Saturday, August 8, 2026
Huis Blog

வவுனியா மாநகர சபை விவகாரம்; ஆளுநரின் உத்தரவுக்கு எதிரான இடைக்காலத் தடை நீடிப்பு..!

0

வவுனியா மாநகர சபையின் முதல்வரைப் பதவி நீக்கம் செய்து வட மாகாண ஆளுநர் மேற்கொண்ட தீர்மானத்திற்கு வழங்கப்பட்டிருந்த இடைக்காலத் தடைக்கட்டளையை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை நீடித்து வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆளுநரின் பதவி நீக்க உத்தரவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை விண்ணப்பம் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, மனுதாரர் தரப்பில் பெறப்பட்ட இடைக்காலத் தடையை நீக்குமாறு எதிர் மனுதாரர்கள் தரப்பில் ஆட்சேபனை முன்வைக்கப்பட்டிருந்தது. இதற்குப் பதிலளிக்கும் வகையில் மனுதாரர் தரப்பினால் நேற்றைய தினம் மறுஆட்சேபனைத் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இன்றைய நாள் முழுவதும் இடைக்காலத் தடையை நீடிப்பதா அல்லது ரத்து செய்வதா என்பது தொடர்பிலேயே விரிவான விவாதங்கள் இடம்பெற்றன.

இது குறித்து மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில்,

“நீதிமன்றின் பணிப்புரைக்கு அமைவாக, இரு தரப்பு விவாதங்களையும் எழுத்துமூல சமர்ப்பணங்களாக வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதிக்குள்ளோ அல்லது அதற்கு முன்னரோ நீதிமன்ற அலுவலகத்தில் தாக்கல் செய்யவுள்ளோம்.”

“தாக்கல் செய்யப்படும் சமர்ப்பணங்களை ஆராய்ந்த பின்னர், இடைக்காலத் தடை தொடர்பான இறுதி உத்தரவை நீதிமன்றம் செப்டம்பர் 9 ஆம் திகதி அறிவிக்கும்.”

“அதன் பின்னரே பிரதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அதுவரை ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இடைக் காலத் தடைக் கட்டளை அமுலில் இருக்கும்” எனத் தெரிவித்தார்.

ஊடக உயர்தொழிலாளர் பட்டய நிறுவக சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு..!

0

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை ஊடக உயர்தொழிளர்களின் பட்டயம் பெற்ற நிறுவக சட்டமூலத்துக்கு எதிராக சுதந்திர ஊடக இயக்கம் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.

சுதந்திர ஊடக இயக்கத்தின் உறுப்பினர்களான உதய களுபத்திரண மற்றும் சுனில் ஜெயசேகர ஆகியோர் சட்டத்தரணி லக்ஷான் டயஸ் ஊடாக இம்மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

இதில் சட்டமா அதிபர், ஊடகத்துறை அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். இம்மனுவை வெள்ளிக்கிழமை (7) பரிசீலித்த உயர் நீதிமன்றம், எதிர்வரும் 11ஆம் திகதிக்குள் இது தொடர்பான எழுத்துமூல சமர்ப்பணங்களைச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு, முன்மொழியப்பட்டுள்ள கட்டமைப்பு ஸ்தாபிக்கப்படும் பட்சத்தில் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமையான பேச்சுச் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் என்பன கட்டுப்படுத்தப்படும் என மனுதாரர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

அத்துடன், இச்சட்டமூலத்தின் சில வரையறைகள் மற்றும் விளக்கங்கள் மூலம் சாதாரண பிரஜைகள் மற்றும் ஒன்லைன் கிரியேட்டர் உரிமைகளும் முடக்கப்படலாம் எனவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், அரச வேலைத் திட்டத்தின் விருப்பத்திற்கமையவே இதன் இடைக்காலக் குழு நியமிக்கப்படுவதால், கடும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட ஒரு கட்டமைப்பே உருவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, திருத்தங்களின்றி இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமாயின், பாராளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என உத்தரவிடுமாறு மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

மிகை ஊழிய அதிபர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்குவதற்கு வாய்ப்பில்லை..!

0

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் மிகை ஊழியர் நியமன அதிபர்களுக்கு நிர்வாகக் கொடுப்பனவு வழங்கப்படாமை மற்றும் அவர்களுக்கு இடமாற்றம் பெறுவதிலுள்ள சிக்கல் நிலமைகள் குறித்து பாரளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்னவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்நிலையில் பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்ன இதன் போது பதிலளிக்கையில்,

மிகை ஊழியர் அதிபர்களைப் பொறுத்தவரையில் வடமாகாணத்தில் தேசிய பாடசாலையில் ஒருவரும், மாகாண பாடசாலைகளில் 52பேருமாக மொத்தம் 53மிகை ஊழியர் நியமன அதிபர்கள் கடமையாற்றுகின்றனர்.

அதேவேளை தீவளாவிய ரீதியில் தேசிய பாடசாலைகளில் 06பேரும், மாகாணப் பாடசாலைகளில் 631பேருமாக மொத்தம் 637 மிகை ஊழியர் நியமன அதிபர்கள் கடமையாற்றுகின்றனர்.

கடந்த 2012.08.08ஆம் திகதி முதல் மிகை ஊழியர் அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்டிருக்கின்ற அதிபர்களின் நியமனக் கடிதங்களுக்கு அமைவாக, அவர்களுக்கு அதிபர்களுக்கான சம்பளத்தினை மாத்திரமே பெற்றுக்கொள்ள வாய்பிருக்கின்றது.

நிர்வாக கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்கான உரிமைகள் அவர்களுக்கில்லை. எனவே மிகை ஊழியர் அதிபர்களுக்கு ஏதேனுமொரு வகையில் நிவாரணங்களை வழங்குவது தொடர்பாக கல்வி அமைச்சினால் ஆராயப்பட்டது.

எனினும் ஆட்சேர்ப்பின் அடிப்படையிலும், நிதிப் பிரமாணங்களுக்கு அமைவாகவும், சுற்றறிக்கைகளின் அடிப்படையிலும் மிகை ஊழியர் அதிபர்களுக்கு நிர்வாகக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு வாய்ப்பு இல்லை. அதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

ஆனாலும் நாம் தற்போது மிகை ஊழியர் அதிபர்களுடன் கலந்துரையாடி யிருக்கின்றோம். உத்தியோகத்தர்கள் மட்டத்திலும் கலந்துரையாடியிருக்கின்றோம். அத்தோடு அரசசேவைகள் ஆணைக்குழுவிடமும் இது தொடர்பில் பேசியிருக்கின்றோம்.

உண்மையில் மிகை ஊழியர் நியமன அதிபர்கள் கணிசமான பணிகளை ஆற்றுகின்றனர். அனைத்து விடயங்களும் எம்மால் அவதானிக்கப்பட்டிருக்கின்றன.

அதேவேளை அதிபர்களை இடமாற்றும் போது மாகாண மட்டத்தில் சில பிரமாணங்கள் இருக்கின்றன. சில பாடசாலைகளில் 15 தொடக்கம் 20ஆண்டுகளாக அதிபர்கள் இல்லாத நிலையும் காணப்படுகின்றது.

உரியமுறையில் அதிபர்களை கோராத வரையில் அதிபர் வெற்றிடம் பூர்த்தி செய்யப்படுவதுமில்லை.

அரச சேவைகள் ஆணைக்குழுவுடன் எதிர்வரும் 11ஆம்திகதி பேச இருக்கின்றோம். அதிபர் நியமனங்களைக் கோராத பாடசாலைகளுக்கு எவ்வாறு அதிபர்களை நியமிப்பது என்பது பற்றி பேசவிருக்கின்றோம் – என்றார்.

மிகை ஊழிய அதிபர்கள் மீதான புறக்கணிப்பென்பது “நவீன தீண்டாமை” – ரவிகரன் எம்.பி

0

மிகை ஊழியர் அதிபர்கள்மீதான புறக்கணிப்பென்பது “நவீன தீண்டாமை” என கல்வி, உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்னவிடம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு மிகை ஊழியர் நியமன அதிபர்களுக்கு நிர்வாகக் கொடுப்பனவு வழங்கப்படாமை மற்றும் அவர்களுக்கு இடமாற்றம் பெறுவதிலுள்ள சிக்கல் நிலமைகள் குறித்தும் இதன்போது பாரளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்னவிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

பாராளுமன்றில் 07.08.2026இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்திலேயே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

கௌரவ பிரதி அமைச்சர் அவர்களே இந்த மிகை ஊழியர் அதிபர்களுக்கு நியாயமான தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை.

மிகைஊழியர் அதிபர் விடயத்தில் ஓர் அரசாக தங்களின் நிலைப்பாடு பாதிக்கப்பட்டோரின் பக்கம் நிற்பதாகத்தான் அமையவேண்டுமென எதிர்பார்க்கின்றேன்.

அவர்கள் இப்பொழுதும் இடர்படுகின்ற இரண்டு பிரச்சினைகளுள் ஒன்று அவர்களுக்குரிய நிருவாகக் கொடுப்பனவு கிடைக்கப் பெறாமை தொடர்பானது.

அவர்களும் ஏனைய அதிபர்களைப் போல நூற்றுக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள் என பெரும் ஆளணிக்கு தலைமை வகிக்கின்றார்கள். இருந்தபோதும், ஏனைய அதிபர்கள் பெறும் நிருவாகக் கொடுப்பனவு அவர்களுக்கு இதுவரை வழங்கப்படாதுள்ளது.

இப்பொழுது சில ஆண்டுகளாக வடக்கு மாகாணக் கல்வி அமைச்சினால் கோரப்படும் அதிபர் விண்ணப்பங்களில் மிகை ஊழியர் தவிர்ந்த அதிபர்கள் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் எனக் குறிப்பிடப்படுகின்றது.

விண்ணப்பிப்பதிலும் புறக்கணிப்பு, கல்விச் சூழமைவில் இது ஒரு நவீன தீண்டமையாகவே பார்க்கப்படுகின்றது. இவ்வாறு அவர்கள் புறக்கணிக்கப்படுவது நியாயமா என பிரதி அமைச்சரிடம் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.

எனவே தயவுசெய்து பிரதிஅமைச்சர் இவ்விடயத்தில் கவனமெடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கின்றேன்.

தயவுசெய்து இந்த விடயத்தில் புறக்கணிப்புக்களைச் செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ள விடும்புகின்றேன்.

வடக்கு மாகாணத்தில் ஒரு தொகுதி அதிபர்கள் ஒருவிதமாகவும், ஏனைய அதிபர்கள் வேறுவிதமாகவும் நடாத்தப்படுகின்றனர். இவ்வாறான புறக்கணிப்புக்களைச் செய்ய வேண்டாம் என்றுதான் நான் கேட்டுக் கொள்கின்றேன் – என்றார்

செம்மணியில் தொடர்ச்சியாக வெளிவரும் மனித எச்சங்கள்; இதுவரை 500ஐ கடந்தது..!

0

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியானது அனைத்து மூன்று கட்டங்களிலுமாக 100 நாட்கள் களப் பணியை எட்டியுள்ளது.

முதலாம் கட்டம் 9 நாட்களும், இரண்டாம் கட்டம் 45 நாட்களும், தொடர்ந்து நடைபெற்று வரும் மூன்றாம் கட்டம் 46 நாட்களையும் பூர்த்தி செய்துள்ளன, இதன் மூலம் ஒட்டுமொத்த கூட்டுத் தொகை 100 நாட்களாகியுள்ளது.

இன்றைய மூன்றாம் கட்டத்தின் 46 வது நாளில், மேலும் எட்டு மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், மூன்று கட்டங்களிலும் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 507 ஆக உயர்ந்ததுள்ளது.

இவற்றுள், 501 எலும்புக்கூடுகள் முழுமையாகத் தோண்டி எடுக்கப்பட்டு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ளன

இன்றைய அகழ்வின் போது, மேலும் மூன்று தொல்பொருட்கள், இரண்டு வளையல்கள் மற்றும் ஒரு மேலாடை முள் (shirt pin) மீட்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், செம்மணியில் தற்போது அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படும் பகுதியைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளிலும் புதைகுழிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், புதைகுழியை அண்மித்த இரு இடங்களில் எழுமாற்று அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது புதிதாக அகழ்வு மேற்கொள்ளப்பட்ட ஒரு இடத்திலிருந்து, ஒரு மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் அப்பகுதியில் கூடுதல் மனித எச்சங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் நீதிமன்ற வளாகத்தினுள் பொலிஸார் செய்த செயல் ; தவிசாளருக்கு மிரட்டல்..!

0

தையிட்டி விகாரதிபதியினால், சட்டவிரோதமான முறையில் அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள , வலி.வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை விடுவிக்க முற்பட்டால் , கைது செய்வோம் என தவிசாளரை பொலிஸார் மிரட்டியுள்ளனர்.

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கினை மன்று நேற்றைய தினம் தள்ளுபடி செய்துள்ளது.

அத்துடன் வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோரையும் மன்று வழக்கில் இருந்து முற்றாக விடுவித்துள்ளது.

அந்நிலையில் தவிசாளர் நீதிமன்றுக்கு வெளியே வந்த போது, காங்கேசன்துறை பிரிவுக்கான உதவி பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் , வீதியை விடுவிக்கும் முயற்சியை கைவிட வேண்டும்.

மீறி அதற்கான நடவடிக்கையை எடுத்தால், கைது செய்வோம் என தவிசாளரை மிரட்டியுள்ளனர்.

பொலிஸார் தொடர்ந்த வழக்கினை நீதிமன்றம் தள்ளுபடி செய்து , எதிர் தரப்பினரை வழக்கில் இருந்து விடுவித்த போதிலும் , நீதிமன்றுக்கு வெளியே தவிசாளரை குறித்த வழக்கு தொடர்பில் மிரட்டியுள்ளமை , நீதிமன்ற அவமதிப்பாகவும் , நீதித்துறையில் பொலிசாரின் தேவையற்ற தலையீடு தொடர்பில் விசனம் எழுந்துள்ளது.

அதேவேளை தன்னை மிரட்டிய சம்பவம் தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் விரைவில் வீதியினை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம் என தவிசாளர் தெரிவித்துள்ளார்.

மாகாணப் பாடசாலைகளை கல்வியமைச்சு சுவீகரிக்க சட்டமில்லை..!

0

மாகாண சபைகளின் அதிகார வரம்புக்குட்பட்ட பாடசாலைகளைத் ‘தேசிய பாடசாலைகள் என்ற பெயரில் மத்திய கல்வி அமைச்சு சுவீகரிப்பதற்குச் சட்ட ரீதியான ஏற்பாடுகள் எதுவும் இல்லை என சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.

அரசியல் யாப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் கல்வி என்பது மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட விடயமாகும். எனினும், யுத்தகாலத்தில் மத்திய கல்வி அமைச்சு அரசியல் யாப்புக்கு முரணாக நாடு முழுவதிலும் ஏறத்தாழ 350 பாடசாலைகளையும் (வடக்கில் 20 பாடசாலைகள்) நிர்வாக வழிகளினூடாகத் தேசிய பாடசாலைகளாகத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருந்தது.

அன்றைய கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும மேலும் 650 பாடசாலைகளைச் சேர்த்து ‘ஆயிரம் தேசிய பாடசாலைகள் திட்டத்தை அறிவித்தார். ஜி.எல்.பீரிஸ், தினேஷ் குணவர்த்தன ஆகியோரும் இதனைத் தீவிரமாக முன்னெடுத்தனர்.

மாகாண அதிகாரங்களைப் பறிக்கும் இந்தச் சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக கலாநிதி க. சர்வேஸ்வரன் 2022 மே மாதத்தில் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.

வழக்கின் தொடர்ச்சியாக, 18.08.2023 மற்றும் 20.02.2024 திகதியிடப்பட்ட சுற்றறிக்கைகள் மூலம், புதிதாகத் தேசிய பாடசாலைகளாக அறிவிக்கப்பட்ட பாடசாலைகளின் பெயர்ப் பலகைகளை அகற்றுமாறும், அதிபர்கள் தேசிய பாடசாலை முத்திரையைப் பயன்படுத்தக் கூடாது என்றும் மத்திய கல்வி அமைச்சு உத்தரவிட்டது.

2025 மே 23 அன்று மன்றில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல், “குறிப்பிட்ட அமைச்சரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தற்போது சட்டம் இல்லை” எனச் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளதாக ஒப்புக் கொண்டார்.

ஏற்கனவே சுவீகரிக்கப்பட்ட பாடசாலைகள் தவிர வேறு எதனையும் சுவீகரிக்கும் உத்தேசம் மத்திய அரசுக்கு இல்லை என்ற எழுத்துமூல உறுதிப்பாட்டையும் சட்டமா அதிபர் நீதிமன்றத்துக்குச் சமர்ப்பித்தார்.

அதற்கமைய வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரனால் தாக்கல் செய்யப்பட்ட சட்டப் போராட்டம் வெற்றி பெற்று முடிவுக்கு வந்ததுடன் நாடு தழுவிய ரீதியில் கையகப் படுத்தப்படவிருந்த 650 பாடசாலைகளும் (வடக்கில் 48 பாடசாலைகள்) மத்திய அரசால் பறிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

வவுனியாவில் அகரம் அறக் கட்டளையின் ஏற்பாட்டில் முன்பள்ளி திறந்து வைப்பு..!

0

பாலாவின் அகரம் அறக் கட்டளையினரால் வவுனியா, புதுக்குளம் சாஸ்திரி கூழாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் முன்பள்ளி திறப்பு விழா இன்றைய தினம் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

இந் நிகழ்வானது பாலாவின் அகரம் அறக்கட்டளையின் ஸ்தாபகரும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளருமான திரு. பா. பாலேஸ்வரன் தலைமையில் காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், வவுனியா நகர பிரதேச செயலாளர், கல்வித்துறை அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஓய்வுபெற்ற அதிபர்கள் மற்றும் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிரான வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு..!

0

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் 7 வழக்குகளையும் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகல பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதியமைச்சர் சுனில் வட்டகல இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், ”மேன்முறையீட்டு நீதிமன்றம் 7 வழக்குகளுக்கு தீர்ப்புகளை வழங்கியுள்ளது. அந்த 7 வழக்குகளின் தீர்ப்புகளிலும் பிரதிவாதியாக இருப்பவர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆவார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ஒரு ஆணையாளரின் கையொப்பம் இல்லை என்று கூறி, மேல் நீதிமன்றம் அந்த 7 வழக்குகளின் தீர்ப்புகளையும் நிராகரித்திருந்தது.

அதாவது கடந்த அரசாங்கத்தின் காலத்தில் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. கடந்த அரசாங்க காலத்தில் அவ்வாறே ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இது தொடர்பில் இலஞ்ச ஆணைக்குழு மேன்முறையீடு செய்தது. அதற்கான தீர்ப்பே இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் 7 வழக்குகளையும் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எனவே இவர்கள் பதற்றமடையத்தானே வேண்டும்? அதனாலே நீதிபதிகளின் வயதெல்லை அதிகரிப்பு விடயம் தொடர்பில், இவர்கள் கூட்டிணைந்த எதிர்க்கட்சியில் இருந்தவாறு இப்போது இவற்றைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

45 நிமிடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட வழக்குத் தீர்ப்பு எமது கைக்கு எவ்வாறு வந்தது? என்று சிந்தித்து பாருங்கள், இப்போது நீதிமன்றம் திறம்படச் தொழிற்படுகிறது. வழங்கப்படும் தீர்ப்புகள் இணையத்தளத்தில் பதிவேற்றப்படுகிறது. விரும்பிய எவரும் தீர்ப்பைப் பார்த்துக் கொள்ள முடியும்.

இன்று ஒருவருக்கு வீட்டிலிருந்தபடியே ஒரு வழக்கைத் தாக்கல் செய்ய முடியும். அனைத்து பதிவுகளையும் வீட்டிலிருந்தபடியே மேற்கொள்ள முடியும்.” என்று கூறினார்.

விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின்..!

0

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி பொலிஸ் நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி அவர் விடுவிக்கப்பட்டார்.

மாலை 6.45 மணிக்குத் தொடங்கிய விசாரணை இரவு 8.25 மணிக்கு நிறைவடைந்தது. விசாரணை முடிந்து காவல் நிலையத்தில் இருந்து வெளியேறிய உதயநிதியை தொண்டர்கள் மாலை அணிவித்து உற்சாகத்துடன் வரவேற்றனர்.

கொட்டும் மழையிலும் காத்திருந்த தொண்டர்களை நோக்கி கையசைத்தவாறு வாகனத்தில் ஏறி உதயநிதி ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார். வழிநெடுகிலும் சாலையின் இரு புறத்தில் தொண்டர்கள் சூழ்ந்து நின்று உதயநிதியை வரவேற்றனர்.

விசாரணைக்காக பொலிஸாரின் வாகனத்தில் அழைத்துவரப்பட்ட உதயநிதி, தற்போது தனது காரில் புறப்பட்டுச் சென்றார். சாலை மார்க்கமாக திருச்சி சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்லவுள்ளதாகத் தெரிகிறது.

காவிரி விவகாரம் தொடர்பாக தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் திமுக சார்பில் நேற்று (ஒகஸ்ட். 3) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் உதயநிதி மீது தவெக மகளிரணியினர், பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பின்னர், சென்னை நீலாங்கரை இல்லத்திற்கு வந்த காவல் துறையினர் உதயநிதி ஸ்டாலினை, கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றனர்.

தஞ்சாவூர் தெற்கு நகர காவல் நிலையத்தில் விசாரணை நடத்த வேண்டியிருந்தது. ஆனால், அங்கு அதிகப்படியான தொண்டர்கள் குவிந்திருந்ததால், செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து உதயநிதியிடம் பொலிஸார் விசாரணை நடத்தினர்.

முதலில் செங்கிப்பட்டி பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு இறங்க மறுப்பு தெரிவித்த நிலையில், எ.வ. வேலு, கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் உடனான ஆலோசனைக்குப் பிறகு செங்கிப்பட்டி பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு சம்மதம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் உதயநிதியிடம் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்த பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.

error: Content is protected !!