Thursday, February 26, 2026
Huis Blog Bladsy 51

வவுனியா கனகராயன்குளம் பகுதி விபத்தில் யாழ் இளைஞன் பலி..!

0

கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2:00 மணியளவில் பதிவாகியுள்ளது.


யாழிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற லொறியும், கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்துகொண்டிருந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன் போது, விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதியும், பின்னால் அமர்ந்து பயணித்த இளைஞனும் கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் முச்சக்கர வண்டியின் பின்னால் அமர்ந்து பயணித்த இளைஞன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்தவர் யாழ் – கரவெட்டி மேற்கு பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய உதயகுமார் சாருஜன் என தெரிய வந்துள்ளது.

சடலம் கிளிநொச்சி வைத்திய சாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

போதைப் பொருளுடன் கைதான அதிபர் பணி நீக்கம்; விசாரணைகள் தீவிரம்..!

0

ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட அதிபர் சேவையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களைக் கவனத்தில் கொண்டு, தாபன விதிக் கோவையின் சரத்துக்களின் கீழ் வரும் குற்றத்தில் அவர் ஈடுபட்டுள்ளதால், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தேசிய மக்கள் சக்தியின் நகர சபை உறுப்பினரின் கணவரான குறித்த அதிபர், அண்மையில் 1 கிலோ 118 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

அநுராதபுரம்- எப்பாவல பகுதியில் போதைப்பொருள் கடத்தலை, பேலியகொட நகரசபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி கட்சி உறுப்பினரின் மகனும், தெற்கு பாதாள உலகக் கும்பல் தலைவருமான கொஸ்கொட சுஜியின் உறவினருமான மகன் மேற்கொண்டுள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.


இது தொடர்பாக களனியில் உள்ள நகரசபை உறுப்பினரின் வீட்டை காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளதுடன் இந்த போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக எதிர்வரும் சில நாட்களில் அவரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த சிலவருடங்களின் முன்னர் வடக்கின் அதிகாரிகள் சிலர் கடமை நேரத்தில் இரத்மலானை விடுதியில் நச்சுப் பதார்த்தங்களை பயன்படுத்தியமை தொடர்பில் சர்ச்சை ஏற்பட்ட போதும் வடக்கின் உயரதிகாரிகளால் போதிய சாட்சிகள் இல்லை என விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளதுடன் குறித்த விருந்தினை வைத்தவர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் சென்றுள்ளார் என்பதும் ஒழுக்காற்று விசாரணைகள் வடக்கின் உயர் அதிகாரிகளுக்கு பொருந்தாதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொழிற் கல்வியை மையப்படுத்தி விசேட வேலைத் திட்டம்..!

0

பாடசாலைக் கல்வியின் பின்னர் தொழிற்கல்வியில் இணைவதற்கான தகவல்களைப் பெறுவதற்கான அவசர தொடர்பாடல் சேவை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்து தொழிற்கல்வியில் சேர மாணவர்களுக்குத் தேவையான தகவல்களைத் துல்லியமாகவும் திறமையாகவும் வழங்கும் நோக்கில், ‘1966’ தொழிற்கல்வி அவசர தொலைபேசி சேவை, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நாரஹேன்பிட்டவில் அமைந்துள்ள ‘நிபுணதா பியச’ வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.


‘1966’ தொலைபேசி சேவையின் மூலம், தொழிற்கல்வி தொடர்பான எந்தவொரு தகவலையும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் திறமையான சேவைக்காக, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் தொழிற்கல்வி அமைச்சின் தொழில்நுட்ப அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட ‘AI Chat BOT’ ஐ அணுக முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் மூலம், தொழிற்கல்வி தொடர்பான எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். புதிய பாடப்பிரிவின் கீழ் முதன்மையாகக் கற்பிக்கப்படும் தொழிற்கல்வியுடன் நவீன தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தை இதன்போது பிரதமர் விளக்கினார்.

நாளைய தொழில் உலகத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ளத் தேவையான மனித மற்றும் பௌதீக வளங்களை, மாற்றப்பட வேண்டிய பகுதிகளை மாற்றுவதன் மூலம், தயக்கமின்றி, தொழிற்கல்வி கட்டமைப்பிற்குள் தரமான முறையில் மேம்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழர் தாயகத்தில் சீரழியும் கலாசாரமும் அரங்கேறும் அலங்கோலமும்..!

0

அண்மைய காலங்களில் தமிழர்களின் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெறு கலாசார சீரழிவுகள், குற்ற செயல்கள், ஈழத் தமிழினத்தை அழிவு பாதைக்கு செல்லும் அவலம் தொடர்பில் பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.

போதைபொருள் விற்பனையில் கொடிகட்டி பறக்கும் இளம் குடும்ப தலைவிகள் ஒருபுறம், போதையாலும் குற்றசெயல்களாகும் கெட்டு சீரழியும் இளம் சமுதாயம் ஒரு புறமுமாக ஈழத் தமிழர் கலாசாரம் தடம் மாறி போய் கொண்டிருக்கின்றது.


ஒருவனுக்கு ஒருத்தி – ஒருத்திக்கு ஒருவன் என வாழ்ந்த காலங்கள் மலையேறி கொண்டிருக்கின்றது. குடும்ப வன்முறைகள் படுகொலைகளில் முடிகின்றது. சுகபோக வாழ்க்கை மற்றும் பணத்தின் மீதான அதீத மோகம் மனித வாழ்க்கையில் அமைதியையும் உண்மையையும் மாற்றி விடுகின்றது.

அந்தவகையில் யாழில் தவில் வித்துவானை நம்பி கணவன் பிள்ளைகளை கைவிட்டு சென்ற குடும்ப பெண், தகாத உறவால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், முல்லைத்தீவில் 26 வயதான பெண் ஒருவர் நான்கு திருமணங்கள் செய்த சம்பவங்கள் மட்டுமல்லாது வவுனியாவில் நேற்று முன் தினம் மனைவியின் தகாத உறவால் கணவன் மனைவியை கொன்று பிள்ளையுடன் பொலிஸாரிடம் சரணடைந்த சம்பவமும் நடந்துள்ளது.


அதேவேளை புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் எம்மவர்கள் சிலரும் இத்தகைய சம்பவங்களுக்கு துணை போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் நம் கலாசாரம் இப்படி போகிறதே என தம்மை சீர்திருத்தி வாழ பழகாவிட்டால் அடுத்த சமுதாயத்தை எங்கே கொண்டு செல்லும் என்கின்ற கேள்வியை சமூக மட்டத்தில் எழவைத்துள்ளது.


அதிலும் இளவயதினர் கலாசார சீரழிவுகளை நோக்கி நகர்வது வேதனைக்குரிய விடயம் ஆகும். உலகில் ஒப்பற்ற ஒழுக்கத்திற்கு பெயர்போன தமிழனமாக போற்றப்பட்ட எம்மினம் இன்று தடம்மாறி தடுமாறி போய் கொண்டிருக்கின்றது.

குறிப்பாக யாழ்ப்பாணம், வன்னி பிரதேசங்களில் நாகரீக வாழ்க்கை, ரிற்றோக் உள்ளிட்ட சமூக வலைத்தளப் பாவனை, தகுதிக்கு மீறிய ஆடம்பரம், கிழமைக் கடன்கள், NGOகளின் சில செயற்பாடுகள் காரணமாக விச செடிகள் படர்வது போல கலாசார சீரழிவுகள் தலை விரித்து ஆடுவது வேதனையை ஏற்படுத்துவதாக உள்ளது.

13ஆவது அரசியலமைப்பை முழுமையாக அமுல்படுத்துவதே எனது எதிர்பார்ப்பு..!

0

13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே தனது எதிர்பார்ப்பு என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், இந்திய உலக விவகாரங்களுக்கான சபையில் உரையாற்றும் போதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.


இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, புதுடெல்லியில் நடைபெற்ற இந்திய உலக விவகாரங்களுக்கான சபையில் முக்கிய உரையை நிகழ்த்தினார்.

அதில் அந்நாட்டின் ஊடகவியலாளர்கள், இராஜதந்திர அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

கணவன், மகன் மீது குற்றச்சாட்டு; NPP பெண் நகர சபை உறுப்பினர் இராஜினாமா..!

0

கணவன் மற்றும் மகன் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சம்பவத்திற்கு அமைய பேலியகொடை நகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

திஸ்னா நிரஞ்சலா குமாரி என்ற பெண் உறுப்பினரே இவ்வாறு பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவரது கணவர் மற்றும் மகன் தொடர்பில் தற்போது சட்ட நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.


தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த முழு கவனம் செலுத்தி வரும் இவ்வாறானதொரு தருணத்தில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து அவர் தனிப்பட்ட முறையில் கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சட்ட நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காகவும், நாட்டில் ஒரு நல்ல அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதற்காக என்.பி.பி கொண்டு செல்லும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் அவர் தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதன்படி, அவர் தனது இராஜினாமா கடிதத்தை கம்பஹா மாவட்டத் தெரிவத்தாட்சி அதிகாரிக்கு ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளார். அதன் பிரதி ஒன்று தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் கொலொன்ன பிரதேச சபை வரவு செலவுத் திட்டம் தோல்வி..!

0

தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள கொலொன்ன பிரதேச சபையின் முதலாவது வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளது.

இன்று (06) காலை 10.00 மணியளவில், கொலொன்ன பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வு, அதன் தலைவர் சம்பத் குணசிங்கவின் தலைமையில் ஆரம்பமானது.


கொலொன்ன பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி 9 ஆசனங்களையும், எதிர்க்கட்சியின் அனைத்துக் குழுக்களும் 10 ஆசனங்களையும் வென்றதன் மூலம் எதிர்க்கட்சிக்கு அதிகாரம் கிடைத்த போதிலும், தலைவர் தெரிவுக்காக இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது.

அந்த வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்று கொலொன்ன பிரதேச சபையில் ஆட்சியை அமைத்தது.


எவ்வாறாயினும், முதலாவது வரவு செலவுத் திட்டத்திற்கான வாக்கெடுப்பில், எதிர்க்கட்சிக் குழுக்கள் வரவுசெலவுத் திட்டத்தைத் தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளன.

கொலொன்ன பிரதேச சபை, தேசிய மக்கள் சக்தியின் 9 உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் 5 உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 3 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு உறுப்பினர் மற்றும் சர்வஜன பலய கட்சியின் ஒரு உறுப்பினரையும் கொண்டுள்ளது.

போதைப்பொருளுடன் சிக்கிய கணவர் கைது; பதவியை துறக்கும் பிரதேச சபை உறுப்பினர்..!

0

ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபருடைய மனைவியான தேசிய மக்கள் சக்தி பேலியகொட நகரசபை உறுப்பினர் தனது பதவியை விட்டு விலகவுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கணவர் கைது செய்யபப்பட்டதை தொடர்ந்து, நகரசபை உறுப்பினரின் பேலியகொட இல்லமும் காவல்துறையினரால் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், சம்பந்தப்பட்ட வீட்டில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான எந்த சந்தேகத்திற்கிடமான நடவடிக்கையும் கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகிறது.


சந்தேக நபரான அதிபரின் மகனும் கடந்த 30 ஆம் திகதி 20 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதனைதொடர்ந்து, அநுராதபுர குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அதிபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், கைது செய்யப்பட்ட அதிபரின் மருமகனான சஷி, துபாயில் இருந்து அவருக்கு போதைப்பொருட்களை அனுப்பியதாக கண்டறிப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தேகத்திற்குரிய அதிபருக்கு கொஸ்கொட சுஜி என்ற போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொடர்பு இருந்ததாகவும் மேலும் தெரியவந்துள்ளது.


இவ்வாறானதொரு பின்னணியில், தேசிய மக்கள் சக்தியின் உயர்மட்ட உறுப்பினர்கள் இந்த விடயத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளதாகவும் இது தொடர்பாக நேற்று பல பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, சந்தேகநபரின் மனைவியான பேலியகொட நகரசபை உறுப்பினர் பதவி விலகுவது மிகவும் பொருத்தமானது என்று அவர்களில் பெரும்பாலானோர் வலியுறுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இந்த நிலையில், அவரை ஒரு கட்சியிலிருந்து நீக்குவதற்கு பதிலாக, அவராகவே தனது பதவியை விட்டு விலக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

துயிலும் இல்ல காணிகளை விட்டு வெளியேறவுள்ள இராணுவம்; ஆளும் தரப்பு தெரிவிப்பு..!

0

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மாவீரர் துயிலும் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் இதற்கு அமைவாக மிக விரைவாக இராணுவம் நிலை கொண்டுள்ள துயிலும் இல்ல காணிகளை விட்டு வெளியேற உள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.


கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

இதை நான் சொல்லவில்லை. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்த விடயமே. மாவீரர்களை நினைவு கூறுவதற்கான உரிமை நூற்றுக்கு நூறு அந்த மக்களுக்கு உள்ளது.


தற்போதைய அரசாங்கமானது தமிழ் மக்களின் பல காணிகளை விடுவித்து வரும் நிலையில் துயிலும் இல்லங்களில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரையும் முற்று முழுதாக அந்தப் பகுதியில் இருந்து விடுவித்து மக்களை அவர்களின் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான முழு உரிமையையும் வழங்கும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார பாதுகாப்புச் செயலாளருக்கு காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு அமைவாகமிக விரைவாக இராணுவம் நிலை கொண்டுள்ள துயிலும் இல்ல காணிகளை விட்டு வெளியேற உள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் உயர் அதிகாரிகளின் தலையீடுகளின் மத்தியில் யாழில் குற்றவாளி கைது..!

0

யாழில் இளைஞன் ஒருவரை , தாயின் கண் முன் நிர்வாணமாக்கி , சித்திரவதைக்கு உள்ளாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் 11 மாதங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கு பொலிஸார் பல தடவைகள் முயன்ற போதிலும் வடமாகாண பொலிஸ் உயர் அதிகாரிகளின் தலையீடுகள் காரணமாக கைது செய்ய முடியாது பொலிஸார் திண்டாடி வந்த நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் நபர் ஒருவரை சந்தேக நபர் பார்வையிட வந்த வேளை பொலிஸ் புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட நபரை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த பிரதான சந்தேகநபருக்கும் வடமாகாணத்தில் கடமையாற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் நெருக்கமான தொடர்புகள் காணப்பட்டமையால் , சந்தேகநபரை கைது செய்வதற்கு அதிகாரிகள் தடையேற்றப்படுத்தி வந்தனர் எனவும்,

கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னர் சந்தேக நபர் தொடர்பிலான தகவல்கள் கிடைக்கப்பெற்று சிவில் உடையில், தனியார் ஒருவரின் முச்சக்கர வண்டியில் சந்தேக நபரை கைது செய்வதற்கு பொலிஸ் குழு சென்ற வேளை சந்தேக நபர் தப்பி சென்றிருந்த நிலையில்,

தனியாருக்கு சொந்தமான முச்சக்கர வண்டியில் சிவில் உடையில் பொலிஸார் பயணித்தமை தொடர்பில் விசாரணைகள் நடாத்தி பொலிஸாருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பின்னணி இரு குடும்பங்களுக்கு இடையிலான பிரச்சனையில் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் திகதி இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞனை அவரது தாய்க்கு முன்னால் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி , சித்திரவதை புரிந்து கட்டி வைத்து மிக மோசமான முறையில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.


சித்திரவதை மற்றும் தாக்குதல்களை மேற்கொள்ளும் போது , தாக்குதலாளிகள் அவற்றை கையடக்க தொலைபேசியில் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் சுமார் 15 பேர் வரையில் பொலிஸார் அடையாளம் கண்டு கொண்டனர். அவர்களில் ஒரு சிலரை மாத்திரம் கைது செய்து வழக்கு விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

பிரதான சந்தேகநபர் உள்ளிட்டவர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு நீதிமன்று திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட போதிலும் , பொலிஸார் பிரதான சந்தேகநபரை கைது செய்வதனை கடந்த 11 மாதங்களாக தவிர்த்து வந்தனர். இந்நிலையிலையே இன்றைய தினம் கைது செய்துள்ளனர்.

error: Content is protected !!