Sunday, May 24, 2026
Huis Blog

மன்னாரில் கடற்படை ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்குமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து..!

0

மன்னார் – சிலாவத்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, முள்ளிக்குளம் கிராமத்தில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ்க்களின் காணிகளை விடுவிக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகரவிடம் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் அடுத்தவாரம் மன்னாருக்கு நேரடியாக வருகைதந்து குறித்த காணிவிடுவிப்புத் தொடர்பில் ஆராயப்படுமென பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகரவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் 22.05.2026இன்று வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகரவிடம் குறித்த முள்ளிக்குளம் காணி விடுவிப்புத் தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே பிரதி அமைச்சரால் மேற்கண்டவாறு பதில் வழங்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து எதிர்வரும் 25.05.2026ஆம் திகதி திங்கட்கிழமை குறித்த காணிவிடுவிப்புத் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெறுமென மன்னார் மாவட்ட செயலாளரால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் வாய்முல விடைக்கான வினாவிற்கு பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் இதன் போது பதிலளிக்கையில்,

முள்ளிக்குளம் பகுதியில் 2012ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டுவரையில் 752ஏக்கர் காணிகள் கடற்படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அத்தோடு கடற்படையினர் பயன்படுத்திவந்த பகுதியிலிருந்த 27 குடும்பங்களின் வீடுகளுக்குப் பதிலாக, கடந்த 2012ஆம் ஆண்டு மணற்காடுக் கிராமத்தில் கடற்படையினரால் 27வீடுகள் அமைக்கப்பட்டு பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டதாகவும் இதன்போது பிரதிப் பாதுகாப்பு அமைச்சரினால் தெரிவிக்கப்பட்டது.

இதுதவிர முள்ளிக்குளம் கிராமத்தில் கடற்படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த 77ஏக்கர் காணிகள் கடந்த 2017ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த பிரதிப் பாதுகாப்பு அமைச்சர், குறித்த முள்ளிக்குளம் பகுதியில் கடற்படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த மொத்தம் 829ஏக்கர் காணிகள் விடுவிப்புச் செய்யப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இதன் போது கருத்துத் தெரிவிக்கையில்,

குறித்த முள்ளிக்குளம் கிராமத்திற்கு நேரடியாகச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளேன். எனவே பிரதிப்பாது காப்பு அமைச்சரினால் இங்கு தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தவறானவையெனச் சுட்டிக் காட்டுகின்றேன்.

முள்ளிக்குளம் கிராமமக்கள் தமது பூர்வீக வாழ்விடங்களிலிருந்து கடந்த 1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்தனர். அதன் பின்னர் 2002ஆம் ஆண்டு முள்ளிக்குளம் மக்கள் அவர்களுடைய சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டனர்.

அவ்வாறு மீள்குடியேற்றப்பட்ட அந்த மக்களுக்கு அப்போது 150வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்றன. இந்நிலையில் 2002ஆம் ஆண்டு அந்த மக்களுக்கு அமைத்துக்கொடுக்கப்பட்ட வீடுகளை கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அதில் பல வீடுகளில் கடற்படையினரின் குடும்பங்களும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் முள்ளிக்குளம் கிராம மக்கள் மலைக்காடு, காயாக்குழி உள்ளிட்ட அயற் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் கடந்தகாலங்களில் தமது பூர்வீக கிரமத்தினை விடுவிப்புச்செய்து அங்கு தம்மை குடியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுவந்துள்ளனர்.

அதன்பின்னர் முள்ளிக்குளம் பகுதியிலுள்ள பாடசாலையில் கற்றல் செயற்பாட்டை மேற்கொள்வதற்கும், தேவாலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்குமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ன.

இந்நிலையில் அயற் கிராமங்களில் தங்கியுள்ள முள்ளிக்குளம் கிராம மக்கள் பெருத்த சிரமங்களுக்கு மத்தியிலேயே பாடசாலைக்கும், தேவாலயத்திற்கும் நீண்டதூரம் சென்று வருகின்றனர்.

கடற்படையினர் மற்றும் வனவளத் திணைக்களம் ஆகிய தரப்பினரால் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டுள் முள்ளிக்குளம் கிராமம் என்பது அந்த மக்களின் பூர்வீகக் கிராமமாகும்.

எனவே முள்ளிக்குளம் கிராம மக்களை தமது சொந்த இடங்களில் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில் உடனடியாக அந்தக் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும் மக்களின் குடியிருப்புக் காணிகளுக்கு மேலாக, வயற் காணிகள், தோட்டச் செய்கைக் காணிகள், நீர்ப்பாசனக் குளங்கள், என்பவற்றையும் கடற்படையினரும், வனவளத் திணைக்களத்தினரும் இணைந்து ஆக்கிரமிப்புச் செய்துள்ளனர்.

கடற்றொழிலாளர்களின் இறங்குதுறையை முற்றுமுழுதாக கடற்படையினரே ஆக்கிரமித்துப் பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குடியிருப்பு மற்றும் விவசாயக் காணிகள், நீர்ப்பாசனக் குளங்கள் கடற்றொழில் இறக்குதுறை என்வற்றை விடுவிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் பிரதிப் பாதுகாப்பு அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

இந்நிலையில் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகர இதன் போது பதிலளிக்கையில்,

கடந்த பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலும் இந்த முள்ளிக்குளம் காணி விடுவிப்புத் தொடர்பில் தாங்கள் வலியுறுத்தியிருந்தீர்கள்.

அதற்கமைய இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியால் எனக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே இந்தவிடயம் தொடர்பில் ஆராய்வதற்காக அடுத்தவாரம் மன்னாருக்கு வருகை தரவுள்ளேன்.

அந்தவகையில் தேசிய பாதுகாப்பிற்கான மூலேபாய முக்கியத்துவம் வாய்ந்த, இடங்களை தக்கவைத்துக்கொண்டு ஏனைய இடங்களை விடுவிப்பது தொடர்பில் பரிசீலிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

அந்த வகையில் அந்தப் பகுதிக்குரிய மக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை சிலாவத்துறைப் பிரதேச செயலகத்திற்கு அழைத்து காணிவிடுவிப்பு சார்ந்த விடயங்கள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த காலப்பகுதிகளில் அந்தப்பகுதியின் கடற்கரைப் பிரதேசத்தில் அதிகளவில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் தாம் விடுவிக்கக் கோரிய கடற்றொழிலாளர்களுக்குரிய அந்த இறங்குதுறையில் அவ்வாறான செயற்பாடுகள் இடமபெறுவதாக நாம் கூறவில்லை. எனவே அந்த இறங்கு துறையை விடுவிப்பது தொடர்பிலும் எம்மால் கூடுதல் கவனஞ் செலுத்தப்படும்.

அத்திய அவசியமான நிலப்பரப்பினை மாத்திரம் வைத்துக் கொள்வதுதான் எமது நிலைப்பாடாக இருக்கின்றது.

அவசர நிலைகள் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில், முப்படையினரை அங்கு நிலை நிறுத்துவதற்கான தேவைப்பாடு இருக்கின்றது.

பொலிசாரால் முன்னெடுக்க முடியாத சில நடவடிக்கைகளை, முப்படையினர் மூலம் முன்னெடுத்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய தேவையிருக்கின்றது.

அதேபோல பேரிடர்கள் இடம்பெறுகின்ற சந்தர்ப்பங்களில் உடனடியாகத் தொழிற்படுவதற்கு தேவையான இடமாக அந்த இடம் காணப்படுகின்றது.

எனினும் அடுத்த வாரம் நேரடியாக வருகை தந்து சிலாவத்துறை பிரதேச செயலாளர், உரிய அரச அலுவலர்கள், உரிய கிராமத்தின் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினருடனும் இந்த காணிவிடுவிப்பு தொடர்பில் கலந்துரையாடுவோமென பாதுகாப்பு பிரதி அமைச்சரினால் இதன்போது பதிலளிக்கப்பட்டது.

பொலிஸார் பொதுமக்களுக்கு விடுக்கும் அவசர அறிவித்தல்..!

0

இணையம் மற்றும் சமூக வலைதளங்கள் ஊடாக இடம்பெறும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென பொலிஸாரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

TELEGRAM, வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடக கணக்குகள் மற்றும் பல்வேறு இணையத்தளங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அதிகளவான முறைபாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய நிதிமோசடிகளில் ஈடுபடுவோரை கைது செய்யும் வகையில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மாஅதிபரினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மோசடிகள் தொடர்பில் கணிணி குற்ற விசாரணை பிரிவின் 011 2300 756 எனும் இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி அறிவிக்க முடியுமென பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 071 859 2918 அல்லது 071 859 1765 எனும் இலக்கங்களுக்கும் அழைக்க முடியுமென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தவிர குற்றவியல் விசாரணைத் திணைக்களத்திற்கு நேரில் சென்று எழுத்துமூல முறைப்பாடுகளை சமர்பிக்க முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு..!

0

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் 18.05.2026இன்று முள்ளிவாய்கால் நினைவு முற்றத்தில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையில் 17ஆம் ஆண்டு பிரகடன உரை நிகழ்த்தப்பட்டதுடன், தொடர்ந்து உயிர்நீத்த உறவுகளுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சரியாக காலை 10.30மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அந்தவகையில் இறுதிப் போரின் போது உறவுகளை இழந்த முல்லைத்தீவு – வற்றாப்பளையைச் சேர்ந்த சிறீரஞ்சன் ரினோசா என்பவரால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது. அத்தோடு ஏனையவர்களாலும் சமநேரத்தில் சுடரேற்றப்பட்டது.

அதனையடுத்து முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், உறவுகளை இழந்த உறவுகள் கதறி அழுது, கண்ணீர் சொரிந்து தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.

மேலும் இந்த முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு நாளின் 17ஆம் ஆண்டு நினைவேந்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளும், மதத் தலைவர்களும், பெருந்திரளான பொது மக்களும் பங்கேற்று தமது அஞ்சலிகளைச் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருமுறுகண்டி கோவிலின் வருமானம் முல்லை அபிவிருத்திக்கே பயன்படுத்த வேண்டும் – சத்தியலிங்கம் எம்பி

0

திருமுறுகண்டி கோவிலின் வருமானம் முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் தெரிவித்தார். ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று (14.05.2026) இடம்பெற்றது. இதன் போது கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

முல்லைத்தீவு மாவட்டத்தின் திருமுறுகண்டி கோவிலுக்கு கிடைக்கின்ற வருமானங்கள் அனைத்தும் தற்போது பெளத்தசாசன அமைச்சிற்கே செல்கின்றது. குறித்த ஆலயமானது நீதிமன்ற வழக்கில் உள்ள ஓர் ஆலயமாகும். வருடாந்தம் பல மில்லியன் ரூபாய்கள் இவ்வாலயத்திற்கு வருமானமாக கிடைக்கின்றது.

அவ்வாறு கிடைக்கப்பெறும் வருமானங்கள் பெளத்தசாசன அமைச்சிற்கு செல்வதுடன் அவை மீண்டும் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு கூட திரும்பி வருவதில்லை. குறித்த ஆலயத்தின் மூலம் வருமானமாக பெறப்பட்ட பணமானது வெவ்வேறு தேவைகளுக்காக வடக்கு மாகாணத்திற்கு வெளியே பயன்படுத்தப்படும் நிலை காணப்படுகின்றது.

அவ்வாறில்லாமல், குறித்த ஆலயத்தின் மூலம் வருமானமாக பெறப்படுகின்ற பணமானது முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகள் மிகவும் வருமானம் குறைந்த சபைகளாகும். அவற்றின் அபிவிருத்திசார் செயற்பாடுகளுக்கு இப்பணம் பயன்படுத்தப்பட வேண்டும். மேலும் மாவட்டத்தில் வேறு அபிவிருத்தி சார்ந்த செயற்பாடுகளுக்கும் அதனை பயன்படுத்தலாம். அதனை இந்த சபை இன்று தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்.

அத்துடன் ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கான தனிப்பிரதேசசபையினை அமைக்க வேண்டும் என பலரும் கடந்த காலங்களில் பேசியிருந்தனர். இது தொடர்பில் பாராளுமன்றத்தின் விசேட உரையொன்றின் மூலம் நான் குறித்த கோரிக்கையினை அரசாங்கத்திற்கு முன்வைத்திருந்தேன்.

இந்த பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரும் இப்பகுதியை சேர்ந்தவர் எனும் வகையில் குறித்த விடயத்தை இன்றைய கூட்டத்தின் தீர்மானமாக நிறைவேற்றி அவருக்கு முன்னிலைப்படுத்துவதுடன் அரசாங்கத்திற்கும் அனுப்பிவைப்போம். இது தொடர்பில் விசேட கரிசனையெடுத்து செயற்படுமாறு தலைவரை கேட்டுக் கொள்கின்றேன்.

அத்தோடு அண்மையில் காணி அமைச்சர் கே.டி.லால்காந்த கலந்து கொண்ட வன்னி மாவட்டத்திற்கான கூட்டமொன்றில் அவரால் தெரிவிக்கப்பட்டதற்கமைவாக, அரச திணைக்களங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அல்லது தனியாருக்கு சொந்தமான காணிகளுக்கு அதற்குரிய ஏதேனும் ஆவனங்கள் இருப்பின் அவற்றை கிராம சேவையாளர் ஊடாக பிரதேச செயலாளருக்கு வழங்கி அவற்றின் தொகுப்பினை மாவட்ட அபிவிருத்திக் குழுவிற்கு காணி விடுவிப்புக்கான முன்மொழிவாக வழங்க வேண்டும் எனும் தீர்மானத்தினையும் இக்கூட்டத்தில் முன்மொழிகின்றேன் என தெரிவித்தார்.

அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் மெத்தியூ டக்வேர்திற்கும் ரவிகரன் எம்.பிக்குமிடையில் சந்திப்பு..!

0

இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் மெத்தியூ டக்வேர்த் அவர்களுக்கும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்குமிடையில் 12.05.2026 இன்று முல்லைத்தீவு – கள்ளப்பாடு வடக்கு பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது மக்கள் தொடர்பகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பில் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் உள்ளிட்ட வன்னிப் பிராந்தியத்தில் நிலவும் நில ஆக்கிரமிப்புக்கள், விவசாயிகள் மற்றும் மீனவமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மக்களின் வாழ்வாதார நிலமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

மேலும் இதன்போது முள்ளிவாய்கால் கஞ்சி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

ஆபத்தை விளைவிக்கும் மேலதிக உதிரிபாகங்கள், மிகை ஒலி வாகனங்களுக்கு எதிராக நடவடிக்கை..!

0

வீதிகளில் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அதிக இரைச்சல் எழுப்பும் வாகனங்கள் மற்றும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய மேலதிக உதிரிப்பாகங்கள் பொருத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் எச்சரித்துள்ளது.

வீதிகளில் உயிர்களைப் பாதுகாத்தல் மற்றும் வீதிப் பாதுகாப்பை உறுதி செய்வதை முன்னிலைப்படுத்தி பொலிஸாரினால் இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொது வீதிகளில் பயணிக்கும் சில வாகனங்கள் அபாயகரமான முறையில் நவீன மயப்படுத்தப்பட்டுள்ளமை மற்றும் முறையான தகுதிச் சான்றிதழ்கள் இன்றி பழைய வாகனங்களை வீதியில் செலுத்துவது தொடர்பிலும் அவதானிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தியாளர்களால் வழங்கப்பட்ட சைலன்சர்களின் (புகை வெளியேற்றும் கருவி) ஒலியை மாற்றுதல், அதிகமாக ஒலி எழுப்பல் மற்றும் ஆபத்தான பல்வேறு உதிரிப் பாகங்களை இணைத்து வாகனங்களை நவீனமயப்படுத்துதல் என்பன மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், சட்டவிரோத மேலதிக மின் விளக்குகள், ஒளிரும் வர்ண விளக்குகள், பல்வேறு ஒலிகளை எழுப்பும் ஹார்ன்கள், வாகனத்தின் வர்ணத்தை மாற்றுதல் மற்றும் வாகனங்களின் உடல் பகுதிகளில் சித்திரங்களை காட்சிப்படுத்துதல் என்பனவும் தடை செய்யப்பட்டுள்ளன.

அண்மைக்கால விபத்துக்களின் போது முறையான வாகன நிலை அறிக்கை இன்றி நவீனமயப்படுத்தப்பட்ட பேருந்துகள் அதிகளவில் ஈடுப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதேவேளை சூழலுக்கு கறுப்புப் புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பில் பொதுமக்கள் 070 – 3500525 என்ற வாட்ஸ்அப் இலக்கத்துக்கு முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, வாகன உரிமையாளர்கள் சட்டவிதிமுறைகளுக்கு அமைய செயற்படுமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பம்; நினைவுக் கஞ்சியும் வழங்கி வைப்பு..!

0

இலங்கையின் இறுதிக்கட்ட போரில் பெரும் துயரை ஏற்படுத்திய முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று (11) ஆரம்பமானது.

இதனை முன்னிட்டு இலங்கை தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் கிளையின் ஏற்பாட்டில் வலி – தெற்கு பிரதேச சபை முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவு இடம்பெற்றது.

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் பொதுச்சுடரேற்றி ஆரம்பித்து வைத்தார்.

தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தின் போது கஞ்சி கூட கிடைக்காது மக்கள் துன்பப்பட்டதனை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது.

வலி தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர், உறுப்பினர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

தையிட்டி – பவானி வீதி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!

0

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதி தொடர்பான கட்டளை எதிர்வரும் 21 ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றால் வழங்கப்படவுள்ளது.

பவானி வீதியை விடுவிப்பதற்கு பிரதேசசபை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அந்த முயற்சிகளுக்குத் தடை விதிக்குமாறு காவல் துறையினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்பதற்கு நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

இதன் போது காவல்துறையினரால் கொண்டுவரப்பட்ட பிணைமுறி நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளில் அண்மையில் அளவீட்டுப் பணி இடம்பெறவிருந்தது.

காணிகளின் உரிமையாளர்கள் அந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்காத போதிலும், விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை தவிசாளர் சுகிர்தன் அடையாளம் காட்டியிருந்தார்.

இதையடுத்து, அந்த வீதியை இடைமறித்து அமைக்கப்பட்டுள்ள எல்லையை நாளைமறுதினத்துக்குள் அகற்றுமாறும், இல்லையேல் பிரதேசசபை அந்த எல்லையை அகற்றும் என்றும் வலிகாமம் வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தனால் தையிட்டி திஸ்ஸ விகாராதிபதி ஜிந்தோட்ட நந்தராம தேரருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

பிரதேசசபையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக, தையிட்டி விகாராதிபதி காவல்துறையிடம் முறைப்பாடு வழங்கியிருந்தார்.

அந்த முறைப்பாட்டுக்கு அமையவே தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்கு பிரதேசசபை நடவடிக்கை எடுத்துவரும் நடவடிக்கைக்குத் தடைவிதிக்குமாறு காவல்துறையினர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

எனினும், காவல்துறையினரின் சமர்ப்பணத்தை மட்டும் அடிப்படையாக வைத்து தீர்ப்பு வழங்குவதற்கு நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்த விடயத்தில் வலி.வடக்கு பிரதேசசபைத் தவிசாளர் சுகிர்தனையும், வலி.வடக்கு பிரதேசசபை செயலாளரையும் இன்று திங்கட்கிழமை முன்னிலையாகுமாறு நீதிமன்று அறிவுறுத்தல் வழங்கியது.

வலி.வடக்கு பிரதேசசபைத் தவிசாளர் சுகிர்தனின் சார்பில் சட்டத்தரணி சுமந்திரன் முன்னிலையானார். இதன்போது காவலடதுறையினர் சட்டத்தினை நடைமுறைப்படுத்த இடையூறுகள் ஏற்பட்டால் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமே தவிர சட்டத்தை நடைமுறைப்படுத்துகிற போது காவல்துறையினரே அதற்கு எதிராக இருப்பது தையிட்டி விகாராதிபதி பௌத்த மதத்தை தழுவுவதால் காவல்துறையினரும் பௌத்த பீட கட்டளையை ஏற்பது போன்று சமாதான குறைவை ஏற்படுத்தும் என தொடுக்கப்பட்ட இந்த வழக்கினை நீதிமன்றம் முற்றாக நிராகரித்தது.

எனவே இது தொடர்பான கட்டளையினை எதிர்வரும் 21ஆம் திகதி வழங்கவுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளுக்குக் குறுக்காகவே பவானி வீதி அமைந்துள்ளது. எனவே, அந்த வீதியை விடுவித்தால் கணிசமான காணிகள் தானாக விடுவிக்கப்படும் நிலை உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்டக் கிளையின் விசேட கூட்டம்..!

0

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்டக் கிளையின் விசேட கூட்டம் இன்று (10.05.2026) மாவட்டக் கிளை தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

மேற்படி கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.

இதன் போது கட்சியின் எதிர்கால செயற்திட்டங்கள், கட்சி புனரமைப்பு பணிகள், உள்ளூராட்சி மன்ற செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது.

மேலும், சமகால அரசியல் நிலவரம் தொடர்பிலும் கட்சி உறுப்பினர்களுக்கு பொதுச் செயலாளர் M.A.சுமந்திரன் அவர்களினால் விளக்கமளிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கட்சியின் மாவட்ட, பிரதேச கிளைகள் மற்றும் இளைஞர் மகளீர் அணிகளின் முக்கியஸ்தர்கள், உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், உபதவிசாளர், உறுப்பினர்கள் எனப்பலர் கலந்து கொண்டிருந்தனர்.

திறைசேரியில் திருடப்பட்ட நிதி; அமெரிக்க வங்கியில் கண்டுபிடிப்பு..!

0

நிதி அமைச்சின் கணினி அமைப்பில் ஊடுருவி, திறைசேரியின் திருடப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலரில் ஒரு பகுதி, அமெரிக்காவின் டெலாவேர் மாநிலத்தில் உள்ள ஒரு வங்கிக் கணக்கிற்குச் சென்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இணையவழி வணிகங்களைப் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள டெலாவேர் நிறுவனத்தின் பெயரில் அந்தக் கணக்கு இருந்து வந்ததாகவும், அதே மாநிலத்தில் உள்ள TD வங்கியின் ஒரு கிளையில் அது பராமரிக்கப்பட்டு வந்ததாகவும் இந்த விசாரணையில் ஈடுபட்டுள்ள அந்த அதிகாரி கூறியுள்ளார்.

2.5 மில்லியன் அமெரிக்க டொலரில் எவ்வளவு தொகை அந்தக் கணக்கிற்கு மாற்றப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும், ஆனால் அது முழுத் தொகையும் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அந்தப் பணம் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளுக்குச் சென்றுள்ளது,” என்றும் சிறிலங்கா காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு (FIU), அமெரிக்காவின் சமஷ்டி புலனாய்வுப் பணியகத்தின் (FBI) உதவியைக் கோரிய பின்னரே இந்தத் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நிதிப் புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து இந்த விசாரணையில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா குற்றப் புலனாய்வுத்துறை , கிடைத்த தகவல்களை FBI மற்றும் அவுஸ்ரேலிய அதிகாரிகளுடன் பகிர்ந்து வருகிறது.

error: Content is protected !!