Wednesday, August 12, 2026
Huis Blog

அரச வாகன ஏலத்தில் 10 மில்லியன் மோசடி; சிக்கிய NPP அமைச்சரின் மைத்துனர்..!

0

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால் காந்தவின் மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளாார்.

கேகாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுசந்த சுதர்சன எனப்படும் குறித்த நபர் அமைச்சர் லால் காந்தவின் மனைவியின் தங்கையின் கணவர் ஆவார்.

அரச வாகன ஏலத்தின் போது நபர் ஒருவரிடம் 10 மில்லியன் ரூபாவுக்கு மேல் மோசடி செய்ததாக அமைச்சர் லால் காந்தவின் மைத்துனருக்கு எதிராக சுரங்க ரஞ்சித் சமரவீர என்பவரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அளிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக அனைத்துக் காரணிகளும் வெளிவந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட அமைச்சரின் மைத்துனரை நேற்று (11-08-2026) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியாததால் நேற்று இரவு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் இன்று (12-08-2026) கேகாலை நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

அமைச்சர் லால் காந்த தரப்பிலிருந்து எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதவி நீடிப்பு விவகாரம்; ஜனாதிபதியுடன் சட்டத்தரணிகள் சங்கம் இன்று சந்திப்பு..!

0

நீதிபதிகளின் பதவி நீடிப்பு தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (12) இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (12) புதன்கிழமை ஜனாதிபதி தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக் காலத்தை இரண்டாண்டுகளுக்கு நீட்டிப்பதற்காக அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோல் மேல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதிவான் நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களின் நீதிபதிகளது பதவிக் காலத்தை இரண்டாண்டுகளுக்கு நீட்டிக்கும் வகையில் நீதிமன்ற சட்டத்தை திருத்தம் செய்யும் வகையில் சட்டமூலம் வெளியிடப்பட்டுள்ளது.

நீதிபதிகளின் பதவிக் காலத்தை அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில் அண்மையில் சங்கத்தின் சகல உறுப்பினர்களும் கொழும்பில் கூடி இவ்விடயம் தொடர்பில் ஐந்து யோசனைகளை நிறைவேற்றினர்.

இதனைத் தொடர்ந்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய உட்பட அதன் பிரதிநிதிகள் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதன்போது நீதிபதிகளின் பதவிக்காலத்தை அதிகரிக்கும் தீர்மானத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினர். அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்புக்கு அமைய எடுத்த தீர்மானம் குறித்து தன்னால் உறுதியான தீர்மானத்தை வழங்க முடியாது. இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும் என்று நீதியமைச்சர் குறிப்பிட்டார்.

இதற்கமைய ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவற்கு சட்டத்தரணிகள் சங்கத்தினர் அனுமதி கோரிய நிலையி;ல் இன்றைய தினம், நீதியமைச்சர், நீதியமைச்சின் செயலாளர் உட்பட அரசாங்கத்தின் பிரதிநிதிகளின் பங்குப்பற்றலுடன் ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

உடன் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் – சட்டத்தரணி மணிவண்ணன் கோரிக்கை

0

மாகாண சபை தமிழ் மக்களுக்கு தீர்வு அல்ல, சமஸ்டி தீர்வே எமது நிலைப்பாடு என்று சட்டத்தரணியும், முன்னாள் யாழ்ப்பாணம் மாநகர முதல்வரும், தமிழ் மக்கள் கூட்டணியின் துணைப் பொதுச் செயலாளருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

வடமராட்சியில் ஊடகவியலாளர்கள் மாகாண சபை தேர்தல் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

“மாகாண சபை தேர்தல் ஒத்திவைக்கப்பட முடியாது. உடனடியாக நடத்தப்பட வேண்டும். 2018 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபை பதவியை இழந்திருந்தது.

2017 கிழக்கு மாகாண சபை பதவியை இழந்திருந்தது கிட்ட தட்ட 6 ஆண்டுகளுக்கு மேலாக மாகாண சபை தேர்தல் நடத்தாமல் அரசாங்கங்கள் வேண்டுமென்றே இழுத்தடிப்பு செய்து வருகிறது.

அவர்களைப் பொறுத்தவரையில் இந்த நாடு ஒற்றை ஆட்சிக்குள்ள இருக்க வேண்டும். இந்த நாட்டிலே அதிகாரம் சற்று கூட பகிரக்கூடாது.

அதிலும் விசேஷமாக தமிழ் மக்கள் தங்களுடைய எந்தவொரு பிராந்தியத்தின் மீது தங்களுடைய ஆளுமையை அல்லது தங்களுடைய ஆட்சியை செயற்படுத்த கூடாது என்பதில் அவர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்.

அந்த அடிப்படையில் தான் இந்த மாகாண சபை தேர்தல்கள் மாறி மாறி வந்த எல்லா அரசாங்கங்களாலும் இழுத்தடிப்பு செய்யப்படுகிறது. 2018 ஆம் ஆண்டிலேயே ஆட்சியில் இருந்தது மைத்திரிபால சிறிசேனா ரணில் விக்ரமசிங்க தலைமையிலான கூட்டாட்சி.

அந்த அரசாங்கம் வேண்டுமென்று செய்த சதியினாலே இந்த தேர்தல் பொறிமுறையை இல்லாமல் செய்து இன்று இந்த தேர்தல் நடைபெறாமல் இருக்கிறது.

ஆகவே என்னைப் பொறுத்தமட்டில் 13வது திருத்தச் சட்டத்தில் எதுவுமே இல்லை என்பதை நான் 100 வீதம் ஏற்றுக் கொள்கிறேன். 13-வது திருத்தச் சட்டம் எங்களுக்கு தீர்வு இல்லை என்பதையும் நான் 100 வீதம் ஏற்றுக் கொள்கிறேன்.

தமிழ் மக்களுக்கு சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வு திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கின்றோம்.

அந்த தேர்தலை கட்டாயமாக வைக்கப்பட வேண்டும் என்பது என்னுடைய நிலைப்பாடாக இருக்கிறது. நான் சொல்லவில்லை மாகாண சபை எங்களுக்கு போதும்.

மாகாண சபையோடு எங்களுடைய உரிமை போராட்டத்தை முடித்துக் கொள்ளலாம் என்று ஒருபோதும் சொல்லப் போவதில்லை சொல்லவுமில்லை.

ஆனால் அரசியல் அமைப்பில் இருக்க கூடிய ஒரு பொறிமுறையை இயங்க வைக்கப்பட வேண்டும். அந்த ஜனநாயக பொறிமுறையை இயங்க வைக்கப்பட வேண்டியது கட்டாயத் தேவை.

ஆகவே மாகாண சபை தேர்தல் கட்டாயமாக வைக்கப்பட வேண்டும் என்பதை நான் ஆணித்தரமாக கூறிக் கொள்ள விரும்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய தேர்தல் முறைமைக்கு அமைய மாகாணசபைத் தேர்தலை நடத்த தயாராக உள்ளோம்..!

0

பழைய தேர்தல் முறைமைக்கு அமைய மாகாணசபைத் தேர்தலுக்கு செல்வதற்கு திடீரென தீர்மானிக்க முடியாது. தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள புதியத் தேர்தல் முறைமைக்கு அமைவாக எல்லை நிர்ணயம் செய்து எல்லை மற்றும் தொகுதிகளை அடையாளப்படுத்தியதன் பின்னர் மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்த தயாராகவுள்ளோம் என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் பாராளுமன்றத்தின் ஊடாக எல்லை நிர்ணய விவகாரத்துக்கு உரிய தீர்மானம் எட்டப்பட்டால் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தலாம்.

புதிய தேர்தல் முறைமைக்கு அமைவாக எல்லை நிர்ணயம் உருவாக்கப்படவில்லை. ஆகவே மாகாணசபைத் தேர்தலை நடத்தும் திகதியை தற்போது உறுதியாக குறிப்பிட முடியாது.

இவ்வாறான பின்னணியில் அனைவரும் வேண்டாம் என்று குறிப்பிடும் விருப்பு வாக்கு, ஊழல் மிக்க, தொகுதிக்கு உறுப்பினர் இல்லாத, பெண் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தாத பழையத் தேர்தல் முறைமைக்கு செல்வதற்கு திடீரென தீர்மானிக்க முடியாது.

பழைய தேர்தல் முறைமைக்கு செல்வதற்கு மக்கள் விரும்பவில்லை. மீண்டும் அந்த முறைமைக்கு செல்வதற்கு மக்கள் விரும்பினால் அது குறித்து ஆராயப்பட வேண்டும்.

தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள புதிய தேர்தல் முறைமைக்கு அமைவாக எல்லை நிர்ணயம் செய்து எல்லை மற்றும் தொகுதிகளை அடையாளப்படுத்தியதன் பின்னர் மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்த நாங்கள் தயாராகவுள்ளோம் என்றார்.

இலங்கையில் மேலதிக முதலீட்டு வாய்ப்புகளை ஆராயும் சீனாவின் CCCC நிறுவனம்..!

0

சீனா கம்யூனிகேஷன்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனி லிமிடெட் (CCCC) நிறுவனத்தின் ஷாங் பிங்னான் (Zhang Bingnan) தலைமையிலான உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போது கொழும்பு துறைமுக நகர திட்டத்துடன் தொடர்புடைய நடப்பு மற்றும் முன்மொழியப்பட்டுள்ள திட்டங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த CCCC நிறுவனத்தின் பிரதிநிதிகள்,

ஜனாதிபதியின் தொலைநோக்குக் கொள்கைகளும் வேலைத் திட்டங்களும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்த உதவியுள்ளதாகவும், இலங்கையில் மேலும் குறிப்பிடத்தக்க முதலீட்டு வாய்ப்புகளை ஆராயத் தங்களை ஊக்குவித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

புதுப்பிக்கத்தக்க சக்தி, வர்த்தகம் மற்றும் தளவாடங்கள் மற்றும் டிஜிட்டல் சேவைகள் உள்ளிட்ட பல துறைகளில் முதலீடுகளை விரிவுபடுத்த ஆர்வமாக உள்ளதாக அக்குழுவினர் தெரிவித்தனர்.

இத்துறை சார்ந்த பிராந்திய மையமாக இலங்கை உருவெடுப்பதற்கும், அதிகளவிலான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளதாகப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

மேலும், தங்களது முதலீட்டுத் திட்டங்களில் 90% ஊழியர்கள் உள்ளூர் மட்டத்திலேயே ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என்றும், இதன் மூலம் இலங்கையர்களுக்குப் பெருமளவிலான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் ஜனாதிபதியிடம் உறுதியளித்தனர்.

தெங்குச் செய்கை நிலங்களை மறுசீரமைக்கும் சிறப்புத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி..!

0

எதிர்வரும் மாதங்களில் ஏற்படக்கூடிய ‘எல் நினோ’ (El Niño) காலநிலை பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையிலும், தேங்காய் உற்பத்தியை அதிகரித்து நிலையான பயிர்ச் செய்கை முறைகளை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பு தெங்குச் செய்கை நில மறுசீரமைப்புத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்குப் போதியளவு தேங்காய் விநியோகத்தை உறுதி செய்யவும், சிறு அளவிலான தெங்கு உற்பத்தியாளர்களின் நில உற்பத்தித் திறனை அதிகரிக்க ஊக்குவிக்கவும் இத்திட்டம் இலக்கு வைத்துள்ளது.

2026 ஆம் ஆண்டில் சுமார் 85,000 ஏக்கர் தெங்குச் செய்கை நிலங்களை உள்ளடக்கும் இத்திட்டம், தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் அல்லது அதற்கு குறைந்த நிலப்பரப்பைக் கொண்ட சிறு அளவிலான தெங்கு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இதற்காக அங்கீகரிக்கப்பட்ட நடவடிக்கைகளுக்குச் செலவிடப்படும் தொகையில் 65% வரை கொடுப்பனவாக வழங்கப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட அதிகபட்ச ஊக்கத் தொகைக் விவரம்:

1. உரம் மற்றும் டோலமைட் (Dolomite) இட்டு மூடாக்கிடுதல் (Mulching): ஒரு தென்னை மரத்திற்கு ரூ. 700
2. டோலமைட் (Dolomite) மட்டும் இட்டு மூடாக்கிடுதல்: ஒரு தென்னை மரத்திற்கு ரூ. 200
3. தென்னந் தோட்டங்களுக்கான நீர்ப்பாசனம்: ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 50,000

பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட இவ் முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

புதிய சீனத் தூதுவரின் வருகை; இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த உறுதியேற்பு..!

0

இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்ட சீனத் தூதுவர் வேய் ஹுவாசியாங் (H.E. Wei Huaxiang), சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்தவும் பரஸ்பர நன்மையளிக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் உறுதியளித்து, தனது பதவியைப் பொறுப்பேற்பதற்காக இலங்கை வந்தடைந்துள்ளார்.

விமான நிலையத்தை வந்தடைந்ததும் தனது கருத்தை வெளியிட்ட அவர்,

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கால் இந்நியமனம் வழங்கப்பட்டமை தமக்குக் கிடைத்த “பெரும் கௌரவமும் பாக்கியமும் ஆகும்” எனக் குறிப்பிட்டதுடன், இலங்கையின் செழுமையான நாகரிகம், இயற்கை எழில் மற்றும் மக்கள் மீதுள்ள தமது மதிப்பையும் வெளிப்படுத்தினார்.

பண்டைய கடல்சார் வர்த்தகம் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க பட்டுப் பாதை வழியிலான இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால வரலாற்று உறவுகளை அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், 70 ஆண்டுகளுக்கு முன்னர் கையெழுத்திடப்பட்ட ‘இறப்பர்-அரிசி ஒப்பந்தம்’ (Rubber-Rice Pact) இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர ஆதரவு மற்றும் ஒற்றுமைக்கு ஒரு முக்கிய சான்றாகும் என்றும்,

இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டதிலிருந்து, ‘பட்டுப் பாதை பொருளாதார மண்டலத் திட்டம்’ (Belt and Road Initiative), நீர்த் தொழில்நுட்பம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல வழிகளில் சீனா-இலங்கை உறவுகள் தொடர்ந்து வலுவடைந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டில் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோர் சீனாவுக்கு மேற்கொண்ட விஜயங்களின் போது, சீன அதிபர் ஷி ஜின்பிங் அவர்களைச் சந்தித்ததை நினைவுகூர்ந்த அவர், இந்த உயர்மட்ட சந்திப்புகள் இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கு புதிய மூலோபாய வழியைக் கொடுத்துள்ளதாகவும்,

“சீனா தனது அண்டை நாட்டு இராஜதந்திரத்தில் எப்போதும் இலங்கைக்கு முன்னுரிமை அளிக்கிறது” எனக் குறிப்பிட்ட அவர், தற்போது இரு நாடுகளும் பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

அபிவிருத்தி உத்திகளை ஒருங்கிணைக்கவும், பரஸ்பர வெற்றியை ஊக்குவிக்கவும், இரு நாடுகளுக்கு இடையிலான மூலோபாய கூட்டுப் பங்காண்மையை ஆழப்படுத்தவும் இலங்கையுடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்ற சீனா தயாராக இருப்பதாக தூதுவர் வேய் தெரிவித்துள்ளார்.

சீனா-இலங்கை இடையே இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதையும், வரலாற்றுச் சிறப்புமிக்க ரப்பர்-அரிசி ஒப்பந்தம் கையெழுத்தாகி 75 ஆண்டுகள் நிறைவடைவதையும் எதிர்வரும் ஆண்டு குறிப்பதால், அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக அமையும் என்றும்,

“இதன் பின்னாலுள்ள மகத்தான கடமையையும் பாரிய பொறுப்பையும் நான் முழுமையாக உணர்ந்துள்ளேன்” எனக் கூறிய தூதுவர் வேய், இரு நாடுகளுக்கும் இடையிலான பாரம்பரிய நட்புறவை முன்னெடுத்துச் செல்லவும், பரஸ்பர ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், இலங்கையிலுள்ள சீன நிறுவனங்கள் மற்றும் குடிமக்களின் சட்டப்பூர்வ உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கவும் தானும் தனது சக அதிகாரிகளும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்றும் உறுதியளித்தார்.

இரு நாடுகளையும் சேர்ந்த பங்குதாரர்களுடன் நெருங்கிய தொடர்பையும் ஒத்துழைப்பையும் பேண விரும்புவதாகவும், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வரவேற்பதாகவும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

“சீனா-இலங்கை உறவுகளின் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி நாம் கைகோர்த்து அயராது உழைப்போம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் உள்ள ஆறு அரச பங்களாக்கள் 30 ஆண்டு வர்த்தக குத்தகைக்கு..!

0

கொழும்பில் உள்ள பல அரசிற்குச் சொந்தமான பங்களாக்களை 30 ஆண்டு குத்தகை ஒப்பந்தங்களின் கீழ் வர்த்தக ரீதியாக மேம்படுத்தி இயக்குவதற்காக, தனியார் துறையிடமிருந்து முதலீட்டு முன்மொழிவுகளை அரசாங்கம் கோரியுள்ளது.

இந்தச் சொத்துக்களை சுற்றுலா சார்ந்த வர்த்தக நிறுவனங்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, அவற்றின் தகவமைப்பு மறுபயன்பாடு, புனரமைப்பு, மேம்பாடு, செயற்பாடு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றுக்கான முன்மொழிவுகளை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு கோரியுள்ளது.

மேம்பாட்டிற்காகப் பட்டியலிடப்பட்டுள்ள சொத்துக்கள், கொழும்பு 5-இல் உள்ள ஸ்டான்மோர் கிரசென்ட்டில் உள்ள B13, B14 மற்றும் B20, பேஜெட் வீதியில் உள்ள C61 மற்றும் C62, மற்றும் ஸ்கெல்டன் வீதியில் உள்ள E01 மற்றும் E02 ஆகும்.

முன்மொழியப்பட்ட இடங்கள் சுற்றுலா சார்ந்த சில்லறை விற்பனை நிலையங்கள், சிற்றுண்டிச் சாலைகள் மற்றும் உணவகங்கள் ஆகியவை அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருளை விநியோகித்த சிறைக் காவலர் கைது..!

0

கொழும்பு – பொரளை மெகசின் சிறைச்சாலைக்கு அதிகளவில் போதைப் பொருளை விநியோகித்து வந்ததாகக் கூறப்படும் சிறைக் காவலர் ஒருவர், 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

தெஹிவளை, வைத்திய வீதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர், கல்கிஸ்ஸை பகுதியில் வைத்து இந்த போதைப்பொருள் தொகுதியுடன் முதலில் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, மெகசின் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவர் ‘வட்ஸ்அப்’ அழைப்பு மூலம் வழங்கிய தகவலுக்கு அமையவே இந்த போதைப்பொருள் பொட்டலத்தைப் பெற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அந்த போதைப்பொருள் பொட்டலத்தை பொரளை, வனாத்த வீதியில் வைத்து வேறொரு நபரிடம் ஒப்படைக்க திட்டமிட்டிருந்ததாகவும் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவலின் அடிப்படையில், கல்கிஸ்ஸை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர், மற்றைய சந்தேக நபரையும் கைது செய்வதற்காக இரகசிய திட்டம் ஒன்றைச் செயல்படுத்தி, அதிகாரிகளைச் சம்பவ இடத்தில் பணியில் ஈடுபடுத்தினர்.

இதன்போது, சிறைச்சாலையின் விளையாட்டு உடையில் வந்த நபர் ஒருவர், கைது செய்யப்பட்ட முதலாம் சந்தேக நபரிடமிருந்து போதைப்பொருள் பொட்டலத்தைப் பெற்றுக் கொள்ள முயன்ற போது, அங்கு மறைந்திருந்த பொறுப்பதிகாரி தலைமையிலான அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சிறைக்காவலர் கடந்த ஜனவரி மாதம் மெகசின் சிறைச்சாலையில் பணிக்கு இணைந்துள்ளதாகவும், அதற்கு முன்னர் அவர் வெலிக்கடை சிறைச்சாலையில் பணியாற்றியவர் என்றும் தெரிவிக்கின்றது.

யாழில் மூன்று மாதங்களில் 80 பேர் பலி; நிலவரம் குறித்து ஆளுநர் கவலை..!

0

யாழ் மாவட்டத்தில் அண்மைக் காலமாக உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் கணிசமாக அதிகரித்து வருவது தொடர்பில் வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கடும் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையை உடனடியாகக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த அவசர நடவடிக்கைகளை முடுக்கிவிடுமாறு அதிகாரிகளுக்கு அவர் அதிரடி பணிப்புரை வழங்கியுள்ளார்.

ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற விசேட உயர்மட்டக் கலந்தாய்வின் போது, நிலவும் மோசமான சுகாதாரச் சூழல் குறித்தும், அதனைத் தடுப்பதற்கான பல்துறை கூட்டு வேலைத்திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 80 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. தேசிய மட்டத்தில் 1 லட்சம் பேருக்கு 15 பேர் என்ற அளவில் உள்ள இந்நிலை, யாழில் 1 லட்சம் பேருக்கு 30 பேர் எனும் இரு மடங்கு வீதத்தை எட்டியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.

குறிப்பாக இளைஞர்களும் பெண்களுமே அதிகளவில் இவ்வாறான தவறான முடிவுகளை நோக்கித் தள்ளப்படுகின்றனர்.

மதுப்பழக்கம், குடும்ப வன்முறைகள், உறவுகளுக்கு இடையிலான தொடர்பாடல் இடைவெளி, தனிமை மற்றும் கடுமையான உளவியல் அழுத்தங்களே இதற்கான முக்கியக் காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இச்சிக்கலை வெறும் சுகாதாரத் துறையின் பிரச்சனையாக மட்டும் பார்க்காமல் கல்வி, நிர்வாகம், பொலிஸ், ஆன்மீகம் மற்றும் ஊடகங்களை உள்ளடக்கிய “மாகாண அளவிலான சமூக இயக்கமாக” மாற்ற வேண்டும்.

இதுவரை பதிவான உயிரிழப்புகள் குறித்த பின்னணியை விரிவாக பகுப்பாய்வு செய்து, ஆபத்தான நிலையில் உள்ளவர்களைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கும் அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

பல்வேறு திணைக்களங்களுக்கு இடையே நிலவும் இடைவெளியைப் போக்கி, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் தலைமையில் ஒருங்கிணைந்த செயற்பாட்டு மையத்தை உடனடியாக மீளமைக்க வேண்டும்.

மன அழுத்தம், குடும்பச் சிக்கல்கள் அல்லது தனிமையால் தவிப்பவர்கள் உடனடி உளவியல் ஆலோசனை பெற, வட மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் ‘நேயம்’ (021 222 6666) என்ற 24 மணிநேர இலவச அவசர உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இங்கு தகவல்கள் முற்றிலும் இரகசியமாகப் பேணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் 40%க்கும் அதிகமான அதிபர், ஆசிரியர்கள் கடும் மன அழுத்தத்துடன் பணியாற்றி வருவதாக அண்மைய ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ள நிலையில் வடக்கில் இவ் எண்ணிக்கை இன்னும் அதிக அதிகமாகவே காணப்படுகின்றது என்பதற்கு வடக்கின் கல்வித் துறையினர் மத்தியில் ஏற்பட்டு வரும் திடீர் மரணங்களே சாட்சியாக உள்ளது.

error: Content is protected !!