சாவகச்சரி பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக பணிபுரிந்து வந்த தமிழினி என்ற பெண் கடந்த வெள்ளிக் கிழமை கடும் தீக்காயங்களுடன் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆறு மாத கர்ப்பிணியான அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தாய் மற்றும் சிசுவை உயிருடன் மீட்கும் பணிகளும் இடம் பெற்றது.
எனினும் இன்றைய தினம் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். படுக்கை அறையில் மெழுகுதிரி எரிந்து தீ விபத்து ஏற்பட்டதாக தனது வைத்தியசாலை முறைப்பாட்டில் தெரித்துள்ளார்.
சம்பவத்தில் நீர் வேலி பகுதியைச் சேர்ந்த தமிழினி சதீஸ் என்ற 35 வயதான உதவி பிரதேச செயலாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவருக்கு ஆறு வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளதுடன் கணவர் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் கிராம சேவையாளராக பணிபுரிந்து வருகின்றார்.
இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது
மேஜர் பதவிக்குக் கீழே உள்ள அனைத்து இலங்கை இராணுவ வீரர்களும் தங்கள் கடவுச்சீட்டுகளை அந்தந்த படைப் பிரிவுகளிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இது குறித்து இராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் வருண கமகே கூறுகையில்,
இந்த முடிவு நிர்வாக நோக்கங்களுக்காக எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார். மேலும், வெளிநாட்டு பயிற்சி மற்றும் அலுவலக விடயங்களுக்கான கடவுச்சீட்டுகளைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்களை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
பல இராணுவ வீரர்கள் வீட்டிலிருந்து வெளியே இருப்பதால், அலுவலக நோக்கங்களுக்காக கடவுச்சீட்டுகளைப் பெறுவதில் தாமதங்கள் ஏற்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், தனிப்பட்ட பயன்பாட்டிற்காக எந்த நேரத்திலும் கடவுச்சீட்டுகளை படைப் பிரிவுகளிலிருந்து மீட்டெடுக்கலாம் என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.
நிர்வாக காரணங்களுக்காக மட்டுமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக இராணுவச் செய்தித் தொடர்பாளர் தெளிவுபடுத்தினார்.
தனிப்பட்ட பயன்பாட்டிற்காக எந்த நேரத்திலும் கடவுச்சீட்டுகளை படைப் பிரிவுகளிலிருந்து மீட்டெடுக்கலாம் என்று செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி “யானை” சின்னத்தின் கீழ் பல மாநகர சபைகளுக்குப் போட்டியிட முடிவு செய்துள்ளது.
சிறிகொத்தாவில் நேற்று (14.02) இடம்பெற்ற கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் போது பல புதிய நியமனங்கள் வழங்கப்பட்டதாகவும், வரவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மற்றும் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பான விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப் பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் “யானை” சின்னத்தின் கீழ் 04 மாநகர சபைகளுக்குப் போட்டியிட முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவுக்கு பெரும்பான்மை ஒப்புதல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கதிர்காமம் பொது பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள கழிப்பறைக்கு அருகில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த நபர் நேற்று (14) இரவு பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள தண்ணீர் தொட்டியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உயிரிழந்தவர் கதிர்காமம் பகுதிக்கு வெளியே இருந்து வந்தவர் என்று பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
அவர் பல நாட்களாக கதிர்காமம் நகரத்தில் சுற்றித் திரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களுக்கு எதிரான பாகுபாடு ஒழிப்புக் குழு தனது ஒன்பதாவது அறிக்கை தொடர்பான பரிசீலனையை நிறைவு செய்துள்ளது.
குறித்த அமைப்பின் பிரதிநிகளுக்கும் இலங்கையின் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் அடங்கிய தூதுவுக் குழுவும் இது தொடர்பில் நேற்றைய தினம் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த நாட்டின் தேசிய செயற் திட்டத்தை இந்த குழு பாராட்டியதோடு குழந்தை திருமணம் மற்றும் உள்ளக வன்முறை அனுமதிக்கப்பட்ட முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் குறித்து சரோஜா போல்ராஜ் அடங்கிய குழுவிடம் குறித்த அமைப்பு கேள்வியெழுப்பியது.
முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் 2022 இல் திருத்தப்பட்டது, ஆனால் சட்டத்தின் கூறுகள் குறித்து இன்னும் குறைகள் உள்ளன. குழந்தை திருமணத்தை தடை செய்வது உட்பட சட்டத்தை மேலும் திருத்த திட்டங்கள் இருந்ததா? என்றும் இலங்கைக்கான குறித்த குழுவின் அறிக்கையாளர் “யமிலா கொன்சாலஸ் பெரர்” கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ், பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளை நிலை நிறுத்துவதற்கும் பாலின சமத்துவத்தை முன்னேற்றுவதற்கும் இலங்கை அரசு உறுதி பூண்டுள்ளதாகக் கூறினார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு, சர்வதேச மனித உரிமைகள் ஒப்பந்த அமைப்புடன் நாட்டின் முதல் ஈடுபாடு இதுவாகும் என்பதால், இந்த மதிப்பாய்வு குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தது.
முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டம் குறித்து, அதன் திருத்தம் குறித்தும் அரசாங்கம் ஆலோசனைகளை நடத்தியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கலாச்சார உரிமைகளுக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.
திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை நிர்ணயிப்பதற்கும், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க பல துறைகளைக் கொண்ட குழுவை நிறுவுவதற்கும் மகளிர் நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்ததாக சரோஜா போல்ராஜ் மேலும் கூறினார்.
புதிய கல்வி சீர்திருத்த திட்டத்தின் கீழ் பரீட்சை முறை மற்றும் சாதாரண தர மற்றும் உயர் தர பாடத் திட்டங்கள் மாற்றப்படாது என்று தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் மஞ்சுள விதான பத்திரன ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
சீர்திருத்தங்கள் கல்வி முறையில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வராது என்று கூறிய அவர் பரீட்சை முறை மற்றும் பாடங்களைப் புதுப்பிக்க கணிசமான அளவு நேரம் எடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, புதிய உலகிற்கு ஏற்றவாறு மாணவர்களுக்கு ஒரு பாடத்திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளதாகவும், அந்த சீர்திருத்தங்கள் ஒரே நேரத்தில் மாணவர்களுக்கு அறிமுகப் படுத்தப்பட்டால், ஒரு பெரிய நெருக்கடி உருவாகும் எனவும் பணிப்பாளர் நாயகம் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதேவேளை, பரீட்சைகள் மற்றும் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டால், மாணவர்கள் தயாராவதற்கு குறைந்தது இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதன்படி, பாடத்திட்டம் படிப்படியாக புதுப்பிக்கப்பட்டு தரம் 1 முதல் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்றும், தற்போது 10, 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து கல்வி அமைச்சகத்துடன் கலந்துரையாடல்கள் நடந்து வருவதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், எட்டு வருடங்களுக்கு ஒருமுறை பாடத் திட்டத்தைப் புதுப்பிக்கும் முறை வழக்கம் போல் தொடரும் என்றும் பணிப்பாளர் நாயகம் விதான பத்திரண மேலும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ் – தையிட்டியில் உள்ள திஸ்ஸ ராஜ மகா விகாரையை இடிப்பதாக மிரட்டியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை கைது செய்ய வேண்டும் என ஓய்வுபெற்ற ஜெனரல் ஜகத் டயஸ் கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கருத்துகள், அரசியலமைப்பை மீறுவதாகவும், அரசாங்கம் இதுபோன்ற சூழ்நிலைகளைப் புறக்கணித்தால், அது வன்முறையை ஊக்குவிப்பதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், அத்தகைய சூழ்நிலையில் உடனடியாகவும் தீர்க்கமாகவும் செயல்படத் தவறினால், அரசாங்கம் தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில், அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஜனாதிபதி அநுர கூறியதை போன்று சட்டம் அனைவருக்கும் சமமானது என்றால் தையிட்டி விகாரை உடைக்கப்பட வேண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்திருந்தார்.
அத்தோடு, விகாரையை உடைக்க வேண்டும் என தான் கூறியது இனவாத கருத்து அல்ல என்றும் சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்ற அடிப்படையில் இதுவே தீர்வு எனவும் அவர் சுட்டிக் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார். சாவகச்சேரி – தனக்கிளப்பு பகுதியில் இன்றைய தினம் (15) இந்த விபத்து சம்பவித்துள்ளது.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வயலுக்குள் பாய்ந்து விபத்து சம்பவித்துள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர், அவரது உதவியாளர் மற்றும் வாகனத்தின் சாரதி காயமடைந்து யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர், யாழ் நோக்கி தனது வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த வேளையே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விபத்து தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் ஏ9 வீதியை மையமாக கொண்டு பல விவசாய நிலங்கள் மண் போட்டு நிரப்பட்டு ஆக்கிரமிக்கபடுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறிப்பாக வவுனியா, நொச்சிமோட்டை, தாண்டிக்குளம், யாழ் வீதி, பட்டாணிச்சூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய காணிகளில் மண் போட்டு அவற்றை நிரவி புதிதாக வர்த்தக நிலையங்கள், கட்டடங்கள் என்பவற்றை அமைக்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இது தொடர்பில் ஊடகங்களில் பல தடவை வெளி வந்துள்ளதுடன், விவசாயிகளும் கமநல அபிவிருத்தி திணைக்களத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கபடவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் க.விமலரூபன் அவர்களிடம் கேட்ட போது,
எமக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக யாழ் வீதியில் விவசாய காணியில் கிரவல் போட்டு நிரப்பும் நடவடிக்கை இடம் பெற்றுள்ளது. இதனை நிறுத்தி உடனடியாக கிரவலை அகற்றுமாறு அறிவுறுத்தியுள்ளோம்.
தாண்டிக்குளம், பட்டாணிச்சூர் ஆகிய பகுதிகளிலும் குறித்த செயற்பாட்டை இடைநிறுத்துமாறு எமது திணைக்களத்தால் நோட்டீஸ் முதல் கட்டமாக ஒட்டப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடரும்.
ஏனைய இடங்களிலும் இவ்வாறு நடந்தால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி இளையோரை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் வடக்கில் அதிகரித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமான முறைகளில் ஆட் கடத்தல்களில் ஈடுபடும் முகவர்கள் இளையோரை இலக்கு வைத்து , அவர்களை சமூக ஊடகங்கள் ஊடாக அணுகி, ஆசை வார்த்தைகளை கூறி பெருந்தொகையான பணத்தினை பெற்று மோசடி செய்து வருகின்றனர்.
இது தொடர்பில் யாழ்ப்பாணம், மானிப்பாய், கிளிநொச்சி உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
வெளிநாடு செல்வதற்கு வங்கி கணக்கில் பெருந்தொகை பணம் வங்கி கணக்கில் இருப்பில் இருக்க வேண்டும் என கூறி , வங்கி கணக்கு இலக்கங்களை பெற்று , அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பெற்று , வங்கியில் உள்ள பணத்தினை மோசடியாக கும்பல் பெற்றுக்கொண்டு தலைமறைவாகி வருகிறது.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கபெற்றள்ள நிலையில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வெளிநாடு செல்ல காத்திருக்கும் இளையோர் , வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மற்றும் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு முகவர்கள் ஊடாக பயண ஏற்பாடுகளை செய்து சட்ட ரீதியான முறையில் செல்ல வேண்டும்.
இது தொடர்பில் இளையோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டாலே இவ்வாறான மோசடி சம்பவங்களில் இருந்து அவர்கள் தப்பிக் கொள்ள முடியும். இல்லையெனில் பெருந்தொகை பணத்தினை இழக்க நேரிடும் என பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.