Tuesday, May 5, 2026
Huis Blog Bladsy 124

ஜனாதிபதி நிதியத்தின் நிதி முறைகேடு; தகவல்களை வழங்குமாறு உத்தரவு..!

0

ஜனாதிபதி நிதியத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டமை தொடர்பான தகவல்களை வழங்குமாறு அரச மற்றும் தனியார் வைத்திய சாலைகளின் பணிப்பாளர்களுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நகர்த்தல் பத்திரத்தினூடாக குற்றப்புலனாய்வு திணைக்களம்(CID) முன்வைத்த கோரிக்கைக்கு அமைய கோட்டை நீதவான் நிலுப்லி லங்காபுர இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

2008 முதல் 2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து 10 கோடி ரூபாவிற்கும் அதிக நிதியை பெற்றுக்கொண்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்றவிசாரணை பிரிவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக் கொண்டுள்ளனரா என்பது குறித்த தகவல்களைப் பெற்றுக் கொள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைக் கழக அனுமதிக்கான கையேடு – வெளியான அறிவிப்பு

0

அண்மையில் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 2024/2025 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக மாணவர் அனுமதிக்கான வழிகாட்டல் கையேடு வெளியிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் இன்று (02.05.2025) வெளியிடப்பட்ட இந்தக் கையேடுகள் நாடெங்கிலுமுள்ள பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பங்கள் எதிர்வரும் 09 ஆம் திகதி முதல் ஏற்றுக் கொள்ளப்படவிருப்பதுடன், விண்ணப்ப முடிவுத் திகதி இம்மாதம் 30 எனவும், அனுமதிக்கான வழிகட்டல் கையேடுகளை நாளை 03ஆம் திகதி சனிக்கிழமை முதல் மாணவர்கள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி பல்கலைக்கழக அனுமதிக்குத் தகைமை பெற்ற மாணவர்களில் அரச பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இல. 20, வாட் பிளேஸ், கொழும்பு 07 எனும் முகவரியில் அமைந்துள்ள பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலகத்தில் அல்லது நாடெங்கிலுமுள்ள பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்களிடம் கையேட்டுக் கட்டணமாக ரூபா 1,000.00 செலுத்தி நேரடியாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

தபால் மூலம் அனுமதிக் கையேட்டைப் பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் இலங்கை வங்கி, ரொறிங்டன் கிளையின் 0002323287 என்ற கணக்கிலக்கத்துக்கோ அல்லது மக்கள் வங்கி, நகர மண்டபக் கிளையின் 167-1-001-4-3169407 என்ற கணக்கிலக்கத்துக்கோ விண்ணப்பக் கட்டணமாக ரூபா 1,000.00 வைப்பிலிட்ட சிட்டையுடன் சுயமாகத் தயாரிக்கப்பட்ட வேண்டுகைக் கடிதத்துடன், சுயமுகவரியிடப்பட்ட தபாலுறையுடன் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறும்,

மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் 011-2695301, 011-2695302 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல் பிரச்சார பணிகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு..!

0

எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் நாளைய தினம் நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு 48 மணித்தியாலங்களுக்கு அதாவது நாளைய தினம் நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்கள், வேட்பாளர்கள் தங்களது பிரசாரப் பணிகளை நிறைவு செய்து கொள்ள வேண்டுமென தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரப் பணிகள் நிறைவடைந்ததன் பின்னரான காலத்தில் பிரசாரத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இனப் படுகொலை நடைபெறவில்லை; நிரூபிக்க தேர்தலை பயன்படுத்தும் அரசு – சிறிதரன் எம்.பி

0

வடக்கு கிழக்கில் இனப் படுகொலை நடைபெறவில்லை மனித குலத்திற்கு எதிரான போர்க் குற்றங்களில் இலங்கையின் அரச, இராணுவ நிர்வாகம் ஈடுபடவில்லை என்பதை நிரூபிப்பதற்கான ஜனநாயகத் தீர்ப்பாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசு பயன்படுத்த எல்லா வகைப் பிரயத்தனங்களையும், மோசடிகளையும் முன்னெடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

முழங்காவில் – நாச்சிக்குடா சந்தியில் நடைபெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பூநகரி பிரதேச சபைக்கான தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு முதன்மை உரை ஆற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில், கட்சியின் கிளிநொச்சி மாவட்டக்கிளைச் செயலாளர் வீரவாகு விஜயகுமார், பூநகரி பிரதேச சபைக்கான வேட்பாளர்கள், கட்சியின் பிரதேச செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணிலின் 23 வருட பாதுகாப்பு அதிகாரி யாழிற்கு இடமாற்றம்..!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என போலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, விக்ரமசிங்கவின் முக்கிய தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய தலைமை காவல் பரிசோதகர் அசோக ஆரியவன்ஸ, தற்போது காங்கேசன்துறை காவல் நிலையத்துக்கு இட மாற்றப்பட்டுள்ளார்.

இந்த இடமாற்றத்திற்கு தேசிய காவல் ஆணைக்குழுவின் ஒப்புதல் கிடைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அசோக ஆரியவன்ஸ கடந்த 23 ஆண்டுகளாக விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அணியில் பணியாற்றியுள்ளார். இதில் 15 ஆண்டுகள் அவர் முக்கிய தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றியுள்ளார்.

இந்த இடமாற்றம், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் தற்போது கைதிலிருக்கும் முன்னாள் எம்பி சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் விக்ரமசிங்கவின் இடையிலான தொலைபேசி உரையாடலைப் பெற முயன்றதற்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்காக குறித்த அதிகாரி CID அதிகாரியொருவரை தொடர்பு கொண்டுள்ளதாகவும் போலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

யாழில் சிறுமி துஸ்பிரயோகம்; மேலும் இருவர் பொலிஸாரால் கைது..!

0

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் 14 வயதுச் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய மேலும் இருவர் நேற்றைய தினம் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

குறித்த சிறுமி கடந்த 3 ஆண்டுகளாக இவ்வாறு பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.இலங்கை வாகன வாடகை

இந்நிலையில் இந்த விடயம் வட்டுக்கோட்டை பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் மேலும் இரு ஆண்கள் நேற்றைய தினம் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்திய வேளை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

கைது செய்யப்பட்ட இருவரும் 45 மற்றும் 52 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழில் நேர்ந்த சோகம்; தீயில் எரிந்து இளம் பெண் உயிரிழப்பு..!

0

யாழ். போதனா வைத்திய சாலையில் தீயில் எரிந்த நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இணுவில் கிழக்கைச் சேர்ந்த நிவேதனன் விஜிதா (வயது 30) என்ற இளம் குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை வீட்டில் தனக்கு தானே தீமூட்டி தீயில் எரிந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று திங்கள் கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டார் சாட்சிகளை சுன்னாகம் பொலிஸார் நெறிப்படுத்தினர்.

வவுனியாவில் மீட்கப்பட்ட சடலம்; பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை..!

0

வவுனியா, நெளுக்குளம் – நேரியகுளம் வீதியில் உள்ள தம்பனை புளியங்குளம் குளத்தில் மீட்கப்பட்ட சடலத்தை அடையாளம் காண உதவுமாறு இன்று நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.ஏ.சமரக்கோன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

வவுனியா- இராசேந்திரகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட நெளுக்குளம்- நேரியகுளம் வீதியில் உள்ள தம்பனை புளியங்குளம் பகுதியில் இருந்து கடந்த முதலாம் திகதி சடலம் ஒன்று மீட்கப்பட்டிருந்தது.

குறித்த சடலம் 40 வயதிற்கு மேற்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மரணமடைந்து 10 – 15 நாட்களுக்கு பின்னரே குறித்த சடலம் மீட்கப்பட்டிருந்தது.

நீல கலர் கோடு போட்ட சேட்டு அவரது சடலத்தில் அருகில் கண்டு பிடிக்கப்பட்டது. உருக்குலைந்த நிலையில் காணப்பட்டதால் சடலத்தை பற்றிய மேலதிக அடையாளங்களை பெற முடியவில்லை.

வவுனியா வைத்திய சாலையில் உள்ள பிரேத அறை குளிரூட்டி இயங்காமையால் முல்லைத்தீவு வைத்திய சாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இதனை அடையாளம் காண உதவுமாறு கோருவதுடன், அவ்வாறு இல்லாவிடின் அரச செலவில் குறித்த சடலத்தை நல்லடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

உயர்தர பரீட்சையில் மாணவர்களை விட மாணவிகள் பல்கலைக் கழகத்திற்கு தெரிவு..!

0

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியான நிலையில் ஆண் பரீட்சார்த்திகளை விட பெண் பரீட்சார்த்திகள் அதிக சதவீதத்தினர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சை எழுதிய அனைத்து பரீட்சார்த்திகளிலும் 64.73% பேர் பல்கலைக்கழக அனுமதிக்கான தகுதிகளைப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பெண் பரீட்சார்த்திகளில், 71.93% பேர் பல்கலைக் கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர், அதே நேரத்தில் ஆண் பரீட்சார்த்திகளில் 60.24% பேர் பல்கலைக் கழகத் தகுதியைப் பெற்றுள்ளனர்.

29,244 பரீட்சார்த்திகள் உயர்தர பரீட்சைகளின் மூன்று பாடங்களிலும் தோல்வியடைந்துள்ளதாக அவர் கூறினார்.

அத்துடன் மூன்று பாடங்களிலும் தோல்வியடைந்த மாணவர்களின் சதவீதத்திலும் இதேபோன்ற நிலை காணப்படுவதாகவும், ஆண் பரீட்சார்த்திகளில் 13.87% பேரும், பெண் பரீட்சார்த்திகளில் 8.6% பேரும் மூன்று பாடங்களிலும் தோல்வியடைந்துள்ளதாக அவர் மேலும் எடுத்துரைத்தார்.

இந்த ஆண்டு தேர்வுகளுக்குத் தோற்றிய 456 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளை இடைநிறுத்தவும் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

யாழில் அத்தானுடன் கள்ளக் காதல்; அக்கா கண்டித்ததால் தங்கை கிணற்றில் குதிப்பு..!

0

யாழில் தனது கணவனுடன் தனது தங்கை காதல் தொடர்பில் ஈடுபட்டு வந்ததை அறிந்த மனைவி தங்கையை கண்டித்ததால் தங்கை கிணற்றில் குதித்த சம்பவம் யாழ் உரும்பிராய் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

அப்பகுதிப் பாடசாலையில் சாதாரண தரம் கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார். எந்தவித வேலை வெட்டிக்கும் போகாது தாய், தந்தையின் உழைப்பிலும் வெளிநாட்டு வாழ் தனது சகோதரர்களின் பணத்திலும் வாழ்ந்து வந்த 22 வயதான ஒருவன் கடந்த சில மாதங்களுக்கு முன் 20 வயதான யுவதியை திருமணம் முடித்துள்ளான்.

ரிக்ரொக் மூலமான அறிமுகத்திலேயே இந்த திருமணம் இடம் பெற்றுள்ளது. இதன் பின் இவன் தனது மனைவியுடன் தனது பெற்றோரின் வீட்டிலேயே வேலை வெட்டிக்குப் போகாது வாழ்ந்து வந்துள்ளான்.

உரும்பிராய் பகுதியில் அலங்காரப் பொருட்கள் விற்பனை செய்யும் வியாபார நிலையம் ஒன்றை ஆரம்பிக்க இருப்பதாக தனது ரிக்ரொக் பக்கத்தில் தகவல் வெளியிட்டு வந்துள்ளான். அதே நேரத்தில் மனைவியின் தங்கையையும் காதலித்து வந்துள்ளதாகத் தெரிய வருகின்றது.

இதனையறிந்த மனைவி தனது பெற்றோருடன் இருந்த தங்கையிடம் சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவ்வாறு சண்டை பிடித்துக் கொண்டிருந்த போது மனைவியின் தங்கை அப்பகுதியில் உள்ள தோட்டப் பகுதிக்கு ஓடிச் சென்று கிணற்றில் குதித்துள்ளார்.

தங்கையின் பின்னால் சென்ற அக்கா மற்றும் உறவுகளும் அப் பகுதியால் சென்றவர்களும் உடனடியாக செயற்பட்டு குறித்த மாணவியை உயிருடன் மீட்டதாக் தெரிய வருகின்றது.

மாணவி கிணற்றுக்குள் விழுந்ததை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மாணவியின் அத்தானை பிடித்து தாக்கியதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

தற்போது குறித்த அத்தானின் ரிக்ரொக் தளம் செயற்படவில்லை என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

error: Content is protected !!