத்த மாதத்திற்கான எரிபொருள் விலைகள் தீர்மானிக்கப்படுமென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா குறிப்பிட்டார்.

error: Content is protected !!