மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதிகும்புர கஹம்பான பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்திச் சென்ற 33 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நேற்று திங்கட்கிழமை (24) அன்று மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக சிறுமியின் தாயார் பொலிஸில் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, இருவரும் எம்பிலிபிட்டியவிலிருந்து மொனராகலைக்கு வரும் பேருந்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபரை மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வைத்திய பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்திய சாலையில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு இணங்க, அரசு ஊழியர்களுக்கான சம்பள திருத்தங்கள் அடங்கிய சுற்றறிக்கை வெளியாகியுள்ளது
குறித்த சுற்றறிக்கை இன்றைய தினம் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டாரவினால் கையொப்பமிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த சுற்றறிக்கை அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், புதிய சம்பள அளவுத் திட்டத்திற்குள் கீழே குறிப்பிடப்படும் கொடுப்பனவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
01.2019.04.22 ஆம் திகதி அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 09/2019 இற்கமையச் செலுத்தப்படும் ரூபா 2,500/- மாதாந்த இடைக்காலக் கொடுப்பனவு.
02. 2022.01.13 ஆம் திகதி அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 03/2022 இற்கமையச் செலுத்தப்படும் ரூபா 5,000/- மாதாந்தக் கொடுப்பனவு.
மேலும், சம்பளத்தின் நிகர அதிகரிப்பின் மாதாந்தம் உரித்தாகும் தொகை மற்றும் மாதாந்தம் செலுத்தப்படாத தொகை கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள நிரலில் காட்டப்பட்டுள்ளது.
உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இலங்கையில் வாகன இறக்குமதிக்கான வரி விகிதம் மிக அதிகமாக இருப்பதாக ஜப்பான் – இலங்கை வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜகத் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இலங்கையில் வாகன விலைகள் வியத்தகு முறையில் அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாகன இறக்குமதி பிரச்சினைகள் தொடர்பாக நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
CHR அல்லது Vezel போன்ற வாகனங்கள் இலங்கையில் விற்கப்படும் விலையில் உலகின் எந்த நாட்டிலும் விற்கப்படுவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வளவு வரிகள் விதிக்கப்படுவதால், உலகில் வேறு எந்த நாடும் CHR அல்லது Vezel போன்ற வாகனத்தை இந்த விலையில் வழங்க முடியாது. அதை விற்கவும் முடியாது. இவ்வளவு வரி வசூலிக்கும் நாடு வேறு எதுவும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பானில் ஒரு மில்லியன் மதிப்புள்ள வாகனத்தை, நியூசிலாந்திற்கு 20 வீத வரியில் இறக்குமதி செய்கிறோம். அதன் மதிப்பு 12 லட்சம். அதே வாகனத்தை பங்களாதேஷில் 50 வீத வரியுடன் இறக்குமதி செய்யும் போது அதன் மதிப்பு 1.5 மில்லியன் ஆகின்றது.
ஆனால் இலங்கையில் 200 வீதம் வரி விதிக்கப்படுவதால் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான வாகனம் இலங்கை மூன்று மில்லியன் ரூபா பெறுமதியுடையதாக மாறுகின்றது.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதம் இப்போது தீர்க்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர், கூடுதல் சுங்க இயக்குநர் ஜெனரல் சீவலி அருகொட தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சிக்கியுள்ள வாகனங்களை விடுவிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இலங்கை விமானப் படையின் சீன K-8 பயிற்சி விமானம் சற்று முன்னர் வாரியப்போலாவில் விபத்துக்குள்ளானதாக விமானப் படை தெரிவித்துள்ளது.
திருகோணமலையில் உள்ள சீன விரிகுடா விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட விமானம், விபத்துக்கு முன்னர் ரேடார் தொடர்பை இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் விமானப்படை கருத்து தெரிவிக்கையில், குறித்த விபத்தின் போது விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேறி பாராசூட்களைப் பயன்படுத்தி தரையிறங்கியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை, என்பதுடன் இந்த விபத்தில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. அதேவேளை குறித்த விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழில் வெளிநாட்டு பெண்ணுடன் தகாத முறையில் நடந்து கொண்ட அரச பேருந்து நடத்துனர் ஒருவருக்கு நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
லண்டனில் இருந்து யாழ். வந்த 27 வயதுடைய சுற்றுலாப் பயணி ஒருவர் நேற்றைய தினம் நயினாதீவு செல்வதற்காக அரச பேருந்து ஒன்றில் குறிகட்டுவான் நோக்கி பயணித்துள்ளார்.
இதன் போது பேருந்து நடத்துனர் குறித்த பெண்ணுடன் அங்க சேஷ்டையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விதான பத்திரன தலைமையிலான பொலிஸ் குழுவினர் விரைந்து செயற்பட்டு குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் அவரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில், நீதிமன்ற குற்றப் பணமாக 1500 ரூபா அறவிடப்பட்டதுடன், குறித்த பெண்ணுக்கு 10 ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் என்பதுடன் ஒத்திவைக்கப்பட்ட 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
வவுனியா விபுலானந்தா கல்லூரியில் ஆய்வு கூடம் இம்முறை பரீட்சை எழுதும் சில மாணவர்களால் உடைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வவுனியா, பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெற்று வருகின்றது.
பரீட்சையில் தோற்றும் சில மாணவர்கள் பாடசாலை விஞ்ஞான ஆய்வுகூடம் மற்றும் கணித கூடம் என்பவற்றின் கதவை உடைத்துள்ளதுடன் அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து, குறித்த நிலையத்திற்கு பொறுப்பான பரீட்சைப் பொறுப்பதிகாரி மற்றும் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு தெரியப்படுத்திய போதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளியில் 2007 ஆம் ஆண்டு ஒருவரை துப்பாக்கியால் சுட்டு மரணத்தை எற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிரான் மற்றும் சந்திவெளி பிரதேசங்களைச் சேர்ந்த 4 பேருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன், வெள்ளிக் கிழமை (21) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
கடந்த 2007ம் ஆண்டு மாச் மாதம் 18ஆம் திகதி சந்திவெளியைச் சேர்ந்த மயில்வாகனம் ரவீந்திரன் என்பவரை ரி-56 ரக துப்பாக்கியால் அந்த பகுதியில் இயங்கி வந்த ஆயுதகுழு ஒன்றைச் சேர்ந்தவர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.
இச் சம்பவம் தொடர்பாக சந்திவெளி மற்றும் கிரான் பிரதேசங்களைச் சேர்ந்த தி.கிருஸ்ணரூபன், வ.திருச்செல்வம், கு.பாஸ்கரன், க. மகேந்திரன் ஆகிய 4 பேரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்து அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர்.
குறித்த வழக்கு விசாரணை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை (21) மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் குறித்த 4 பேரும் குற்றவாளிகள் என இனங் கண்டு கொண்டதையடுத்து அவர்களுக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
நடைபெறவுள்ள இலங்கை உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு இம்முறையும் தமது மக்கள் வாக்களிக்குமாயின் அது தாமே தமக்கு வைக்கும் கடைசி உலையாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
நான் பாராளுமன்றுக்கு செல்வதற்கு முன்னர் எனக்கு அனுபவம் குறைவு. சென்றதன் பின்னர் தான் தேசிய மக்கள் சக்தி (NPP) இனது நிலைப்பாடு தெரிந்தது.
அதற்கு இந்த தேர்தலில் வாக்களிக்குமாயின் நாம் எங்களுக்கு வைக்கும் கடைசி உலையாக இருக்கும். யாழ் மாநகர சபை வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும். அது பிரச்சியினையில்லை.
யாழில் மட்டும் எமது வாக்காளர்கள் கஜேந்திர குமார் பொன்னம்பலத்தினுடைய கட்சிக்கு வாக்களிக்குமாறும் அருச்சுனா எம்பி கூறினார்.
மேலும் கஜேந்திரன் பொன்னம்பலம் அண்ணாவுடன் எனக்கு எந்தக் கோபமும் இல்லை. ஆனால் ஸ்ரீதரனுக்கோ, அல்லது சுமந்திரனுக்கோ எந்த வாக்குகளையும் விடக் கூடாது என்பது எனது தெளிவான வேண்டுகோள் எனவும் அருச்சுனா எம்பி இதன் போது தெரிவித்துள்ளார்.
வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு கல்வி அமைச்சினால் மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் த.கனராஜ் தெரிவித்துள்ளார்.
வவுனியா கல்வியற் கல்லூரி தொடர்பாக கிடைக்கப் பெற்ற முறைப்பாடு தொடர்பில் ஊடகவியலாளர்கள் இன்று (21) கேள்வியெழுப்பிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரிய மாணவர்கள் துன்புறுத்தப்படுவதாக பெற்றோர்கள் சிலரால் மனித உரிமை ஆணைக் குழுவின் யாழ் பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த முறைப்பாடு தொடர்பில் கல்வி அமைச்சிடம் விளக்கம் கோரியிருந்தோம்.
கல்வியற் கல்லூரிகளுக்கு பொறுப்பாக இருக்கின்ற பிரதான ஆணையாளர் ஊடாக விசாரணை நடத்துவதற்கு கல்வி அமைச்சினால் மூவர் கொண்ட குழு நியமிக்கப் பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் பின் அறிக்கை சமர்ப்பிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டார்.
வவுனியாவில் 15 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமி ஒருவரை அப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காதலித்ததாகவும், குறித்த சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் சிறுமியின் தாயாரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞரை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.